You are here
Home > செய்திகள் > மதிப்புரை – தமிழரின் வேதம் எது ? ஆகமம் எது? & அறத்தமிழ் வேதம்

மதிப்புரை – தமிழரின் வேதம் எது ? ஆகமம் எது? & அறத்தமிழ் வேதம்

arthamizh vedham tamizh vedham

தமிழரின் வேதம் எது ? ஆகமம் எது? & அறத்தமிழ் வேதம்

ஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

மதிப்புரை

நயத்தமிழ் நெஞ்சன் .மு.தியாகராசன்

  tamizh vedham book, tamil vedamநீண்ட காலமாக தமிழ் வேதம் எது? தமிழரின் வேதம் எது என்று புரிபடாமல் தமிழர்கள் எதை எதையோ நம்முடைய வேதம், ஆகமம் என்று மருண்டு அதில் அலைப்புண்டு இருக்கையில் வாராது வந்த மாமணி போல் இறைதிருவருளால் தற்போது வெனி வந்துள்ளவை தான் மேற்படி நூல்கள்.

    முருகப் பெருமான் உணர்த்த நம் குருபிரான் செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் தம்முடைய உடல் நிலையைச் சிறிதும் கருதாமல் (தீவிர அறுவை சிகிச்சைக்குப் பின்) தன்னுடைய சமுதாயப்பணி, கடமை இது – இறை உணர்த்திய பணி இது – என்று இடைவிடாது ஆற்றிய பணியில் முகிழ்த்தவை தான் மேற்கண்ட இருநூல்கள்.

    தமிழ் வேதம் மற்றும ஆகமம் எது என்பது பற்றி பல்வேறு உயர்ந்த சிந்தனைகளைச் சங்க இலக்கியம் தொடங்கி, புதைபொருள் ஆராய்ச்சி, வடமொழி நூல் ஆராய்ச்சி எனத் தமிழின் தொன்மை சிறப்புகளைப் பட்டியலிட்டு அதனூடே தமிழ் வேதத்தை, தமிழ் ஆகமத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தருக்க வழி சீர் தூக்கி நிலைப்படுத்தும் அழகு ஆசிரியர் அவர்களுக்கே உரிய பாங்கு. முத்துக் குளித்தல் போன்று ஆசிரியர் நூலில் சொல்லிய சிலவற்றை எடுத்துக் கொடுக்கிறேன்.

    தமிழ்ச் சான்றோர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த சிந்தனைகளின் பதிவே வேதம். தமிழ் மறையுளே அறிய வேண்டிய அறிவு மறைந்து நிற்பது, உரியவர் மூலம் தூண்டப் பெற்றால் விளங்குவது. இதனினும் மேம்பட்டதைத் தமிழ் ஆகமம் என்றது. இதுவே நிலையியல் இறை இன்ப நூல் ஆகும். இது தமிழருக்கே உரியது. வேதத்தின் மேற்சிந்தனையே ஆகமம்.

    இறைவனைப் பற்றி ஆழ்ந்து புதைந்து கிடைக்கின்ற அறிவை மறைத்துக் கூறிய மந்திரங்கள் அடங்கியவை தான் மறை வேதம் என்று கூறப்பட்டன.

இதையே தொல்காப்பியர்,

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப,

என்றார்.

     பகுத்தறிந்து ஆய்ந்த மொழியியலாளர்கள் தமிழை உயர்தனிச் செம்மொழி என்றனர். மறுபுறம் வள்ளலாரோ தமிழில் தோய்ந்துணர்ந்து அதனை இயற்கை சிறப்பியல் மொழி என்று உணர்த்தியிருக்கிறார். முன்னது ஆய்வின் பாற்பட்டது. பின்னது தோய்வறிவினால் ஏற்பட்டது, அதாவது மெய்யுணர்வால் எனலாம்.

  • தமிழ்ச் சிந்தனை உலகளாவிய அளவில் சென்று நிலைப்பட்டுள்ளது. அதனுடைய ஆழ, அகல, கூர்மை குணாதிசயங்களால்.
  • NASA விண்வெளிக்கூடத்தில் ‘கற்றது கைம்மண்ளவு கல்லாதது உலகளவு’ – ஔவையார்.
  • நயாகரா நீர் வீழ்ச்சியில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலகம் அனைத்தையும் உறவாகப் பார்க்கின்ற உயர்ந்த பார்வை தமிழ்ப் பார்வை.

என பலபட நம் வேதம் ஆகமத்தை விரிக்கிறார் ஆசிரியர்!

