You are here
Home > தமிழ் வேள்வி > வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (2)

வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (2)

முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

 வேள்வி (1) என்ற பகுதியில் கண்ட சிந்தனையை மேலும் தொடர்கிறோம். வேள்வி தமிழருக்கே உரியது என்பதையும் அது ஆரியருடையது அல்ல என்பதையும் ஆரியரின் இரிக் வேத மேற்கோள்கள் சிலவற்றைக் காட்டி நிறுவினோம். சரி, வேள்வி தமிழரது தான் என்றால் தமிழ் இலக்கியங்களில் வேள்வியைப் பற்றி என்ன கூறப்படுகிறது என்பதை இப்பொழுது காண்போம்.

முதலில் வேள்வியைப் பற்றிச் சிறப்புற வேறு வேள்விகட்கும் தமிழ் வேள்வி க்கும் உள்ள ஒப்பீடு காட்டி நிறுவிய பாடல் ஒன்று சங்க இலக்கியங்களிலேயே ஆக பழந்தொன்மையான புறநானூற்றுப் பாடல். தொகுப்பில் காணக் கிடக்கிறது. அது 15- ஆவது புறநானூற்றுப் பாடல் அது வருமாறு; இங்கே பாடலின் வேண்டிய பகுதி மட்டும் அளிக்கப்படுகிறது. .

நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்பு தலைக்கொண்மார்
நசைதர வந்தோர் பலகொல்? புரையில்
நற்பனுவல் நால் வேதத்[து]
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கல் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
                 யூபம் நட்ட வியன்களம் பலகொல               

                                                                  — நெட்டிமையார்

                   நெட்டிமையாரால் இப்பாடலில் பாராட்டப்பட்ட மன்னன் பல் யாக சாலை முது குடுமிப் பெரு வழுதி என்னும் பாண்டியன் வழுதி என்னும் சொல்லால் இவன் பாண்டிய மன்னன் என்பதை அறிகிறோம். பெரு வழுதி என்பதால் நீண்ட நாள் அரசாண்டுப் பெரும் புகழ் பெற்ற மன்னன் என்பதை அறிகிறோம்.

                   பல் யாகசாலை என்ற அடை மொழியினால் இப்பாண்டியன் கணக்கிறந்த வேள்விகளை ஆற்றியவன் என்ற செய்தியைப் பெறுகிறோம். முது என்ற சொல்லால் இவன் அறிவில் பெரியோன். என்பதுஅறியக்கிடக்கிறது. பெற்றோர்களை, அவர்களே குழந்தைகளுக்கு அடிப்படை அறிவை அளிப்பதால் தமிழில் அவர்களை முதுகுரவர் என்றுகூறுவதை ஒப்பு நோக்கிக் காணலாம். தமிழ்ச் சதுர அகராதியில் முது என்ற சொல்லுக்குப் பேரறிவு என்று பொருள் தந்துள்ளதும் இதை உறுதி செய்யும்.

                  இன்னும் அவனைக் குறிப்பிடும் பெயர்த் தொடரில் எஞ்சியுள்ள சொல் ‘குடுமி ‘என்பது மட்டும் தான் ; கழகத் தமிழ் அகராதியில் குடுமி என்ற சொல்லிற்குக் கூறப்பட்ட பொருள்களில் மூன்று சிந்திக்கத் தக்கவை. அதாவது தலையுச்சி; மலையுச்சி; வெற்றி என்பன அவை. இவனே பாண்டியர் வரிசையில் வரும் உச்சம் என்றும் பொருள்படும்படி இவனது பெற்றோர் இவனுக்குக் குடுமி என்று பெயரிட்டனர் போலும்! பேரறிவால் உச்சியான வெற்றியைப் பெற்றவன் என்ற பொருளில் முதுகுடுமி என்று அழைக்கப்பட்டனன் போலும்

                குடுமி என்பது தான் இவனது இயற்பெயர் என்பதை வேறு சில புறநானூற்றுப் பாடல்களிலும் காண்கிறோம். மதுரைக் காஞ்சியிலும் இவன் மிகப் பிற்காலத்திலும் பெருமையுடன் போற்றப் படுகிறான்.

