You are here
Home > ஆசிரியர் மேசை > மார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம்

மார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம்

மார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம்    

‘மார்க்கண்டேய கட்ஜீவைத் தெரியுமா?’ என்று கேட்டுக் கொண்டே நம் பவனிப் புலவர் உள்ளே வந்தார்.

‘மார்க்கண்டேயரை நன்றாகத் தெரியும். எமனையே ஏப்பம் விட்டவராயிற்றே!’ என்றேன்.

‘மார்க்கண்டேயர் இல்லை ஐயா! அவரை எனக்கும் தெரியும். என் ஆயுளைப் பற்றி சோதிடர்கள் சிலவற்றைக் கூறி இருக்கிறார்கள். அது பற்றி வாய்ப்பு வந்தால் மார்க்கண்டேயரைச் சந்தித்துக் கலந்தாலோசனை செய்து சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் சொல்வது மார்க்கண்டேய கட்ஜீ என்ற பழைய நீதிபதியை; இன்று செய்தி ஊடக மேலமைப்பான பிரைவி கவுன்சில் தலைவரை!’

‘ஓ! அவரா! நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டவர்; இன்னும் சில நாளில் ஊடக மேல் பதவியிலிருந்தும் ஓய்வு பெறப் போகிறவர். பரபரப்பாக பணியாற்றியவர்கட்கு ஓய்வு என்றாலே ஓர் அச்சம் வருவதும் இயல்பு தான். அதனால் வாயில் எதையாவது போட்டு அவர் மெல்லுவது வழக்கம் தான்; சில நேரங்களில் அவர் மெல்லப்படுவதும் உண்டு. வாயைக் குதப்பிக் கொண்டே இருக்கும் போது நம்மையறியாமல் வாயைக் கடித்துக் கொள்வதும் நேரலாமல்லவா? இப்ப நீர் சொல்ல வந்ததென்ன?’

‘மார்க்கண்டேய கட்ஜீ சென்னைக்கு வந்திருந்தார்; அப்போது ஒரு கூட்டத்தில் அவரைச் சந்தித்தேன்.’

‘எங்கே?’

‘நீங்க 7-8-2014 – ஆம் நாளிட்ட ‘தினமணி’, ‘டைம்ஸ் ஆவ் இந்தியா’ மாதிரி நாளிதழ்களை எல்லாம் பார்க்கலையா? அவர் ‘ஒய்ஸ் மேன் இண்டர்நேஷனல்’ கூட்டத்திற்கு வந்து பேசியதை வெளியிட்டிருந்தார்களே!’

‘இந்த ‘ஒய்ஸ் மேன் இண்டர்நேஷனல்’ நிறுவனம் எப்ப தொடங்கியது? திடீர்னு இது 71-வது கூட்டத்தைக் கூட்டி இருக்கு என்கிற போது தான் இப்படி ஒரு அமைப்பே  நடந்துகிட்டிருக்குன்னு தெரிகிறது. முந்தைய 70 கூட்டங்களை இந்த அமைப்பு ‘ஒய்ஸா’ மறைவாக நடத்திச்சு போல இருக்கு. அதில் ஓய்வு பெற்ற ஒய்ஸ்மேனா இவர் கலந்துகிட்டாரோ? அங்கே என்ன பேசினார்?’ என்று கேட்டேன்.

‘ரொம்ப நீளமான பேச்சு. அதுல சாரமான குறிப்புகளை மட்டும் சொல்றேன்:

1)   இந்தியாவைச் சமஸ்கிருத கலாச்சாரமே ஒன்றிணைத்தது.

2)   இந்திய அரசு சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஒரு வாரம் சமஸ்கிருத வாரம் கொண்டாடச் சொன்னது தமிழ் மீது ஆதிக்கம் செலுத்த அல்ல.

3)   இந்தியாவில் ஆரியர்களும் சரி, திராவிடர்களும் சரி சிந்துவெளி வழியாக குடியேறியவர்களே!

4)   சமஸ்கிருதத்திலும் பல்வேறு மொழிகள் இருந்தன. இவை ஒழுங்குபடுத்தப்பட்டு இலக்கண விதிகள் உருவாக்கப்பட்டன.’

‘சரி, இதை ஏன் என்னிடம் வந்து சொல்றீங்க! ஏதாவது உள்நோக்கம் உண்டா?’ என்றேன்.

