You are here
Home > கட்டுரைகள் > ஆடித் தள்ளுபடியா – சரி, ஆடியே தள்ளுபடியா?

ஆடித் தள்ளுபடியா – சரி, ஆடியே தள்ளுபடியா?

ஆடித் தள்ளுபடியா – சரி ஆடியே தள்ளுபடியா?

‘காலம் பொன் போன்றது’ என்ற பொன்மொழி எல்லா மொழிகளிலும் சொல்லப்படுவதைக் காண்கின்றோம். காலச் சக்கரத்தின் ஒரு பல் ஆடித்திங்கள். ஆனால் அது மட்டுமே ஆண்டின் ஏனைய மாதங்களைத் தவிர்த்து தனி முள்ளாகச் சிலரைக்குத்துவது தான் ஏன் என்று தெரியவில்லை. “ஆடியில் புதிதாகக் குடித்தனம் போக வேண்டாம்!” “ஆடியா? ஆடி போகட்டும்! அப்புறம் பார்த்துக்கலாம்”. “ஆடி வேண்டாம்னு ஐயர் சொல்றாரே!” இந்த மாதிரி பேச்சுக்களை-இல்லை, இல்லை! ஆடி ஏச்சுக்களை அடிக்கடி ஏதோ ஓரிடத்தில் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் தமிழர்கள் இடையே கேட்கிறோம் அல்லவா? ஆடி மாதம் என்ன அவ்வளவு மோசமான மாதமா?

“ஞாலமே, விசும்பே, இவை
வந்துபோம்
காலமே உனை என்றுகொல்
காண்பதுவே”

என்று மணிவாசகர் இறைவனையே காலமாகக் காட்டி வணங்குகிறார்.

காலத்தில் ஒன்று ஆடி. காலமே இறைவன் என்றால் ஆடியும் இறைவனில் ஒன்று தானே! அல்லது ஆடி மோசம் என்றால் இறைவனே மோசம் என்றாகி விடாதா?

ஆடி மாதம் மோசமான மாதம் என்ற கருத்து எப்படி தொடங்கியது?இதற்கு ஏதாவது அடிப்படை இருக்குமா?
இது தமிழர்களுடைய கருத்தாக இருக்க முடியாது. ஏனெனில் இப்படி ஒரு கருத்து சங்க நூல்கள் எதிலும் காணப்படவில்லை. மாறாக ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழி தமிழில் மட்டும் தான் உண்டு.

வேளாண்மைக்கு அடிப்படை விதை விதைத்தல். விதைத்தது நன்கு விளைந்து கண்டு முதலானால் அதுவே வாழ்வின் ஆதாரமாக அமைகிறது.அதற்கு அடிப்படையை போட்டுத் தரும் விதைக்கும் செயலை ஆடியில் தொடங்கு என்ற தமிழன் ஆடிக்கு எதிரான கருத்து கொண்டவனாக இருக்க முடியாது.

இல்லை, இது உலகியலான பொருளாதாரச் சிந்தனைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்,அருளியலுக்கு ஆடி வீண் என்று யாரும் வாதிட முடியாது.  காரணம் புதுமனை புகுவது, புதுத் தொழில் தொடங்குவது போன்றவவை எல்லாம் அருளியல் தொடர்பானவை அல்ல; அவை எல்லாம் உலகியல் தொடர்பானவை தாம்!

சரி, அருளியலுக்குக் கூடஆடி ஆகாத மாதமா என்ன?திருத்தொண்டர் தொகை பாடி உலகில் அருளியல் நெறியில் புதிய தொண்டர்நெறியைப் பரப்பிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் கைலாயத்திற்கு முதன் முறையாக களையா உடலோடு சென்று இறைவனைக் காண வெlள்ளை யானை ஏறி இறைவனைக் கண்டது ஆடி மாதத்தில் தான். ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திர நாள் தானே சுந்தரர் முத்தி பெற்ற நாள்!

சுந்தரர் மட்டுமா? ஆடிமாதத்தில் முத்தி பெற்ற நாயன்மார்கள் பட்டியலே உண்டே!

ஆடி-சுவாதி-சேரமான் பெருமாள் நாயனார்
ஆடி-கேட்டை-கலிய நாயனார்
ஆடி-திருவாதிரை-கூற்றுவ நாயனார்
ஆடி-கார்த்திகை-புகழ்ச் சோழ நாயனார்
ஆடி-சித்திரை-பெருமிழலைக் குறும்ப நாயனார்
ஆடி-கார்த்திகை-மூர்த்தி நாயனார்

ஆக, சுந்தரரை உள்ளிட்ட 7 நாயன்மார்கள்ஆடியில் தான் முத்தி பெற்றிருக்கிறார்கள்.

அப்படியானால் ஆடி அருளியலுக்கு மிக ஏற்ற மாதம் என்று இறைவன் தெரிவித்திருக்கிறான் என்பது தானே இதன்மூலம் நமக்குக் கிடைக்கிற செய்தி!

நாம் வணங்குகிற கடவுளரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டவர்கள்  . சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டவர்; முருகன் விசாக நட்சத்திரத்துடனும், கிருத்திகை நட்சத்திரத்துடனும் தொடர்பு கொண்டவர்; விநாயகர் உத்திராட நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டவர்; திருமால் திருவோண நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டவர்.

