You are here
Home > ஆசிரியர் மேசை > நின்றவூர் பூசலாரும் நீதி நின்றிடாப் பூசலாரும்

நின்றவூர் பூசலாரும் நீதி நின்றிடாப் பூசலாரும்

நின்றவூர் பூசலாரும் நீதி நின்றிடாப் பூசலாரும்

                      ‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் (21-01-2014) புரட்டிக் கொண்டே வந்தேன். என்னையா புரட்கிறாய் என்று அந்த நாளிதழ்க்கு என் மேல் கோபம் வந்து விட்டது போலும்! அதிலிருந்த ஒரு செய்தி என்னைப் புரட்டிப் போட்டு விட்டது. தலைப்பு இது தான்: ‘அமைச்சர் வருமுன் குடமுழுக்கு; சிவாச்சாரியார் பணியிடை நீக்கம்!’

செய்தி இது தான்: “புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி வெற்றியாண்டவர் கோயிலில் திங்கள் கிழமை மக்கள் வருவதற்கு முன்னதாகவே குடமுழுக்கை நடத்தியதாக சிவாச்சாரியார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.”

முதல் பாராவில் மக்கள் வருவதற்கு முன்னர் குடமுழுக்கை நடத்தியதால் குறிப்பிட்ட கண்ணப்ப சிவாச்சாரியார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறியிருந்தாலும் செய்தித் தலைப்பில் அமைச்சர் வருமுன் குடமுழுக்கு நடத்தியதால் சிவாச்சாரியார் பணியிடை நீக்கம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் செய்தியின் உள்ளே இறுதி 2 பாராக்கள் அமைச்சர் வருவதற்குத் தாமதமாகியதால் உரிய நேரத்தில் குடமுழுக்கு குறிப்பிட்ட சிவாச்சாரியாரால் நடத்தப்பட்டது என்று தான் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பாராக்கள் வருமாறு:

“தி.மு.க. மாவட்டச் செயலர் பெரியண்ணன் அரசு, தி.மு.க. மாவட்டப் பொருளாளர் கே.பி.கே. தங்கவேலு ஆகியோர் இந்தக் கோயில் திருப்பணிக் குழுவின் முக்கிய நிர்வாகிகளாக உள்ளனர். இவர்களும் மேலும் சிலரும் குடமுழுக்கைக் காண கோயிலின் மேல் பகுதியில் நின்றிருந்தனர். அப்போது அவர்கள் வானில் கருடன் வட்டமிடுவதாலும், உரிய நேரம் வந்து விட்டதாலும் புனித நீரை ஊற்றுமாறு சிவாச்சாரியார்களைக் கேட்டுக் கொண்டனராம்.

ஆனால் அங்கிருந்த அ.தி.மு.க. வினரோ அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வந்து கொண்டிருப்பதால் சற்று நேரம் தாமதித்து அவர் வந்த பிறகு குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றனராம். இதனால் சிறிது நேரம் தடுமாறிய சிவாச்சாரியார் ஒரு வழியாக நல்ல நேரம் கருதி குடமுழுக்கை நடத்தி முடித்தார்.

குடமுழுக்கு முடிந்து சில நிமிடங்களில் அமைச்சர் விஜயபாஸ்கர் கோயிலுக்கு வந்தார். அவரிடம் கோயிலில் நடந்த அனைத்து விஷயங்களையும் அதிமுகவினர் கூறினர். அதன் பின்னணியில் தான் சிவாச்சாரியார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்று சில பக்தர்கள் தெரிவித்தனர்.”

பணியிடை நீக்கம் செய்தவர் இந்து அறநிலையத்துறையின் செயல் அலுவலர் ஞானசேகரன். பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் கோயிலின் தலைமை சிவாச்சாரியார் கண்ணப்பன்.

இதில் நன்றாகத் தெரிவது, இதில் அரசியல் விளையாடி இருக்கிறது என்பது. இதில் பலிகடா ஆனது, பாவம், சிவாச்சாரியார்!

அமைச்சர் என்ன நினைக்கிறார் என்றால் இது ஓர் அரசியல் கூட்டம் என்று நினைக்கிறார் என்பது போல ஒரு தோற்றம் தெரிகிறது.

