You are here
Home > கட்டுரைகள் > ஆகமங்கள் தடையா! உண்மை என்ன? அலசுவோம்

ஆகமங்கள் தடையா! உண்மை என்ன? அலசுவோம்

செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்தியவேல்முருகன்

 

ஆகமங்களை மாற்றவே முடியாதா? என்ற தலைப்பில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஞாயிறு அரங்கம் பகுதியில் ஓய்வுபெற்ற நீதிபதி. திரு. கே.சந்துரு அவர்கள் எழுதியுள்ள கட்டுரை பெரும் ஆச்சரியத்தை எனக்கு ஏற்படுத்தியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் திட்டத்தை எதிர்த்து மதுரை மீனாட்சியம்மன் ஆலய பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் பிரதிவாதிகளில் ஒருவனாக இணைமனு (Impleading Petition) தொடுத்தவன் நான். அரசு நியமித்த அர்ச்சகர் மேலாண்மைக்குழுவில் நானும் ஒருவன் என்பதோடு அதன் பாடத்திட்டத்தை வகுத்தவர்களில் ஒருவன். இந்த வகையில்தான் இணை மனுவை உச்சநீதிமன்றத்தில் தொடுத்து அது ஏற்கப்பட்டு பிரதிவாதிகளில் ஒருவரானேன்.

உச்சநீதி மன்றம் இவ்வழக்கை விசாரித்த இறுதி இரு நாட்களில் என் சார்பிலும் மற்றும் சக இணை மனுதாரர் சார்பிலும் வழக்கை வாதிட்ட உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் திரு.பூங்குன்றன் மற்றும் திரு.காலின்ஸ் கான்ஸ்லேவ் அவர்களுக்கும் நீதிமன்றத்திலேயே உடனிருந்து உதவியவன்.

16-12-2015 ஆம் நாள் இவ்வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் புதிய தலைமுறை தொலைக்காட்சி ‘நேர்படப் பேசு’ விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீர்ப்பை வரவேற்றவன். மறுநாள் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் வரவேற்றுப் பேட்டி கொடுத்தவன். அதன் பின் ஒன்றன்பின் ஒன்றாக ‘மாலை மலரிலும்’, நக்கீரன் இதழிலும், திராவிடர் கழக ‘உண்மை’ இதழிலும், பழ. நெடுமாறன் அவர்களின் ‘தென்செய்தி’ இதழிலும் என வெளிவந்த எனது பேட்டிகளில் உச்சநீதி மன்றம் இவ்வழக்கில் அளித்த தீர்ப்பு பற்றி விளக்கியதுடன் இதுபற்றி சிறு கையேடு நூல் ஒன்றை வெளியிட்டு அதை எனது ‘தெய்வமுரசு’ இணையதள இதழிலும் வெளியிட்டுள்ளேன்.

இந்நிலையில் திருச்சியில் தமிழ் கலை இலக்கியப்பேரவையின் சார்பில் 2-1-2016 –ல் நடத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு விளக்கக் கூட்டத்தில் தமிழர் தேசிய பேரியக்கத் தலைவர் திரு. பெ.மணியரசன் அவர்களுடன் நானும் தீர்ப்பு விளக்கவுரை ஆற்றி விட்டு வந்த மறுநாள் 3-1-2016 –ல் தங்கள் நாளிதழில் நீதியரசர் திரு.கே.சந்துரு அவர்களின் கட்டுரையைப் பார்த்து அதிர்ச்சியுற்றேன்.