                இந்த முதுகுடுமிப் பாண்டியன் தான் யாகத்தோடு அதாவது வேள்வியோடு தொடர்புப்படுத்திப் பாடப்பெறும் முதல் தமிழ் மன்னன். பல யாகங்களைச் செய்தவன் என்பதால் இறையருளில் மட்டும் தோய்ந்தவன் போலும் என்று எண்ணி விட வேண்டாம் .இவன் அருளும் வீரமும் ஒருங்கே கொண்டவன் என்பது காட்ட பல வேறு வெற்றிப் போர்களையும் கண்டவன் என்பதே மேலே கூறப்பட்ட புறநானூற்றுப் பாடலில் அதைப் பாடிய நெட்டிமையார் என்ற பழம்பெரும் புலவர் எடுத்துக் கூறி இப்பாண்டியனை வியந்து போற்றுகிறார் .இதைக் கூற எடுத்துக்கொண்ட பாட்டில் ஒரு தமிழ் மன்னன் செய்த தமிழ் வேள்வி பற்றிய செய்தி நமக்குக் கிடைக்கிறது

பாடலின் மேற்கண்ட வரிகளில் பெரும் பொருளைச் சுருக்கமாகக் காண்போம்:

               “பாண்டியனே! உன்னைப் பகைத்துப் போராடித் தோற்று வசையை ஏற்றுக் கொண்டோர் பலர்; குற்றமில்லாத நல்ல நால் வேதத்துக் கூறியவாறு வேள்வி பல செய்து முடித்து அவ்வேள்விச் சாலைகளில் நீ நட்ட யூபத் தூண்கள் பல. இதில் நின்னால் மேற்படி பகைப் புல மன்னர் தோல்வி என்னும் வசை பெற்று உயிரிழந்து களத்தில் நடப்பட்ட தலைகளின் தொகையோ அல்லது நீ நட்டவேள்வித் தூண்களின் தொகையோ, இவற்றுள் எதன் தொகை அதிகம் என்று கூறுவது எனத் தெரியவில்லையே” என்று இப்பாண்டியனைப் பாராட்டுகிறார்.

               அடுத்து சில வரிகளில் இப்பாண்டியன் செய்த யாகம் அல்லது யாகங்கள் எவ்வகையின என்பதை சுருங்கக் கூறிப் ‘பெரும்பொருள் பயத்தல்’ என்ற உத்தியைக் கையாண்டு கூறுகிறார்.

               அதாவது அந்த வேள்வி எவ்வகைக் குற்றத்தின் பாற்படாதுநன்மை ஒன்றையே குறிக்கோளாகச் சாறு பிழிந்து தரும் நற் பனுவல் எனப்படும் நான்கு வேதத்தின் படி செய்யப்பட்டது. அது எய்தற்கரிய புகழ் பல கூடிய காணிக்கைப் பொருளடங்கிய உறை கையுறையாக பெருங்கண் எனப்படும் பெருமை மிக்கதாக எரியும் மரக்கணுக்களுடன் யாக்கப்படுகிறது. அவ்வேள்வியில் ஆவதைச் செய்வதால் ஆவுதி என அழைக்கப்படும் ஆவுதியாக நெய் மலிந்த பொங்கல் அளிக்கப்படும் மாட்சியை உடையதாக இருக்கிறது. அது ஒன்றோ ? இன்னும் பலப் பல மாட்சிகளை உடைய அவ்வேள்வி பன்மாண் வேள்வியாக இருக்கிறது. இவ்வாறு எல்லை இறுத்தல் இல்லா பல சிறப்புகள் உடைய வேள்வி முடிகின்ற போது இவ் வேள்வியின் சிறப்புகளை நிரந்தரமாக உலகம் அறிய நினைவுத்தூண்கள் அமைக்கப்படுகின்றன. இப்படி நடப்பட்ட வேள்விச் சிறப்பு நினைவுத் தூண்களின் எண்ணிக்கை பலவோ? அல்லது இப்பாண்டியன் போர்களில் வென்று நட்ட பகை மன்னர்களின் தலைகள் பலவோ? இதுவே பாடல் கூறுவது.

              மேலே பாடலில் கூறப்பட்ட பாண்டியனால் செய்யப்பட்ட வேள்வி பற்றிய பல செய்திகளும் சிறப்புகளும் சிந்தனைக்கு உரியவை. இங்கே இந்த பாடல் வரிகளில் பாண்டியன் செய்த வேள்வி வேறொன்றுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது .

