You are here
Home > நாளொரு தகவல் > நஞ்சி இடைஇன்று ஏழாம் திருமுறை திருமுதுகுன்றம் விருத்தாசலம்

நஞ்சி இடைஇன்று ஏழாம் திருமுறை திருமுதுகுன்றம் விருத்தாசலம்

நஞ்சி இடைஇன்று நாளையென் றும்மை நச்சுவார்
துஞ்சியிட் டாற்பின்னைச் செய்வதென் னடிகேள்சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறுமோபணி யீரருள்
முஞ்சி யிடைச்சங்கம் ஆர்க்குஞ் சீர்முது குன்றரே. 1

ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி
ஊரித் தனையுந் திரிந்தக் காலவை நோங்கொலோ
வாரிக் கட்சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய்
மூரிக் களிறு முழக்க றாமுது குன்றரே. 2

தொண்டர்கள் பாடவிண் ணோர்க ளேத்த உழிதர்வீர்
பண்டகந் தோறும் பலிக்குச் செல்வதும் பான்மையே
கண்டகர் வாளிகள் வில்லி கள்புறங் காக்குஞ்சீர்
மொண்டகை வேள்வி முழக்க றாமுது குன்றரே. 3

இளைப்பறி யீரிம்மை யேத்து வார்க்கம்மை செய்வதென்
விளைப்பறி யாதவெங் கால னையுயிர் வீட்டினீர்
அளைப்பிரி யாவர வல்கு லாளொடு கங்கைசேர்
முளைப்பிறைச் சென்னிச் சடைமு டிமுது குன்றரே. 4

ஆடி யசைந்தடி யாரும் நீரும் அகந்தொறும்
பாடிப் படைத்த பொருளெ லாமுமை யாளுக்கோ
மாட மதிலணி கோபு ரம்மணி மண்டபம்
மூடி முகில்தவழ் சோலை சூழ்முது குன்றரே. 5

இழைவளர் நுண்ணிடை மங்கை யோடிடு காட்டிடைக்
குழைவளர் காதுகள் மோத நின்று குனிப்பதே
மழைவள ருந்நெடுங் கோட்டி டைமத யானைகள்
முழைவள ராளி முழக்க றாமுது குன்றரே. 6

சென்றி லிடைச்செடி நாய்கு ரைக்கச் சேடிச்சிகள்
மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே
குன்றி லிடைக்களி றாளி கொள்ளக் குறத்திகள்
முன்றி லிடைப்பிடி கன்றி டும்முது குன்றரே. 7

அந்தி திரிந்தடி யாரும்நீரும் அகந்தொறும்
சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே
மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்
முந்தி அடிதொழ நின்ற சீர்முது குன்றரே. 8

செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய
அட்டுமின் சில்பலிக் கென்ற கங்கடை நிற்பதே
பட்டிவெள் ளேறுகந் தேறு வீர்பரி சென்கொலோ
முட்டி அடிதொழ நின்ற சீர்முது குன்றரே. 9

எத்திசை யுந்திரிந் தேற்றக் காற்பிறர் என்சொலார்
பத்தியி னால்இடு வாரி டைப்பலி கொள்மினோ
எத்திசை யுந்திரை யேற மோதிக் கரைகள்மேல்
முத்திமுத் தாறு வலஞ்செய் யும்முது குன்றரே. 10

முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரைப்
பித்தனொப் பான்அடித் தொண்ட னூரன் பிதற்றிவை
தத்துவ ஞானிக ளாயி னார்தடு மாற்றிலார்
எத்தவத் தோர்களும் ஏத்து வார்க்கிட ரில்லையே. 11

Top