அந்தத் தலைப்பே மாறுபாடான கருத்தை வெளியிடுகிறது. ஆகமங்களை மாற்றவே முடியாதா என்று இவர் ஏன் அங்கலாய்க்க வேண்டும்? ஆகமங்கள் ஒரு கோயிலைக் கட்டுவதும், அதில் வழிபாடு எப்படி செய்யவேண்டும் என்பது பற்றியும் கூறும் ஒரு நம்பிக்கை சார்ந்த பழமையான நூல். கோயில் மீதும் அங்கு நடைபெறும் வழிபாட்டின் மீதும் நம்பிக்கை கொள்ளாதவர்கள் அதனைப் புறந்தள்ளலாம். அதற்குப் பதிலாக பழைய ஆகமத்தை இன்று மாற்றி திருத்த அது என்ன சட்டப்புத்தகமா? ஒரு வேளை சட்டம் ஒப்புக்கொள்ளாத ஒரு சில ஆகமத்தில் இருப்பதாக கருதினால் சட்டம் அதை பார்த்துக்கொள்ளும். சட்டம் கூட நடைமுறையில் இது ஏற்றத்தக்கதல்ல என்று ஆகமத்தின் சில கூறுகளைச் சுட்டுக்காட்டி தடுக்கலாமே ஒழிய, சட்டமே ஆகமங்களை எடுத்துக் கொண்டு அவற்றை மாற்றி புதிய ஆகமங்களைப் படைக்க முடியுமா என்ன? இது ஒரு அரசின் வேலையாக இருக்க முடியுமா? அப்படிச் செய்தால் அரசு அரசாக இல்லாமல் ஒரு மடமாக அல்லவா மாறிவிடும்? அடுத்து கட்டுரையின் தொடக்கத்தில் நீதியரசர் குறிப்பிடும் ஒரு கூற்று, அவர் சமயம் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது. அதாவது வடஇந்தியாவில் காசியில் உள்ள விஸ்வநாதரை எல்லோரும் தொட்டுப் பூசை செய்ய அனுமதி உண்டு என்கிறார். அக்கோயில் ஆகமப்படி கட்டிய கோயில் அல்ல என்பதை அவர் அறியாமல் கூறுகிறார். இதனால் ஆகமப்படி கட்டிய கோயில்களில் இறைவனைத் தொட்டுப் பூசை செய்தால் தீட்டாகிவிடும் என்றும் கூறிவிட முடியாது. காரணம், வீராகமப்படி கட்டிய ஆந்திர ஸ்ரீசைலம் கோயிலிலும் எல்லோரும் தொட்டுப் பூசை செய்ய அனுமதி உண்டு. எனவே, ஆகமம் கோயிலில் பலரும் இறைவனைத் தொட்டுப் பூசை செய்தால் தீட்டாகிவிடும் என்று தடுப்பது என பொத்தாம் பொதுவாகக் கூறிவிட முடியாது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கக் கோயில்களில் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் தவிர ஏனைய 11 கோயில்களில் அனைவரும் தொட்டு பூசை செய்ய அனுமதி உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் அறியாமலோ அல்லது அறிந்தும் கருத்தில் கொள்ளாமலோ ‘வட இந்திய உருவச்சிலைகளைத் தொடுவதால் தீட்டு இல்லை; தென்னிந்தியாவில் உருவச்சிலைகளைத் தொட்டால் புனிதம் குறைந்துவிடும்; இந்தியா முழுவதற்குமான இந்து மதம் என்ற ஒன்றிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறதா இல்லையா?’ என்று ஒரு கேள்வியை எழுப்பி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ஏனென்றால் இந்து என்பது ஒரு மதம் இல்லை; அது ஒரு வாழ்முறை (way of life)  என்று உச்சநீதிமன்றமே கருத்து தெரிவித்ததை நீதியரசர் மறந்து போய் இந்தியா முழுவதற்குமான இந்து மதம் என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது என்று எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். வரலாற்றின் எந்த ஒரு காலகட்டத்திலும் இந்தியா முழுவதிலும் உள்ள கடவுள் நம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி ஒரு மதத்தை நிறுவியதாகவோ அதற்கு இந்து மதம் என்று பெயரிட்டதாகவோ வரலாற்றில் எந்தவொரு சான்றும் இல்லாதபோது இவரால் எப்படி இப்படி ஒரு கேள்வியை எழுப்ப முடிந்தது? கடவுள் நம்பிக்கையிலேயே பன்மைத் தன்மைகள் உண்டு என்பதுதான் இந்தியா. அதனால்தான் தமிழகத்தைத் தாண்டி ஆகமப்படி கட்டப்பட்டக் கோயில்கள் அரிதாகக் காணப்படுகின்றன. எனவே வடஇந்தியாவில் ஏன் அப்படி? தென்னிந்தியாவில் மட்டும் ஏன் இப்படி என்று கேள்வி எழுப்புவது இந்தியாவின் வெவ்வெறு பகுதிகளில் உள்ள வெவ்வேறு சமய நம்பிக்கைகளைப் பற்றிய அறியாமையால்தான் எழும்; எழக்கூடும்.