              முதலில் இப்பாண்டிய மன்னன் செய்தது தமிழர் செய்த வேள்வி ! இதில் ஆரியர்களுக்குத் தொடர்பில்லை. ஆகவே இது தமிழ் வேள்வி! இத்தமிழ் வேள்வி குற்றமே இல்லாத நால் வேதத்தின்படி நடந்த வேள்வி எனப்படுகிறது. எனவே குற்றங்கள் மலிந்த வேதங்களும் உலகில் உண்டு; தமிழரது வேதங்கள் அவை போலன்று என்று அருத்தாபத்தி என்று வடமொழியில் கூறும் பொருட்பேறு என்னும் நயப்படி தமிழர் வேதங்கள் வேற்றவர வேதங்களில் இருந்து பிரித்து காட்டப்பட்டது. இரு வகை வேதங்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகளை பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன. ஆனால் தமிழரின் வேதங்கள் நான்கும் குற்றமே இல்லாதவை; அடுத்து வேற்றவர் வேதங்கள் தம்மைப் பின்பற்றினால் விளைவு தீமையே தவிர வேறில்லை; ஆனால் தமிழரின் வேதங்களைப் பின்பற்றினால் நன்மையே விளையும்; எனவ தமிழரின் வேதங்கள் நற் பனுவல் என்று அடையாளப்படுத்தப் பட்டன.

              இதில் இன்னொரு குறிப்பும் கிடைக்கின்றது. வேறு வேதங்களில் இருந்து தமிழ் வேதங்களைப் பிரித்துக் காட்டுகையில் தமிழ் வேதங்கள் நான்கு என்று தொகை கூறப்பட்டதே ஒழிய பிரித்துக் காட்டிய வேறு வேதங்கள் எத்தனை என்ற தொகை கூறும் குறிப்பு சிறிதுமின்றிக் கூறப்பட்டிருக்கிறது. எனவே இந்த எண்ணிக்கையே இது தமிழ் வேதங்களா அல்லது வேற்றவர் வேதங்களா என்பதற்குப் போதுமான சான்றாகக் கொள்ளலாம் என்பதைக் குறிப்புப் பொருளாக கொள்கிறோம்.

            அதற்கு தற்போது தமிழ் வேதங்களுக்கு எதிராகக் கருதப்படும் ஆரிய வேதங்களின் எண்ணிக்கையே சான்று பகர்கின்றது. காரணம் தங்கள் வேதங்கள் மொத்தம் மூன்று என்றே ஆரிய இரிக் வேதம், ஆரிய மனுமிருதி, இன்னும் பல ஆரிய இலக்கியங்கள் கூறுகின்றன, ஒர் எடுத்துக்காட்டிற்கு ஆரிய மொழி அகராதியான அமர கோசம் என்ற நிகண்டு” “வேதம் த்ரயே” – என்று அறைகூவலிடுகிறது. அதாவது வேதம் மொத்தம் மூன்றே என்பது பொருள் அவை இரிக், யசூர், சாமம் என்பன மட்டுமே.

            அதர்வம் என்பது ஒரு வேதமாக மிகப் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. இது கூட ஆரியர்களால் தமிழரிடம் கொண்ட போட்டி மனப்பான்மையால் செய்யப்பட்ட தந்திர நோக்கமே ! காரணம் ஆரியரல்லாத வியாசர் என்ற செம்படவ முனிவர்தான் (அக்காலத்திலேயே செம்படவர்களிலும் முனிவர்கள் இருந்தனர் என்பதை நினைவில் வைக்க ! ) வந்தேறிய ஆரியர்களின் வேதத்தை துதிகளாகவும், துதிகளின் அடிப்படையில் தீ வழிபாடு செய்யவும், செய்யும் துதிகளை இசைக் கூட்டி பாடவும் முறையே இரிக், யசூர்,சாமம் என்று முதன்முதலில் மூவகைகளாகப் பிரித்து வகுத்தவர். அதற்கு முன் அவை எல்லாம் ஒன்றாய்க் கலவையாகவே கிடந்தன. அதனால்தான் வியாசர் தான் வேதம் வகுத்தவர் என்றும், அதனால் அவரே வேதவியாசர் என்றும் ஆரியர்களால் கூறப்பட்டு வந்தது. ஆக வியாசர் வகுத்தது மூன்று தாம்.