‘ஐயா! நம்முடைய ‘தெய்வமுரசு’ இதழின் நோக்கமே தமிழ்ப் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் தெய்வச் சிந்தனையோடு பரப்புவது என்பது தானே! அதனால் இதை உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்றது?’ என்றார்.

‘நீங்க சொல்வது சரி தான்! மார்க்கண்டேய கட்ஜீவின் பேச்சில் எத்தனையோ அரசியல் இருக்கும். அந்த அரசியல் பகுதிகளுக்கும் நமக்கும் வழக்கம் போல் வெகு தூரம். ஆனால் மொழி என்ற அளவில் அந்தப் பேச்சை ஆய்வு செய்ய வேண்டியது தான். இது பற்றி நம் வாசகர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது நம் கடமையும் கூட’ என்றேன்.

‘அப்படி வாங்க வழிக்கு’ என்று பவனிப் புலவர் காதைத் தீட்டிக் கொண்டு ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார். நான் சொல்ல ஆரம்பித்தேன்

1) முதலில் இந்தியாவைச் சமஸ்கிருத கலாச்சாரமே ஒன்றிணைத்தது என்பதை எடுத்துக் கொள்வோம்.

இந்தியா எப்போது உருவாயிற்று? 1947-ல் விடுதலை பெற்று இரண்டு ஆண்டுகள் கழித்துத் தான் இந்தியக் குடியரசு என்பது பூகோளத்தில் புதிதாக மலர்ந்தது. சிதறிக் கிடந்த பல நிலப்பகுதிகளை ஒன்றிணைத்தவர்கள் சர்தார் வல்லபாய் படேல் என்ற இரும்பு மனிதரும் அவரது ஆணைக்கும் உறுதிமொழிக்கும் கட்டுப்பட்ட ஏறத்தாழ 56 தேச மன்னர்களும் தான்; இதைச் சமஸ்கிருத கலாச்சாரம் தான் இணைத்தது என்பது அப்பட்டமான உண்மைக்கு மாறான தகவல்.

அந்தத் தகவல் உண்மையாக இருக்க வேண்டுமானால் மேற்படி 56 நிலப்பகுதிகளிலும் பேச்சு மொழியாகவாவது சமஸ்கிருதம் இருந்திருக்க வேண்டும். அப்படி எந்தத் தகவலும் இல்லை. ஆனால் இதற்கு மாறான தகவலையே சமஸ்கிருத விற்பன்னர் என்றும் எல்லோராலும் மதிக்கத் தக்கவர் என்றும் கூறப்படும் ஒரு பெரியவர் கூறி இருக்கிறார். அவர் மறைந்த காஞ்சி மகாப்பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அவர் கூறியதாவது:

‘எந்தத் தேசத்திலும் எந்தக் காலத்திலும் சமஸ்கிருதம் தேசபாஷையாகப் பேசப்படவில்லை என்று தெரிகிறது.’

                    – ‘சமஸ்கிருத பாஷா பிரயோசனம்’ 29-10-1932

– சங்கராச்சாரிய சுவாமிகள் அருளிய

நன்மொழிகள்; 2-ம் பாகம்.

– ‘சங்கர விஜயம்’ மதராஸ் லா ஜர்னல் ஆபீஸ்,

மயிலை, 1933 – பக்கம் – 4.

      யாராலும் எந்தக் காலத்திலும் பேசப்படாத ஒரு மொழியால் எப்படி ஒரு நாட்டையே ஒன்றிணைத்து உருவாக்க முடிந்தது என்று மேனாள் நீதிபதி தான் விளக்க வேண்டும்.

அடுத்து கலாச்சாரம் என்ற சொல்லுக்கு வருவோம். கலாச்சாரம் என்ற சொல் முழுக்க முழுக்க தூய தமிழ்ச் சொல். கல்+ஆ+சாரம் = கலாச்சாரம். கல் – கற்கிற; ஆ- ‘அ,ஆ,இ,ஈ. . . என்ற எழுத்துக் கல்வி; சாரம் – (அதன்) சாறு போன்ற பண்பாட்டு வாழ்நெறி. ஆக, கற்கிற கல்வியின் சாரமான பண்பாடு என்பது கலாச்சாரம் என ஆயிற்று.