அடுத்து தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஆகமப்படி கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை? அந்த ஆகமங்கள் கூறுவது என்ன என்பன போன்ற ஆகமக் கூறுகளை ஆய்ந்து முழுமையான அறிவு பெற்றவர்களாகவா நாம் இருக்கிறோம்? அதுவும் இல்லை. ஆகமம் என்றாலே எதிர்க்கின்ற பலர் அதுபற்றிய அறிவு சிறிது கூட இல்லாமலே அதை எதிர்க்கிறார்கள் என்பதுதான் பட்டவர்த்தனமான உண்மை. அதேபோல ஆகமம்தான் எல்லாம் என்று அதைத் தூக்கிப்பிடிக்கும் பிரிவினர் பலர். அதில் ஒரு நூலையும் அல்லது அந்நூலின் அட்டையைக் கூடப் பார்த்தறியாதவர்கள் என்பதும் பட்டவர்த்தனமான் உண்மையே. ஒன்றை ஏற்கவோ அல்லது எதிர்க்கவோ புறப்படும் முன் அது என்ன கூறுகிறது என்பதைப் படித்தறிய வேண்டாமா? அதில் ஆழங்கால்படுவது அப்புறம், முதலில் நுழைந்தாவது பார்த்திருக்க வேண்டுமே.

உதாரணத்திற்கு, ஆகமம் சாதியைப்பற்றி என்ன கருத்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் கொள்வோம்!

நீதியரசர் அவர்கள் எழுதிய கட்டுரையிலேயே ஆகமங்கள் உருவான வரலாறு என்ற உட்தலைப்பில் குறிப்பிட்டிருப்பதை மேற்கோள் காட்டலாம். இதற்கு வரலாற்றுப் பேராசிரியர் பி.டி.சீனிவாச அய்யங்கார் எழுதிய ‘ தமிழர்களின் வரலாறு’ என்ற நூலிலிருந்து எடுத்தாண்ட பகுதி வருமாறு:

“வைதிகச் சடங்குகளின்படி மக்களை நான்கு வர்ணத்தார்களாகப் பிரிக்க வேண்டி இருந்தது. அவர்களில் கடைசி வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் வேதங்களையும், வேதாந்தங்களையும் படிப்பதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். மக்களை நான்கு வர்ணங் களாகப் பிரித்ததினால் வர்ணாசிரம தர்மம் அமல்படுத்தப்பட்டு அது மக்களிடையே பரவியது. அதில் முக்கியமான ஒன்று சன்யாசம். அது பிராமணர்களுக்கே உரியது. சன்யாச வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் சில பயிற்சிகள் மூலமே ஒரு சன்யாசி மோட்சத்தை அடைய முடியும். ஆகமங்கள் இந்தக் கோட்பாட்டை எதிர்த்தன. (குறிப்பு: ஆக, ஆகமங்கள் நான்கு வர்ணப் பிரிவுகளையும் அதன் அடிப்படையிலான வர்ணாசிரமத்தையும் எதிர்த்தவை).