     இரண்டாம் பகுதி ஒரு மறுப்பு நூலாக விரிகிறது. 1920 களில் கா.சு.பிள்ளை அவர்கள் ‘திருநான்மறை விளக்கம்’ என்ற தமிழ் நூல் வேத ஆராய்ச்சி நூலை எழுதியுள்ளார். அதற்குப் பின் 1926 ஆம் ஆண்டில் மா.சாம்ப சிவப் பிள்ளை என்பவர் மறுப்பு நூலாக ‘திருநான்மறை விளக்க ஆராய்ச்சி’ என்ற உள்ளடற்ற ஒரு நூலை எழுதினார். அது 2007 இல் மறு பதிப்பாக தி.ந.இராமச்சந்திரன் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. அதற்கு மறுப்பு நூல் வெளியிடக் கோரி நம் ஆசிரியரைப் பல பேர் வேண்டினார்கள். அது தற்போது நிறைவேறியுள்ளது பல பேருக்குப் பயன்படும் வகையில். அதில் கண்ட சில கருத்துக்கள் . . .

  • அருளாளர்கள் சொல்வதில் ஒன்றிற்கொன்று முரண் இராது. ஆனால் புராணிகர்கள் எல்லாம் அருளாளர்கள் அல்லர். எனவே புராணங்கள் எப்போதும் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளன.
  • சொல்லின் ஆற்றலை மறைத்துச் சொல்வது மறை தமிழ் மறை! பிறருக்கு மட்டுமே மறைப்பது மறை அல்ல (வடமொழி) ‘மறைமொழி தானே மந்திரம் என்ப’ – தொல்காப்பியம்.
  • ஆந்தை, பாம்பு, புலி, சிங்கம் என்று குழூஉக்குறியாகக் கூறிய பெயர்கள் நான்கு தன்மைகளை உடைய முனிவர்களே ஆல நிழலில் உபதேசம் பெற்றவர்கள்.
  • நினைத்தவரைக் காப்பாற்றுவேன் என்று சொல்லித் தண்டிக்கவும் வாய்ப்புள்ள வடமொழி மந்த்ரம் சிறந்ததா? மாறாக நினைப்பவர் நினைத்ததை அவருக்கு வேலையாளாக நின்று செய்து தரும் தமிழ் மந்திரம் சிறந்ததா?
  • திரு. சாம்பசிவப் பிள்ளையின் போலி வாதங்கள், முன்னுக்குப் பின் முரணான செய்திகள், தனக்குத் தானே மறுத்தல், தந்நிலை மறத்தல், தவறான மேற்கோள், தந்நிலை மாறல், தோல்வித்தானம் ஏற்றல் என அவருடைய வாதக் கருத்துக்கள் வெளிப்படுகின்றன. நம் ஆசிரியர் பரபக்க பார்வையாக அம்மறுப்பு நூலை அணுகி பதிலளிக்க இறுதியில் வெற்றிக்களத்தில் நிற்பவர் நம் ஆசிரியரே!

அறத்தமிழ் வேதம்

 arathamizh vedham book  பல புதிய சிறப்புச் செய்திகளை குறிப்புரையாக, மேற்கோள் உரையாக அனைத்து நூற்களுக்கும் ஆசிரியர் அணிந்துரை அளித்துள்ளார். இதன் மூலம் நூல் உள்ளே நாம் நுழைவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அவற்றில் இருந்து சில சிறப்புச் செய்திகள்:

  • தருமம் என்ற வடசொல்லின் பொருள் அறம் என்ற தமிழ்ச் சொல்லின் ஒரு கூறு தான். இதனாலேயே இதை இணை என்று கூறி விட முடியாது.                                                               

அறம் —> அன்பிலும்

அன்பு —> அருளிலும்

அருள் —> தவத்திலும்

தவம் —> சிவத்திலும்

சேர்க்கும் என்பதே வழிமுறை என்பதால் அறமே வீட்டிற்கும் அடிப்படை ஆவதும் காண்க. இதையே திருமூலர்

வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்

ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க

வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற

வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே

என்றார்.

வேதத்தின் அடிப்படைக் கூறு அறம் என்று கொண்டது தமிழ் வேதம் ஒன்றே! இதையே புறநானூற்றில்

சிறப்புடை மரபில் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல – 31

என்று வருகிறது.

அறம்: தனக்கு நன்மை என்பதே சமூகத்தில் பிறர்க்கு ஊறாக ஆகி விடக்கூடாது என்று எண்ணி வாழ்வதே அறம். ஆங்கிலத்தில் Ethics என்பர். இதையே திருவள்ளுவர் வாழ்வாங்கு வாழ்தல் என்ற காட்ட அதையே தமிழர் கொண்டனர்.

