You are here
Home > ஆசிரியர் மேசை > ஆசிரியர் மேசையிலிருந்து

ஆசிரியர் மேசையிலிருந்து

ஆசிரியர் மேசையிலிருந்து . . .

“தெரிகிறது விண்ணில் தெய்வமுரசு”

        முந்துதமிழ் முருகன் அருளால் இப்போது தெய்வமுரசு இதழ் விண்ணில் ஏறிவிட்டது; மின்னத் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 2013 வரை தெய்வமுரசு மண்ணில் நல்ல வண்ணம் தெய்வத்தமிழைப் பரப்பிய நற்பணியை இனி விண்ணிலிருந்து வியக்கும் வண்ணம் ஆற்ற உள்ளது.

சரியாக 9 ஆண்டுகள் 108 இதழ்களால் தெய்வத்தமிழுக்குத் தெய்வமுரசு மண்ணில் அருச்சனை செய்தது. இனி நமது நோக்கமாகிய தமிழருச்சனை விண்ணிலிருந்து நடைபெறும்.

ஏப்ரல் 2013-லிருந்து ஆகஸ்டு 2013 வரை இடையில் மூன்று மாதங்கள் தெய்வமுரசு விண்கலம் ஏவி விடுவதற்கான அடித்தள வேலைகள் நடந்து வர, இதோ! விண்ணில் சீறிப் பாய்கிறது ‘தெய்வமுரசு’ விண்கலம்!

அமெரிக்கா, ரஷியா, ஜெர்மன், பிரான்சு, சீனா, நம் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் எல்லாம் இப்போது விண்ணை நோக்கிக் கூர்ந்து பார்க்கின்றன. அந்தந்த நாடுகள் ஏதேதோ நோக்கிற்காக செயற்கைக் கோளை ஏவி விண்ணில் நிலைக்கச் செய்கின்றன. அவை அயர்ந்து போய் விண்ணைப் பார்க்கின்றன! இதென்ன, புதிய செயற்கைக்கோள் – விண்ணில் எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் ‘தெய்வமுரசு’ என்ற பேரில் ஒரு செயற்கைக்கோள், அமைதியாக வந்து அமர்ந்து விட்டது என்று அதிசயம் அடைகின்றன அந்நாடுகள்!

இப்படி விண்ணில் ஓர் தெய்வமுரசு செயற்கைக்கோள் ஏவப்பட இருக்கிறது என்று முன்னமே மாதிரிக்காக தெய்வம் வானில் ஓர் அதிசயக் காட்சியை ஏற்பாடு செய்து காட்டியது.

அதை நாம் ஏற்கெனவே ஏப்ரல் 2013 தெய்வமுரசு இதழில் அட்டைப்படமாக வெளியிட்டிருந்தோம். உடன் ‘ஆசிரியர் மேசையிலிருந்து’ பகுதியில் அவ்விதழில் வெளியிட்டதை இங்கே நினைவு கூர்கிறோம்:

“சுமார் ஓராண்டிற்கு முன்னே திருப்பதி மலைக்கு மேலே ஒரு நாள் இரவில் வானத்தில் ஓர் அதிசயக் காட்சி நிகழ்ந்தது. அன்று நிறைநிலா நாள். அதாவது பௌர்ணமி. வானில் சந்திரன் முழுமையாத் தங்கத் தகடாக சொலிக்கிறது. அதை நடுவாகக் கொண்டு மேகக் கூட்டங்கள் வரி வரியாக விபூதி வரிகள் மூன்று போல காட்சி கொடுத்து ஒளிர்ந்து கொண்டிருக்க அதன் நடுவில் சந்தனப் பொட்டிட்டது போல நிறை நிலா. அடடா! பார்ப்பதற்கு என்ன அருமையான காட்சி! யாரும் வானத்தில் மேகங்களையோ நிலாவையோ அப்படி அமைக்கவில்லை. ஆனால் அதுவே தானாக அமைந்து நீண்ட நேரம் காட்சி அளித்தது. இதனை ஆந்திர மாநில தனியார் தொலைக்காட்சியான ஒன்பது என்ற தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பில் உடனுக்குடன் காட்டி விளக்கியது. நாமம் தரித்த ஏழுமலையான் கோயிலுக்கு மேலே வானில் விபூதி வரிகளான சைவ அடையாளம்!

இது ஏதோ தானாக அமைந்த அதிசயக் காட்சியாக எமக்குத் தோன்றவில்லை. முதல் இதழில் விண்ணிலிருந்து தெய்வமுரசு மண்ணுக்கு வந்து மண்பதிப்பாக வெளிவந்துள்ளது என்று கற்பனை நயத்துடன் தான் எழுதினோம். அதை உண்மையாக்குவது போல இயற்கை இந்தத் தெய்வமுரசு ஒன்பது ஆண்டில் விண்பதிப்பாக ஒளிர இருக்கிறது என்று காட்டுவது போல வானெழுந்து வளக்காட்சி நல்கி இருக்கிறது. இது ஒன்பது ஆண்டுகளில் நிகழும் என்பதைக் குறிப்பது போல இக்காட்சி 9 என்ற தொலைக்காட்சியில் மட்டும் காட்டப் பெற்றது என்றால் இதை இயற்கை என்பதா? திருவருட் செய்தி என்பதா?“

ஆக, தெய்வமுரசு விண்கோளாய் வெளிப்படுவது முன்னமேயே தெய்வத்தால் வானில் அறிகுறியாகக் காட்டப்பட்டுவிட்டது. அதன்படி இப்போது தெய்வமுரசு விண்ணில்!

இந்தத் தெய்வமுரசு செயற்கைக் கோள் என்ன நோக்கம் கொண்டு என்ன பணிகளை ஆற்றப் போகிறது? முதல் இதழிலேயே (ஏப்ரல் 2004) இதைப் பற்றி எழுதிவிட்டோமானாலும் மீண்டும் நினைவுபடுத்துவதில் தவறில்லை.

“ முரசு தந்து முத்தமிழ்த் தெய்வப்பணிகளை ஆற்ற மேலாம் அருள் புரிந்த முருகப் பெருமானே! சைவமும் தமிழும் தழைத்தினிதோங்க வேண்டும்! உன் புகழே பாடி நாங்கள் இனி அன்புடன் ஆசாரத் தமிழ் வழிபாட்டினைப் பகுத்தறிவோடு மெய்யறிவைக் கலந்து உலகெங்கணும் பரப்ப வேண்டும்!

விஞ்ஞானப் பார்வை வேண்டும்

விளங்கிடும் அருளும் வேண்டும்

மெய்ஞ்ஞானக் கண்ணும் வேண்டும்

மனிதநே யந்தான் வேண்டும்

அஞ்ஞானம் அகல வேண்டும்

அறிவொளி பரவ வேண்டும்

இஞ்ஞாலம் தன்னில் தெய்வத்

தமிழோங்கித் தழைக்க வேண்டும்!”

        நமது பணிகள் இந்தப் பாதையில் தொடர்கின்றன! எனவே ஏப்ரல் 2013-இதழில் வெளிவந்த தொடர் கட்டுரைகள் அப்படியே தொடர்கின்றன. பற்றித் தொடர்வோம் பருவரைப் பைந்தமிழ்ப் பணிகளையே!

Top