இன்று (7-10-2013) காலை தினமலர் நாளேட்டில் இனிய அற்புதமான செய்தி ஒன்று வந்துள்ளது. அந்தச் செய்தியை வாசகர்கள் அறிய அப்படியே அளித்திருப்பதை அடியில் காண்க:
“பெங்களூரு, அக்.7-கர்நாடக மாநிலம், குத்ரோலி கோகர் நாதேஸ்வரர் கோவிலிலே இரண்டு விதவைகள், அர்ச்சகர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
‘பரசுராமர் தேசம்’ எனப் போற்றப்படும் மங்களூரு மாவட்டம் குத்ரோலி கோகர்நாதேஸ்வரர் கோவிலில் தசரா விழாவை முன்னிட்டு, கணவனை இழந்த பெண்கள் இந்திர சாந்தி, லட்சுமி சாந்தி ஆகிய இருவர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பாரம்பரிய முறைப்படி மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவிலுக்குள் நுழைந்த பின், அன்னபூர்ணேஸ்வரி, ஹனுமான், நவக்கிரகங்கள், கிருஷ்ணர், சாரதா விக்கிரகங்களுக்கு அவர்கள் பூஜை செய்தனர். இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு மாதங்களாக பூஜை செய்யும் முறைகள் அனைத்தும் கற்றுக் கொடுக்கப்பட்டன.
இதற்குக் காரணமான முன்னாள் மத்திய அமைச்சர் ஜனார்த்தன் பூஜாரி கூறுகையில், ‘மாறி வரும் காலத்திற்கேற்ப நாமும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். பெண்களைப் பூமா தேவியாக மதிக்கும் நம் நாட்டில் அவர்கள் கணவனை இழந்து விட்டால் எந்த நல்ல காரியத்திலும் பங்கு கொள்ள அழைக்காமல் புறக்கணிப்பது மூடநம்பிக்கையின் அடையாளம். இந்தப் பழக்கம் நாட்டிலிருந்து ஒழிய வேண்டும் என்றார். இந்த நியமனத்தைக் கர்நாடகாவில் உள்ள பல பெண்கள் அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.”
இந்தச் செய்தி கர்நாடக மாநில பெண்கள் அமைப்புகளால் வரவேற்கப்படுவது ஒரு புறம் இருக்கட்டும்; இச்செய்தி இந்தியர் அனைவரும் பெருமைப்படத் தக்க செய்தி. இயற்கையாகவே கருவறையோடு தொடர்புடையவர்கள் பெண்கள். ஆனால் மூடநம்பிக்கையில் மூழகிப் போன பழமைவாதிகளால் கோயில் கருவறையில் நுழைய விடாமல் பெண்கள் மறிக்கப்படுவதே காலத்தின் கொடுமை! ஒரு மத்திய அமைச்சராயிருந்த பூஜாரி இரு விதவைப் பெண்களுக்குப் பூஜை முறையில் பயிற்சி கொடுத்து ஒரு கோவிலில் பூஜாரிகளாக ஆக்கி இருக்கிறார். பாராட்டுக்கள்!
ஆனால் எல்லோரும் பாராட்ட மாட்டார்கள்! ‘ஆங்! முற்போக்கு என்ற பெயரில் இதெல்லாம் சிலர் செய்யும் அட்டூழியம்!‘ என்று சிலர் அங்கலாய்ப்பார்கள். அவர்கள் அறிய வேண்டியது ஒன்றுண்டு. அதாவது இது முற்போக்கு என்று முனக வேண்டாம்; முன்னால் முன்னோர்கள் போன போக்கே இது தான் என்பதை அறியாமல் இவர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்!
இப்போது என் மனக்கண் முன் பழைய நினைவுகள் அலைமோதுகின்றன. தமிழில் குடமுழுக்கு செய்யக் கூடாது என்பதற்காகத் தருமபுர ஆதீனத்தில் விரிவான அளவில் ஒரு கருத்தரங்கம் 2002-ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்தார்கள். அதில் 19 ஆதீனங்களும், 55 சிவாச்சாரியார்களும் அடியேனும் கலந்து கொண்டு ஆகமப்படி அமைக்கப்படாத கோயில்களில் தமிழில் திருமுறைகளால் குடமுழுக்கு செய்யலாம் என்று தீர்மானம் செய்யப்பட்டது. இச்செய்தி 24-10-2002- ஆம் நாளன்று தினமணி நாளேட்டில் வெளியானது.
அங்கே இரண்டு நாட்கள் நடந்த பெரும் விவாதத்தில் தமிழுக்கு ஆதரவாகப் பேசி வாதங்களை ஆகமச் சான்றுகளுடன் அடுக்கடுக்காக வைத்தவன் அடியேன் ஒருவன் தான். அந்த வாதங்களில் பெண்கள் கோயில் கருவறைகளில் அனுமதிக்கப்படலாமா என்பது பற்றிப் பேச்சு வந்தது.