ஆகமங்களின் கூற்றுப்படி, தீண்டத்தகாதவன் எனக் கருதப்பட்ட ஒரு சண்டாளன் கூட விஷ்ணுவின் வடிவத்தையோ அல்லது சிவனின் வடிவத்தையோ பெற்று அவர்களுக்குப் பூசை செய்யலாம். கீழ்ச் சாதியைச் சேர்ந்த அடியார்கள் கூட சிவன் கோயில்களில் வழிபட்டதை சிவனடியார்கள் புராணங்கள் விவரிக்கின்றன. (குறிப்பு: ஆக, ஒரு தீண்டத்தகாதவன் கூட கோயில்களில் பூசை செய்யலாம் என்றால் ஆகமப் பூசைக்கு சாதி ஒரு தடையல்ல, இல்லையா?)

ஆகமங்கள் நான்கு வர்ணங்களாக மக்களைப் பிரித்ததை ஆதரிக்கவில்லை. ஆனால் வேதங்களின் முடிவு என்று சொல்லப்பட்ட வேதாந்தங்களைச் சூத்திரர்கள் படிக்கக் கூடாது என்று தடை செய்திருந்தார்கள். பாதராயணர் இது குறித்து விரிவாக விளக்கியுள்ளார். சூத்திரர்கள் வைதீகச் சடங்குகளின் மூலம் தூய்மை அடைய முடியாதவர்கள் என்றும் மாறாக ஆகமங்கள் அனைவருக்கும் பொதுவானது என்பதுடன், இன்றுகூட சிவதீக்கை பெற்றவர்கள் (தாழ்த்தப்பட்டவர்கள்) ஒரு பிராமணனுக்கு குருவாக இருந்து தீட்சை அளிக்கமுடியும்.” (குறிப்பு: ஆக, ஆகமங்கள் அனைவருக்கும் பொதுவானவை; அதில் சாதி ஒரு தடை இல்லை அல்லவா?)

இது நீதியரசர் எடுத்துக் காட்டிய மேற்கோள் பகுதிகள். இதில் அனைத்துப் பகுதியிலும் ஆகமம் சாதியை ஒரு தடையாகக் கொள்ளவில்லை என்றும், வடவேதமான ரிக், யசுர், சாம, அதர்வணம் ஆகியவையும் அவற்றின் ஒட்டுறவோடு எழுந்த வேதாந்தமும், அவற்றைப் பின்பற்றிய ஆரிய இனமும் தான் சாதியைக் காட்டி இழிவுபடுத்தியது என்றும் தெளிவாகத் தெரிகிறது அல்லவா?

இப்படி இருக்கும்போது, ‘ஆகமங்களை மாற்றவே முடியாதா’ என்று ஏன் இவர் அங்கலாய்க்கிறார்? ஆகமங்கள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று கூறும்போது அதை ஏன் இவர் மாற்றத் துடிக்கிறார்?

இவ்வாறு ஆகமம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தெளிவான வழிவகை செய்துள்ள நிலையில் ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படவேண்டுமென்று இப்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால் அதை, “இந்த வழக்கின் தீர்ப்பு அப்படியானதாக இல்லை; சீர்திருத்தப்பாதைக்கு முட்டுக்கட்டைப் போட்டு சமூக நீதி வரலாற்றை மீண்டும் பின்னோக்கி இழுப்பதைப் போல் ஆகிவிட்டது.” என்று எப்படி இவரால் திரித்துக்கூற முடிகிறது? அறிவு சார்ந்த நிலையில் இந்தத் தீர்ப்பை வெற்றி என்று உணர்ந்தவர்களுக்கு இது நிச்சயமாக ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

இவர் பி.டி.சீனிவாச அய்யங்காரை மேற்கோள் காட்டுவதோடு விவேகானந்தரையும் மேற்கோள் காட்டுவது இது பற்றி இவருக்கு இன்னும் தெளிவாக வேண்டியது பல உள என்பதைக் காட்டுகிறது. விவேகானந்தர் கூறியதை மேற்கோள் காட்டியதை ஏற்கலாமா எதிர்க்கலாமா என்று ஒரு கருத்தையும் கூறாமல் அடுத்து அதற்கு எதிரான ஆகமங்கள் உருவான வரலாற்றிற்குப் போய்விடுகிறார்.