குடமுழுக்கு செய்வதற்கு வான்வேளை (இலக்கினம்) இது என்று குறிப்பார்கள். ஆகமம் இதற்கான விதிகளை எல்லாம் கூறுகிறது. அந்த விதிகளின் படி குடமுழுக்கிற்கு நேரம் குறிக்கப்படும். அந்த நேரம் மாறினால் அக்கோயில் உள்ள ஊருக்குக் கெடுதல்கள் விளையும் என்று ஆகமம் கூறுகிறது. ஏறத்தாழ 1500 குடமுழுக்குகள் செய்த அடியேனின் அனுபவத்திலும் இதைக் கண்டுள்ளேன். எனவே குறித்த நேரம் என்பது இதில் முக்கியம். எனவே தொடர்புடைய அனைவரும் இதற்குக் கட்டுப்பட்டவர்கள். அமைச்சர் கடவுளை விடப் பெரியவர் அல்லர். எல்லோரும் கடவுளுக்குக் கட்டுப்பட்டவர்கள்.

இல்லை, எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று ஓர் அமைச்சர் சொல்லலாம். அப்போது கூட கடவுள் நம்பிக்கை சார்ந்த நிகழ்விற்குக் குறித்த நேரத்திற்கு வர ஒப்புக் கொண்ட பின் கடவுள் நம்பிக்கை சார்ந்த மக்களின் நம்பிக்கைக்கு அவர் கட்டுப்பட்டவரே ஆவார். இந்து அறநிலையத் துறை சட்டம் 22/1959 கூட அப்படித் தான் கூறுகிறது. அதாவது கோயிலின் அறங்காவலரே அவர் நம்பிக்கை உள்ளவரோ இல்லாதவரோ, எப்படியானாலும் கோயிலின் நடவடிக்கைகளில் தலையிடுவதற்கு அவர்க்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது தான் சட்டம். அறங்காவலர்க்கே அப்படியானால் அமைச்சருக்கும் அது பொருந்தும்.

இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் அண்மையில் நடந்த அ.தி.மு.க அரசு சட்ட மன்றத்தில் இந்து அறநிலையத்துறை அறங்காவலர் சட்டப் பிரிவு 25-லும் 26-லும் அறங்காவலர் கடவுள் நம்பிக்கை உடையவராக இருத்தல் வேண்டும் என்றும், இன்றேல் அவர் தகுதி இழக்கிறார் என்றும் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சருக்கும் அது பொருந்தும். அப்படி இருக்க அவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கும் அது நடத்தப்பட வேண்டியதாகக் குறிக்கப்பட்ட நேரத்திற்கும் ஊறு விளைவிக்கக் கூடாது. இது சட்டப்படியே இன்றியமையாதது.

எனவே மக்கள் நம்பிக்கைப் படியும், கோயில் நடவடிக்கைப்படியும், இவற்றை உள்ளடக்கிய இந்து அறநிலையத்துறை சட்டப்படியும் சிவாச்சாரியார் அமைச்சரின் வருகைக்காகக் காத்திராமல் குறித்த நேரத்தில் குடமுழுக்கு செய்ததற்காக சிவாச்சாரியாரைப் பணியிடை நீக்கம் செய்தது முற்றிலும் ஏற்றுக் கொள்ள இயலாத நடவடிக்கை. இது ஒரு புறம் இருக்க வேறு சில மன்னர் காலத்து முன்னுதாரணங்களாக வரலாற்றில் கிடைக்கும் தகவல்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

குறிப்பிட்ட அவனது அரசாட்சியாண்டில் பல்லவ மன்னன் இராஜசிம்மன் காஞ்சிபுரத்தருகே அரும்பெரும் முயற்சி எடுத்து பல்வேறு அதிசய சிற்ப, சித்திர வேலைப்பாடுகளுடன் கைலாசநாதர் கோயிலை எடுப்பித்து குடமுழுக்கு நாளைக் குறித்தான்.

குடமுழுக்கு நாளிற்கு முன்னாள் சிவபெருமான் பல்லவ மன்னன் கனவில் சென்று காட்சி கொடுத்தாராம். உடன் ஒரு செய்தியைச் சொன்னாராம்.

நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த

நன்றுநீ டாலயத்து நாளைநாம் புகுவல் நீஇங்கு

ஒன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாய் என்று

கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில்கொண் டருளப் போந்தார்.

