You are here
Home > அறத்தமிழ் > அற்ற குளத்தில் . . .

அற்ற குளத்தில் . . .

           அறத்தமிழ் வேதம் – மூதுரை     

  – தொடர்ச்சி


அருந்தமிழ்ச் செல்வங்களே!

இன்று நாம் பார்க்க இருக்கிற பாடல் 17-ஆவது பாடல். பாடலைக் கேளுங்கள்!

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்திற்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி யுறுவார் உறவு.

செல்வங்களே! இந்தப் பாடல் மிகமிக முக்கியமான பண்பாட்டைப் பதிய வைக்கிற பாடல். உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் மனிதர்களுக்கும் பொருந்தும் பாடல் இது.

நாம் என்ன செய்கிறோம்? ஒரு சிலரோடு பழகுகிறோம்; ஆனால் அவர்களின் நிலை எந்த விதத்திலாவது தாழுமானால் அவர்களின் பழக்கத்தையே தவிர்க்கிறோம். பார்த்தாலும் தெரியாதவர் போல தூரப் போகிறோம். இது மிகப் பெரிய பண்பின்மை.

இப்படி நடந்த சிலவற்றை வரலாறுகள் பதிவு செய்திருக்கின்றன. ஒன்றிரண்டைப் பார்ப்போம். உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் பின்பற்றப்படும் மதம் கிறித்துவ மதம். அதில் போற்றப்படுகிற ஏசு கிறித்துவின் வாழ்விலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக விவிலியம் பதிவு செய்திருக்கிறது.

ஏசுவிற்கு 13 சீடர்கள் இருந்தார்களாம். ஏசு போகிற இடங்களுக்கெல்லாம் இவர்களும் கூடவே சென்றார்கள். ஏசு நிகழ்த்தியதாகக் கூறப்படும் அதிசயங்களை உடனாக இருந்து கண்டு ஏசுவைப் போற்றியவர்கள் இவர்கள். உலகம் ஏசுவைப் போற்றிய போது இச்சீடர்கள் ஏசுவைத் தெய்வத்தின் குமரனாகவே போற்றினார்கள்.

ஆனால் ஏசுவை அவர் இருந்து நாட்டின் மன்னன் வெறுத்து அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லத் துணிந்தான். அதற்காக ஏசுவை மன்னனின் சேவகர்கள் தேடிப் போனார்கள். சீடர்களில் ஒருவன் இவர் தான் நீங்கள் தேடிக் கொண்டிருக்கிற ஏசு என்று மறைவாக நின்று காட்டிக் கொடுத்தான். அவரை இழுத்துச் செல்ல மன்னனின் பணியாட்கள் நெருங்க முயன்ற போது இன்னொரு சீடனை இவர் தான் ஏசுவா என்று கேட்ட போது ஏசுவை எனக்கு யார் என்றே தெரியாது என்று அந்தச் சீடன் சொல்லிவிட்டான். காரணம் ஏசுவிற்கு அரசனால் ஏற்பட இருந்த அபாயத்தை உணர்ந்த அந்தச் சீடன், எங்கே ஏசுவைத் தமக்குத் தெரியும் என்றும், தான் அவரின் சீடன் தான் என்றும் கூறினால் தனக்கும் அபாயம் நேர்ந்து விடுமோ என்றெண்ணி ஏசுவை எனக்குத் தெரியவே தெரியாது  என்று சொல்லிவிட்டான் அந்தப் பண்பில்லாத சீடன். இத்தனை நாள் அவரோடு கூடவே சுற்றி வந்து அவரால் சுகங்களை எல்லாம் அனுபவித்து வந்தவன், அவருக்கு அபாயம் என்று வந்தவுடன் அவரைத் தெரியவே தெரியாது என்று கூறிவிட்டான்!

இது நடப்பதற்கு முன்னாள் இரவு ஏசு சீடர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது இந்தச் சீடனை நோக்கி, ‘நாளை என்னை நீ மறுதலிப்பாய்’ என்று முன்னரே உணர்ந்து கூறினார் என்று விவிலியம் கூறுகிறது. அது அப்படியே நடந்து விட்டது என்பார்கள். எனவே செல்வாக்கு உள்ள ஒருவரால் நன்மை உண்டு என்னும் போது போற்றுவதும், அவரே செல்வாக்கு இழந்த போது உதறிவிடுவதும் மிக மோசமான பண்பு! இது மேலை நாட்டு வரலாறு!

இனி, நம் நாட்டு வரலாறொன்றில் சகுந்தலை – துஷ்யந்தன் கதையும் இதே தான்! தனியே காட்டுச் சூழலில் மாட்டிக் கொள்கிறான் துஷ்யந்தன் என்கிற மன்னன். அக்காட்டில் ஒரு முனிவரின் மகளாகிய சகுந்தலை என்ற அழகிய பெண்ணால் அவன் ஆதரிக்கப் பெறுகிறான்! அவனும் அவளும் மனம் கலந்து பழகினர். அந்தப் பழக்கம் எல்லை மீறி அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்து விடுகிறது. சில நாள் கழித்த துஷ்யந்தன் தனது நாட்டிற்குப் போகிறான். போகு முன் சகுந்தலையிடம் ‘நீ நாட்டிற்கு வந்து என்னைச் சந்தி! உன்னை ஊரறிய மணந்து உலகே மதிக்கும் இராணியாக்குகிறேன்’ என்று உறுதி அளித்து விட்டுப் போனான். நாட்கள் சென்றன; வளர்ந்த தன் குழந்தையோடு துஷ்யந்தன் நாட்டிற்குச் செல்கிறாள் சகுந்தலை. அரசவைக்குச் சென்று அவன் அளித்த உறுதிமொழியை உரைத்து அவள் முறையிட்ட போது துஷ்யந்தன் அவளை யாரென்றே தெரியாது என்று கூறிவிடுகிறான். சகுந்தலைக்கு எப்படி இருந்திருக்கும்! காட்டில் அவளது ஆதரவு தேவைப் பட்ட போது துஷ்யந்தன் சகுந்தலையைப் போற்றி ஏற்றுக்கொண்டான். நாட்டில் நாகரிக அவையில் தனித்து நின்ற சகுந்தலையைத் தெரியாது என்று உதறுகிறான்! இது எவ்வளவு மோசமான பண்பு! நல்ல வேளை! இது வட நாட்டுக் கதை! பண்பாட்டிற்குப் பெயர் பெற்ற தமிழ் நாட்டுக் கதை அல்ல.