            அதற்குப் பின்னால் நெடுங்கால இடைவெளிக்குப்பின் ஒர் ஆரிய முனிவரான பாதராயணர் என்பவர் போட்டி மனப்பான்மையில் காசியில் வந்து தமிழருக்கு நான்கு வேதங்கள் இருப்பது போல ஆரியருக்கும் இருக்க வேண்டாமா என்றெண்ணி அதர்வ வேதம் என்ற ஒன்றைக் கூட்டி வட வேதங்கள் இரிக், யசூர், சாமம், அதர்வம் என்று நான்காகக் காட்டினார். ஆனால் இது பிற ஆரியர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு சான்று என்ன என்றால் இன்றுவரை இரிக் வேதம், வேதங்கள் மூன்று என்றே கூறியுள்ளதும் மனுமிருதியின் கூற்றும், அமரகோச நிகண்டு சொல்வதும் அழியாச் சான்றுகளாகும். அதற்கும் மேலே அதர்வ வேதத்தின் முதல் நான்கு சுலோகங்களே இவ்வேதத்தையும் அருள் கூர்ந்து ஏனையவற்றோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கெஞ்சுவதும், நடைமுறையில் பிற மூன்று வடவேத ஆரியப் பிராமணர்கள் அதர்மத்தை மாந்திரீகம் என்று ஒதுக்குவதும் ஏனைய மூன்று வேத ஆரியர்களின் உபகர்மா ஒரு மாதத்தில் கடைபிடிக்கப்படும் போது அதர்வ வேத ஆரிய குழுவினர் மட்டும் ஆவணி அவிட்ட உபாகர்மாவை ஒரு மாதம் தள்ளி தனியே கொண்டாடுவதும் ஆணியில் அறைந்தாற் போன்ற சான்றுகளாய் நின்று உண்மையை நிறுவுகின்றன.

            எனவே பொய்ம்மையாக ஆரியர் அதர்வத்தையும் மனமின்றிக் கூட்டி தமிழர்க்கு எதிராக தமிழ் வேதங்களும் தமிழரது போன்றே நான்கு என்று கூறத் தொடங்குவதற்கு முற்காலத்தில் ஆரியரின் வேதம் வியாசரால் வகுக்கப்பட்ட மூன்றே ! அதற்கும் முன்னால் ஆரியரின் வேதம் ‘செண்ட் அவஸ்தா’ (Zend Avestha) என்ற ஒரே வேதம் தான். இப்படி ஆரியரின் வேதம் ஒன்றே ஒன்றாக இருந்த அப்பழங்காலத்தில் தான் மேற்கூறிய புறநானூற்றுப்பாடல் எழுந்து நின்று எங்களது வேதம் நால் வேதம் எனப்படும் என்றது. அவை அறம்,பொருள், இன்பம், வீடு என்ற நான்காகும் என்பது இதே புறநானூற்றுத் தொகை பாடல் ஒன்றில் அதாவது 166 ஆம் பாடலில் விளக்கப்பட்டது. அதோடு அவை இறைவனால் அருளப்பட்ட நான்காகும் என்ற செய்தியையும் அப்பாடல் அறைந்து கூறுகிறது.

“ நன்றாய்ந்த நீணிமிர் சடை
முதுமுதல்வன் வாய் போகா
தொன்று புரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்”

             என்பது அப்புறநானூற்றுப் பாடலின் முதல் நான்கு வரிகள். சடையர் ஆகிய சிவபெருமானே முதுமுதல்வன்; அவன் வாயிலிருந்து ஒரு நூல் வந்தது; அது மிகப் பழமையான முதுநூல்; அது ஈரிரண்டு என்னும் நான்கு மறைகளும், அவற்றின் ஆறங்கமும் ஆகும். அவை இன்று புரிந்தது அல்ல; தொன்று புரிந்தது என்பதாகிய கருத்துக்களை மேற்காணும் பாடல் வரிகள் கூறுகின்றன.

