தமிழர் திருநாள் ஆசி பெறும்
3ஆம் ஆண்டு
வள்ளிமலை மலைவலம் படிவிழா
– பவனிப்புலவன்
2014 சனவரி முதல் தேதி. மாலை 4 மணியளவில் அலைபேசி சிணுங்கியது. சைதாப்பேட்டை மின்தொடர் நிலையத்தில் என்னைக் காத்திருக்கும் படி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் ச.மு.தி. என்பவர். யார் அவர்?
தமிழ்நெறி பற்றிய உணர்வுகள் சமுத்திரம் போல் அவர் நெஞ்சத்தில் பொங்கிக் கொண்டிருக்கும். அதனால் தானோ என்னவோ அவருடைய பெயரின் முதலெழுத்துக்கள் இயற்கையாக அப்படி அமைந்திருக்கின்றன. அவர் தான் சென்னைப் பெரியார் நகரைச் சேர்ந்த நயத்தமிழ் நெஞ்சன் திரு.ச.மு.தியாகராசன். எதற்காகக் கூப்பிட்டாரோ என்ற யோசனையில் அவர் சொன்ன இடத்தில் காத்திருந்தேன். பத்து மணித்துளிகள் ஓடின.
மின்தொடர் வண்டியின் கடைசிப் பெட்டியில் இருந்து வெளிபட்டு என்னை நோக்கி ச.மு.தியாகராசன் அவர்கள் வந்தார். வள்ளிமலையில் வழிபாடு நடைபெறவுள்ளது, அவசியம் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டே அழைப்பிதழ்களை என்னிடம் தந்தார்.
தமிழர் திருநாள் ஆசி பெறும் வள்ளிமலை மலைவலம் படிவிழா அழைப்பிதழ் என்று அச்சிடப்பட்டு இருந்தது. திருவள்ளுவர் ஆண்டு 2044, உயர்வாகையாண்டு, சிலை மாதம் 26 மற்றும் 27 (2014 சனவரி 10 மற்றும் 11) ஆகிய நாள்களில் வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் உள்ள அருள்மிகு தேவி வள்ளியம்மை தவப்பீடத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை ஆவலுடன் நோட்டமிட்டேன். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மற்றும் திருப்புகழ் சிவம் மு.பெருமாள் அப்பா ஆகியோர்களின் திருவுருவப் படங்கள் முதல் பக்கத்தை அங்கரித்தன. இது மிகவும் பொருத்தமாகத் தான் உள்ளது.
‘இஸ்லாமியர் ஆண்டுக்கொரு முறையாவது ஹஜ் புனிதப் பயணம் செய்வது போல் முருகனடியார்கள் ஆண்டுக்கொரு முறையாவது வள்ளிமலைக்குச் சென்று முருகனை வணங்க வேண்டும்’ என்னும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளாணை கொண்ட வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. இந்த அருளாணையின் மூலவேர் எங்கிருந்து வந்தது என்பதும் அதில் குறிக்கப்பட்டிருந்தது. அது அருணகிரிநாதரருளிய திருப்புகழில் ஒன்றில் உள்ள இந்த வரிகள் தான்:
அவசிய முன்வேண்டிப் பலகாலும்
அறிவின் உணர்ந்து ஆண்டுக் கொருநாளில்
தவசெபமுந் தீண்டிக் கனிவாகி
சரணமதும் பூண்டற்(கு) அருள்வாயே
சென்ற 20ஆம் நூற்றாண்டில் வள்ளிமலையில் திருப்படிகளை அமைக்கும் பணியில் தம்மை ஈடுத்திக் கொண்ட திருப்புகழ் சிவம் பெருமாள் அப்பா அவர்களின் நினைவினைப் போற்றும் முகமாகவும் இந்த விழா அமைந்திருப்பது இறை திருவருளே ஆகும்.
சனவரி 10, வெள்ளிக் கிழமையன்று மாலையில் நடைபெறவுள்ள சொற்பொழிவு பயிலரங்கத்தில் நிச்சயமாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டு விட்டு அடுத்த மின்தொடர் வண்டியினைப் பிடித்து சென்று விட்டார் ச.மு.தி. அழைப்பிதழை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். வள்ளிமலைக்குப் பவனி செல்ல வேண்டும் என்று அன்றிரவே தீர்மானித்துக் கொண்டேன்.
