You are here
Home > செய்திகள் > மதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு

மதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு

சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு

ஆசிரியர் : செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

மதிப்புரை : அவிரொளி சிவம் . மு. தியாகராசன்

    இதுகாறும் தமிழ்ச் சமூகத்திற்குக் குறிப்பாக சைவ சமய உலகத்திற்குப் பயன்படும் வகையில் பல (பத்ததிகளை) செய்முறை கருவி நூல்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வரும் நம் ஆசிரியர் நாம் வழிபடும் தெய்வங்களுக்கும் அருளாளர் அடியார்களுக்கும் உரிய போற்றிகளை 16 இல் தொடங்கி நூற்றெட்டு, முந்நூற்றெட்டு, ஐநூறு என விதவிதமாக இயற்றித் தொகுத்து அளித்துள்ளார். இவை யாவும் அவருடைய நீண்ட நெடிய 40 ஆண்டு கால வரலாற்றில், உரிய சூழலில் கட்டாயத்தில் இறை திருவருளால் எழுதப்பட்டு தற்போது தொகுக்கப்பட்டு வெளி வந்துள்ளன.

     புரியாத அஷ்டோத்தர நாமாவளியைக் கேட்டுப் புளித்துப் போன காதுகளுக்கு நறுந்தேன் அனைய இனிய தமிழ் அர்ச்சனைகள் இதோ வந்து விட்டன!

     இனி, இவை யாவும் உலகளாவிய அளவில் எங்கெங்கெல்லாம் திருக்கோயில்கள் உண்டோ, அங்கெங்கெல்லாம் இது பேசப்படும், ஓதப்படும். போற்றி என்றாலே அது ஒரு மந்திரமாகும். அந்த மந்திரச்சொல் ‘இ’ விகுதியில் முடிகின்ற வியங்கோள் வினைமுற்று ஆகும், இது மிகுந்த மந்திர வலிமை உடையது. அவ்வகையில் இந்நூற்றிரட்டில் உள்ளவை அனைத்தும் மந்திர வலிமை கொண்டவை ஆகும்!

     சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன்

சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி

ஆற்ற வுங்களிப் பட்ட மனத்தராய்ப்

போற்றி யென்றுரைப் பார்புடைப் போகலே

என்று காலபாசக் குறுந்தொகையில் அப்பரடிகள் அருளிச் செய்துள்ளார். ஆகவே, போற்றி என்று தமிழில் அருச்சனை செய்தால் அந்த அடியாரை இயமதூதர்கள் நெருங்கவே மாட்டார்கள்.

     தமிழருக்கு இரு கண்களாய் சைவ, வைணவம் தொன்று தொட்டு வழக்கில் இருந்து வருவதால் ஒரு சேர இத்தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு அனைவரும் ஏற்றுப் போற்றும் வகையில் ஆசிரியர் அமைத்துள்ளார்.

     இந்நூலின் அட்டைப்படம், தமிழ்த்தாயைச் சுற்றி அனைத்துத் தெய்வங்களும் கொலுவிருக்க அதனடியில் ஆறாசிரியர் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் சிறப்பை, உட்கிடையை அட்டைப்பட வாயிலாக ஆசிரியர் குறிப்பாக வெளிக்கொணர்ந்துள்ளது பாராட்டப்பட வேண்டியதாகும்.

      ஒரு சேர இந்நூல் தமிழ்ச் சமூக சமயத்திற்கு கிடைத்த அரிய கருவி நூல், அனைத்து விதமான வழிபாட்டு முறைகளுக்கும் உரிய அர்ச்சனை நூல் எனலாம். சிவபெருமானில் தொடங்கி, சிவனடியார், சிவசத்தி, கணபதி, முருகன், முருகனடியார், தமிழ்த்தாய், தமிழ்ப்புலவர், பரிவாரத் தெய்வங்கள், சித்தர்கள், சிறுதெய்வங்கள், கோள், நாள் பகுதி, திருமால், திருமாலடியார் என யாரும் எண்ணிப் பார்க்காத வகையில் எழுத்துக்களைப் பெரிய அளவில் அமைத்து பதிப்பித்து வெளியிட்டது அனைவரும் உய்ய வேண்டும் எனும் உயர்நோக்கத்திற்காகவே என்பது வெள்ளிடை மலை போல் இனிது விளங்கும்.  

      ஆசிரியரின் இந்நூல் வரலாற்றில் நீண்ட நெடுங்காலம் பயன்படுத்தப்படும் பேசப்படும்.

உலக மாந்தர் வாங்கிப் பயன்பெறுவர். நூலின் ஒவ்வொரு பகுதிக்கும் உரிய தெய்வப் படங்களை அமைத்து கண்கவர் நூலாக செய்து நூலின் உள்நுழைவை எளிதாக்கியுள்ளார் ஆசிரியர். இறை வழிபாட்டில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியுள்ளார்.

இந்நூலின் வாயிலாக எவரும், எவ்விறைவருக்கும் எளிமையாக, மனம் நிறைய, பயிற்சி இல்லாமலே அகங் குளிர வழிபாட்டினைச் செய்ய முடியும் என்பது இது வரை எவரும் நினைத்துப் பார்க்க முடியாத உண்மை! இனி, திருக்கோயில்களில், வீடுகளில் இறையுணர்வு மெய்ப்பட வாய்ப்புள்ளது காலத்தின் கட்டாயம்!

வாழ்க! வாழ்க!! சகலாகம பண்டிதரின் சீரிய சாதனை !

வளர்க! வளர்க!! தமிழ்ச் சமுதாயத்திற்கான ஆசிரியரின் தொண்டு !

வழிபடு தெய்வம் நிற்புறம் காக்க
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்.

தொல்காப்பியம்

சைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு
இயற்றித் தொகுத்த ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

பக்கங்கள்: 500
விலை: ரூ 350
தொடர்புக்கு: +919445103775

 

Top