You are here
Home > செய்திகள் > உவமையில் வந்த உவகை

உவமையில் வந்த உவகை

ஒரு புலவனின் உயர்வை அவன் கையாளுகிற உவமை புலப்படுத்தி விடும். அதுவே அவனைக் காட்டும் அளவுகோல். “பையன் சரியா மார்க் வாங்கலை சார்! அதனால் நேற்றைக்கு அவனுக்குத் தனி ஆவர்த்தனம் தான்! என்றால் அவர் மிருதங்கக்காரர்; அந்தப் புலவர் பேர் மாமூலனார் என்று சொன்னீங்களே, அவர் காவல் துறையைச் சேர்ந்தவரா என்று கேட்டால் கேட்டவர் யார் என்று தானே விளங்குகிறது. ஆகா உவமையைக் கொண்டே அவர் யார் என்று தெரிந்துவிடும்.

ஆனால் உவம இயலில் தொல்காப்பியர் “உவமை உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை” என்று இலக்கணம் வகுக்கிறார். அதாவது எதனோடு ஒன்றை உவமிக்கின்றோமோ அது மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது பொருள்.

பொதுவாக பருவப் பெண்ணின் பற்களை முல்லைப் பூ போன்றவை என்று புலவர்கள் உவமிப்பார்கள். அப்படியானால் அங்கே முல்லைப் பூ வெண்மையில் உயர்ந்தது என்று ஆகிறது அதை வரிசையாக வைத்தால் எப்படியோ அப்படி இருக்கிறது அந்தப் பெண்ணின் பற்கள் என்பார்கள்.

சேக்கிழார் பார்க்கிறார்; திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் முல்லை நில வருணனைக் கூற வேண்டும். முல்லைப் பூக்கள் ஏராளமாக பூத்துக் குலுங்குகின்றன. அவற்றைப் பறிக்க வருகிறார்கள் முல்லை நில இளம் பெண்கள். பெண்கள் என்றாலே சிரிப்பிற்கும் கும்மாளத்திற்கும் கேட்க வேண்டாம்.

அப்பெண்கள் சிரிக்கும் போது பற்களின் வரிசையும் வெண்மையும் பளிச்சிடுகின்றன. அவர்கள் பறிக்கிற முல்லைப் பூக்கள் போன்று இருக்கின்றன அவர்களது பற்கள் என்று உவமிக்கலாம். ஆனால் ஓரறிவு முல்லைப் பூக்களை விட ஆறறிவு பெண்ணின் பற்களோ உயர்ந்தவை என்று தோன்றுகிறது. உடனே சேக்கிழார்க்கு “உயர்ந்ததன் மேற்றே உவமை” என்ற இலக்கணம் நினைவிற்கு வருகிறது. இந்த முல்லையைப் போல பல் என்னாமல் இந்தப் பல்லைப் போல அந்த முல்லை என்று மாற்றிவிட நினைக்கிறார். அவருடைய கற்பனை வேகமாக வேலை செய்கிறது.

அந்த முல்லைக் கொடிகளுக்குப் பக்கத்திலேயே களாச் செடி காய்த்து மண்டிக் கிடக்கிறது. களாப்பழம் தெரியுமா, களாப்பழம்! ஊறுகாய் போட்டா அவ்வளவு நன்றாக இருக்கும்!

அக்களாக்காய் அல்லது களாப்பழம் கறுப்பு என்றால் அவ்வளவு கறுப்பு! பக்கத்தில் உள்ள முல்லையோ வெள்ளையோ வெள்ளை! இந்தக் களாவோ கறுப்போ கறுப்பு! களாக் காய்க்கு முல்லையின் வெண்மையைப் பார்த்து ஓர் ஆற்றாமை! அதனால் முல்லையைப் பார்த்து இதோ இந்த இளம் பெண்களின் பற்களது வெண்மையை நீ களவு கொண்டு மிளிர்கிறாய், அவ்வளவு தானே! என்று சொன்னதாம்.

இப்படி சேக்கிழார் பெண்களின் பற்களது வெண்மையை முல்லை திருடி விட்டது என்று உவமையை மாற்றிப்போட்டார் அவருடைய கற்பனை இன்னும் நீடி ஓடிக் கொண்டிருக்கிறது.

களாப்பழத்திற்கு உடனே முல்லை சொல்லிற்றாம் “நான் இந்த இளம் பெண்களின் பற்களது வெண்மையைத் திருடினேன் என்றே வைத்துக் கொள். நீ மட்டும் என்னவாம்! இந்தப் பெண்களின் கூந்தலிலிருந்து அதன் மைக் கறுப்பை அல்லவா நீ திருடி கன்னம் கரேல் என்றிருக்கிறாய். “உன் பேரே அதற்குச் சான்று. உன் பேர் களா இல்லையா? நிலா நிலவு என்று ஆவதைப் போல களா களவு என்று ஆகும். உன் பேரிலேயே களவை வைத்துக் கொண்டு என்னை நீ திருடி என்கிறாய்! இது நல்ல வேடிக்கை என்று முல்லை சிரித்ததாம். முல்லை பூத்துக் குலுங்குவது முல்லை சிரித்தது போல இருந்தது.

அடடா! என்ன அற்புதமான கற்பனை! சேக்கிழார் உவம இலக்கணத்தின் உச்சியில் நின்று இந்த தேனென இனிக்கும் தீந்தமிழ்க் கற்பனையை விவரிக்கிறார். பாடலைப் பாருங்க!

பிளவு கொண்டதண் மதிநுதற் பேதையர் எயிற்றைக்
     களவு கொண்டது தளவெனக் களவலர் தூற்றும்
அளவு கண்டவர் குழல்நிறங் கனியும்அக் களவைத்
     தளவு கண்டெதிர் சிரிப்பன தமக்குமுண் டென்று .

(எயிறு – பல்; தளவு – முல்லை; களவலர் – களா பழி )

இவண்

மு.பெ.சத்தியவேல் முருகன்.

Top