You are here
Home > செய்திகள் > இறப்பு விஞ்ஞானம் இனிய சைவ சித்தாந்தம் நூல்

இறப்பு விஞ்ஞானம் இனிய சைவ சித்தாந்தம் நூல்

இறப்பு – விஞ்ஞானம் – இனிய சைவ சித்தாந்தம்

ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர்

முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

மதிப்புரை

நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன்

ஆன்மி­க உலகிலும், தமிழ் உலகிலும் தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு வன்மையால் தடம் பதித்து, காலச்சுவட்டில் அடைவதற்கரிய தனித்த இடத்தைப் பெற்றுள்ளவர் இந்நூலாசிரியர். சமய நெறி நூல்களா, வழிபாட்டு முறை நூல்களா, பாட நூல்களா, சைவ சித்தாந்த ஆகம நுண் நூல்களா, மறுப்பு நூல்களா, ஆங்கில நூல்களா, என்று விதவிதமாக 120 நூல்களை இயற்றியவர் இந்நூலாசிரியர். இப்பொழுது மிகக் கடினமான, அரிய ஆராய்ச்சி ஒப்பீட்டு நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் அனைவருக்கும் ஒரு விரிந்த பார்வையைக் கொடுக்கக் கூடியது. காரண காரிய அறிவு என்கின்ற சைவ சித்தாந்த ஆராய்ச்சிப் பார்வை கொண்ட ஆசிரியர், இந்நூலில் இறப்பு – விஞ்ஞானம் பற்றிய அடிப்படைகளை அலசி நூலில் ஆங்காங்கே இறப்பு பற்றிய செம்பொருட்டுணிபு (சைவ சித்தாந்தம்) விளம்பும் கருத்துகளை அழகாக நிலைநிறுத்துகிறார். விஞ்ஞானம் தொட முடியாமல் கைவிட்ட இடங்களை, இரகசியங்களை வெளியிட்டுள்ளார். இனி நூலில் தென்படும் விதவிதமான மணிகளைப் பார்க்கலாம்.

 • ஐன்ஸ்டினின் சார்புக் கொள்கையை, ‘முன்’ ‘பின்’ என்ற வார்த்தைகளால் காலம், இடம் என்று தமிழ்ச் சிந்தனையாகத் திருக்குறள் வாயிலாக நிறுவுகிறார்.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் ‘

சார்தரா சார்தரு நோய்.

இங்கு உலகியலைக் கடந்த மெய்ஞ்ஞானம் மிளிர்கிறது. ஓர் உயிர் நம்மை விட்டுப் பிரிவது துயரத்தைத் தருவது ஆதலால் அமங்கலம் என்கிறோம். ஆனால் உயி­­­ருக்கோ அது விடுதலை ஆகும். மேலும் அது இறையருளில் சேர்கிறது; அதனால் அது மங்கலம் எனலாம். ஐன்ஸ்டினின் சார்பு கொள்கையாகிய விஞ்ஞானத்தை இங்கே பேசும்படி செய்துள்ளார் நம் நூலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது!

 • உயிரின் இருப்பை, மனத்தின் இருப்பை விஞ்ஞானம் ஒப்புக் கொண்டு விட்டது என்பதற்கு சைக்காலஜி மற்றும் சைக்கிக் என்ற சொற்களே ஆதாரம்.
 • இறப்பில் உடற்கூறுகளில் அன்னமய கோசம், பிராணமய கோசம், கீழே உடலோடு விடுபட்டு உயிர் சூக்கும உடலுடன் மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம் மற்றும் ஆனந்தமய கோசமுடன் இவ்வுலகைக் கடந்து செல்கிறது. இதைக் குறள் வாயிலாகக் காணலாம்.

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.

 • மனம், புத்தி, அகங்காரம் என்னும் மனோமய கோசம் வெளியேறும் உடலுக்கு உதவுதற்கு ஏற்ப செல்லும் இடங்களில் உயிர் அவ்வவற்றை அனுபவிக்க ஏதுவாக சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற துய்ப்பு புலங்களின் சாரமும் கூட்டப்படுகிறது. இதை ‘எட்டுக்கூறுடை உடல்’ என்றும் ‘புரியட்ட ரூபகம்’ என்றும் கூறுவர்.
 • Dr.ரேமண்ட் மூடி என்ற ஆராய்ச்சியாளர் இறந்து உயிர் மீண்டவர் அனுபவங்கள் (NDE) பற்றி எழுதிய நூல்களே இறப்புப் பற்றிய விஞ்ஞானப் புரட்சிக்கு வித்திட்டன. ஆனால் இதற்கும் மேலாக சைவ சித்தாந்த ஆவண நூல்களில் ஒன்றான சிவஞான சித்தியார் ஒரு பாடலிலேயே ஓர் அரிய விளக்கம் தருகிறது.