இறைவனது உடம்பில் பாதியுடன் தொடர்பு கொண்டு உயிர்களோடு சித்சக்தியாயும் தொடர்பு கொண்டு இறைவனுக்கும் உயிர்களுக்கும் பாலமாக உள்ள இறைவிக்கு,அதாவது அம்பிகைக்குத் தொடர்பு உள்ள நட்சத்திரம் எது தெரியுமா? பூரம்! அதுவும் ஏனைய மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் அல்ல; ஆடிமாதத்தில் வரும் பூர நட்சத்திரம் தான் அம்பிகைக்குச் சிறந்த தொடர்புடைய நட்சத்திரம்! ‘எல்லா ஆலயங்களிலும் அம்பிகைக்கு ஆடிப்பூர உற்சவம்’ என்று பஞ்சாங்கத்தில் அச்சிட்டிருப்பதைக் காணலாம். ஆடி அம்மனுக்கு விசேஷம் என்பது அறிந்தது தானே!

அப்பர் சுவாமிகளுக்குத் திருக்கைலாய காட்சி கிடைத்தது எந்த மாதத்தில் தெரியுமா? ஆடியில் தான்!
தட்சிண கைலாயத்தில் அப்பருக்குக் காட்சி என்று ஆடி 18-ஆம் நாளைக் குறிப்பிட்டு இந்த ஆண்டு சுத்த திருக்கணித பஞ்சாங்கத்தில் குறித்துக் காட்டப் பட்டதைப் பார்க்கலாம். ஆக, சுந்தரர், சேரர், அப்பர் ஆகிய நாயன்மார்களுக்குக் கைலாய காட்சி கிடைத்தது ஆடியில் தான்!

கிருத்திகை நட்சத்திரத்தின் பெயராலேயே ஒரு மாதம் உண்டு. அது தான் கார்த்திகை மாதம். ஆனால் அந்த மாதத்தில் முருகனுக்குக் காவடி எடுப்பது கிடையாது. ஆடியில் வரும் கிருத்திகையில் தான் பழநியிலும், திருத்தணியிலும் முருகனுக்குக் காவடி மிகச் சிறப்பாக முருகனடியார்களால் கொண்டாடப் பெறுகிறது. மேலை நாடுகளில் எல்லாம் தைப் பூசத்துக் காவடி சிறப்பு என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் ஆடிக் கிருத்திகையில் காவடி எடுப்பதே சிறப்பாகக் கொள்ளப்படுவது கண்கூடு.

ஆக, பல வகையாலும் ஆடி மாதம் அருளியலுக்கு உகந்த மாதம் என்று தெரிகிறது.

சங்க நூல்களில் ஆடிப் பெருக்கு பற்றி பல பாடல்கள்   வருகின்றன. ஆதி மந்தியார் என்ற பெண்பாற் புலவர் ஆடிப் பெருக்கில் காவிரி கடலில் கலக்கின்ற இடத்தில் இழந்த தன் கணவனைத் தேடி மீண்டும் அடைந்தாள் என்று காண்கிறோம்.

ஆடிப் பெருக்கில் காவிரியில் புதுப்புனல் வெள்ளம் பெருகி வரும். பெண்கள்   எல்லாம் தத்தம் கணவர்களுடன் ஆற்றுப் படுகையில் கூடி இறைவனை வணங்கி ஆற்றில் விளக்குகளை விட்டு ஆடிப்பாடி மகிழ்வர் என்று சங்க நூல்கள் சான்று பகர்கின்றன. நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். அந்த நீர் பெருகி வரும் காலம் ஆடி. அந்த ஆடியில் ஆற்றில் மகளிர் விடும் விளக்குகளை ஏந்தி ஆறே மங்கலமாக ஒளி மயமாக இருக்கும் காட்சியை மனக் கண்ணால் காணும் போதே உள்ளம் குதூகலிக்கிறதே! மங்கலப் பெருக்குடன் மங்கல ஒளிவிளக்குகளை காவிரி ஆறு ஏந்திச் செல்லும் இந்த ஆடி மாதம் மங்கல வினைகளுக்கு விலக்காவது எப்படி?

இது நிச்சயமாக தமிழர் வழக்கமல்ல என்பது நன்கு தெளிவாகிறது. ஆடியை அருளியலுக்கும், உலகியலுக்கும் உகந்த மங்கல மாதமாகவே பழந் தமிழர்கள் கொண்டாடி இருக்கின்றனர். இடையில் புகுந்த வேற்றுக் கலாச்சாரம் தான் எந்த அடிப்படையும் இல்லாமல் ஆடியை சூது செய்து தள்ளி வைத்தது.

ஆடி, வாழ்வின் பெருக்கத்திற்கு அடையாளம். அந்த அடையாளத்தை மீண்டும் கண்டெடுத்து தமிழர்கள் ஆடியை ஆடிப் பாடிக் கொண்டாடி வரவேற்போமாக!

முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்
தெய்வமுரசு ஆகஸ்ட் 2008

Top