இது போன்று கலாச்சாரம் என்ற சொல்லுக்கு, அது சமஸ்கிருதச் சொல் என்றால் வேர்ச்சொற்களை இயல்பு வழுவாமல் காட்ட இயலாது. எனவே அந்தச் சொல்லே தமிழ்ச்சொல்லாக இருக்க சமஸ்கிருத கலாச்சாரத்தால் இந்தியா ஒன்றிணைந்தது என்று எப்படிக் கூற முடியும்?

கலாச்சாரம் என்பது கல்வியின் சாரம் என்பதைத் தான் திருவள்ளுவரும்

‘கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅ ரெனின்’

என்று பாடினார். ஆய பயன் என்பது தான் சாரம். கற்றதனால் வரும் ஆய பயன் தெய்வம் தொழுவது என்பது தமிழர் கண்ட பண்பாட்டு நெறி. அதனால் தான் தமிழிலக்கணமான தொல்காப்பியம் நிலங்களை நான்காகப் பகுத்து, அவற்றில் ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வத்தை எடுத்துக் கூறியது.

படிப்பதன் பயனே தெய்வப் பண்பாட்டுடன் ஒழுகுதல் என்பதே தமிழ்நெறி. வடவேதங்களான இரிக், யசுர், சாமம், அதர்வம் ஆகிய நான்கும் தெய்வத்தை மறுப்பவை; பதிலாக தேவர்களை வணங்குபவை. அதனால் அதன் வழிப்பட்ட சமஸ்கிருதம் தேவபாஷை என்றே கூறப்பட்டது. ஆக தேவப் பண்பாடு சமஸ்கிருதத்தினுடையது; தெய்வப் பண்பாடு என்பது தமிழினுடையது.

2) அடுத்து, இந்திய அரசு சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடச் சொன்னது தமிழ் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக அல்ல என்கிறார் கட்ஜீ.

இவர் எப்போது இந்திய அரசின் ஊதுகுழலானார்? இந்திய அரசு இப்படி எண்ணவில்லை என்பதை இவர் எப்படி அறிந்தார்? இந்திய அரசு இவரிடம் சொல்லி சென்னைக்கு அனுப்பியதா? இந்திய அரசின் பிரதிநிதியாக எப்போது ஆனார்?

இது ஒரு புறம் இருக்க, இந்திய அரசு தமிழ் உட்பட மற்ற மொழிகளின் மீது சமஸ்கிருத ஆதிக்கம் செலுத்தும் எண்ணத்தில் மேற்கூறிய பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடச் சொல்லவில்லை என்பதற்கு மாறாக இந்திய அரசின் சுற்றறிக்கை ஒரு தகவலை அளித்திருக்கிறது. அதாவது உலக மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழி சமஸ்கிருதம் என்று இந்திய அரசின் சுற்றறிக்கை அறிவித்திருக்கிறது.

உலக மொழிகள் அனைத்திற்கும் சமஸ்கிருதமே தாய்மொழி என்ற முடிவிற்கு இந்திய அரசு எப்படி வந்தது? அதற்காக அரசு செய்த ஆய்வுகள் யாவை? அந்த ஆய்வில் அனைத்து உலக மொழிகளின் அறிஞர்களும் கலந்து கொண்டார்களா? அப்படியானால் இந்த ஆய்வு உலகில் எங்கே எப்போது நடந்தது? இப்போது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. பதவி ஏற்கும் முன் இந்த ஆய்வு நடந்ததா? அல்லது பதவி ஏற்ற பின் நடந்ததா?

இந்தக் கருத்திற்கு பா.ஜ.க. வின் உள்ளேயே கருத்தொற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் அண்மையில் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. உறுப்பினர் மாண்பமை திரு.தருண் விஜய் அவர்கள் தமிழின் பழம்பெருமைகளை எல்லாம் விளக்கிக் கூறி நாடு முழுதும் பள்ளிகளில் திருக்குறளைப் பாடமாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இவரை ஜீனியர் விகடன் (13-8-2014) இதழ் பேட்டி கண்டது. தமிழுக்காகவும், திருக்குறளுக்காகவும் நாடாளுமன்றத்தில் முழங்கியுள்ளீர்களே, காரணம் என்ன? என்று கேட்ட போது அவர் பேட்டியில் கூறியதாவது:

