You are here
Home > அறத்தமிழ் > அறத்தமிழ் வேதம்

அறத்தமிழ் வேதம்

அறத்தமிழ் வேதம்

– மூதுரை – இளம்பூரணன்

– பகுதி – 12

செல்லச் சிறுவர்களே !

இது வரை மூதுரையில் 12 பாடல்களைப் பார்த்தோம். இப்போது 13-வது பாடலைப் பார்ப்போம். அது வருமாறு:

கவையாகிக் கொம்பாகிக் காட்டடிகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் – சவைநடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டா தவன்நல் மரம்.

எத்தனையோ பேர், கோடிக் கணக்கில் எழுதப் படிக்கத் தெரியாமலே வாழ்ந்து மறைந்து போகிறார்கள். இந்தியாவில் நல்ல வேளை, தமிழ்நாட்டையும், கேரளாவையும் இந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது. காரணம், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இவ்விரு மாநிலங்களில் பெரும்பான்மையான விழுக்காட்டில் இருக்கிறார்கள். பிற மாநிலங்களில் பல எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் புலம்புகின்றன.

நினைத்துப் பாருங்கள்! அம்மாதிரி மக்களின் வாழ்க்கை எவ்வளவு அவதியானது! அரசாங்கத்திலிருந்தோ தொடர்புடைய வேறு முக்கியமான இடத்திலிருந்தோ ஒரு கடிதம் வரும்; கடிதத்தைத் தூக்கிக்கொண்டு இவன் ஓடுவான்; யார் யாரிடமோ கடிதத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்வான்! படிக்கிறவன் நல்லவனாக இருந்தால் சரியாகப் படிப்பான். குறும்புக்காரனாய் இருந்தால் போச்சு! அவன் தன் கைச்சரக்கைச் சேர்த்துப் படிப்பான்.

ஒருவன் எழுதப் படிக்கத் தெரியாத மற்றொருவனை இப்படித் தான் ஏமாற்றினான். அந்தக் கடிதத்தில் இறக்கும் தருவாயில் உள்ள ஓர் உறவினர் எழுதப் படிக்கத் தெரியாத அந்த மக்கிற்குச் சில செய்திகளை அறிவித்து இருந்தான். தான் இறந்த பிறகு தமக்கு உள்ள பெருஞ் சொத்துக்களை இவனுக்கு எழுதி வைத்திருப்பதாகவும் உடனே வந்து இறக்கப் போகும் தனக்கு ஈமச் சடங்குகளைச் செய்து சொத்துக்களை அனுபவித்துக் கொள் என்று எழுதி இருந்தான்.

கடிதத்தைப் படித்தவன் ஓர் உத்தி செய்தான். கடிதத்தில் இருப்பதாக இப்படிப் படித்தான்:

“உனக்கோ படிப்பறிவு கிடையாது இந்தக் கடிதத்தைக் கொடுத்து ஏமாந்து விடாதே! இப்போது கடிதத்தைப் படித்துக் காட்டுகிறாரே, அவர் மிக நல்லவர்: உனக்கு நல்லதையே செய்யக் கூடிய உத்தமர்; அவரையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு வா! சொத்துப் பத்திரங்களை உங்களிடம் ஒப்படைக்கின்றேன். அவர் மற்ற ஏற்பாடுகளைப் பார்த்துக் கொள்வார்! அவருக்குச் சொத்தில் பாதியைக் கொடுத்துவிடு; பிறகு அவர் சொல்கிற படியே நடந்து கொள்! உனக்கு எல்லா நன்மையும் கிட்டும்; மோட்சம் நிச்சயம்!”

இதற்கப்புறம் என்ன நடந்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ!