அடியேன் பெண்கள் கருவறையில் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படலாம் என்று கூறினேன். அப்போது பெருமதிப்பிற்குரிய கூனம்பட்டி ஆதீனம் அவர்கள் அதைத் தீவிரமாக எதிர்த்தார்கள். இதையெல்லாம் ஆகமம் அனுமதிக்காது என்றார்.
இல்லை, ஆகமம் அனுமதித்துள்ளது என்று வாதிட்டேன். சான்று காட்டச் சொன்னார். நான் எடுத்துக் காட்டிய சான்றுகளை இங்கு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1 திருப்பனந்தாளில் உள்ள கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற கோயில். கோயிலின் பெயர் தாடகையீச்சுரம். இந்தப் பெயரையே ஈற்றில் வைத்து பதிகம் முழுக்கப் பாடியிருக்கிறார். திருப்பனந்தாள் மடத்துப் பதிப்பில் இக்கோயில் ஈச்சுரனார் தாடகை என்ற சிவாச்சாரியாரின் மனைவியால் பூசிக்கப்பட்டவர் என்ற குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் வரலாறு என்ன சொல்கிறது என்றால் கோயில் குருக்கள் வெளியூர் சென்ற காலத்தில் தாடகை என்கிற அவரது மனைவியார் கருவறையில் இலிங்கத்தைப் பூசை செய்யும் போது அபிடேகம் செய்ய உயரம் போதாமையால் தவிக்க, சிவலிங்கம் அப்பெண்ணின் பத்திக்கிரங்கி தலை சாய்த்து அபிடேக நீரை வாங்கிக் கொண்டது என்று வரலாறு கூறுகின்றது. அதனால் அக்கோயில் ஈசர் பனந்தாள் ஈசர் என்னப்படாமல் தாடகை ஈச்சுரர் என்று இன்றும் அழைக்கப்படுகிறார்; சம்பந்தரும் இதைப் பதிகத்தில் உறுதி செய்து தாடகையீச்சுரம் என்றே பாடி இருக்கிறார். எனவே ஒரு பெண் கருவறையில் நுழைந்து பூசை செய்யலாம் என்பது ஆன்றோர்களால் அனுமதிக்கப்பட்ட ஒன்று. சிவாகமம் தெரிந்த குருக்கள் தனது மனைவியைக் கருவறையில் பூசை செய்ய வைத்தார் என்றால் அவர் சிவாகமத்திற்கு எதிராகவா அந்தச் செயலைச் செய்ய வைத்தார்? அந்தச் சிவாச்சாரியார் அனுமதிக்க இப்போதுள்ள சிவாச்சாரியார்கள் மட்டும் அனுமதிக்காதது ஏன்?
2 அறுபான் மும்மை நாயன்மார்களிலே திருநீலநக்கர் என்று ஒரு நாயன்மார் இருந்தார். அவருடைய வரலாற்றைப் பார்த்தோமானால் அவரும், அவரது மனைவியும் கருவறையில் நுழைந்திருக்கிறார்கள்; சிவலிங்கத்தின் மேல் ஒரு சிலந்தி ஊர்ந்திருக்கிறது. அதை ஓட்ட திருமதி நீலநக்கர் வாயால் ஊதி இருக்கிறார்; அப்படி ஊதும் போது எச்சில் பட்டிருக்குமே என்று மனைவியுடன் ஊடல் செய்து விலகுகிறார். இரவில் கனவில் இறைவன் அந்த அம்மையார் ஊதிய இடங்கள் தவிர பிற இடங்களில் கொப்புளத்தைக் காட்டினாராம். இதன் மூலம் அம்மையாரின் எச்சில் பட்ட இடமே தம் மேனியில் புண்படாதது என்றும் அது அவருடைய அன்பின் காரணத்தால் என்று புரிய வைத்தாராம் இறைவன்.
சேக்கிழார் இவ்வரலாற்றைக் கூறும் போது திருநீலநக்கரோடு அவரது மனைவியார் கருவறையில் இருந்து பூசைப் பொருட்களைக் கணவருக்கு எடுத்துத் தரும் பணிவிடை புரிந்ததாகக் கூறுகிறார்.
அணைய வந்துபுக் கயவந்தி மேவிய அமுதின்
துணைமலர்க் கழல் தொழுது பூசனை செயத் தொடங்கி
இணைய நின்று அங்கு வேண்டுவ மனைவியார் ஏந்த
உணர்வின் மிக்கவர் உயர்ந்தஅர்ச் சனைமுறை உய்த்தார்.
