எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் எல்லாம் புரிவதில்லை. பழகிய ஒன்றை பழக்கத்தின் காரணமாகவே அது அப்படித்தான் என்று ஏற்றுக் கொள்ளப் பழகி விடுகிறோம். அதில் ஒன்று தான் மழை. வந்தால் மழை; வராவிட்டால் வசவு. அவ்வளவு தான், மழையைப் பொறுத்த வரை நம் எதிர்வினை.
யாரும் மழை எப்படி வருகிறது என்பது பற்றி ஆய்ந்து அறிய முயலுவதே இல்லை. இதே மாதிரி தான் நானும் இருந்து வந்தேன்; எதுவரை தெரியுமா? மின் வாரியத்தில் வரைவு அமைப்பு (டிசைன்) உதவிச் செயற் பொறியாளராகப் பணி ஆற்றும் வரை. நான் அப்போது புதிய எண்ணூர் அனல் (NMTPP) மின் நிலையத்திற்கு வேண்டிய மீவுயர்ந்த தூநீராக்கத் தொகுப்பின் வரைவமைப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டேன். அப்போது தான் மழை என்பதே இறைவனது தூநீராக்க வரைவமைப்பு என்று புரிந்தது.
பலரும் புரிந்து கொள்ளும்படி விளக்குகின்றேன். இப்போது எல்லோரும் வீட்டில் ஆர்.ஓ.பொறியணி (R.O. Plant) வைத்திருக்கிறோம். பலவேறு நில உப்பு நீராகக் கிடைக்கும் கிணற்று நீரை இந்தப் பொறி விதவிதமாக பதனிட்டு உப்பை நீக்கி தூய குடி நீராக்கித் தரும். இந்தப் பொறிக்கே சராசரியாக ரூ.12,000/- ஆகிறது. அதன் மேல் பராமரிப்பு செலவு வேறு!
இதுவே, ஓர் அனல் மின் நிலைய பிரம்மாண்டமான தேவை என்னும் போது அதற்குப் பல கோடி செலவாகும் இல்லையா? கடல் நீரில் கலந்து கரைந்த வெவ்வேறு உப்புகளைக் கண்டு அவற்றை வெவ்வேறு வேதியியல் முறைகளால் பிரித்து தூயநீர் ஆக்கி பிரம்மாண்டமான கொதி கலன்களுக்கு அனுப்ப வேண்டும். இடையில் எத்தனை எத்தனை பதன் முறைகள் (Process), எத்தனை எத்தனை கோடி செலவு!
இப்படிப் பலப்பல கண்ணுக்குப் புலனாகாத பதன்முறைகளுக்குப் பிறகு நமக்குக் கிடைப்பது தான் மழை! இறைவன் தான் அதன் இஞ்சினியர் -பொறியாளன்! நமக்கு ஒரு செலவு இல்லை! வீட்டுத் தூநீர்க்கு ஆகும் செலவை விட மின் நிலைய தூநீர்க்கு ஆகும் செலவோ பல கோடி! இந்த மின் நிலையத்தை விட உலகமெலாம் தூநீராகி மழை பொழிகிறதே! எவ்வளவு செலவாகும்! கணக்கிட்டுச் சொல்ல முடியுமா? கணக்கில் அடங்குவதா அது? அத்தனையும் நமக்கு இலவசம்! கடவுள் இதற்காகக் கட்டணம், தவணை (EMI), வரி என்று எதுவும் வாங்குவதில்லை.
அதனால் தான் வள்ளுவர் கடவுளை வாழ்த்தியபின் உடனே “மாரி மாட்டு என்னாற்றும் இந்த உலகு” என்று மழைக்கு ஓர் அதிகாரம் வைத்துப் போற்றுகிறார். இளங்கோ அடிகள் “மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!!” என்று போற்றி பாடுகிறார்.
மேகங்கள் கடல் நீரை ஆவி வடிவில் சூரிய வெப்பம் ஆக்கித் தர முகக்கின்றன. மேகம் கடலில் இப்படி கடல் நீரை முகப்பதை அண்மையில் ஒரு யூ-டியூபில் ஒரு காணொளிக் காட்சியாகவே பலரும் கண்டிருப்போம்.
