You are here
Home > சர்வ ஞான > சர்வ ஞான உத்தர ஆகமம் – செந்தமிழ் வேள்விச் சதுரர்

சர்வ ஞான உத்தர ஆகமம் – செந்தமிழ் வேள்விச் சதுரர்

முருகப்பெருமான்: தந்தையே! ஒரு சின்ன சந்தேகம்!

சிவபெருமான்: நீ கேட்பதைக் கேள்! அது சின்னதா பெரிதா என்று நான் சொல்கிறேன்!

முருகப்பெருமான்: அதுவும் சரி தான்! உயிர்கள் உடலோடு கூடி நிற்கும் போது ஆன்மாக்கள் எனப்படுகின்றன. உடலோடு கட்டுண்டு நிற்கும் ஆன்மாக்கள் உடல் போலவே தன்னை உணர்கிறது. ஆனால் உடலை விட்டு இறைவனோடு கூடி இரண்டற நிற்கும் போது தன்னை இறையெனவே உணர்கிறது. இது ஏன்? இதற்கு என்னவோ ஒரு தன்மை என்று கூறுவார்களே, அது என்ன தன்மை?

சிவபெருமான்: உயிரின் இந்தத் தன்மைக்குச் சார்ந்ததன் வண்ணமாகும் தன்மை என்று பெயர். மேகத்தில் இருந்து மழைநீர் பொழிகிறது; அது எந்த நிறமும் இல்லாமல் தூய்மையாய் உள்ளது. ஆனால் அந்த நீர் விழும் இடம் செம்மண் ஆக இருந்தால் செம்மண்ணோடு கலந்து செந்நிறம் ஆகி விடுகிறது. கரிசல் மண்ணில் கலந்தால் கருநிறமாகி விடுகிறது. எந்தெந்த இடத்தில் மழைநீர் விழுகிறதோ அந்தந்த இடத்தில் உள்ள பொருளோடு கூடிக் கலந்து அதனதன் நிறத்தையும் தன்மைகளையும் கொண்டு விடுகிறது. அப்படித் தான் உயிரும் எந்தெந்த இடத்தைச் சாருகிறதோ அந்தந்த இடத்தின் வண்ணமாய் மாறிவிடுகிறது. இதைத் தான் சார்ந்ததன் வண்ணமாகும் தன்மை என்று கூறுவது.

ஆகவே உயிருக்குச் சார்பு முக்கியம். சார வேண்டியதில் உயிர் சார வேண்டும். சாரக் கூடாத இடத்தை உயிர் சாராமல் எச்சரிக்கையாக நீங்கி நிற்க வேண்டும். இதைத் தான் எனதன்பன் திருவள்ளுவன்,

‘சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்.’

என்று அழகாகப் பாடினான். அது போல குறுந்தொகை என்று ஒரு சங்க நூல் உண்டு. அதில் நான் பாடிய கொங்கு தேர் வாழ்க்கை என்று தொடங்கும் பாடலையும் கோத்திருக்கிறார்கள். அதில் ஒரு பாடலைப் பாடிய புலவனும் ‘செம்புலப் பெயல்நீர் போல’ என்று நீரின் சார்ந்ததன் வண்ணமாகும் தன்மையைத் தன் குறிக்கோளுக்கு ஏற்ப உயிருக்கு உவமையாகப் பயன்படுத்திக் கொண்டான். அவன் பெயரே அதனால் செம்புலப்பெயல்நீரார் என ஆயிற்று.

முருகப்பெருமான்: அடடா! திருவள்ளுவரும் சரி, அந்தச் செம்புலப் பெயல் நீராரும் சரி தமிழர் நெறியான சைவ சித்தாந்திகள் என்று சொல்லுங்கள்!

சிவபெருமான்: ஆமாம்! நாம் மனித இனத்திற்குக் கற்பித்த முதல் மொழியான தமிழில் நம் கொள்கைதானே வரும்! இதில் என்ன ஆச்சரியம்! இனி தொடர்வோம். சிவமாகிய யாம் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளோம். நமது யாண்டும் நிறைவு என்பது இது. எனவே நாம் இல்லாத இடமே இல்லை. அதனால் உள்ள பொருள்களோடும் தொடர்புடையோம் யாம்! அதனால் ‘சைவம் சிவனுடன் சம்பந்தமாவது’ என்று திருமூலன் பாடி வைத்தான்.

