உ
தமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும்
ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர்
முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்
மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன்
தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு இதுவரை 120 நூல்களை இயற்றியருளியவர் நம் ஞானதேசிகர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள். வழிபாட்டு நூல்கள், நாடகம், செய்முறைப் பயிற்சி நூல்கள், வேத நூல்கள், ஆகம நூல்கள், வாழ்வியல் சடங்குகள், கோவில் விழாக்கள், பண்டிகைகள், தனித்தமிழ் நாட்காட்டி, பஞ்சாங்கம், போற்றித்திரட்டு, ஆங்கில உரைகள், மறுப்பு நூல்கள், என எழுத்துத்துறையில் பல்வேறு பரிமாணங்களை இத்தமிழ் உலகத்திற்குக் காட்டியுள்ளார். அதே போலப் பேச்சுத்துறையிலும் தோன்றிப், புறநானூறு, பெரியபுராணம், சேய்த்தொண்டர் புராணம் ஆகிய தலைப்புகளில் பற்பல யூடியூப் காணொலிகள் மற்றும் சிவஞான பாடிய ஒலிப் பேழை முதலியவை மூலமாகச் சொல்லேருழவராகத் திகழ்கின்றார்.
புதுமையான முறையில் வாசகர்களுக்கு வழிகாட்டியாக, தமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும் என்ற இந்நூலை
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
என்ற திருக்குறளுக்கு இலக்கணமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
சிறப்புக் கருதி ஆசிரியரின் உரை நலங் கொண்டே அடியேன் இம்மதிப்புரையை அமைத்துள்ளேன்.
- தொல்காப்பியமும், திருக்குறளும் நம் தொன்மைத் தமிழினத்தின் இரத்த நாளமும் எழில் வடிவமும் எனலாம். இவையே தமிழினத்தின் மேல்வரிச் சட்டங்கள்.
- இலக்கிய, இலக்கண உரைகளிலேயே உரைகாரர்கள் ஊடுருவிக் கெடுத்தது போக, இவற்றிற்கும் மேலாக மிக மோசமாக அந்த ஆரியப் பணியைச் செய்பவவை ஆன்மிக இலக்கிய உரைகள். அவை தமிழரின் ஆன்மாவையே தாக்கிக் தகர்ப்பவை.
- தமிழர்களோ தெய்வங் கொள்கையினர். வடவேதங்களோ கடவுளை மறுப்பவை. இதற்கு நேர்மாறாக அவர்களிடமிருந்து தமிழர்கள் ஆன்மிகத்தைக் கற்றார்கள்! பெற்றார்கள்!! என்று ஆன்மிகத் தமிழ் இலக்கிய உரைகாரர்கள் எழுதும் போது கொந்தளிக்காமல் குந்தியிருக்க முடியவில்லை.
- மிகத் தவறான உரைகளை நெடுகப் பார்க்க முடிந்தாலும் அதில் மேலோங்கி நிற்பது திருநீலநக்கர், நமிநந்தி அடிகள், உருத்திர பசுபதியார், நந்தனார் ஆகிய வரலாறுகள் தாம். எனவே மாதிரிக்கு இந்நான்கை C K S உரை வாயிலாகப் பார்த்தால் மற்றவை தாமாகத் தெற்றென விளங்கும்.
- சாமம் என்பது இசை; பொழுதறிந்து இன்ன சாமத்திற்கு இன்ன இராகம் என்று படுத்துப் பாடப்படுவது. இந்த இசைப் பகுப்பு தமிழுக்கே உரியது. சாமம் என்ற சொல்லிற்கு இசை என்றும், நள்ளிரவு என்றும், பொழுது என்றும் பொருள் உண்டு.
- சங்கரா சாமவேதி என திருமுறைகளில் சிவபெருமானோடு தொடர்புப்படுத்திப் பாடப் பெற்ற சாமம் எல்லாம் தமிழிசையை மட்டுமே குறிக்கும்.
- ஆனால் ஸாமவேதம் என்கிற ஆரிய வேதம் தமிழிசை போல எக்காலத்திலும் ஏழு சுரங்களை அறியாதது. 3 சுரங்கள் மட்டுமே முதலில் இருந்தன, அதாவது உதாத்தம், அனுதாத்தம், சுவரிதம் என்கிற 3 சுரங்களில் தான் பாடப்பட்டன. பின்பு மிக பிற்பட்ட காலத்தில் மெருகூட்டப்பட்டு 6 சுரங்களில் ஓதப்பட்டது. ஸாம கானம், இசைக் கணக்கு முறையை அறியாதது. இதில் ஆதார சுரம் இல்லை.