‘மால்குடி நாட்கள்’ என்று ஓர் ஆங்கில நாவல். அதில் எழுதப் படிக்க அறியாத ஒரு வாயிற் காவல்காரன் வருகிறான். அவன் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பல ஆண்டுகளுக்குப் பிறகு அவன் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் வருகிறது; அதைப் படித்துக் காட்டுங்கள் என்று பலரை அணுகுகின்றான். அந்த ஊரில் பலருக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் யாரும் அதைப் படித்துக் காட்டி அவனுக்கு உதவ முடியவில்லை. எனவே கடிதத்தை யாரிடம் நீட்டினாலும் எல்லோரும் பயந்து ‘ஆளை விடு!’ என்று ஓடி விடுகிறார்கள். அவ்வளவு மோசமான செய்தியாகத் தான் அது இருக்க வேண்டும் என்று இவன் நினைக்கிறான். நிறுவனத்தில் எவ்வளவு நேர்மையாகப் பணியாற்றினேன். எனக்கா இந்த நிலை! அவனுக்கு நினைக்க நினைக்க மனம் தாங்கவில்லை! இறுதியில் அவனுக்கு பைத்தியமே பிடித்து விடுகிறது! தாறுமாறாக சட்டையைக் கிழித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும், அழுது கொண்டும் வருவோர் போவோரிடம் அந்தக் கடிதத்தை நீட்டி நீட்டி இடுப்பில் செருகிக் கொள்கிறான். ஒருவர் அந்தக் கடிதத்தை எப்படியோ அவனிடமிருந்து வாங்கிப் படிக்கிறார். அவருக்கு ஆங்கிலம் தெரியும்.

அந்தக் கடிதத்தில் அவனுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டதாகவும், முதலில் தவறாக அது கணக்கிடப்பட்டது என்றும் அதனால் இத்தனை ஆண்டுகட்கான நிலுவைத் தொகை ஐம்பதாயிரம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாருங்கள்! மகிழ்ந்து கூத்தாட வேண்டிய செய்தி! ஆனால் எழுதப் படிக்கத் தெரியாததால் அவன் பைத்தியமாகத் திரிந்தான்! ஔவையார் சொல்கிறார், இவனுக்கும் மரத்திற்கும் என்ன வேறுபாடு?

நல்ல கற்றறிந்தோர் அவையின் நடுவே எடுப்பும் மிடுக்குமாய் ஒருவன் எழுந்து நிற்கிறான்; அவனிடம் ஒரு நீட்டோலை கொடுத்துப் படிக்கச் சொல்கிறார்கள். அவனுக்கோ எழுதப் படிக்கத் தெரியாது! அப்படியே நிற்கிறான். அட மரமே! என்று திட்டுகிறார் ஔவையார். மரத்திலும் ஊர் நடுவே உள்ள மரமானால் ஊர் மக்களுக்கு ஏதாவதொரு பயன் அந்த மரத்தால் ஏற்பட வாய்ப்புண்டு. எங்கேயோ காட்டில் மிக உயரமாக வளர்ந்து நிற்கின்ற மரத்தால் என்ன பயன்! படிக்கத் தெரியாத இவன் அந்தக் காட்டு மரமே தான் என்கிறார் ஔவையார்.

“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள்!”

என்று பாடினார். இப்பாட்டில் ஔவையார் ஒரு குறும்பு செய்கிறார். ‘இவனைக் காட்டுமரம் என்று உரக்கச் சொல்லாதே! சொன்னால் அந்தக் காட்டுமரங்கள் கோபித்துக் கொள்ளப் போகின்றன! அந்தக் காட்டு மரங்கள் அல்ல இவன்; அவற்றைவிட மோசமான மரம் இவன் என்கிறார். இது தான் பாட்டில் காணப் பெறும் உச்சச்சுவை! ‘அவையல்ல நல்ல மரங்கள்’ என்று பாடி எழுதப் படிக்கத் தெரியாதவனுடன் ஒப்பீடு செய்வதிலிருந்து காட்டு மரங்களை விடுவிக்கிறார் ஔவையார்.

