You are here
Home > அறத்தமிழ் > அறத்தமிழ் வேதம் – மூதுரை – வேங்கை வரிப்புலிநோய்…

அறத்தமிழ் வேதம் – மூதுரை – வேங்கை வரிப்புலிநோய்…

இளம்பூரணன்

   தெள்ளிய உள்ளச் செல்வங்களே!

       இன்று நாம் பார்க்க இருக்கும் மூதுரைப் பாடல் இதுவே:

        ”வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி

        ஆங்கதனுக் காகார மானாற்போல் – பாங்கறியாப்

        புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்

        கல்லின்மேல் இட்ட கலம்.”

      சிறிய வயதில் உள்ளம் கள்ளம் கபடம் ஏதும் இல்லாமல் அழுக்கேறாமல் பளிங்கு போல தெளிவாக இருக்கும். அதனால் வெளி உலகில் காண்பன அத்தனையும் உண்மை என்று நம்பத் தோன்றும். ஆனால் என்ன சொல்வது குழந்தைகளே! காண்பதெல்லாம் அப்படியே நம்பத்தக்கதல்ல என்பது போக போகத் தான் தெரியும். ஒவ்வொன்றிற்குள்ளும் ஒளிந்திருப்பது என்ன என்று அனுபவத்தில் தான் அறிந்து கொள்ள முடியும்.

      ஒரு வயதுக் குழந்தை தவழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்! அதன் வழியில் ஒரு மெழுகுவர்த்தி சிவப்பு நிறத்தில் எரிந்து கொண்டிருக்கும். சிவப்பு நிறம் எப்போதும் குழந்தைகளின் கண்களை உடனே கவரும். அலைந்து கொண்டிருக்கும் சிவப்பு நிறச் சுடரைப் பார்த்துக் கவர்ந்து இழுக்கப்பட்ட குழந்தை அந்தப் பக்கமாக தவழ்ந்தோ அந்தச் சுடரைக் கையால் பிடிக்கக் கையை நீட்டும். ஒரு வேளை, அதன் கை அந்தச் சுடரை எட்டிப் பிடித்துவிட்டது என்று வையுங்கள்! என்ன ஆகும்? கை சுட்டு விடாதா? சுட்ட பிறகு தான் குழந்தை எரிவு தாங்காமல் அழும். சுடரிலிருந்து எப்படிக் கையை இழுத்துக் கொள்வது என்பது கூட அதற்குத் தெரியாமல் மெழுகுவர்த்தியைத் தட்டி விடுமானால் உருகி வழியும் சூடான மெழுகு அதன் உடம்பிலோ கையிலோ பட்டு மேலும் உடம்பும் கையும் புண்ணாகும். சிவப்பு நிறத்தில் உள்ள சுடர் தான் அக்குழந்தையைக் கவர்ந்தது; ஆனால் சிவப்பு நிறத்தில் உள்ளது தீ; அது தொட்டால் சுடும் என்பது அந்தக் குழந்தைக்குத் தெரியாததால் அதற்குத் தீப்புண் ஏற்பட்டது இல்லையா?

       அது போல நமது கண்ணையும் கருத்தையும் கவரும் ஒவ்வொன்றிலும் என்னென்ன தீமைகள் ஒளிந்திருக்குமோ, யார் கண்டது? எனவே கருத்தையும், கண்ணையும் கவர்வது அனைத்திலும் நாம் அவசரப்பட்டு விடக் கூடாது. தீ அழகான நிறத்தில் இருக்கிறது; தீய பாம்பு படம் எடுத்தால் பார்க்க அழகாக இருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு தீய பொருள்களிடமும் அதன் தீமை ஒளிந்து கொண்டு தான் இருக்கும்; நேரடியாகப் பார்க்கும் போது தெரியாது. அதன் இயல்பு வெளிப்படும் போது தான் தெரியும். இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவும்.

       இனி, பிறருக்கு உதவுவது என்பது மிக உயர்ந்த பண்பு. பிறருக்கு உதவுபவர்களை உலகம் போற்றும். பிறர்க்கு உதவுவதற்கு எது அடிப்படை என்றால் இரக்கம். இரக்கம் இருந்தால் தான் பிறர்க்கு உதவத் தோன்றும். இரக்கம் எங்கே தோன்றும்? அறிவு எங்கே இருக்கிறதோ அங்கே இரக்கம் தோன்றும் என்று வள்ளுவர் கூறுகின்றார்.

      அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

      தன்னோய்போல் போற்றாக் கடை.

என்பது குறள். எனவே இரக்கம் அறிவுள்ளவர்களுக்கு வரும். அறிவில்லா முரடர்களிடையே இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது. அதே சமயம் எல்லா இடத்திலேயும் இரக்கம் காட்டுவதும் அறிவுடைமையாகாது.

       ஒரு மிகச் சிறந்த மருத்துவன். அதிலும் பாம்பு கடித்து விஷம் ஏறியவர்களுக்குச் சிகிச்சை செய்வதில் மிக்க வல்லமை படைத்த மருத்துவர். ஒரு நாள் தனது மருத்துவத்திற்குச் சில மூலிகைகளைத் தேட காட்டுக்குப் போனார். அங்கே ஒரு வித்தியாசமான முனகலும் உறுமலும் கலந்த சத்தத்தைக் கேட்டார். அருகில் சென்று பார்த்தால் ஒரு புலி குற்றுயிரும் குலையுயிருமாக விழுந்து கிடந்தது. சிறிது தூரத்தில் நாகப் பாம்பு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.