2014 சனவரி 10 காலை 9 மணியளவில் கிண்டி ரயிலடியில் இருந்து மூன்று சிற்றுந்துகளில் சுமார் 60 பேர் வள்ளிமலை நோக்கிப் பயணமானோம். நான் ஏறி வந்த வண்டியில் குளத்தூர் பெரியவர் இரெ.கணேசன், எர்ணாவூர் ஜகதீசன், வங்கி மேலாளர் சீனிவாசன், மேனாள் இந்து அறநிலையத்துறை ஆணையராகச் சிறக்கப் பணியாற்றிய திரு.மெய்கண்ட சிவம் அவர்களின் திருமகனார் அருள்நந்தி சிவம், அருட்பிரகாச வள்ளலாரின் தமையனாரான சபாபதிப் பிள்ளையவர்களின் ஐந்தாம் தலைமுறையினரான திரு.கே.உமாபதி, தெய்வமுரசு உதவியாசிரியரான திரு. இரா.உமாபதி, முதலானவர்கள் பயணித்தார்கள்.
செந்தமிழ்வேள்விச்சதுரர் திரு.சத்தியவேல் முருகனார் குடும்பத்தினர், திரு.சத்தியானந்தம், திரு.ச.மு.தியாகராசன், வாரியார் அடிமை திரு.ப.கிருபாகரன், திரு.நமசிவாயம், திருமதி,கிருஷ்டிணவேணி நமசிவாயம், திரு.மோகன், அருட்சுனைஞர் மாணவர் திரு.கோதண்டராமன் முதலானவர்கள் மற்ற வண்டிகளில் வந்து கொண்டிருந்தனர். நண்பகல் 2 மணியளவில் வள்ளிமலையில் உள்ள தவப்பீடத்திற்கு வந்தடைந்தோம். மதிய உணவினை வயிறார உண்டோம். எங்களுக்காக இந்த சுவையான உணவை அன்று விடியற்காலை 4 மணிக்கே எழுந்து ஆயத்தம் செய்த திருமதி கிருஷ்ணவேணி நமசிவாயம் அம்மா அவர்களுக்குப் பாராட்டுதல்களையும் நன்றியினையும் தெரிவித்தோம்.
நீண்ட தூரம் பயணம் செய்ததாலும், மூக்குமுட்ட சாப்பிட்டதாலும் சிறிது நேரம் “கட்டையைச் சாய்த்து” இளைப்பாறினேன். எவ்வளவு நேரம் சென்றது என்றே தெரியவில்லை. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! தவப்பீட நாயகி வள்ளியம்மைக்கு அரோகரா! என்ற முழக்கம் என்னை எழுப்பியது. எழுந்து பார்த்தால் எல்லோரும் நீறணிந்து பத்திப் பரவசத்துடன் மலைவலத்திற்கு அனியமாகி இருந்தனர். விரைந்து சென்று நானும் ஆயத்தமாகி வந்தேன்.
அதற்குள், பஜ்ஜி தயாராகிக் கொண்டிருக்கிறது சற்றுப் பொறுங்கள் என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்தார் ஒருவர். யார் என்று பார்த்தால் அட, நம்ம கிருபாகரன் ஐயா அவர்கள்! இருள் சூழும் முன்னே மலைவலம் வர வேண்டுமே என்று எல்லோரும் கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் போது இது வேறயா என்று அலுத்துக் கொண்டேன். கோபித்துக் கொள்ளாதீர்கள் அடியார்கள் புத்துணர்வுடன் தெம்பாக மலைவலம் வர வேண்டாமா? அதற்காகத் தான் இந்த ஏற்பாடு என்றார்.
