You are here
Home > செய்திகள் > வரலாற்றில் மறைந்த வேலையாள் (தொடர்ச்சி – பாகம் 2)

வரலாற்றில் மறைந்த வேலையாள் (தொடர்ச்சி – பாகம் 2)

பணியாளாகிய ஊட்டுவான் பாடலிபுத்திர நகரிலிருந்து புறப்பட வேண்டும். எப்போது? அதையும் அப்பர் குறிப்பாலேயே கூறினார் என்று பின்னொரு பாடலில் குறிப்பிடுகிறார் சேக்கிழார். அதாவது பகலில் செல்ல வேண்டாம்! சமண் சமய தலை நகரமான பாடலிபுத்திரத்தில் மக்கள் நடமாட்டம் நிறைய இருக்கும். எனவே இந்த சமண் சமய மடத்திலிருந்து ஒரு சமையற்காரர் எங்கே போய்க் கொண்டிருக்கிறார் என்று எல்லோரும் கவனிப்பார்கள்! எனவே யாராவது பின் தொடர்ந்தால் சமண மடத்திலிருந்து சைவ மதத்திற்கு ஏதோ தூது போகிறது என்று வதந்தி கிளம்பிவிடும். அது நம் பணிக்கும், நம் இருவருக்கும் பிரச்சனை உண்டு பண்ணிவிடும். எனவே யாரும் அறியா வண்ணம் நள்ளிரவில் புறப்பட்டு போ! காலையில் திருவதிகை போய் விடலாம். இங்கிருந்து அவ்வளவு தூரம் தான் இருக்கும். நேரே நந்தவனத்துக்குப் போ! இறைவனுக்காக தமக்கையார் பூக்களைப் பறித்துக் கொண்டிருப்பார். நீ சென்றடையும் நேரம் வைகறையாக இருக்கும். எனவே பிறரும் யார் வந்து சென்றது என்று அறியார்.

இத்தனையும் ஒருவர்க்கு ஒருவர் குறிப்பால் உணர்த்திக் கொண்டனர் என்று சேக்கிழார், “அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான்” என்று ஒரு வரியில் உரைத்து விடுகிறார். ‘அல்’ என்பது இருட்டைக் குறிக்கும். வைகறை இருட்டில் போய்ப் பார் என்று சொன்னார் என்று திலகவதியாரிடம் “ஊட்டுவான்” சொன்னார் என்று அங்கே வைத்து முன்னிகழ்ச்சியை அப்பணியாளர் வாயாலேயே பின்னால் வெளிப்படச் செய்கிறார் சேக்கிழார். இவ்வாறு மிக எச்சரிக்கையோடு ஊட்டுவான் திருவதிகை நந்தவனத்திற்குச் சென்று திலகவதியாரைச் சந்தித்தபோது அப்பர் சொன்ன மாதிரியே திலகவதியார் பூப்பறித்துக் கொண்டிருந்தார்.

அப்பணியாளரை திலகவதியார் அறியார். அவருக்கு தன்னை உமக்கு இளையாருடைய ஏவலினால் வந்தவன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அம்மையார் பூப்பறித்துக் கொண்டே சற்று அப்பணியாளரை ஏறிட்டுப் பார்க்கிறார். இவர் மீண்டும், “உமக்கு இளையார்” என்று நினைவூட்டுகிறார். “வீட்டை விட்டு வெளியேறிப் பல ஆண்டுகள் ஆயிற்று – இப்ப என்னவாம்?” என்பது போல அந்தப் பார்வையைப் பொருள் கொண்டு, “உமக்கு இளையார்” என்றார். என்னதான் இருந்தாலும் உம் தம்பி இல்லையா என்பது போல் “உமக்கு இளையார்” என்று சொன்னார். திலகவதியார் மலர் பறித்தலை மெளனமாகத் தொடர்ந்தார். “உமக்கு இளையார்” என்றார் மீண்டும். இப்போது அதற்குப் பொருள் வேறு! அவரை நெறிதவறிப் போய் விட்டார் என்று விலக்காதீர்! நீர் அவரை ஏற்றுக் கொண்டால் உம் நெறியில் உமக்குச் சற்றும் இளையார் என்பது பொருள். அதனால் அவரை ஏற்று “உய்யும் படி அருள்வீர்” என்பது குறிப்பு. எதையும் குறிப்பால் உணர்த்தும் ஆற்றல் பெற்ற இவர்க்கா சொல்லிக் கொடுக்க வேண்டும்?