ஆகவே ஆன்மாக்கள் எந்தப் பொருளுடன் தொடர்பு கொண்டாலும் அந்தப் பொருளாகி விடும் – சார்ந்ததன் வண்ணமாகும் அதன் இயல்பினால். ஆனால் எல்லாப் பொருள்களோடும் யாம் தொடர்புடையோம் ஆதலால் ஆன்மாக்கள் சார்ந்ததில் ஆழ்ந்து போக ஆழ்ந்து போக இறுதியாக அவை எம்மைச் சார்ந்து எம்முடன் இரண்டறக் கலத்தல் நிகழும். அது எப்போது என்றால் எல்லாவற்றிலும் எவன் எம்மைக் காண்கிறானோ அப்போது நிகழும். அதாவது எதிலும் சிவத்துவத்தை உணர்பவன் எவனோ அவனுக்கு அது நிகழும்.

இவ்வாறு எவனொருவன் தொடர்புடைய பொருள்களில் எல்லாம் எம்மைக் காண்கிறானோ அவனைச் சம்சார சாகரம் கடந்தவன் என்று கூறலாம். அவன் தான் எம்மோடு இரண்டறக் கலப்பவன்; அதை விட்டு வடமொழியில் உள்ள உபநிடதம் வடவேத வேள்வி இதிலெல்லாம் மூழ்குகிறானோ அவன் எம்மோடு இரண்டறக் கலத்தலுக்கு உரியவன் ஆகான். .

முருகப்பெருமான்: தந்தையே! ஒரு சந்தேகம்! எல்லாம் உமக்குள் அடக்கம். அப்படியானால் வடமொழி உபநிடதத்திலும் வட வேத வேள்வியிலும் இறைவனாகிய தாம் இருக்க வேண்டுமே! அப்படி இருக்க அவற்றில் மூழ்குகிறவன் எப்படி தங்களோடு இரண்டறக் கலக்க இயலாதவன் ஆகி விடுகிறான்?

சிவபெருமான்: சரியான கேள்வி கேட்டாய் மகனே! எல்லாம் எமக்கு அடக்கம் என்பதால் வடமொழி உபநிடதங்கள் மற்றும் வடவேத வேள்விகளும் எமக்குள் அடக்கம் தான். அவற்றில் நான் மறைந்திருந்தாலும் அவை எம்மை மறைக்கின்றன. வடமொழி உபநிடதங்கள் எம்மை அரைகுறையாக அடையாளம் காட்டுபவை; வடவேத வேள்விகள் எம்மோடு தொடர்பு இல்லாதவை என்பதோடு எம்மை இல்லை என்றே பறை சாற்றுபவை. எனவே இவற்றில் ஆழ்பவனுக்கு இவற்றின் ஊடேயும் உள்ள யாம் புலப்பட நியாயமில்லை. எல்லாப் பொருளிலும் ஆழ்ந்து எம்மை எல்லாவற்றிலும் கண்டால் தானே அவற்றில் ஆழ்பவன் இறுதியில் எம்மோடு இரண்டறக் கலக்க முடியும் என்று முன்னர் சொன்னேன். ஆனால் மேலே சொன்னவை அவற்றில் ஆழ்பவனுக்கு எம்மைப் புலப்படா வண்ணம் மறைப்பதால் யாம் அவற்றினுள் இருந்தும் அவனுக்குப் பயனாக முடிவதில்லை.

முருகப்பெருமான்: இப்போது புரிந்தது தந்தையே!

சிவபெருமான்: புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி!

இக்கருத்துக்கள் அடங்கிய பாடல் இதோ:

ஆதலினால் எவ்வுருவைப் பாவித்தான் சீவன்

         அந்தவந்த ரூபமெலாம் சிவரூப மாகும்

      ஆதிசிவன் வியாபகன்ஆ தலின்இந்த வாறே

        ஆன்மவிஞ் ஞானத்தைச் சுருக்கிஉரை செய்தோம்

      தீதினில் இவ்வாறான்ம சொரூபமாய் இருந்த

         சிவத்துவத்தை அறிந்தான்மா வைக்காண்பான் அவனே

      ஓதியசம் சாரசா கரம்கடப்பன் அல்லால்

         உபநிடதம் வேள்விதெய்வத் தால்நீந்தல் அரிதாம்.

                                       தொடரும். . .

 

 

 

 

 

 

Top