விவேகானந்தர் என்ன சொன்னார், இவர் மேற்கோள்படி?: “வேதத்திலுள்ள புருச சூக்தத்தின் தத்துவத்தின்படி, சாதி பரம்பரையானது அல்ல…. அதற்கு மேலாக அர்ச்சகர்கள் எழுதிவைத்துள்ள நூலில்தான் சாதி குறித்து அவ்வாறு சொல்லப்படுகிறது. கடவுள் வெளிப்படுத்திய நூலில் அல்ல…”

விவேகானந்தர் இந்த இடத்தில் கூறியது உண்மைக்கு மாறானது. உண்மையில் ரிக் வேதத்தில் வரும் பத்தாம் மண்டத்தில் 90-ஆம் சூக்தமாக வரும் புருஷ சூக்தத்தில் தான் சாதி பற்றிய ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும் கருத்தே முளைத்தெழுகிறது என்பதை ரிக் வேதம் படித்தவர்கள் அறிவார்கள். அப்படியிருக்க அது அல்ல என்று எப்படிச் சொன்னார்? எந்த ஆதாரத்தால் சொன்னார்? சொல்ல வேண்டாமா? அதைவிட ஒருபடி மேலே போய் அர்ச்சகர் எழுதிவைத்த நூலில்தான் சாதி குறித்து அவ்வாறு சொல்லப்படுகிறது என்றால் அந்த நூல் ஆகமமா? ஆகமம் என்றால், அதில் வேதத்தில் அவர் குறிப்பிட்ட புருச சூக்தம் போல் எந்தப் பகுதியில் அவ்வாறு சாதி குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூற வேண்டாமா?

ஆனால் விவேகானந்தர் கூறியது அப்பட்டமான பிழை என்று பி.டி.சீனிவாச அய்யங்கார் கூறிய பகுதிகளிலிருந்து தெளிவாகத் தெரியும்; கட்டுரையைப் படிக்கும் எவருக்கும் இது உடனே புரியும். ஆக, உலகம் போற்றும் விவேகானந்தர் ஆகமம் பற்றிய அறிவில்லாமலும், தனக்குத் தெரிந்த வேதக்கருத்தைத் திரித்தும் பிழையாகக் கூறியிருக்கிறார் என்பது தெரிகிறது. இந்த ஒரு கருத்தினால் விவேகானந்தரின் பெருமையை நாம் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது; விடக்கூடாது.

எனவே, ஆகமம்தான் சாதியைக் கூறியது என்று விவேகானந்தரை எடுத்துக் காட்டி அதன்கீழேயே ஆகமம் அனைத்துச் சாதியினரையும் ஏற்பது என்று பி.டி.சீனிவாச அய்யங்காரை மேற்கோள் காட்டியது நீதியரசரின் கட்டுரையில் முன்னொடு பின் முரண் பல உள என்பதற்குச் சான்று.

அடுத்து என்னென்ன கட்டுப்பாடுகள் என்ற உட்தலைப்பில், நீதியரசர் கொடுத்துள்ள விவரங்கள் பல ஆகமத்தோடு தொடர்பில்லாதவை. உதாரணத்திற்கு ‘கோயிலைக் கட்டியுள்ள வீதிகளில் உயர் சாதியினர் குடியிருப்பும் இருந்ததால் தாழ்த்தப்பட்ட மக்கள் அந்தச் சாலைகளில் சென்றுவரக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது’ என்று கட்டுரையில் உள்ளதைக் காண்போம். இந்தக் கட்டுப்பாட்டை ஆகமமா சொன்னது? இது தமிழச் சாதியில் பின்னால் பிளவு சக்திகள் ஏற்படுத்திய சாதி ஆதிக்கத்தின் விளைவுதானே ஒழிய, அனைவரும் தீட்சைப் பெற்று சாதி வேறுபாடின்றிப் பூசை செய்யலாம் என்று கூறும் ஆகமத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?.