பூதனா சரீரம் போனால் புரியட்ட ரூபந் தானே
யாதனா சரீர மாகி இன்ப துன்பங்கள் எல்லாம்
நாதனார் ஆணை யுய்க்க நரகொடு சுவர்க்கந் துய்த்துத்
தீதிலா அணுவாய் யோனி சேர்ந்திடும் சீவன் எல்லாம்.

 • மேலே கூறிய புரியட்ட ரூபத்துடன் செலுத்துடற் கூறுகளும், சிவ உடற் கூறுகளும் உயிர் முத்தி பெறும் வரை உயிரோடு ஒட்டி நிற்பவை. இனி இறந்த உயிரின் நெடும் பயணத்தில் ஏற்படும் பல விஞ்ஞானப் பதிவுகளை நாம் பார்க்கலாம்.
 • நான் சொல்ல நினைப்பதை அப்படியே சொல்ல சொற்கள் இல்லை. காரணம், நான் கண்டதெல்லாம் முப்பரிமாணச் சொற்கள். நில உலகில் காணும் முப்பரிமாணம் அங்கே இல்லை. அங்கே காணப்படும் பரிமாணம் மூன்றிற்கும் மேல். அதனால் பார்த்தவை அத்தனையும் அப்படியே கூற முடியாது என்கின்றனர்.
 • ஒரு பொருள் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டால் தானே அதன் செயல்பாடுகளை ஆராய முடியும். ஆனால் மனம் அருவமானது என்ற தவிர்க்க முடியாத உண்மையை நேரடியாக ஒப்புக் கொள்ளாமலே ‘மனோ தத்துவ இயல்’ என்ற ஒரு விஞ்ஞானத்துறை உள்ளது. (Psychiatry). அதன் மூலம் ஆய்வுகள் செய்வது என்றால் அது அடிப்படை இல்லாத ஆய்வு என்று ஆகிவிடாதா ? என்று ஆசிரியர் கேள்வி எழுப்புவது அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று. ஆனால் சைவ சித்தாந்தம் மனத்தை மிகச் சரியாக எடுத்துக் கூறி உறுதிபட நிலை நிறுத்துகிறார்.
 • ஆவியுடம்பில் எடையுணர்வே இல்லாததால் இயக்கம் தடையின்றி நடைபெறுகிறது. குறிப்பிட்ட இடம் என்ற ஒரு வரையறை ஆவியுடம்பிற்கு இல்லை. நினைத்த இடத்தில் நினைத்த போது அதனால் அங்கே இருக்க முடியும்.
 • ஆவியுடம்பில் உள்ளவர் தம்மைச் சுற்றி உலகில் உள்ள எப்பொருளையுமே பார்க்கலாம். யார் பேசுவதையும் கேட்கலாம். ஆனால் அவர் பிறர் கண்ணுக்குப் புலப்பட மாட்டார். அவர் பேசுவதும் பிறருக்குக் கேட்காது. உலகியல் தூலப் பொருள்கள் எதுவானாலும் அவற்றின் ஊடே புகுந்து புறப்பட வல்லவராகிறார்.
 • ஆவியுடம்பில் எண்ணப் பரிமாற்றத்தால் பிறர் எண்ணியது உடனுக்குடன் தெளிவாகப் புரிந்து விடுகிறது. அங்கு பேச்சுப் பரிமாற்றம் இல்லை என்கின்றனர்.
 • ஆவியுடம்பின் வடிவம் சில நேரங்களில் உருண்டையாகவும், மற்றும் சில வேளைகளில் அருவுருவமாகவும், காற்று மயமாகவும் உள்ளது. பருவுடலின் சாயல்கள் சற்று தெளிவற்ற நிலையில் இருக்கின்றன என்கின்றனர்.
 • இறப்பு என்பது விவரங்கள் தெரியாத ஒரு பெரும் பயணம். ஆனால் இறைவன் நமக்கு உதவ பிற ஆவியுலக உதவியாளர்களை, உறவுகளை, நண்பர்களை நியமித்துள்ளான்! என்னே அவன் வான் கருணை!!
 • இறந்துயிர் மீண்ட அனைவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓர் அற்புதமான ஒளிப்பொருள் ஒன்றைச் சந்தித்திருக்கிறார்கள். இது தொடக்கத்தில் மங்கலாகவும் போகப் போக அடர்த்தியும், ஆற்றலும் மிக்க ஒளியாய் வெண்மையாகியும் விடுகிறது. பார்த்த ஒளிப்பொருள் அல்லது ஒளிமயமானவர் மிகவும் அன்புடையவராகக் காணப்படுகிறார். அந்த ஒளிப்பொருள் நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.
 • ஒளிப்பொருள் இறந்த நபரின் வாழ்க்கைப் படத்தைப் போட்டுக் காட்டுகிறது. இந்தப் படம் சில நொடிப்பொழுதில் கால வரிசையில் மிக வேகமாக ஓடி முடிந்து விடுகிறது. மீள் பார்வையாக, நம் காலச் சக்கரம் நம் கண் முன்னே ஓட்டப்படுகிறது !
 • இறப்பிற்குப் பின் உயிர் மீண்ட நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன. இதற்கு அடிப்படைக் காரணம் ‘ஆற்றல் மிக்க அன்பு’ தான். ஒளிப்பொருள் திரும்பத் திரும்ப அறிவுறுத்துவது அன்பை மட்டுமே. அருளாளர்களின் அளவிறந்த அன்பு அருளாகத் திரண்டு சென்ற உயிர் மீளக் காரணமாகிறது. தொடர்புடையவர் பால் செல்லுவது அன்பு. தொடர்பில்லாதவர் மீது செலுத்துவது அருள் என்று மாற்றம் பெறுகிறது.
 • இந்நிலவுலக வாழ்க்கையில் காணும் எல்லாவற்றையும் விட அந்த உலகம் பல மடங்கு விசித்திரமானது. நாம் அதை அறிந்து கொள்வது அவசியம் என்கின்றனர்.
 • சென்று மீண்ட அனுபவத்தைப் பரப்புங்கள் என்கிறார் அருணகிரிநாதர். பகரீர், பகரீர் மறந்தவர்க்கே என்பது அவரது வாக்கு. மக்கள் தாம் வாழும் வாழ்க்கையை அதற்கேற்ப தகவமைத்து முன்னேறலாம் என்பது அவர் தம் கருத்து. இதனால் உலகவர் மனநிலையில் அறச்சிந்தனை ஏற்றம் பெற்று உலகம் வாழத்தக்க உலகமாகும்!
 • விரிந்த புதிய உலகில், பிறர் எவரையும் அவர்களது செயல்களை அலசி தீர்ப்புக்கு உள்ளாக்குவதற்கு நான் யார் என்ற உணர்வு மேலோங்கியது என்கின்றனர்.
 • என்னுடைய வாழ்க்கையை நோக்கும் பார்வையே மாறிவிட்டது. இவ்வாழ்க்கை விலை மதிப்பற்றது. நல்ல மனமே வாழ்க்கைக்குப் பிரதானம் என்பதை உணர்கிறேன். ‘அறத்தை அறத்திற்காகவே செய்’ என்ற ஆய்அண்டிரனின் புறநானூற்று பாடல் வரி கண் முன் நிழலாடியது!
 • மீண்ட உயிர்கள் ஒரு பாடத்தை நமக்குத் தவறாமல் போதித்தன. மீண்டும் உலகில் வாழச் செல்லும் போது அன்பைப் பயில், அன்பைப் பரப்பு என்பது தான் அந்தப் பாடம். அடுத்தது அந்த ஒளிப்பொருள் அறிவைத் தேடு என்றும் அறிவுறுத்தியது. இதற்கு நம் திருக்குறளே சாட்சி.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.