– பெரிய புராணம்

“காஞ்சிபுரத்தருகே உள்ள திருநின்றவூரில் பூசலார் என்ற அடியார் நினைவால் செய்த கோயிலுக்குக் குடமுழுக்கு நாளை நடைபெறுகிறது. எனவே நான் அங்கு இருக்கக் கடப்பாடுடைய காரணத்தால் நாளை நீ குறித்த உனது கோயில் குடமுழுக்கிற்கு என்னால் வர இயலாது. எனவே உன் கோயிலின் குடமுழுக்கு நாளை வேறு நாளுக்கு ஒத்தி வைத்துக் கொள்வாயாக” என்று சிவபெருமான் பல்லவ மன்னனுக்குக் கனவில் சென்று அறிவுறுத்தியதாக மேற்கண்ட பெரிய புராணப் பாடல் கூறுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் சிவபெருமானாகிய கடவுள் எங்கும் நிறைந்த பரம்பொருள். அவர் ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருப்பவர். ஆனால் பல்லவ மன்னனிடம் நீ குறித்த நாளில் நான் திருநின்றவூரில் பூசலார் கட்டிய கோயிலில் இருப்பேன் என்றது வேடிக்கை அல்லவா?

இங்கே அதன் உள்ளுறை என்னவென்றால், இறைவன் எல்லா இடத்திலும் இருப்பது வேறு சில இடங்களில் மக்கள் அறிய விளங்கித் தோன்றுவது வேறு. “என் அடியான் நின்றவூர்ப் பூசலார் செய்த கோயிலில் மக்கள் நம்பிக்கையோடு காத்திருக்க அவன் குறித்த நேரத்தில் நான் அங்கே விளங்கித் தோன்ற வேண்டும். எனவே நீ நாளை மாற்றிக் கொள்” என்றார். கடவுள் எங்கிருந்தாலும் மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப அந்தந்த இடங்களில் குறித்த நேரத்தில் காட்சி அளிக்கிறான் என்பது தான் இதன் உள்ளீடாக நாம் உணர வேண்டிய உண்மை. இதை உணர்ந்ததால் தான் பல்லவ மன்னன், நீ தான் கடவுளாயிற்றே இரண்டு கோயில்களிலும் இருக்க வேண்டியது தானே என்று கேளாமல் பூசலாரைத் தேடி திருநின்றவூர்க்கு ஓடினான்.

ஓடிச் சென்றவன் பூசலார் என்ற அடியார் கல்லும் காரையும் கொண்டு கோயில் எழுப்பாமல் மனத்தாலே கோயில் கட்ட அதிலே ஆண்டவன் புகும் நாள் என்றே குறித்தான் என்பதை உணர்ந்து பரம ஏழையான பூசலார் என்ற அந்த அடியாரின் காலில், தான் மன்னன் என்றும் பாராமல் அடிபணிந்து வீழ்ந்தான். பாடல் இதோ!

அரசனும் அதனைக் கேட்டங் கதிசயம் எய்தி என்னே

புரையறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரைப் போற்றி

விரைசெறி மாலை தாழ நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து

முரசெறி தானை யோடு மீண்டுதன் மூதூர்ப் புக்கான்.

ஒரு மன்னன் – அமைச்சர் அல்ல – மன்னன் செய்த செயல் இது! இன்றைய அமைச்சர் எத்தனை நாள் அந்தப் பதவியில் இருப்பார் என்று கூட சொல்ல முடியாத நிலை! ஆனால் அன்று மன்னன், ‘கடவுள் – கடவுளுக்கும் மேலாக அடியார்’ என்று தம் நிரந்தரப் பதவியையும் பாராமல் நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து பணிந்த காலம் அது! இன்று கடவுள் எனக்காகக் காத்திருக்கட்டும் என நினைக்கும் அமைச்சர் எங்கே! அதற்காக அர்ச்சகரையே பணியிடை நீக்கம் செய்வதெங்கே! அதிலும் நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற அரசியல் பூசலுக்காக! ம்! என்ன சொல்வது? அன்று என்றும் எல்லார் மனதிலும் நின்ற நின்றவூர்ப் பூசலார்! இன்று நீதியில் நின்றிடாது பூசல் செய்யும் பூசலார்!

நீதியே! செல்வத் திருப்பெருந்துறை எம்

ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால்

          அது எந்துவே என்று அருளாயே!

 

 

Top