இதனால் வைக்கம் போராட்டத்தில் பெரியார் ஆற்றிய அரும்பணி ஆகமப்பணி என்றே கூறவேண்டும். இதனால்தான் பெரியார் தாம் தொடங்கிய ‘குடியரசு’ இதழை திருப்பாதிரிப்புலியூர் ஆதீனம் ஞானியார் சுவாமிகளைக் கொண்டு தொடங்கி வைக்கச் செய்ததும், அத்தொடக்கவுரையில் ஞானியார் சுவாமிகள், உண்மையான ஆத்திகர்கள் செய்யவேண்டிய அரும்பணியை பெரியாரே சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறார் என்று பாராட்டியதும் ஆகும்!

இன்னும் கட்டுரையில் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் ஆகமத்திற்குத் தொடர்பில்லாமல் ஆதிக்க உணர்விற்கே தொடர்புடையதாய் அவை கட்டமைத்துக் கொள்ள அவையெல்லாம் களையப்படவேண்டியதே என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க இயலாது. ஆனால் இந்த அருவருக்கத்தக்க கட்டுப்பாடுகளுக்கும் ஆகமத்திற்கும் ஏதோ தொடர்பிருப்பது போல கட்டுரையில் காணப்படுவதே விசித்திரமானது. ஏனெனில் ஒன்றிற்குக் கூட ஆகமமே காரணம் என்று சான்று காட்டப்படாததுதான்.

இனி, ஒருவேளை சில சிவாச்சாரியார்கள் ஆகமத்தை சொந்தம் கொண்டாடுவது ஆகமம் ஒரு பிரிவிற்குச் சாதகமானதோ என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கலாம். அவற்றிற்கெல்லாம் ஆகமத்தில் எள்ளளவும் சான்றில்லை. தொடர்ந்து சில நூற்றாண்டுகளாக சிவாச்சாரியார்களே பரம்பரை பரம்பரையாக கோயில்களில் பூசை செய்து வர நேர்ந்து விட்டதால் அப்படி ஒரு மாயத்தோற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த மாயையில் எதிர்க் கருத்தாளர்களே சிக்கி இருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். எப்படி இருப்பினும் அந்த பரம்பரை விஷயத்திற்கு சேஷம்மாள் வழக்கு எனப்படும் வழக்கில் சாவுமணி அடித்தாகி விட்டது; அத்துடன் அர்ச்சகர் நியமனம் சமயச்சார்பற்றது என்றும் அதில் ஏற்கனவே தீர்ப்பாகி விட்டது.

இதற்குமேல் என்ன என்பதுதான் இந்த குறிப்பிட்ட ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற வழக்கின் தீர்ப்பு. சேஷம்மாள் வழக்கு ஆகமவிதிப்படி பயிற்சி பெற்றவர்தான் அர்ச்சகராக நியமனம் செய்யப்படவேண்டும் என்று கூறியது.

எடுத்துக் கொண்ட திட்டப்படி அரசு 2006 –ல் ஆகம விதிப்படி பயிற்சி என்பதை அனைவருக்கும் கொடுக்க வழிசெய்தது.

ஆகம விதி என்பது சரி; ஆனால் ஆகமவிதி ஒரு குறிப்பிட்ட பிரிவினராகிய ஆதிசைவர் – அவரும் தீட்சையும் பயிற்சியும் பெற்றவராய் இருந்தால் – அவருக்கே கோயில் பூசைக்கு உரிமை உண்டு என்பதுதான் மீனாட்சி அம்மன் கோயில் பட்டர்கள் போட்ட வழக்கின் சாராம்சம்.

ஆதி சைவர் என்பவர் யார் என்பதுதான் நீதிமன்றத்தின் முன் இப்போது நின்ற கேள்வி. ஆதிசைவர் என்பவர் ஒரு பிரிவினரா? அல்லது ஒரு சாதியினரா? இது பற்றி ஆதிசைவர்கள் என்பவர்கள் என்ன கூறிக்கொள்கிறார்கள் என்பது அவர்களது வாதம். அதை வைத்து தீர்ப்புக் கூற முடியாது.அது பற்றி ஆகமம் என்ன சொல்கிறது என்பதே தீர்ப்புக்கு ஆதாரமாக இருக்க முடியும்.