‘தமிழ் மொழி மீதுள்ள அளவில்லாத பற்று காரணமாகத் தான் அப்படிப் பேசினேன். நம்முடைய வரலாற்றில் சிறப்பு வாய்ந்த இலக்கியங்களைக் கொடுத்துள்ளனர். இந்திய நாகரிகத்திற்கு தமிழர்களது நாகரிகம் பெரும் பங்களித்துள்ளது. தமிழ் அரசுகள், ஞானிகள், கவிஞர்கள் போன்றவர்களின் பங்களிப்பினால் திருக்குறளைப் போன்ற அரிய வகை நூல்களைப் பெற்றுள்ளோம். ராஜராஜ சோழன் போன்ற சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் முதன்முதலாகக் கொடி பிடித்து மிகவும் கடினமான கடல்களைக் கடந்து நமது நாகரிகம், கலாச்சாரம் மற்றும் மொழியையும் பரப்பியுள்ளனர். இந்தியாவில் இது போன்று யாரும் சாதிக்கவில்லை. ஆனால் இந்த முத்திரையைப் பதித்த சோழ, பாண்டிய அரசர்களைப் பற்றி இந்திய பள்ளிகளின் பாட புத்தகங்களில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் சேர்க்கப்படவில்லை.

காரணம், டெல்லியை ஆண்டவர்கள் ஆணவம் மிக்கவர்களாகவும், அறியாமை உடையவர்களாகவும் இருந்தனர். உபநிடதங்களும், இராமாயணமும் சொல்லுவதே சரி என்று இருந்துவிட்டார்கள். ஆனால் திருக்குறள் என்ன சொல்கிறது என்பதை எந்த வட இந்தியராவது அறிந்திருப்பாரா? இல்லை. இந்தத் தேசத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் கெடுதி விளைத்து வருகிறோம். இந்தி மொழி என்பது கங்கை மாதிரி. ஆனால் அதை அரசு இயந்திரத்தை வைத்துப் பயணிக்கக் கூடாது. உத்தரவின் மூலமாகவோ சட்டத்தைப் போட்டுக் கட்டுப்படுத்தக் கூடாது.

ஒரு வட இந்திய மொழி மேலாதிக்கம் செய்து அரசு இயந்திரத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது. தமிழையும், மற்ற தென்னிந்திய மொழிகளையும் வட இந்திய பள்ளி கல்லூரிகளில் படிக்கும் சூழ்நிலை உருவாக்க வேண்டும். அப்போது தான் ஒருமைப்பாடு வளரும்.

திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்க வேண்டும்.’

மார்க்கண்டேய கட்ஜீ சொன்னதற்கு முற்றிலும் மாறாக நாடாளுமன்றத்தில் ஒரு பா.ஜ.க. உறுப்பினரே முழங்கி இருக்கிறார்.

இந்தத் தமிழன்பர் ஆன தருண் விஜய் அவர்கள் இந்த ஆட்சியில் மட்டுமன்று; சென்ற ஆட்சியிலும் நாடாளுமன்றத்தில் இதே கருத்தைப் பதிவு செய்தார். அதற்காக இந்த ‘தெய்வமுரசு’ இதழ் அவரைப் பாராட்டிக் கடிதம் எழுதி இருந்தது. அவரும் பதிலுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதினார். இரண்டும் இத் தெய்வமுரசு இதழிலேயே வெளியிடப்பட்டதை வாசகர்கள் அறிவார்கள். இந்த முறையும் நம் இதழ் பதிப்பாசிரியர் இவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இனி, சமஸ்கிருதம் உலகமொழிகள் அனைத்திற்கும் தாய் என்ற இந்திய அரசின் அறிவிப்பு எத்துணை அளவில் உண்மைக்குப் புறம்பானது என்பதை இன்னொரு கோணத்திலும் நிறுவலாம்.

சமஸ்கிருதம் என்ற சொல்லிற்கு ‘நன்றாகச் செய்யப்பட்டது’ என்று பொருள். சம் – நன்றாக; கிருதம் – செய்யப்பட்டது = சம்ஸ்கிருதம். இது நன்றாக செய்யப்பட்ட மொழி என்றால் இதற்கு முன்னே ஒழுங்கு செய்யப்பட வேண்டிய சில மொழிகள் இருந்திருக்கின்றன என்றும், அவற்றை ஒழுங்கு செய்து ஆக்கப்பட்ட மொழி தான் சமஸ்கிருதம் என்பது அருத்தாபத்தி (பொருட்பேறு) நியாயத்தால் விளங்குகிறது.