பஜ்ஜி வரும்வரை முருகனைப் பற்றி ஏதாவது சொல்லு என்று உதவியாசிரியர் உமாபதியை நோக்கி தெய்வமுரசு ஆசிரியர் சொன்னார். அவர் இப்படித் திடீரென்று கேட்டது பிரம்மாவைப் பார்த்து பிரணவத்திற்கு அர்த்தம் சொல்லு என்று முருகன் கேட்டது போல் ஆயிற்று உமாபதிக்கு. அவரு புள்ளையாரு பக்தரு. அதனால நாரையூர் பொல்லாப் பிள்ளையார் பற்றி தான் பேசுவாரு என்றார் அருகில் இருந்த மோகன். சரி அதைப் பற்றியே பேசலாமே என்றார் ஆசிரியர். ‘என்னை நினைந்தடிமை’ எனத் தொடங்கும் பதினோராம் திருமுறைப் பாடலின் சிறப்புக்களைச் சொல்லிக் கொண்டு வந்தார் உதவியாசிரியர். சரி, பஜ்ஜி வந்து விட்டது மிச்சத்தைப் பயிலரங்கில் வைத்துக் கொள்ளலாம் என்று ஆசிரியர் கட்டளை இட்டதும் தனது உரையை முடித்துக் கொண்டார் உமாபதி.
வள்ளிமலை மலைவலத்திற்காகவே பிரத்யேகமாகச் செய்யப்பட்ட சந்தன மாலைகளை அனைவருக்கும் அணிவித்தார் ஆசிரியர். அதன் பின் கைத்தல நிறைகனி திருப்புகழ் பாடிக் கொண்டே தேரடியில் உள்ள விநாயகர் கோயிலில் வழிபாடு செய்தோம். விநாயகர் நல்லாசியுடன் தேவாரம் திருவாசகம் முதலான திருமுறைப் பாடல்களை ஒலிபெருக்கி மூலம் ஓதிக் கொண்டும் மலை மேல் வில்வம், மலர்கள் முதலியவற்றைச் சொரிந்து அருச்சித்துக் கொண்டும் வள்ளிமலையை வலமாக வரத் தொடங்கினோம். தோடு கூற்று பித்தா எனத் தொடங்கும் பதிகங்கள், திருவைந்தெழுத்துப் பதிகங்கள், திருத்தொண்டத் தொகைப் பதிகம், சிவபுராணம் முதலானவற்றைத் தொடர்ந்து கடைக்கணியல் வகுப்பு, சீர்பாத வகுப்பு, வேல்வகுப்பு, கொலு வகுப்பு முதலாவற்றை ஆசிரியர் சொல்லச் சொல்ல அனைவரும் திரும்பச் சொன்னோம். நானும் பல்லாண்டுகளாக வள்ளிமலைப் படிவிழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது தான் திருவகுப்பு பாடல்களைப் பாடக் கேட்டேன். இதுவே இந்த முறை நான் கண்ட சிறப்பாகும்.
மலைவலம் முடியும் தறுவாயில் நாராயணர் திருக்கோயில் தென்பட்டது. நாராயணர் சிவமுனிவராகத் தவம் செய்து கொண்டிருந்த போது இலக்குமி தேவி மானாக வந்தாள். அப்போது அம்முனிவரின் திருக்கண்ணோக்கம் பெற்ற மான் கருவுற்று வள்ளியை ஈன்று வள்ளிக்குழியில் அவதரிக்கச் செய்தது என்ற வரலாற்றை கந்தபுராணத்தில் படித்திருப்போம். அந்த வரலாறு நிகழ்ந்த இடம் இது தான் என்று ஆசிரியர் சுட்டிக் காட்டினார். அவ்விடத்தில் திருக்கோயில் எழுப்பி பல்லாண்டுகளாகச் சேவை செய்து வரும் அந்தப் பாகவதரைப் பாராட்டி எல்லோரும் வாழ்த்தினர். திருப்புகழ் சிவம் சமாதிக் கோயிலை வழிபட்டதன் பின்னர் வள்ளியம்மை தவப்பீடத்தில் அறுபடைவீட்டு முருகப்பெருமானையும் தவக்கோலத்தில் அமர்ந்துள்ள வள்ளி நாயகியையும் வழிபட்டனர்.