அதோடு, திருமதி திருநீலநக்கர் சிலந்தியை வாயால் ஊதித் தள்ள வேண்டும் என்றால் அவர் கருவறையில் தானே சிவலிங்கத்தின் அருகாக இருந்திருக்க வேண்டும்? எனவே முன்னே சிவாச்சாரியார் இல்லாத போது அவர் மனைவி கருவறையில் பூசை செய்ததைப் பார்த்தோம். இங்கே சிவாச்சாரியார் கூடவே இருக்க அவரது மனைவியார் கருவறையில் பூசைக்கு உதவினார் என்று பார்க்கிறோம். அப்படியானால் கருவறையில் நமது முன்னோர்கள் ஏற்கெனவே பெண்களை அனுமதித்திருக்கிறார்கள் என்று சான்றுகள் தெளிவாக விளம்புகின்றனவே.
3. காரைக்காலம்மையார் சிவாச்சாரியார் வகுப்பைச் சேராதவர்; செட்டிப்பெண். ஆனால் இவரோ இன்று வரை திருவாலங்காட்டில் நடராஜப் பெருமான் அடியிலே இருக்கிறார் என்பது தானே பெரிய புராணம் கூறுவது?
4 அடுத்து, தஞ்சையில் பெரியகோயில் எடுப்பித்த ராஜராஜ சோழன் அக்கோயில் பூசை முறைகளை வகுத்து அதற்கென கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறான். அவன் கோயில் பூசைக்காக 400 தளிச்சேரிப் பெண்டிரை அமைத்தான். இனி, இவர்கள் பூசையில் பங்கு பற்றியது பற்றி கல்வெட்டு ஆராய்ச்சியாளர் முனைவர் மு.அகிலா அவர்கள் எழுதிய ‘திராவிடத் திருமகுடம்‘ என்ற நூலில் பக்கம் 92-ல் கொடுத்திருப்பதை இங்கே காண்க:
“இத் தளிச்சேரிப் பெண்டிர் (ஆடவல்ல மகளிர்) ஒவ்வொரு பூசை நேரத்திலும், தேவார இசைப் பாடல்களைப் பாடியவாறு, வாத்திய இசைக்கேற்ப நடனமாடியபடி, தட்டுக்களில் பூக்களை எடுத்துச் சென்று அர்த்த மண்டபத்திற்கு மேலுள்ள தளங்களில் அதற்கென அமைக்கப்பட்டுள்ள கிழக்குப்புற வாசல்களின் வழியாக கீழே நிறுவப்பட்டிருக்கும் சிவலிங்கத்தின் மேல் அர்ச்சிப்பார்கள். மேலும் இறை மூர்த்தங்கள் திருவீதி உலா சென்று வந்த பின் கோயில் வாசலில் வரவேற்று, கோயிலினுள் அழைத்துச் செல்லும் உரிமையும் தளிச்சேரிப் பெண்டிருக்கே வழங்கப்பட்டிருந்தது.”
இதிலிருந்து தஞ்சை பெரிய கோவிலில் தேவாரம் பாடியும், ஆடியும் சிவலிங்கத்திற்குப் பூவினால் அர்ச்சிக்கும் உரிமை தளிச்சேரிப் பெண்டிர்க்கே கொடுக்கப்பட்டிருந்ததையும் காண்கின்றோம். எனவே கருவறைக்குள் பெண்கள் சென்று பூசிப்பது என்பது முன்னாலேயே இருந்த போக்காகிய முற்போக்கு தான்.
இடையில் வந்தவர்கள் தான் ஆதாரம் எதுவும் ஆகமத்தில் இல்லாதிருக்க பிற்போக்காகப் பெண்களைக் கருவறையில் நுழைய விடாமல் தடுத்து விட்டார்கள்.
ஒன்றை நினைத்துப் பாருங்கள்! உண்மை இப்படி இருக்க, அதாவது பெண்களே கருவறையில் முந்தைய தமிழகத்தில் பூசை செய்திருக்க, அனைத்து சாதியினரும் முறையாகப் பயிற்சி பெற்றால் ஏன் கருவறையில் பூசை செய்யக் கூடாது? சிந்தியுங்கள்!
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கிட்டு உயர்ந்த கொள்கைக்கு இறைவனுக்கு உகந்த கொள்கைக்குப் பூட்டுப் போடப் பார்க்கின்றன சில பிற்போக்கு சக்திகள்!
மதுரை பட்டர்கள் 8 பேர் கூட்டாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள்; ஆண்டுக் கணக்கில் இவ்வழக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக திருவிளையாடற் புராணத்தில் வரும் ஒரு படலம் நினைவுக்கு வருகிறது. எளிய ஒரு பெண்ணுக்காக இரங்கி மதுரைச் சொக்கேசரே மாமனாக வந்து வழக்குரைத்து அந்தப் பெண்ணுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வாங்கிக் கொடுத்தாராம்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகவும், பெண்கள் கூட அர்ச்சகராகவும் மதுரைச் சொக்கேசன் எப்போது மாமனாக வந்து வழக்குரைப்பார்? ஆழ்ந்த அக்கறையோடு வேண்டிக் கேட்டுக் கொள்வோம்! நடக்காமலா போய்விடும்!!