            இந்தப் பாடலைப் பெற்றவர் தமிழரல்லர்; இனத்தால் ஆரியர்; பெயர் பூஞ்சாற்றூர் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் என்பதாகும். கவுணியன் என்பது ஆரிய பிராமணரில் ஒரு பிரிவு. இவ்வகையினரில் சிலர் வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கு வட வேத காலத்திலேயே வந்து பூஞ்சாற்றூர் என்ற ஊரில் குடியமர்ந்தனர். அவர்களில் ஒருவரை இப்பாடல் பாடுகிறது. இப்பாடலால் புகழப்படுபவரின் இயற்பெயர் விண்ணந்தாயன். பெயரில் வரும் தாயன் என்பது தூய தமிழ் பெயர். இதிலிருந்து இவரது முன்னோர்கள் பூஞ்சாற்றூரில் குடியமர்ந்து தமிழர்களோடு கலந்து பழகி நெடுநாட்களானமையால் தமிழ் பெயரான தாயன் என்ற பெயர் அவருக்கு அமைந்திருக்க வேண்டும். அதோடு அந்தக் குடியே தமிழ் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றில் முற்றிலும் தோய்ந்து தங்கள் இனச்சார்பையே உதறி இருக்கிறது

            எனவே தான் தெய்வமே இல்லை என்னும் ஆரிய வேத கருத்திலிருந்து மாறி தெய்வமாகிய சிவனை ஏற்று சிவன் சொன்னதே வேதம் என்று அத்தமிழ் வேதத்தை ஏற்று வாழ்வை நடத்தி வந்திருக்கிறது. ஆரிய வேதம் தானாய் முளைத்தது என்ற ஆரியரின் கருதுகோளிலிருந்து இந்த ஆரியக் குடிமாறி சிவன் என்ற இறைவன் சொன்னதே வேதம் என்றும், அத்தமிழரது வேதமே தம் வேதம் என்றும் அதற்குத் தம் ஆரிய இனத்திலிருந்து எதிர்ப்புகள் பல எழுந்த போதிலும் அவற்றை எதிர்த்து வேள்வியைத் தமிழ்வேதத்தால் சிவ வேள்வியாகச் செய்ததைப் பாராட்டி அவ்வேள்வியின் சிறப்புகளை ஆவூர் மூலங்கிழார் என்ற தமிழ் வேளாளப் புலவர் பாடியதே இப்பாடல். பாடல் முழுமையும் படித்தால் இச்செய்திகள் அடங்கியுள்ளது தெரியவரும். அதோடு புறநானூற்று பழையவுரையும் மேலும் சில தகவல்களோடு் இதைத் தெளிவுபடுத்துகின்றது எனவே மூன்று ஆரிய வேதங்களுக்கும் முன்னமே தமிழ் வேதங்கள் நான்கு இருந்தன என்பதும், அவை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்காம் என்பதும் புறநானூறு ஐயத்திற்கு இடமின்றி பதிவிட்டிருக்கிறது. அந்த நான்கையும் அடக்கியே திருக்குறள் விரிந்ததால் அதனைத் தமிழ்மறை என்றும் தமிழ் வேதம் என்றும் கூறும் மரபு எழுந்தது என்பதும் வெள்ளிடை மலையாய் விளங்குகின்றது

             திருக்குறள் முப்பால் என்று தானே சொல்லப்படுகிறது, அதில் வீடு என்ற நான்காவதொன்றைக் காணோமே என்று  கேள்வி எழலாம்.

            அறப்பகுதியிலேயே சிந்தையும் செல்லா நிலைமைத்தாகிய வீட்டின்பத்தை வைத்து வள்ளுவர் விளக்கியுள்ளார் என திருக்குறளைப் பாராட்டிச் சங்கப் புலவர் பலர் பாராட்டிப் பாடி திருவள்ளுவமாலை என்ற நூல் கூறுகிறது.

           ‘முப்பாலின் நாற்பால் மொழிந்தவர்’ என்று கீரந்தையார் பாடுகிறார். ‘இன்பம், பொருள், அறம், வீடென்றும் இந்நான்கும் முன்பறியச் சொன்ன ‘முதுமொழி நூல்’ என்று போற்றுகிறார் நர்வெரூஉத்தலையார் இப்படிப் பல பாடல்கள் திருவள்ளுவமாலையில் உள்ளன. எனவே அறம், பொருள், இன்பம், வீடு என்ற தமிழ் வேதம் நான்கும் கூறியதால் திருக்குறள் பொதுமறை, தமிழ்வேதம், தமிழ்மறை பொய்யாமொழி என்றெல்லாம் போற்றப்படுகிறது.

எனவே பாண்டியன் முதுகுடுமி செய்த வேள்வி நற்பனுவல் நால்வேதமான தமிழ் வேதப்படி நடத்தப்பட்ட ஆய்வு என்பது மறுப்பிற்கு இடமின்றி தெளிவாகிறது.

… தொடரும்

Top