 • மீண்டவர் புதிய குறிக்கோள் உடையவராக நான் செய்ய வேண்டியவை பல உள்ளன என்கின்றனர். மீண்ட வாழ்க்கை வேறு ஒரு வகையில் சிறப்புடன் தொடர்கிறது.
 • சந்தித்த ஒளிப்பொருளின் காரணத்தால் இனி இருந்து வாழ வேண்டியதை இங்கே பார்ப்போம், இறந்து வாழ வேண்டியதை அங்கே பார்த்துக் கொள்வோம் என்ற மனநிலை வந்தது என்கின்றனர்!
 • அங்கே இறைவன் உடனிருந்து சுட்டிக் காட்டி அறிவுறுத்துகிறான் என்பதே உண்மை என்று புரிந்து கொள்ள முடிந்தது. அன்பாலும் அறிவாலும் உயிரின் மேம்பாட்டை இறைவன் உடனிருந்து பெருக்குகிறான் என்பதைப் பல பதிவுகளில் பார்க்க முடிந்தது. முடிப்பாக இறப்பில் ஒரு விஞ்ஞானம் இருக்கிறது, அது இனிய சைவ சித்தாந்தத்தில் வந்து முடிகிறது என்ற ஆசிரியர் நிறுவுகிறார்.

      அன்பே சிவம், அறிவே சிவம் என்பது நாம் அறிந்தது. ஆனால் இதையே அண்டத்தில் வைத்து உயிர்களுக்கு இறைவன் வலியுறுத்திப் போதிக்கிறான் என்று விஞ்ஞானப் பதிவுகள் சொல்கின்றன. ஆக, தமிழருடைய மறுபிறப்பு மற்றும் வினைக்கொள்கைகள் அடங்கிய சைவ சித்தாந்தம் இதனால் வலியுறுகின்றது. இந்நூல், அனைவரும் படித்து அறிந்து, பின்பற்ற வேண்டிய தலைமுறை நூல்!

 

விலை : 150.00
தொடர்புக்கு : 9445103775

Click here for Online Order

Top