கீழ்க்கணக்கு நூல்கள்: 1. நாம் பிறவிக்கு வருவது – முதல், 2. வாழ்க்கை என்பது வரவு. 3. வாழ்க்கையில் அறத்தொடு வாழச் செய்யும் முயற்சி செலவு 4. செலவு போக நமக்குக் கிடைப்பது இலாபம். 5. இதில் நிகரமாக நிற்கும் அறப்பயனே நமது இருப்பாகிய கீழ்க்கணக்கு. அதனால் அறநூல்கள் கீழ்க்கணக்கு நூல்கள் எனப்பட்டன. இவையே மக்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் உயர்ந்த நூல்கள் என்று கூறலாம். தமிழர்களின் பண்டைப் பண்பாட்டை அறிவதற்கு இவைகளைச் சிறந்த கருவிகள் எனலாம்.

  • தமிழர் தனித்தனிக் குடும்ப வாழ்விலே எவ்வளவு சிறந்திருந்தனர் என்பதற்கு அகப்பொருள் நூல்கள் சாட்சிகளாகும்              .                                       ஆன்மிகத் துறையிலும் அரசியல் துறையிலும் பிற துறைகளிலும் தமிழர்கள் எவ்வளவு உயர்ந்த முறையைப் பின்பற்றி வாழ்ந்தனர் என்பதற்குப் புறப்பொருள் நூல்கள் சாட்சிகளாகும்.
  • துறவறத்தில் நிகழும் புலனடக்கத்தை விட இல்லறத்தில் தலைவன் தலைவியரிடையே ஏற்படும் பிரிவுகளில் விளையும் துன்பத்தை அன்பினால் ஆற்றி அமையும் புலனடக்கமே மேலானது என்று தமிழ்ச் சான்றோர் போற்றினர்.
  • ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.
  • பெண்ணின் அன்பு ஆதரவு தேடுவது ஆணின் அன்பு ஆறுதல் தேடுவது.
  • அறத்தான் வருவதே இன்பம்.
  • ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதவர்.
  • அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே – இலக்கணம்.
  • திருக்குறள் அறம், பொருள், இன்பம், என்ற மூன்று பகுப்புகளை வெளிப்படையாக உடையது. அறம் ஒன்றே வீட்டிற்கு அடிப்படை அதனால் அறப்பகுதியிலேயே வீடு பற்றியும் அடக்கிக் குறிப்பாகவும் காட்டப்பட்டுள்ளது.
  • ‘இடுநீற்றால் பை அவிந்த நாகம்’ – நாலடியார். அதாவது மந்திரித்த திருநீற்றை வீசினால் படமெடுத்தாடும் பாம்பு அடங்கிவிடும் என்கிறது.
  • நல்ல மக்கள் இன்ன குடியில் தான் அல்லது இன்ன குலத்தில் தான் பிறப்பர் என்று வரையறை செய்ய முடியாது
  • கொல்லுவதற்காகவே பிற உயிர்களை வளர்ப்பது குற்றம்.
  • மனத்தைக் கட்டுப்படுத்துபவனே தவம் புரிவதற்குத் தகுதியுடையவன்.
  • ஒருவர் இறந்த பின் அவருடன் வருவது அவர் செய்த அறத்தின் பயனே.
  • வெல்வது வேண்டில் வெகுளி விடல். – நான்மணிக்கடிகை.
  • கலாச்சாரம் தூய தமிழ்ச்சொல் – கல்வியினால் வரும் ஒழுகலாறு.
  • 8 நல்லொழுக்கங்களே ஆசாரத்துக்கு விதை – ஆசாரக்கோவை
  • வினை விளையச் செல்வம் விளைவது போல் வினை இருந்தால் தான் செல்வம் கிட்டும் – சைவ சித்தாந்தம்.
  • நாள் ஆராய்ந்து வரைதல் அறம்
  • எது வனப்பு? ஒரு நூலுக்கு இசைந்த சொல்லின் வனப்பே வனப்பு – சிறுபஞ்சமூலம்.
  • தூதுவரின் 6 தகுதிகளை வரையறை செய்கிறது – ஏலாதி.
  • விருந்தினரை உபசரிப்பது எப்படி
  • அறத்தால் ஆகும் பயன் மூன்று
  • யார் யார் அறம் உரைக்கத் தகாதவர்கள் – இவை போன்ற செய்திகளை உடையது அறநெறிச்சாரம்.

மொத்தத்தில் மேற்கண்ட நூல்கள் அனைவரது வீடுகளையும் அலங்கரிக்க உதவும், வாழ்வை வழி நடத்தும், வழி காட்டும்.

தமிழரின் வேதம் எது ? ஆகமம் எது? & அறத்தமிழ் வேதம் ஆகிய இருநூல்களை உடனடியாக வாங்கிப் பயனடைவீர்! உற்றார் உறவினர்களை வாங்கச் செய்து செம்மாந்து இருக்கும் செந்நெறியில் வாழ்ந்திடச் செய்வீர்!!

 

 

Top