திரு.மார்க்கண்டேய கட்ஜீம் சம்ஸ்கிருதத்திலும் பல்வேறு மொழிகள் இருந்தன; இவை ஒகுங்குபடுத்தப்பட்டு இலக்கண விதிகள் அமைக்கப்பட்டன என்று தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். அப்படியானால் சமஸ்கிருதத்திற்கு முன்பே பல மொழிகள் இருந்தன என்பதை கட்ஜீம் ஒப்புக் கொண்டவர் ஆனார். அவ்வாறானால் சம்ஸ்கிருதம் எப்படி அனைத்து உலக மொழிகளுக்கும் தாய் என்று கூற முடியும்?

மொழிகளுக்கெல்லாம் அடிப்படை எழுத்து. தமிழில் எழுத்துக்கள் ‘அ,ஆ,இ,ஈ . . . ’ வரிசையாக செல்கின்றன. இதனை எழுத்துக்களின் நெடுங்கணக்கு என்பர். இந்த நெடுங்கணக்கை ‘அ’ வின் சரம் அதாவது வரிசை என்றனர் தமிழர். அ+சரம்=அச்சரம். இந்த ‘அச்சரம்’ என்ற சொல்லில் உள்ள சகரம் ககரமாக மருவியது. அச்சரம் அக்கரம் ஆயிற்று; அதுவும் சுருங்கி அகரம் ஆயிற்று. ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என குறளில் வருவது காண்க. ஆக தமிழில் எழுத்துக்களை அக்கரங்கள் என்றும், தனித்தனியே ஒவ்வொரு எழுத்தையும் கரம் என்ற சாரியை சேர்த்துக் கூறுவதும் மரபு. சகரம், மகரம் என்பன போன்றவற்றைக் காண்க.

எனவே ‘அ’ வின் சரம் அச்சரம் ஆகி அக்கரமாக மருவியதையே சமஸ்கிருதம் அக்ஷரம் என்று திரித்து எடுத்துக் கொண்டது. மொழிக்கு அடிப்படையான எழுத்திற்கே சம்ஸ்கிருதம் தமிழிலிருந்து சொல்லை எடுத்து திரித்துக் கொண்டிருக்க அது உலக மொழிகள் அனைத்திற்கும் தாயாவது எப்படி?

இங்கே இச்சர்ச்சை பற்றி நடந்த வரலாறு ஒன்று நினைவில் வைக்கத் தக்கது. சம்ஸ்கிருத வியாகரண இலக்கணத்தில் டாக்கா, டூக்கா, டிப்பணி என்பவற்றில் ஏற்பட்ட சந்தேகத்தை யாரிடம் கேட்டுத் தெளியலாம் என்று வள்ளலார் காலத்து சங்கராச்சாரியார் உரியவரைத் தேடிக் கொண்டிருந்தாராம். உடனிருந்தோர் ‘வள்ளலார் ஓதாதுணர்ந்தவர்; அவர் ஐயத்தைத் தெளிவிக்கக் கூடும்’ என்றனராம். அப்படியே சங்கராச்சாரியார் வள்ளலாரை அணுக, வள்ளலார் அவரது ஐயத்தைப் போக்கினராம். உடனே மகிழ்ந்த சங்கராச்சாரியார், ‘பார்த்தீர்களா, சம்ஸ்கிருதம் எவ்வளவு சிறப்பான மொழி! இம்மொழியே எல்லா மொழிகளுக்கும் தாய் என்று சொல்லாம் அல்லவா?’ என்று சொன்னாராம்.

அதை ஒப்புக் கொண்டு வள்ளலார் இவ்வாறு சொன்னாராம்: ‘ஆம். சம்ஸ்கிருதத்தை மொழிகளின் தாய் என்று கூறலாம். ஆனால் எல்லா மொழிகளுக்கும் தமிழ் தந்தை மொழி’ என்றாராம்.

உண்மை; எல்லா மொழிகளுக்கும் வேர்ச்சொல் அதாவது வித்துச் சொற்கள் தமிழில் அல்லவா உள்ளன? சமஸ்கிருத அக்ஷரத்திற்கே அக்கரம் என்ற வித்தளித்தது தமிழல்லவா?