ஆகமம், சைவர்களில் நான்கு வகை சைவர்கள் இருக்கிறார்கள் என்றும், அநாதி சைவர், ஆதி சைவர், அவாந்தர சைவர், மகா சைவர் என்று அவர்கள் நால்வகையினர் என்றும் கூறுகிறதே ஒழிய இந்த நால்வகையிலும் பிறப்பின் அடிப்படையை அது கூறவில்லை. அநாதி சைவர் சிவபெருமான்; அவருக்கு பிறப்பே கிடையாது; ஆதி சைவர் சிவதீக்கை பெற்றதால் ஆதி சைவர் ஆகிறவர்.

‘சிவோத் பூதம், சிவம்யஜேத்’ என்பது ஆகம வசனம். இதன்படி யார் யாரெல்லாம் சிவதீக்கை பெறுகிறார்களோ அவர்களெல்லாம் சிவாச்சாரியார் – அதாவது ஆதி சைவர்.

ஆதிசைவர் என்ற பெயரே பிறப்பிற்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதை பகல் வெளியாகக் காட்டுகிறது. பிறப்பினாலேயே ஒருவர் சைவர் என்றால் அவரை பிறப்புச் சைவர் என்று சொல்லவேண்டும். அப்படியின்றி தொடக்கம் என்ற பொருளுடைய ஆதி என்ற அடையோடு ஆதி சைவர் என்பதால், சைவராக தொடக்கம் பெற்றவர் என்பது தெரிகிறது. தீக்கையால் அவர் சைவராக தொடக்கம் பெறுகிறார். அதனால்தான் தீக்கை என்ற பொருளுடைய சொல்லை ஆங்கிலத்தில் கூட Initiation என்றனர். அது ஒரு அருள் நிலைக்குத் தொடக்கம் செய்வது. ஆகவே ஆதி சைவர் என்பதை ஆங்கிலத்தில் கூறவேண்டுமானால் ‘Initiated Saivite’ என்று கூறலாம்.

அடுத்து சிவாச்சாரியார் என்ற சொல்லும் பிறப்போடு தொடர்புடையது அல்ல என்று காட்டுகிறது. ஆச்சாரியர் என்றால் குரு என்று பொருள்; அதனால் சிவாச்சாரியார்கள் தங்களுக்கு குருக்கள் என்று பெயரிட்டுக் கொண்டனர். ஒருவன் பிறப்பினாலேயே குருவாகிவிட முடியாது.  குருவினுடைய பிள்ளை குருவல்ல.

எனவே ஆதி சைவர் என்பதோ சிவாச்சாரியார் என்பதோ தகுதிப்பெயர்களே ஒழிய பிறப்பின் அடிப்படையில் வந்ததுமல்ல; வருவதுமல்ல. இன்னும் பலவற்றை ஆகமத்தில் இருந்தே எடுத்துக் காட்டலாம் என்றாலும் அது ஒரு பெருநூலாக விரியும் என இவ்வளவில் விடுக்கின்றேன்.

அடுத்து சிவாச்சாரியார்கள் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களே என்றால் அவர்கள் தம்மை நேரடியாக அவ்வாறு கூறிக் கொள்வதில்லை; மாறாக சிவப்பிராமணர்கள் என்றுதான் கூறிக் கொள்கிறார்கள். எனவே சிவப்பிராமணர்கள் வேறு, பிராமணர்கள் வேறு என்பது புலனாகிறது. பிராமணர்கள் ஆரியர்;  சிவாச்சாரியார்கள் தமிழர் எனவே பிராமணர்கள் சிவாச்சாரியார்களை பிராமணர்களாக ஏற்றுக் கொள்வதேயில்லை. இருவரிடையே கொள்வினை கொடுப்பினை கிடையாது.
ஒருவேளை பிராமணர்கள் ஆகமக் கோயில்களில் உரிமை கொண்டாட முடியுமா என்றால் அதற்கு இடமே இல்லை. காரணம் பிராமணர்கள் பிறப்பால் போற்றுவது வடவேதங்கள் தாமே ஒழிய, ஆகமங்களை அல்ல. வடவேதத்திலோ, கோயிலோ, கோயில் வழிபாடுகளோ கிடையாது.