ஆக, மேகம் கடல் நீரை முகக்கும் போது அது பலவேறு கடல் உப்புகளின் ஆவி நீர் தான். ஆனால் மேகம் முகத்த பின், அது கருவுற்று தன்னுள் இடித்து மின்னி ஏதோ ஒருவகை மின்சாரப் பதன் முறையில் உப்பு நீராவியானது உப்பை ஒழிந்து தூய நீராவியாகிப் பின் குளிர்ந்து தூய நீராகிப் பெய்வது தானே மழை!
இதெல்லாம் மழை என்பதனுள்ளே நடக்கும் மாயா ஜாலங்கள்; விஞ்ஞானம் விளக்குவது. இதை ஒரு புலவர் தன் கண்ணோட்டத்தில் எப்படி பார்க்கிறார் பாருங்கள்! எப்போதுமே புலவர்கள் கண்ணோட்டமே தனி! அதில் பண்பு இழைந்திருக்கும்! பாடல் இதோ:
ஓராழி நீரை முகிலுண்டு மேல்நல்ல
நீராவ தென்னை நிலவேந்தே – சீராய்ந்த
மேலோர் தமைச்சர்ந்த வீணரும்மே லாவரன்றோ
நூலாய்வல் லோய்உளக்கண் நோக்கு
அதாவது உப்புநீர் கீழ்மையானது; ஆதலால் ஆழ்கடலில் ஆழ்ந்து கிடக்கிறது. ஆனால் அதுவே மேலான மேகத்துடன் தொடர்பு கொண்ட போது நல்ல நீர் ஆகி விடுகிறது. இது மேலோருடன் தொடர்பு கொண்டால் கீழோரும் மேலோர் ஆகிவிடுவார் என்பதைக் காட்டுகிறது என்று பாடியுள்ளார் புலவர். அடடா! எத்தனை மேன்மையான அதே நேரம் மறுக்க முடியாத விஞ்ஞான உவமை!
இதைப் பாடிய புலவர் பெயர் சதாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர்!
இந்த பாடல் ஒரு கேள்விக்கு விடையாக வந்தது; கேள்வி கேட்டவர் முத்துராமலிங்க சேதுபதி என்ற சிற்றரசர். அரசர் அதோடு விடவில்லை; “கீழோர் மேலோரைச் சேர்ந்ததால் மேலோர் ஆவர் என்பதை சரியான உதாரணத்தால் நிறுவினீர்! மேலோர் கீழோரைச் சேர்ந்தால் என்ன ஆகும்?” என்று அரசர் கேட்டார். புலவர் உடனே பாடினார்:
மூட்டை கடித்ததெனில் மொத்துமொத் தென்னவே
மாட்டடியாய் மெத்தையது வாங்குவதேன்? – நாட்டதனில்
கீழோர்க் கிடம்தந்த கூறரிய மேலோரும்
ஆழாரோ ஆங்கடிதான் பட்டு!
அதாவது சுகமாகத் தூங்க வேண்டும் என்று நல்ல பஞ்சணையில் படுக்கிறோம். ஆனால் எப்படியோ மெத்தையில் மூட்டைப் பூச்சி ஒளிந்து மேய்ந்து கொண்டிருக்கிறது. எப்படி தூக்கம் வரும்? தேடித்தேடி மூட்டைப் பூச்சியை நசுக்குகிறோம் என்றாலும் மூட்டை பூச்சி மெத்தையின் இடுக்குகளில் அங்கங்கே ஒளிந்து கொண்டு இம்சை தருகிறது. என்ன செய்கிறோம்? கோலெடுத்து மெத்தையை எல்லா இடங்களிலும் மாட்டை அடிப்பது போல அடிக்கிறோம். மெத்தை என்ன பண்ணும் பாவம்! எவ்வளவு விலையுயர்ந்த மெத்தை! இருந்தும் அடி வாங்குகிறது.
காரணம் என்ன தெரியுமா? புலவர் சொல்கிறார்: மேலோர் கீழோருக்கு இடம் தந்தால் அடிவாங்கித் தானே ஆக வேண்டும்!
இவண்
மு.பெ.சத்தியவேல் முருகன்.