         மருத்துவருக்கு உடனே நடந்தது என்ன என்று புரிந்து விட்டது. அதாவது அப்போது தான் அந்த நாகப்பாம்பு அந்தப் புலியைக் கடித்து விஷத்தைப் பாய்ச்சி விட்டு ஓடிக் கொண்டிருந்தது என்றும் அதனால் அந்தப் புலி விஷம் ஏறி விழுந்து கிடக்கிறது என்றும் புரிந்து கொண்டார்.

         பொதுவாக புலியின் அருகே யாரும் போக மாட்டார்கள். காரணம் புலி மனிதர்களையும், மிருகங்களையும் அடித்துச் சாப்பிட்டு விடும். அந்த வகையில் மருத்துவரும் அந்தப் புலியைப் பார்த்து ஓட வேண்டியவர் தான். ஆனால் புலியின் நிலைமையைப் பார்த்தால் பாவமாக இருந்தது. மருத்துவர்களுக்கு நோயாளிகளைப் பார்த்தவுடனே இயல்பாகவே சிகிச்சை செய்ய உறுப்புகள் ஊறும். அப்படி உந்தப்பட்டு விஷத்தை முறிவு செய்யும் அந்த மருத்துவர் புலி நலம் பெற்று எழுந்தால் என்ன ஆகும் என்பதைச் சிறிதும் சிந்திக்காமல் சிகிச்சை செய்யத் தொடங்கி விட்டார். நல்ல வேளை, உடனே நலம் தரும் மூலிகைகளை அவரின் கைவசம் இருந்தது. அவைகளைக் கொண்டு சிகிச்சை செய்தவுடன் புலி சிறிது மூச்சு விட்டது.

        சரி, புலி பிழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை ஏற்பட்டவுடன் மருத்துவர் தான் வந்த வேலையைக் கவனிக்கத் தொடங்கினார். அதாவது மூலிகைகளைத் தேடத் தொடங்கினார். சிறிது நேரத்தில் நலம் பெற்று எழுந்த புலிக்கு அடங்காப் பசி ஏற்பட்டது. அங்கே பார்த்தால் மருத்துவர் மூலிகையை மும்முரமாகத் தேடிக் கொண்டிருக்கிறார். இவர் தான் நம்மைப் பாம்புக் கடியிலிருந்து பிழைக்க வைத்தவர்; அவரிடம் நன்றியோடு நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அதற்குத் தோன்றுமா? அது மிருகம் தானே! அதிலும் கொடிய தீய மிருகமாயிற்றே! பாய்ந்தது ஒரே பாய்ச்சலாக! அவ்வளவு தான் விடத்தைத் தீர்த்து வைத்த வைத்தியர் தீர்ந்து போனார்!

       பார்த்தீர்களா! இரக்கப்பட வேண்டியது தான், இரக்கப்பட்டு உதவ வேண்டியது தான். ஆனால் அதற்கும் ஒரு வரம்பு இருக்கிறது. தீயவர்களுக்கு இரக்கம் காட்டி உதவினால் தீமை தான் பலனாகக் கிடைக்கும். இதைத் தான் பாடல் ‘வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி ஆங்கதனுக்கு ஆகாரம் ஆனாற் போல்’ என்று மிக அழகாக எடுத்துக் கூறுகிறது.

        எனவே தீயவர்களுக்கு இரக்கம் காட்டி உதவுவது தீமையாகவே முடியும் என்பது நடைமுறை உண்மை. இதைத் தான் இந்தப் பாடல் நினைவூட்டுகிறது. தீயவர்களையும் குறை கூற இயலாது. தீயவர்களிடம் இருப்பது தீமை தான். அதைத் தானே அவர்கள் கைம்மாறாக கொடுக்க இயலும்.

       ஒருவனுக்கு என்ன இயல்பென்றால் பிறர்க்குத் துரோகம் செய்வது. அவன் சொன்னான்: ”என் ஆசிரியர் மிக நல்லவர்; அவருக்கு ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டும் என்று எண்ணினேன். ஆகவே என்னால் முடிந்த அளவிற்கு மிகப் பெரிய துரோகத்தை அவருக்குச் செய்தேன்” எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

        அற்புதமான வேலைப்பாடமைந்த மண்கலத்தில் பொருட்களைக் கொண்டு போய் கல்லின் மேல் வேகமாக வைத்தால் கல் என்ன செய்யும்? அது கடினமானது; எனவே மண்கலத்தைச் சுக்குநூறாக அது உடைக்கத் தானே செய்யும்! அது அதன் இயல்பு. அது போல தீயவர்களுக்கு உதவி செய்வது மண்கலத்தைக் கல்லின் மேல் போட்டுடைப்பதற்குச் சமம் என்று பாடல் கூறுகிறது.

       எனவே, எதற்கும் ஒரு வரம்புண்டு. அதன் படி இரக்கத்திற்கும் ஒரு வரம்புண்டு; தீயவர்களுக்கு இரக்கம் காட்டுவது கூடாது; அது தீமையையே கொடுத்துவிடும் என்பது தான் இப்பாடலினால் நாம் பெறும் படிப்பினை!

                                                 தொடரும். . .

Top