- முத்தீ வளர்த்தார் திருநீலநக்கர் – அதாவது தென்புலத்தார்க்கு, இல்லறத்தார்க்கு, தெய்வத்திற்கு என்று 3 அடுப்புகளை சமையலறையில் அமைத்து தீ வளர்த்தனர் என்பது ஆசிரியரின் அரிய விளக்கம். சான்றாக ஔவையாரின் பாடலைக் காட்டுகிறார்.
‘சித்தன் வாழ்வு இல்லந்தோறும் மூன்று எரியுடைத்து’ இதுவே தமிழர் தம் மரபாகும்.
- உபநயனம் வேறு இரு பிறப்பாளர் என்பது வேறு. பார்ப்பனர் உரிய சொல்லாட்சியாம். இது தீக்கையால் அமைவது. தமிழர்க்கே உரியது. இதில் குலம், இனம், மொழி, நாடு என்கிற பேதங்கள் எல்லாம் இல்லை. இது குருவருளால், திருவருளால் நிகழ்வது; மேலும் சிவாகமம் அனைத்துச் சாதியினரும் தீக்கைக்கு உரியவர் என்று கூறுகிறது. மேற்கூறிய பார்ப்பனர் விளக்கம் அனைவரும் கூர்ந்து நோக்கி அறிய வேண்டிய ஒன்று.
- வேதம், ஆகமம், உருத்திரம் என்ற சொற்களின் மெய்ப்பொருளை மிகத் தெளிவாக ஆதாரத்துடன் எடுத்துரைக்கிறார்.
- ஒருவரின் தனிப்பூசையின் முதிர்வு கோயில் பொதுப்பூசையில் அதீத அருளைப் பெற அமைகிறது.
- சிவனடியார் அனைவரும் பல வேறு பக்குவ நிலையில் உள்ளவர்கள். எல்லோரும் ஒரே பக்குவ நிலையில் இருப்பவர்கள் என்று கூற முடியாது. அடியனாய், மகனாய், தோழனாய், இரண்டறக் கலக்கும் நிலையாய் மாறிக் கொண்டே மேலேறல் வேண்டும். இதையே சேக்கிழார் ‘பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் பருவம்’ என்கிறார்.
- ஆசிரியரின் ‘நஞ்சுண்’ என்கிற நயத்தகு இலக்கிய ஒப்பீட்டுக் கற்பனை நினைந்து இன்புறத்தக்கது. அதே வேளை சிவக்கவிமணியின் வெற்றுரை அனைவர்க்கும் தெற்றென காட்டப்படுகிறது.
- இல்லறம் என்பது அன்பின் வழி அருளில் தோய்ந்து இறைவன் கழல் எய்துவதற்குத் தான் என்ற விளக்கம் தமிழர் நெறியைப் பெருமையுடன் எத்தமிழரையும் கைக்கொளச் செய்யும்.
- கல்லூர்ப் பெருமணம் வேண்டா என்ற சம்பந்தர் வாக்கின் சிறப்புப் பொருளை அனைவரும் அறிய வேண்டும்.
- யசுர் வேதத்தில் ருத்ரன் இழிவுகளுக்கெல்லாம் தலைவன் என்று நிறுவுகிறார். முத்தாய்ப்பாக ஸ்ரீருத்ரத்திற்கு அதிபதி ஆதித்தன் என்பதும் ருத்ரன் அல்ல என்பதும் செய்தி!
- அந்தணர் என்ற சொல் வடமொழியில் இல்லை! ஆனால் அத்தமிழர் உரிமைச் சொல்லை எப்படி வடவர் கைக்கொண்டனர்?
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
என்பது குறள். ஆனால் நேர்மாறாக பிதிர்க்களுக்கு உடும்பு, ஓணான், ஆடு, மீன், பறவை இப்படிப் பற்பல உயிரினங்களை வதைத்து, படைத்து உறவினருடன், பிராமணன் உண்ண வேண்டும் என்பது மனுஸ்மிருதி.
- சாமம், யாமத்திலிருந்து வருவது, பொழுதறிந்து பாடும் பண், முதுகுருகு, முதுநாரை, பரிபாடல் போன்ற இசைப்பாடல்கள் இசைச்சங்கத்தில் ஆராயப்பட்டன. ஆனால் ஸாம வேத இசை ஒழுங்கற்றது என்கிறது மனுஸ்மிருதி.
- சிவபெருமான் அந்தணனாக, புலையனாக, வேடனாக, செட்டியாராக, அரசனாக, கைக்கோளனாக, வளையல் செட்டியாக, இரத்தின வணிகனாக, மீனவனாக என்று சாதிபேதம் பார்க்காமல் தோன்றியிருக்கிறார்.
- உருத்திர பசுபதி நாயனார் புராணத்தில் ஸ்ரீருத்ரம் பற்றிய பொய்ம்மையைச் செப்பறை சுவாமிகள் அகவற்பா மற்றும் ஸ்ரீருத்ரோபநிஷத் உரை வாயிலாக அனைவரும் தெளிவு பெற வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.