எனவே கோயிலில் ஆகம விதிகளின்படி பிராமணர்கள் உள்ளே நுழையவே முடியாது; சிவப்பிராமணர் என்று பெயரிட்டுக்கொள்ளும் சிவாச்சாரியார்கள் பிறப்பின் அடிப்படையில் அல்லது எந்தச்சாதியின் அடிப்படையிலும் உரிமை கோர முடியாது. ஆகமமோ அனைத்துச் சாதியினருக்கும் அனுமதி தருவது. எனவே அனைத்துச் சாதியினரும் ஆகமத்தைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை.

ஆனால் தொன்றுத் தொட்டு வரும் ஆகமம் அப்படியே எவ்வித இடைச் செருகலுக்கும் இடம் கொடாமல் இப்போது வந்திருக்கும் என என்று சொல்ல வாய்ப்பே இல்லை. ஆகமத்திலே ஏதோ ஒரு இடைச் செருகலால் சாதி குறிப்பிடப்பட்டு இருக்குமேயானால் என்ன செய்வது? இதையும் இப்போது வந்துள்ள உச்சநீதிமன்றம் கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பில் 43 ஆவது பத்தியில் உள்ள ஒரு பகுதியின் தமிழாக்கம் வருமாறு: “இது குறித்து ஏற்கனவே சட்டப்பிரிவு 16 (5) – இல் குறிப்பிட்டுள்ளதான அர்ச்சகர் நியமனத்தில் ஒரு பிரிவு அல்லது வரையறுக்கப்பட்ட ஒரு பிரிவினரையே (denomination) அமர்த்தவேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட சமயம் வரையறை செய்யுமானால் அதன்படிதான் செய்யவேண்டும் என்பது சட்டப்பிரிவு (14) –க்கு மாறானதல்ல என்பதை எந்த அளவிற்கு எடுத்துக் கொள்ள முடியும் என மீண்டும் வற்புறுத்துவது கட்டாயமாகிறது. அதாவது அந்த நியமனம் சாதி மற்றும் பிறப்பு மற்றும் அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளில் ஏற்கத்தகாதது என்று எவையெவை கூறப்பட்டுள்ளனவோ அவற்றின் அடிப்படையில் அமையாதவரைதான் சட்டப்பிரிவு 16(5) செல்லும் என்று எடுத்துக் கொள்ள முடியும்”.

இதன்படி ஆகமத்திலேயே ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத்தான் அர்ச்சகராக நியமிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாலும் அது சாதி மற்றும் பிறப்பின் அடிப்படையில் அமையாதவரைதான் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று தெள்ளத்தெளிவாக கூறிவிட்டது தீர்ப்பு.

இது எப்படி “சீர்திருத்தப் பாதைக்கு முட்டுக்கட்டைப் போட்டு சமூக நீதி வரலாற்றை மீண்டும் பின்னோக்கி இழுப்பதைப் போலாகி விட்டது” என்று நீதியரசரால் கூற முடியும்?

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கட்டுரையில் நீதியரசர் ஓரிடத்தில் கூட இப்போது வந்துள்ள தீர்ப்பின் பகுதிகளில் இன்னின்ன பகுதிகளில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆகமுடியாது என்றோ ஆகம விதிகளின்படி அப்படி செய்யமுடியாது என்றோ எடுத்துக்காட்டி அலசவே இல்லை என்பதுதான்! பொத்தாம் பொதுவாக தானே கற்பித்துக் கொண்ட அச்சத்தின் அடிப்படையில் ஆதாரமில்லாமல் தீர்ப்பைச் சாடுவது சரியானதுதானா என்று நீதியரசரின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

 

Top