சிலர் ‘அக்ஷரம்’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லைத் தான் தமிழ் ‘அக்கரம்’ என திரித்துக் கொண்டது என்று சாதிக்க முயலுவர். அந்த வாதம் அண்மையில் பொலபொலவென சரிந்து தூளான மௌலிவாக்கம் 11 மாடிக்கட்டடம் போல சரிந்து தூள் தூளாகும் வாதம். எப்படியெனில் இரண்டு காரணங்கள்: 1) சம்ஸ்கிருதம் தான் பிற மொழிகளிலிருந்து எடுத்துச் செய்யப்பட்டது என்பது அந்தச் சொல்லே காட்டி நிற்கிறது; கட்ஜீம் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தமிழ் என்ற சொல்லே தமித்து அதாவது தனித்து இயங்கக் கூடியது என்ற பொருளில் அமைந்தது. 2) ‘அ’ வின் சரம், அச்சரம், அது அக்கரமாயிற்று என்று வேர்ச் சொற்களைத் தமிழில் காட்டுவது போல ‘அ’ வின் ‘க்ஷரம்’ என்று சம்ஸ்கிருத மொழியில் பிரித்து வேர்ச்சொல் காட்டி விளக்க முடியாது.

ஆக, எப்படிப் பார்த்தாலும் உலக மொழிகளின் தாய் சம்ஸ்கிருதம் என்று இந்திய அரசு செய்துள்ள அறிவிப்பு உண்மைக்கு மாறானது; மொழி வெறி (Linguistic jingoism) யின் பாற்பட்டது; ஆய்வு நெறிக்கு உட்படுத்தினாலும் அகிலத்தால் ஏற்றுக் கொள்ள இயலாதது.

3) அடுத்து, இந்தியாவில் ஆரியர்களாயினும் சரி, திராவிடர்களாயினும் சரி வந்து குடியேறியவர்களே என்ற கட்ஜீவின் கருத்து உலக வரலாற்று ஆசிரியர்கள் அனைவராலும் பரிகசிக்கத் தக்கது. இதைப் பற்றி வரலாற்றாசிரியர்களான V.R.ராமச்சந்திர தீட்சிதர், T.R.சேஷையங்கார், டாக்டர் இராதாகிருஷ்ணன், P.T.சீனிவாச ஐயங்கார் ஆகியோர் எழுதிய புத்தகங்களை எல்லாம் எடுத்துரைக்க இங்கே இடம் போதாது. இத்தனைக்கும் இவர்கள் எல்லாம் பிறப்பால் ஆரியச் சார்புடையவர்கள் ஆனாலும் சார்பு நிலையின்றி நடுநிலையோடு கூறிய கருத்துக்கள் கவனத்தில் கொள்ளத் தக்கவை. தமிழர்கள் இந்தியாவின் தென்கோடியில் இருந்த குமரிக்கண்டத்தில் தோன்றிய மூத்த குடிகள் என்றும் ஆரியர்கள் மைனர் ஆசியாவிலிருந்து இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் என்றும் சான்றுகள் காட்டி மேற்கூறிய ஆசிரியர்கள் நிறுவி இருக்கிறார்கள். இந்தியப் பிரதமராய் இருந்த ஜவஹர்லால் நேரு அவர்களும் தான் எழுதிய ‘உலக சரித்திரம்’ என்ற நூலில் இதே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

இவற்றிற்கெல்லாம் மேலாக விஞ்ஞான ரீதியாக இந்துமாக் கடலில் கடலடி ஆய்வு செய்து ‘முக்கடல் புதிர்’ (The Riddles of the Three Oceans) என்ற நூலை வெளியிட்ட ரஷ்ய விஞ்ஞானியான ‘அலெக்ஸாந்தர் கோந்த்ரதேவ்’ அவர்கள் தமது நூலில் ‘இறையனார் களவியல்’ என்கிற பழந்தமிழ் நூல் குறிப்பிடும் பஃறுளி ஆறு, தமிழ்த் தலைச்சங்கம் போன்றவற்றைச் சான்றுகளுடன் நிறுவி இருக்கிறார்.

            இவற்றையெல்லாம் பார்க்கும் போது ஓய்வு பெற்ற நீதிபதி கட்ஜீ உண்மைக்கு மாறான தகவல்களைக் கட்சி கட்டிக் கொண்டு கூறி, பதவியிலிருந்து மட்டுமன்று, நீதியிலிருந்தே ஓய்வு கொண்டு, சாய்வு செய்து, யாரோ ஏவி விட்ட அம்பாகப் பாய்ந்து உண்மையை வதம் செய்துள்ளார் என்பதே உண்மை. இது கால மாறாட்டத்தால் நிகழ்ந்தது; காலம் மாறும்!

 

Top