ஸ்ரீருத்ரம் என்றால் மாண்புமிக்க துயர் செய்பவன் – வடமொழி
உருத்திரன் என்றால் அச்சத்தைப் போக்குபவன் – தமிழ்
உருத்திரம் என்பது உலகியலிலும், அருளியலிலும் அச்சத்தைப் போக்கக் கூடிய ஐந்தெழுத்து என்பதே உண்மை. அதை ஓதியே பசுபதி நாயனார் உய்ந்து முத்தி பெற்றார் என்பதே சரி.
- ஸ்ரீ விளக்கம் அருமையிலும் அருமை. சீர் என்ற எழுத்திலிருந்து எழுந்தது ஸ்ரீ. சீர் என்றால் பெருமை. சிறீ – சீர் மிகுந்ததால் சிறீ ஆயிற்று. ம-ள-ள-ஸ்ரீ என்றால் மகா ஆயிரச்சீர் என்று பொருள். அது லட்சம் என்று பொருள் தர ஸ்ரீ-லஸ்ரீ என்று எழுதுகிறார்கள். ஸ்ரீ என்ற எழுத்து கிரந்தத்தில் மட்டும் தான் காணப்படுகின்றது. இது சிவாசாரியார் தயாரிப்பு. சிவாசாரியார் தமிழர்.
- திருநாளைப்போவார்: சூழல் என்பது குலம். எந்தக் குலத்தில் இருந்தும் கிடைத்தவற்றைக் கொண்டு கடவுளைக் கும்பிடலாம். இதனால் முன்னேற்றமும் உண்டு, முத்தியும் உண்டு என்று உலகிற்குக் காட்டியது பெரிய புராணம். அதில் மிகச் சிறந்த உதாரணம் நந்தனார்.
‘வருபிறப்பின் வழி வந்த அறம்புரி கொள்கையராய்’ என்று பாடுகிறார் சேக்கிழார். ‘போரேற்றை விலங்க அருள்புரிந்து அருளில் புலப்படுத்தார்’ நந்தி நந்தனாருக்கு விலகி சிவலோக நாதரைக் காட்டியது இறைவனின் அருளிச் செயல் விளக்கம் அருமை.
- நந்தனார் காலத்தில் தில்லையில் சிவாச்சாரியர்களே பூசகர்கள். ஆனால் இன்று நாம் காணும் தீட்சிதர்கள் கி.பி. 1849க்குப் பின் வந்தவர்கள். மகுடாகம வழிபாடு மாறி பதஞ்சலி சாத்திரப் படி தான் இன்று வழிபாடு நடைபெறுகிறது.
- சாதி என்பது தொல்காப்பியத்தில் விலங்கு, அஃறிணைப் பொருள்களில் ஒரே இனமானவற்றை மட்டுமே குறிக்கும். மனிதரிடை அல்ல என்பது அருமையான விளக்கம்.
- தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாது
அதன் பயன் எய்திய அளவை மான – பொருநர் ஆற்றுப்படை
இதை மெய்ப்பித்து ஆடல் வல்லானுடன் சென்று சேர்ந்தார் நந்தனார்.
- சிவாகமத்தில், பெரிய புராணத்தில் இடைச்செருகல் என்று சிவக்கவிமணி அவர்களே ஒப்புதல் அளித்துள்ளார். தனக்குத் தானே முரண்பட்டுள்ளார் வெவ்வேறு இடங்களில்.
- ‘சிவஞான போதம் தமிழ் முதல் நூலே; மொழிபெயர்ப்பல்ல’ என 120 காரணங்கள் கொண்டு நிறுவிடும் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் நூல் வாயிலாக வடமொழி வாணர்களான மதுரை சிவப்பிரகாசர் மற்றும் சூரியனார் கோயில் சிவாக்கிர யோகிகள் ஆகியோரின் குட்டு வெளிப்பட்டது! மெய்கண்டார் மெய்நெறி நிலைப்பட்டது!!
இது, ‘சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும் வண்ணம்’ என்ற மணிவாசகரின் அச்சோப் பதிகத்தின் வரியை நமக்கு நினைவூட்டுகிறது.
- ஆசிரியரின் பிற்சேர்க்கைப் பகுதி முதன்மையான சேர்க்கையாகும். இதுவே அனைவரும் தெளிவு பெற அமைத்துள்ள காரண காரிய முடிப்பு சேர்க்கையாகும்.
- இந்நூல் அனைத்து தமிழ் உலகுக்கும், சைவப் பெருமக்களுக்கும் கண் திறக்கும், மாசு அறுக்கும் அரிய நூலாகும். படித்துப் பெருநெறி ஒழுகலாம்!