மலைவலம் முடிந்து வள்ளியம்மை வழிபாடு நிகழ்ந்த பின்னர் இரவில் சொற்பொழிவு பயிலரங்கம் தொடங்கியது. வாரியார் சுவாமிகளுடன் பலகாலம் அணுக்கமாக இருந்து பணியாற்றிய திரு.கிருபாகரன் அவர்கள் பயிலரங்கத்தில் பேசத் தொடங்கினார். நம்மை எல்லாம் ஆற்றுப் படுத்தி நன்னிலைக்குக் கொண்டு செல்லும் ஆசிரியரின் தொண்டு மனப்பாங்கினைப் பலபட பாராட்டி தனது பேச்சைச் தொடங்கினார். நாள் என்செயும் எனத் தொடங்கும் கந்தரலங்காரம் குறித்து சிறப்பாகப் பேசினார். நிறைவாக புலவன்பாடி இரத்தினப்பா அவர்களின் பெருமையை நினைவு கூர்ந்தார். இரவு உணவு தயார் செய்பவர்களை நெறிப்படுத்தும் பணிகளுக்கு இடையில் தனது சொற்பொழிவை இவர் ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து, கந்தரநுபூதி குறித்த ஓர் ஆய்வுரையை ஆசிரியரின் தமையனார் திரு.சத்தியானந்தம் அவர்கள் வழங்கினார். அவர் கையில் இருந்த தாள்களைப் பார்த்தால் இந்த ஆய்வுரைக்காக அவர் பலமணி நேரம் பல நூல்களைப் படித்து குறிப்புகளைச் சேகரிக்க உழைத்திருப்பார் என்று புலனாகிறது. கந்தரநுபூதியில் உள்ள 51 பாடல்களில் பெரும்பாலான முக்கியமான பாடல்களைத் தெரிவு செய்து அதன் அரும்பொருள்களைச் சிறப்பாக விவரித்தார்.
ஆதம்பாக்கம் அருந்தமிழ் மன்றத்தின் செயலாளர் திரு. நாகரத்தினம் அவர்கள் திருமுருகாற்றுப்படை என்ற தலைப்பில் உரையாற்றினார். நான் பேசப் போகும் கருத்துக்கள் எல்லாம் ஆசிரியரின் திருமுருகாற்றுப்படை நூலில் இருந்து எடுக்கப்பட்டதனால் நீங்கள் எல்லாரும் தைரியமாகக் கை தட்டலாம் என்று நகைச்சுவை இழையோட பேசத் தொடங்கினார். உண்மையில் கைதட்டும் படி சிறப்பாக அமைந்தது அவரது பேச்சு.
உதவியாசிரியர் உமாபதி திருப்புகழ் குறித்து சொற்பொழிவாற்றினார். பிள்ளைத்தமிழ் நூல்களில் இருந்து மேற்கோள்கள் காட்டி திருப்புகழ் பெருமைகளைப் பேசினார். புவனத்தொரு பொற்றொடி எனத் தொடங்கும் திரிசிரபுரத் திருப்புகழை ஒப்பித்தார். கேட்பதற்குக் கொஞ்சம் பிரமிப்பாகவும் பயமாகவும் இருந்தது. ஏன் பயமாக இருந்தது? அந்தத் திருப்புகழில் நரக வேதனை குறித்து கடினமான சந்தத்தில் விவரிக்கப்பட்டிருந்தது. அவர் அதற்குப் பொருள் சொல்ல முயன்ற போது நேரம் ஆகிவிட்டதைக் காரணம் காட்டி ஆசிரியர் நிறுத்திக் கொள்ளச் சொன்னார். அவையில் இருந்தவர்கள் எல்லாரும் ‘அப்பாடா’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டதைக் கவனிக்க முடிந்தது.
அடுத்தாக ஆதம்பாக்கம் இராஜேந்திரன் அவர்கள் ‘செங்கோடனைச் சென்று கண்டு தொழ நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே’ என்ற கந்தரலங்காரப் பாடல் பகுதியை மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றினார்கள். இவர் போக்குவரத்துக் காவல் துறையைச் சேர்ந்த முருக பத்தர் என்று அருகில் இருந்தவர்கள் சொன்ன போது மெய் சிலிர்த்தேன்.
நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் அவர்கள் உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்ற கந்தரநுபூதியின் நிறைவுப் பாடலுக்கு விளக்கம் அளித்தார். அவர் உண்மையில் அந்தப் பாடலில் ஆழ்ந்து அநுபவித்துப் பேசினார். இவரது உரையை ஆசிரியரே பாராட்டினார் என்றால் அதனுடைய சிறப்பை என்னென்று சொல்வது?
ஆண்களே பேசிக் கொண்டிருக்கின்றனரே என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் திருமதி சசிகலா அவர்கள் பேசினார்கள். அவர் ஆதம்பாக்கம் சித்தாந்த ரத்தினம் சிவப்பிரகாசம் அவர்களின் இல்லத்தைச் சேர்ந்தவர் என்றால் அவர்களின் ஞானத்திற்கு வேறு என்ன சான்று வேண்டும்?
செந்தமிழ் வேள்விச் சதுரர் திரு.சத்தியவேல் முருகனார் அவர்கள் பயிலரங்கில் இடையிடையே சிறந்த சொற்பொழிவு எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்காக அறிவுரைகளையும் குறிப்புகளையும் சொன்னார். அவை அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்தன. பயிலரங்கம் முடிந்தவுடன் இரவு உணவு அருந்திவிட்டு அனைவரும் உறங்கச் சென்றனர்.
அடுத்த நாள் காரிக்கிழமை அன்று காலை தேவி வள்ளியம்மை தவப்பீடத்தில் சிறப்பு வழிபாடு நிகழ்த்தி விட்டு படிவிழாவிற்குப் புறப்பட்டனர். திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை திருப்புகழ்களை முறைப்படி ஓதிக் கொண்டு சென்றனர். மலையடிவாரத்தில் அமைந்துள்ள வள்ளியம்மை சந்நிதியில் வழிபாடாற்றினர். அப்போது அல்லிவிழியாலும் எனத் தொடங்கும் திருப்புகழை திரு.எம்.சி.சின்னசாமி அவர்கள் உருக்கமுடன் பாடினார்கள்.
படிவிழாவைச் சகலாகம பண்டிதர் திரு.எஸ்.பி.சபாரத்தினம் அவர்கள் வாழ்த்துரை நல்கி தொடக்கி வைத்து முருகன் அடியார்களை மலைக்கு மேல் செல்ல வழியனுப்பினார். உம்பர்தரு தேனுமணி திருப்புகழைப் பாடி மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் பிள்ளையாரை வணங்கி விட்டு கந்தரநுபூதிப் பாடல்களைப் பாடிக் கொண்டு ஆசிரியர் தலைமையில் அனைவரும் மேலேறிச் சென்றனர்.
ஓரிடத்தில் படிகள் பழைய கற்களால் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கடியில் சித்தர் பெருமக்கள் நினைவுக்கு எட்டா காலத்தில் இருந்து தவத்தில் ஆழ்ந்திருக்கும் செய்தியை ஆசிரியர் விவரித்தார். அவ்விடத்தில் சிறிது நேரம் அமர்ந்து அந்தப் பெரியோர்களைச் சிந்தித்து வந்தித்த பின்பு மலை மேல் ஏறிச் சென்றனர். கந்தரநுபூதியைத் தொடர்ந்து திருப்புகழ்ப் பாடல்களை இசைத்தும், பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் ஓதியும் மலைமேல் உள்ள வள்ளி சந்நிதியையும் வள்ளி தெய்வானை உடனாய முருகன் சந்நிதியையும் தரிசித்து வழிபாடாற்றினர்.
படிவிழா சிறப்பாக நிறைவேறிய பின்னர் தவப்பீடத்தில் சமயச் சிந்தனை அரங்கம் நிகழ்ந்தது. சிதம்பர சுவாமிகள் குறித்து செந்தமிழ் செல்வமணி திரு.கோ.சண்முகம் அவர்கள் உரையாற்றினார்கள். சிதம்பரக் கவிராயராக இருந்து சிதம்பர சுவாமிகளாக உருவான அருள் வரலாற்றைச் செவ்வனே வழங்கினார்.
பாம்பன் சுவாமிகள் குறித்துச் சகலாகம பண்டிதர் திரு.எஸ்.பி.சபாரத்தினம் அவர்கள் உரையாற்றினார்கள். இவர் பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் முதலான பல நூல்களுக்கு உரை வரைந்த சிறப்புடையவர். பாம்பனாரின் பெருமைகளை எல்லாம் மனங் கொள்ளத்தக்க வகையில் தமது உரையில் இவர் வழங்கினார்.
