அறம் தான் தமிழர்க்கு உயிர்வளி (Oxygen). இங்கெல்லாம் முடியாது என்று உலகம் கருதும் வணிகத்திலும், போரிலும் கூட அறத்தைப் பின்பற்றி உலகிற்கே வழிகாட்டிய உன்னத இனம் தமிழ் இனம்; அதனால் அறப்போர் என்றும் அறவிலை வணிகம் என்றும் சொற்கள் தமிழில் மட்டும் தான் உண்டு.
திடீர் தாக்குதல், மறைந்து தாக்குதல் என்பதை எல்லாம் இழிவாகக் கருதியவர்கள் தமிழர்கள்; வீரமன்று என்று ஒதுக்கியவர்கள். ஏழுதிணை அட்டவணை போட்டு, பூ காட்டி போர் காட்டியவர்கள். எதிரி நாட்டில் உள்ள இளம் சிறார், பெண்கள் அறவோர், முதியோர் ஆகியோர் எல்லாம் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுங்கள் என்று சொல்லிப் போர் நடத்துவர். அதனால் தான் தமிழில் “சொல்லி அடி” என்றே ஒரு வழக்குச் சொல் உண்டு. இப்படி தமிழர் போரில் காத்த அறம் ஒரு புறம்.
இனி வணிகத்திற்கு வருவோம்! திருமுருகாற்றுப் படையிலும், மதுரைக் காஞ்சியிலும் பட்டினப்பாலையிலும் இன்ன பிற சங்க இலக்கியங்களில் தமிழர் செய்த வணிகக் காட்சிகள் கிடைக்கின்றன. பட்டினப் பாலையில் பெரிய கடல் வாணிபத்தில் வணிகர்கள் எப்படி நேர்மையாக நடந்து கொண்டனர் என்று வருகிறது.
அதாவது விற்கப்படும் பண்டங்களின் உற்பத்தி விலை என்ன, அதில் விற்பவருக்கு வரும் இலாபம் என்பதை எல்லாம் பண்டத்தின் மேலே எழுதி ஓட்டி வாணிபம் செய்தார்களாம்.
வடு அஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்பநாடிக்
கொள்வதூஉம் மிகை கொளாது
கொடுப்பதூஉம் குறைகொடாது
பலபண்டம் பகர்ந்து வீசும்
என்பன பட்டினப்பாலைப் பாடல் வரிகள். ஒவ்வொரு தமிழனும் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம்.
ஆனால் நோய்க்கு மருந்து விற்கும் இன்றைய உலகச் சந்தை எப்படி இருக்கிறது? நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கிறான்; கூடவே அந்த மருந்தில் திரும்பத் திரும்ப அந்நோய் வர ஏதோ ஒன்றைச் சேர்க்கிறான். அப்பத் தானே மருந்து எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டே வணிகம் கொழிக்கும்! அட பாவிகளா!
தமிழனின் வணிகத்திற்கும் மேலை நாட்டு “நாகரிக” வணிகத்திற்கும் உள்ள வேறுபாடு காண்க!
அறத்தமிழ் வணிகத்திலேயே ஒரு விநோதமான வணிகத்தை ஒரு தனிப்பாடல் கூறுகிறது:
மதுரையில் சிவபெருமான் ஆடிய திருவிளையாடல் 64ல் வளையல் விற்ற படலம் என்ற ஒன்றுண்டு. அதில் சிவன் வளையல் செட்டியாராக வந்து மதுரை மகளிர்க்கு அற்புதமான வளையல்களை விற்றாராம்!
இரண்டொரு நாளில் முருகன் மதுரையின் அதே வீதிகளில் உலா வந்தாராம்! பெண்கள் முருகப் பெருமானது பவனியில் தன்னை மறந்து மயங்கி நிற்க, உடல் இளைத்து போட்டிருந்த வளையல்கள் எல்லாம் கழன்று வீழ முருகன் அவற்றை வாங்கிச் சென்றாராம்! ஊர் மயிலை என்றாராம்!
சற்று நேரம் கழித்து நிதானித்த பெண்கள் கூடி; கேட்டாயா கதையை! செட்டியப்பன் வந்து வளையல் வித்துவிட்டு போவானாம்! பின்னாலேயே அந்தச் செட்டிப் பிள்ளை வந்து வளையலை எல்லாம் கழற்றி வாங்கிட்டுப் போவானாம்! நல்ல வியாபாரம் இது! செட்டியப்பன் வளையலைக் குறைந்த விலைக்கு விற்ற போதே சந்தேகம் வந்தது. அப்பன் மாட்டிவிட்டுப் போவான்; பிள்ளை கழட்டிகிட்டுப் போவான்!! நல்ல செட்டிக் குடும்பம்! ஒரு நல்ல செட்டியார் செய்யும் வேலையா இது?
இப்படி ஒரு விநோதமான வாணிபத்தை அதன் அடிநாதத்தில் முருகனடியார்க்கு ஏக்கத்தால் உடல் இளைத்ததாக நயமாக நற்றமிழில் குழைத்துத் தருகிறது இப்பாடல்.
தேங்குவளை அன்னவிழித் தேன்மொழியார்க் குன்தந்தை
தாங்குவளை விற்கத் தமியோம்கை – ஈங்குவளை
கொள்ளத் தலைப்பட்டாய் கோமயிலைச் செட்டிநீ
மெள்ளக் குலத்தொழிலை விட்டு
செட்டியார் குலத்தொழில் விற்பது; ஆனால் அதற்கு மாறாக இங்கே வாங்குகிறாயே! இது உன் குலத்தொழிலுக்கு அடுக்குமா என்று நயமான பாடலில் பதிவிட்ட புலவர் பெயர் இல்லை! செட்டியார்கள் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள்; அவர்கள் கோபத்திற்கு ஏன் ஆளாக வேண்டும் என்று புலவர் தன் பெயரை மறைத்தாரோ என்னவோ!
இவண்
மு.பெ.சத்தியவேல் முருகன்