செந்தமிழ் வேள்விச் சதுரர்
முருகப்பெருமான்: தந்தையே! சற்று முன் உயிர்கள் சிவோகம் பாவனையில் தோய்தல் வேண்டும் என்று விளக்கினீர்கள். சிவம் எந்த நிலையில் உள்ள சிவம் என்பது ஒரு முக்கியமான விஷயம் அல்லவா?
சிவபெருமான்: சரியாகச் சொன்னாய் மகனே! சிவம் இரண்டு வகைப்படும். 1) பரசிவம் 2) அபரசிவம். சிவோகம் பாவனையில் தோய வேண்டிய உயிர் அபரசிவத்திலேயும் சிவோகம் பாவனையாகத் தோய வேண்டும்; பரசிவத்தோடும் சிவோகம் பாவனையாகத் தோய வேண்டும்.
முருகப்பெருமான்: போச்சுடா! இங்கே இன்னொரு சிக்கலா? அதென்ன பரசிவம் – அபரசிவம்?
சிவபெருமான்: பரசிவம் என்பது நுண்ணிலை; அதுவே சிவத்தின் தன்னிலை; அபரசிவம் என்பது சிவத்தின் பருநிலை. வடமொழியில் நுண்ணிலையை சூக்குமம் என்றும், பருநிலையை தூல நிலை என்றும் கூறுவர். மேலும் சூக்கும நிலையை சொரூப நிலை என்றும், தூல நிலையைத் தடத்த நிலை என்றும் கூறுவதுண்டு.
முருகப்பெருமான்: சிவத்தின் இந்த இரண்டு நிலையையும் சற்று விளக்கமாகத் தான் சொல்லுங்களேன்!
சிவபெருமான்: மகனே! உனக்குத் தெரியும். இருப்பினும் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக என்னை விளக்கச் சொல்லுகிறாய் அல்லவா? இதைக் கேள்! பருநிலை-தூலநிலை-தடத்த நிலை என்று கூறும் நிலையில் உள்ள சிவம் ஐந்தொழில்களைச் செய்யும் சிவம்; நுண்ணிலை-சூக்கும நிலை-சொரூபநிலை என்கிற நிலையில் உள்ள சிவம் எவ்வித வேறுபாடுகளும் அடையாத இன்பமே வடிவமான நிலை. அந்த நிலையில் சிவம் உண்மையறிவின்ப சிவம் எனப்படும். அதாவது சச்சிதானந்தமய சிவன் எனப்படும்.
முருகப்பெருமான்: இந்த இருவகை சிவத்தையும் சிவோகம் பாவனை செய்வது ஒரே மாதிரி தான் செய்யப்படுமா?
சிவபெருமான்: நல்ல கேள்வி கேட்டாய். இருவகை சிவத்திற்கும் சிவோகம் பாவனை இருவகையாக அமையும். ஐந்தொழில் செய்யும் சிவமான அபரசிவத்தை மந்திரம் மூலமாக சிவோகம் பாவனை செய்தல் வேண்டும். உண்மையறிவின்ப வடிவ சிவமான பரசிவத்தை ஞானத்தால் மட்டுமே சிவோகம் பாவனை செய்தல் வேண்டும்.
முருகப்பெருமான்: மந்திரம் மூலமாக சிவோகம் பாவனை செய்தல் என்பது எப்படி?
சிவபெருமான்: மந்திரங்களுக்கு அடிப்படை உருவம். எனவே கோயில்களில் அமைக்கப்பட்ட உருவத்தைச் சாதனமாகக் கொண்டு வழிபடத் தொடங்க வேண்டும். அது முதிர்ந்த பின் அந்த உருவம் தேவைப்படாது. அந்த உருவத்திற்குரிய மந்திரத்தோடு ஒன்றுதல் நிகழும். அப்போது அந்த வடிவத்திற்குரிய மந்திரான்மாவாக ஆன்மா நிற்கும். அந்த மந்திர வடிவே தான் என நிற்பதே மந்திர வகை சிவோகம் பாவனை.
முருகப்பெருமான்: ஞான வழி சிவோகம் பாவனை எப்படி நிகழும்?
சிவபெருமான்: மந்திரான்மா சிவோகம் பாவனை முதிர்ச்சியில் மெல்ல மெல்ல உருவம் மறைந்து போகும். அதன் பின் ஆன்மா அருவ நிலை சிவத்தோடு தோய்ந்து அந்த பரசிவத்தில் சிவோகம் பாவனையாகக் கற்கும். இது மெய்யறிவினால் நிகழ்வது. எனவே இதனை ஞானத்தால் நிகழும் சிவோகம் பாவனை என்பர். இதைத் தான் ‘ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்’ என்று என்னடியான் திருநாவுக்கரசு பாடினான். இங்கே உருவத்திற்கு முற்றிலும் வேலையில்லை.
(முருகப்பெருமானுக்கும் – சிவபெருமானுக்கும் இடையே நிகழ்ந்த இந்த உரையாடல் கருத்தடங்கிய பாடல் கீழே தரப்படுகிறது.)
பரம்அபரம் என்று சிவம் இருவிதமாம் அவைகள்
பகர்தூல சூக்குமமாம் பரசொரூப நிகழ்த்தின்
தருசர்வோ பாதிசூ னியமாகிச் சச்சி
தானந்த மயமாகும் அபரம்ஐந் தொழிலும்
புரிசொரூப மாம்தூலம் மந்திர வத்தாகும்
புகலரும்சூக் குமஞானக் கண்ணாற்காண் குவதாம்
விரிவினின்னும் வாக்குவிகற் பங்களைஇங் கியம்பின்
மிகவும்மனத் திற்கதிக மோகத்தை விளைக்கும்.
தொடரும். . .