வாரியார் சுவாமிகள் பற்றி ஆசிரியரின் திருமகனார் சித்தாந்த ரத்தினம் திரு.எஸ்.திருச்சுடர்நம்பி அவர்கள் பேசினார்கள். இவர் கந்த சட்டிவிழாவின் போது சென்னையில் பல்வேறு இடங்களில் அனைத்துத் தரப்பினரும் வியக்கும் வண்ணம் சொற்பெருக்காற்றும் வன்மை பெற்றவர். இவர் நகைச்சுவை இழையோட இயல்பாகப் பேசினார். இவர் வாரியார் சுவாமிகள் குடும்பத்திலிருந்து வந்தவர் என்றால் இவரது பேச்சாற்றல் பற்றி அதிகமாகச் சொல்லவும் வேண்டுமோ?
இராமலிங்க வள்ளலார் பற்றிய ஓர் ஆய்வுரையை சித்தாந்தச் சுடர் திரு.எம்.அருள்நந்திசிவம் அவர்கள் வழங்கினார்கள். வள்ளல் பெருமான் ஒளியுடம்பு பெற்ற நிகழ்ச்சி அவரது பிள்ளைப்பிராயத்திலேயே தொடங்கி விட்டது என்றும் அதற்கான சான்று தெய்வமணிமாலையில் ‘உப்புற்ற பாண்டம்’ எனத் தொடங்கும் 17ஆவது பாடலில் உள்ளது என்றும் குறிப்பிட்டார். இப்படி ஒரு ஆய்வுரையை இவர் தருவார் என்று நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு சிறப்பாக இருந்தது!
நிறைவாக வள்ளிமலை இரகசியம் என்ற தலைப்பில் தமக்கேயுரிய பாணியில் செந்தமிழ்வேள்விச் சதுரர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் சிறப்புரை நிகழ்த்தினார். வள்ளி என்ற பக்குவ ஆன்மா முருகன் என்ற பரம்பொருளை அடையும் நிகழ்ச்சியாகிய வள்ளி சன்மார்க்கம் என்ற குன்னம் அதாவது இரகசியம், அருணகிரிநாதருக்கே வள்ளிமலைக்கு வந்த பிறகு தான் வெட்ட வெளிச்சமானது என்றார். தங்கமலை இரகசியம் என்ற திரைப்படத்தைப் பற்றி மட்டும் அறிந்திருந்த நமக்கு வள்ளிமலை இரகசியம் பற்றி அறியும் போது வியப்பாகவும் இதைப் பற்றித் தெரியாமல் இது நாள் வரை இருந்து விட்டோமே என்று வெட்கமாகவும் இருந்தது. வள்ளியைப் போல் பக்குவான்மாவாக மாற என்று தவநிலை வாய்க்குமோ என்று ஏக்கமாகவும் இருந்தது.
சொற்பொழிவுகள் நிறைவேறிய பின்னர் கைத்தலநிறைகனி கணபதி, ஆறுபடைவீட்டு முருகப்பெருமான், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருப்புகழ்சிவம் பெருமாள் அப்பா, வாரியார் சுவாமிகள் உள்ளிட்ட முருகனடியார்கள், வேல், தவப்பீட நாயகி வள்ளி ஆகிய மூர்த்தங்களுக்கு வழிபாடுகள் சிறப்பாக நிகழ்ந்தன. அருகில் அமைந்துள்ள திருப்புகழ்சிவம் பெருமாள் அப்பாவின் சமாதித் திருக்கோயிலில் படையல் இட்டு வழிபாடும் செவ்வனே நிகழ்ந்தது. அதன் பின்னர் அன்பர்கள் அனைவரும் திருவமுது செய்து விட்டு வீடு நோக்கிப் பயணம் செய்தனர்.
வள்ளிமலைக்கு வந்ததால் வள்ளி மணவாளனின் திருவடி என்ற இன்ப வீடு நோக்கியும் பயணம் செய்தனர்.