அம்மையார், இவரைப் பார்த்து முதலில் சற்று தயங்கினார் என்பதை சேக்கிழார் ஒரு குறிப்பால் உணர்த்துகிறார். அம்மையார் இந்தப் பணியாளரிடம் முதன் முதலில் வாயைத் திறந்து கேட்ட கேள்வி இது தான். ஏதாவது தீமையான செய்தியோ? இதை “தீங்குளவோ என வினவ மற்றவனும் செப்புவான்” என்று தெரிவிக்கிறார். அதாவது நீண்ட நாட்களுக்குப் பிறகு தம்பியின் தொடர்பு நேர்கிறது. அம்மையார் என்ன கேட்டிருக்க வேண்டும்! தம்பி நலமா? என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்! மாறாக தீய செய்தியோ? என்பதனால் அம்மையார் சற்று விலகியே நிற்கும் மனப்பான்மையை வெளிப்படுத்தினார் என்பதைக் குறிப்பில் வைத்தார் சேக்கிழார். ஆனால் அதிலேயே வேறு ஒரு பொருளையும் காட்டுகிறார்; அம்மையார் கனவில் வந்து இறைவர் உன் தம்பியை சூலை நோய் கொடுத்து ஆட்கொள்வேன், கலங்காதே! என்று கூறி இருக்கிறார். எனவே அந்தச் சூலை நோய் அவனுக்கு வந்து விட்டதா என்று கேட்பார் போல் “தீங்குளவோ?” என்று கேட்டாராம்!

இதற்கு இப்போது அப்பரின் பணியாள் பதில் சொல்ல வேண்டும், அவர் எப்படிப் பதில் சொல்கிறார் பாருங்கள்! “கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை” என்று செய்தி சொல்கிறார். சூலை நோயால் படாத பாடு படுகிறார் என்று கூறாமல், “சூலை நோயால் பெரும் துன்பம் தான்; ஆனால் அஞ்ச வேண்டாம்! அவரது உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை” என்பதை முதலில் சொல்கிறார். கொல்லவில்லை, ஆனால் குடரைத் துடக்கி முடக்கிக் கொண்டிருக்கிறது சூலை என்று சொல்பவராய் “கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை” என்று கூறினாராம். அடடா! எவ்வளவு அறிவின் மிக்க பொருள் பொதிந்த பதில்! இவரை அல்லவா சொல்லின் செல்வர் என்று கூறவேண்டும்.

ஆனால் உலகமோ அனுமனைச் சொல்லின் செல்வர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு இராமன் ஏவலினால் சென்று திரும்பிய அனுமன் “கண்டேன் கற்பினுக்கு அணியை” என்று சொன்னான். பார்த்தீர்களா? அனுமன் மிகச் சுருக்கமாக இராமனுக்கு வேண்டியத்தைச் சொன்னான். அவன் அதனால் தான் சொல்லின் செல்வன் என்பார் உண்டு. ஆனால் சீதையிடம் அனுமன் கண்ட கற்பை கடைசி வரை இராமனால் காணமுடியவில்லை என்று காவியப் போக்கு காட்டுகிறது. எனவே அந்த அனுமனின் சொல் பயனின்றிக் கழிந்த சொல் ஆயிற்று!

ஆனால் அப்பரின் பணியாளனும் அப்படியே தான் தீங்கு எதுவும் இல்லை என்பதை உயிருக்கு ஆபத்தில்லை என்று முதலில் சொல்லி ஆனால் சூலை நோய் பெருந்துன்பமாய் துன்புறுத்துகிறது என்கிறார்.

அத்துடன், அக்காவிடம் “நான் உய்யும்படி கேள்” என்று சொல்லி அனுப்பினார் என்று சொல்கிறார். உய்யும்படி கேள் என்பதில் அப்பரின் வரலாறே அடங்கி விடுகிறது. இத்தனைக்கும் அப்பர் இவரை தூது அனுப்பும் போது குறிப்பால் தான் அனைத்தையும் கூறினார்; சொற்களால் அல்ல என்பதை மேலே பார்த்தோம் அப்படியானால் இந்தப் பணியாளர் அனுமனைவிடச் சிறந்த சொல்லின் செல்வர் ஆகி விடுகிறார். காரணம், இவர் சுருங்கக் கூறிய பெருக்கப் பொருளின்படி அப்பர் தாமும் உய்ந்து தரணியையும் உய்வித்தார்.

இந்தப்படி அப்பருக்கு ஊட்டுவானாக வந்த வேலையாளரை உலகம் மறக்கலாமா? எப்படியாவது இறைவன் அவரது பெயரைத் தெரிவிப்பானாக!

இவண்

மு.பெ.சத்தியவேல் முருகன்.

Top