இவர்களைப் போன்றவர்களை அருணகிரி என்னும் நம் தமிழ்நாட்டு அருளாளர் ‘குருவிகள்’ என்று ஒரு திருப்புகழில் பாடி இருக்கிறார். மக்களில் உருவில் மனிதர்களைப் போல தோற்றம் அளித்துக் கொண்டு உணர்விலும் குணத்திலும் மிருகங்களும், கொடிய உயிரினங்களும் ஆக இருப்பவர் பல பேர். நன்மை செய்தவர்களுக்கே நஞ்சை ஊட்டும் பாம்புகள் சிலர் இருக்கிறார்கள். உதவி செய்தவனையே ஆற்றில் தள்ளும் கரடிகள் இருக்கிறார்கள். வன்மம் வைத்து கொல்லுகிற யானைகள் இருக்கிறார்கள். இப்படிப் பல வகை! இவர்களைப் பட்டியலிடுகிறார் அருணகிரியார் ஒரு பாடலில். அதில் நமக்கு வேண்டிய வரிகள் இவை:

‘குருவி எனப்பல கழுகு நரித்திரள்

அரிய வனத்திடை மிருகம் எனப் புழுகு

உறவை எனக்கரி மரமும் எனத்திரி        உறவாகா’

ஒருவன் குருவி போல நடந்து கொள்கிறான்; ஒருவன் கழுகு மாதிரி திடீரென வந்து கொத்திப் பறிச்சுட்டுப் போகிறான்; ஒருவன் நரி போல தந்திரம் செய்து கெடுக்கிறான்; ஒருவன் காட்டு மிருகங்கள் போல கொடுமை செய்கிறான்; முருகா! இப்படிப் பட்டவர்களின் உறவில் நான் சிக்காமல் பார்த்துக் கொள் என்று முருகனை இவ்வரிகளில் வேண்டுகிறார்!

இவற்றில் கழுகு, நரி, சிங்கம் போன்றவை பற்றி எல்லாம் வெளிப்படையாகத் தெரிகிறது. குருவி என்ன செய்யும்? இங்கே குருவி என்ற சொல் பறவைப் பொதுச்சொல். அது எதைக் குறித்தது என்றால் மீன் கொத்திப் பறவையைக் குறிக்கும் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

மீன்கொத்திப் பறவை என்ன செய்யும் என்றால், மீன்கள் உள்ள நீர்நிலைகளில் சிறகுகள் நீரில் படும் அளவில் தாழப் பறந்து கொண்டே செல்லுமாம்! மீன் அகப்படுமானால் மீனைக் கொத்திக் கொண்டு இது வரை உறவாடிய நீரைச் சிறகினால் உதறிவிட்டு உயரப் பறந்து விடுமாம்! ஆக, மீன் கிடைக்கும் வரை அப்பறவை நீருடன் உறவாடும்; மீன் கிடைத்தவுடன் நீரை உதறிவிட்டுப் பறந்தோடும். அது போல ஒருவரால் காரியம் ஆகும் வரை உறவாடி விட்டு, அவர் நிலை தாழ்ந்து விட்டால் தள்ளியும், தவிர்த்தும் ஓடி விடும் குணக்கேடர்கள் எப்போதும், எந்தத் தேசத்திலும், எந்த இனத்திலும் உண்டு! இவர்களைத் தான் அருணகிரியார் ‘குருவி’ என்று குறிப்பிட்டார்.

இந்தக் குருவி போன்ற பறவைகள் எல்லாம் குளத்தில் நீர் உள்ள வரை அந்நீரில் உள்ள மீனுக்காகக் குளத்தைத் தேடி வரும்; அக்குளத்தையே சுற்றிச் சுற்றி வரும்; ஆனால் குளம் வற்றிவிடுமானால், அவ்வளவு தான்; குளத்தை இவை எட்டியும் பாரா! இவர்களைப் போன்றவர்களை இவை கண்டு கொள்ள வேண்டும் செல்லங்களே! இனம் கண்டு இவர்களோடு எப்போதும் உறவு கொள்ளாதீர்கள்!

ஆனால் குளத்தில் நீர் இருந்தாலும், வற்றினாலும் அதில் உள்ள தாவரங்களான ஆம்பலும், கொட்டியும் அங்கேயே குளத்தோடு இருந்து தாமும் வற்றினாலும் வற்றுமே ஒழிய, குளத்தை விட்டகலா! இவை போன்றவர்களை இனம் கண்டு வையுங்கள்! அவர்களே உங்களின் உண்மையான உறவுகள் என்று அறிவுறுத்துகிறது பாடல்!

மீண்டும் ஒரு முறை பாடலைப் பொருள் புரிய பதிய வைத்துக் கொள்ளும்படி படியுங்கள்! அது உங்கள் வாழ்வில் பல நேரங்களில் உண்மை உறவைக் காட்டி உதவும்!

– தொடரும். . .

Top