அதென்ன நல்ல மரம்! நல்ல என்ற சொல்லிற்கு இங்கே என்ன பொருள்? நல்ல பாம்பு என்ற சொற்றொடரில் வருகிற நல்ல என்ற சொல்லுக்கு உண்டான பொருள் தான் இங்கும் கொள்ளத் தக்கது. நல்ல பாம்பு என்றால் அது என்ன அமைதியாக சுருண்டு அமர்ந்து இராமாயணம், கந்தபுராணம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் போன்றவற்றைப் படித்துக் கொண்டிருக்குமா? அப்படியன்று; பாம்பின் விஷத்தன்மையும், எதிர்ப்படுபவர்களுக்கெல்லாம் இடரை விளைவிக்கும் தன்மையிலும் முதிர்ந்த பாம்பு என்ற பொருளில் தான் நல்ல என்ற சொல் அங்கே ஆளப் படுகிறது. அது போல நல்ல மரம் என்றால், உணர்வொன்றும் இல்லாத மரத்தன்மையில் முதிர்ந்தவன், எழுதப் படிக்கத் தெரியாத இவன் என்று குறிக்கவே நன்மரம் என்று ஔவையார் இவனைப் பாடிப் ‘புகழ்ந்து’ வைத்திருக்கிறார் என்று அறிய வேண்டும்.

இதோடு விட்டாரா, ஔவையார்! எழுதப் படிக்கத் தெரியாதவன் மட்டுமன்று; எவன் ஒருவன் குறிப்பறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவனோ அவனும் நல்ல மரம் என்றார்.

மனிதனாகப் பிறந்தவனுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய ஆற்றல் குறிப்பறிதல். இதன் பொருட்டு வள்ளுவர் மூன்று அதிகாரங்களை வைத்துப் பாடியுள்ளார்.

எழுந்து நடக்க இப்போது தான் பயிலுகிறது ஓர் ஒருவயதுக் குழந்தை. அப்பா அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். எதையோ தேடிக் கொண்டிருக்கிறார். அந்தக் குழந்தை அவருடைய காலணியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, ‘அப்பா!’ என்று கைதட்டிச் சிரிக்கிறது. அப்பா அந்தக் காலணியைத் தான் வழக்கமாக இட்டு வைக்கும் இடத்திலிருந்து முன்னாள் மாற்றி வைத்து விட்டு அதைத் தேடிக் கொண்டிருந்தார். அப்பா இந்த நேரத்தில் காலணியை மாட்டிக் கொண்டு புறப்படுவதைப் பார்த்து அந்தக் குழந்தைக்கு அது மனதில் பதிந்து விட்டது. அது காலணியை வேறிடத்தில் கண்டு விட்டது. உடனே அந்த மனப்பதிவின் உந்துதலால் அதை எடுத்து வந்து அப்பாவிடம் கொடுத்து விட்டு மகிழ்ச்சியால் கை தட்டியது.

நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும்! இங்கே ஒரு பேச்சு நிகழவில்லை; அந்தக் குழந்தைக்குப் பேசவும் தெரியாது. ஆனால் வேண்டிய செயலை வேண்டிய நேரத்தில் அது செய்து விடுகிறது. இது தான் குறிப்பறிதல்; சொல் நிகழாமலேயே சூழ்நிலையை உணர்ந்து வேண்டிய பொருளை உணர்தலும் உணர்ந்து அச்செயலை ஆற்றலும் எவ்வளவு மேன்மையானது! அந்த அப்பா அந்தக் குழந்தையை எப்படித் தூக்கி வைத்துக் கொண்டாடி இருப்பார்! அதனால் தானே, ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்று இதே ஔவையார் பாடினார்.

நம்மில் பலர் சொன்னாலும் புரிந்து கொள்வதில்லை; மாறான செயலையும் செய்து விடுகிறோம். சொல்லாமலே குறிப்பறிய மாட்டாதவனை ஔவையார் இங்கே நன்மரம் என்று திட்டுகிறார்.

தன்னை வெட்ட வருகிறவனையும், கிளையையும், கொம்பையும் வீணே பறித்துப் போடுபவனையும் கண்டு அவன் வரும் போதே அந்த மரம், செடி, கொடிகள் நடுங்குவதாக இப்போது விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த மரங்கள் எல்லாம் சொல்லாமலே குறிப்பறிந்து கொள்கின்றனவே! குறிப்பறிய மாட்டாத இந்த மனிதன் அவற்றினிடையே முதிர்ந்த நல்ல மரம் தானே!

–          தொடரும்

Top