You are here
Home > சேய்த்தொண்டர் > சேய்த்தொண்டர் புராணம் பகுதி 25 முருகம்மையார் வரலாறு

சேய்த்தொண்டர் புராணம் பகுதி 25 முருகம்மையார் வரலாறு

செந்தமிழ்மாருதன்

              “நலந்திகழும் முருகம்மை அடியார்க்கும் அடியேன்”

       சிவனடியார் அறுபத்துமூன்று நாயன்மார்களில் காரைக்கால் அம்மையாருக்கு ஒரு தனியிடம் உண்டு. ஏனைய நாயன்மார்கள் அனைவரும் நின்று கைகூப்ப, காரைக்கால் அம்மையார் மட்டும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் பெருமை பெற்றவர். அது போல, சேய்த்தொண்டர்கள் அனைவரிலும் முருகம்மையாருக்கு ஒரு தனியிடம் உண்டு.

       இவரைப் பற்றி பல பெரியோர்கள் பாடிப் பரவி இருக்கிறவர்கள். நக்கீரர் உரைத்த திருமுருகாற்றுப்படைக்குச் சாற்றுக்கவிகள் பத்தில் ஒரு பாடல் இந்த முருகம்மையாரைப் பாடிப் போற்றுவது. பல புலவர்கள் இந்த அம்மையாரைப் பாடி இருக்கிறார்கள்; பாம்பன் சுவாமிகள் இந்த அம்மையாரைப் பாடி இருக்கிறார்.

       முருகா என்னும் பெயரை நக்கீரர் பெரும்பெயர் என்கிறார். ‘அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக’ என்பது அவர் வாக்கு பரம்பொருளான முருகனுக்குப் பல கோடிப் பெயர்களையும் கூறலாம். அவற்றின் சாரங்களை எல்லாம் பிழிந்து கொடுப்பன மூன்று என்கிறார் அருணகிரிநாதர். அவை, முருகன், குமரன், குகன் என்பன என்கிறார்.

       “முருகன் குமரன் குகன் என்று மொழிந்து

        உருகும் செயல்தந்து உணர்வென்று அருள்வாய்”

என்பது கந்தரநுபூதி வாக்கு.

       இந்த மூன்றிலும் முதன்மையானது முருகன் என்பதாகும் என்கிறார் அருணகிரிநாதர். அதனால் தான் முருகன் என்பதை முதலில் வைத்துக் கூறினார்.

       முருகு என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஆறு பொருள் உண்டு. முருகு, கள், இளமை, நாற்றம், முருகவேள், விழா, வனப்பாம் என்று கூறுவது பிங்கல நிகண்டு. இந்த ஆறும் இறைவனுக்குரிய ஆறு குணங்களைக் குறிக்கும்.

 கள் – தேன் – இறைவனது வரம்பிலா இன்பத்தைக் குறிக்கும்.

 இளமை – ஆற்றல் – இறைவனது வரம்பிலா ஆற்றலைக் குறிக்கும்.

 நாற்றம் – மணம் – பரந்து விரிவது – இறைவனது முற்றறிவைக் குறிக்கும்.

 முருகவேள் – தெய்வம் – பாசமாகிய மாயையில் தோயாமையைக் குறிக்கும்.

 விழா – சுதந்திரம் – இறைவனது தற்சுதந்திரத்தைக் குறிக்கும்.

 வனப்பு – எளிவந்து அருளல் – இறைவனது பேரருளுடைமையைக் குறிக்கும்.

       இந்த ஆறுகுணங்களே முருகனுக்கு ஆறு முகங்களாக வந்தன என்று கந்தபுராணம் கூறுகிறது:

        ‘ஏவர்தம் பாலுமின்றி எல்லைதீர் அமலற் குள்ள

        மூவிரு குணனும் சேய்க்கு முகங்களா வந்ததென்ன‘

      ஒருவர்க்குப் பல்கலை ஞானம் இருக்குமானால் அவரைப் பன்முக அறிஞர் என்கிறோம். அது போல அறுகுணங்களை அறுமுகமாக்கினர் ஆன்றோர்; அவன் தான் முருகன்.

      எனவே இத்தனை பொருள்களையும் அடக்கி இறைபரம்பொருளையே முழுக்கக் காட்டுவதனால் நக்கீரர் முருகன் என்பதைப் பெரும்பெயர் என்றார். பெரும்பெயர் எனினும் மகாவாக்கியம் எனினும் ஒக்கும் என்பார் சிவஞான முனிவர். மகாவாக்கியம் என்பது மகாமந்திரம் என்று பொருள் தரும். ஆக முருகா என்று அழைப்பது மகாமந்திரத்தை ஓதுவதாகும்.

      இந்த முருக மந்திரத்தை ஓதியே முருகப்பெருமானின் அருளை அடைந்த அம்மையாரின் உயர்ந்த வரலாறு தான் முருகம்மையாரின் வரலாறு. இதைச் சிந்திப்பதற்கும், வந்திப்பதற்கும் கிடைத்த வாய்ப்பு இவ்வரலாற்றைப் படிப்பவர்கள் அனைவரும் செய்த பிறவிப் பேறு என்று எண்ணுக!

      பொதுவாக கதை சொல்லத் தொடங்கும் போது ‘ஒரு ஊரில்’ என்று தொடங்குவார்கள். காரணம் மிகப் பழமையான வரலாற்றிற்கு ஊர், பேர் எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் இவ்வரலாறு மிகப் பழமையானது என்றும் கூற முடியாது; அண்மையது என்றும் கூற இயலாது. ஆனால் நக்கீரர் காலத்தது என்று மட்டும் கூற சான்றுள்ளது. எனவே முருகம்மையார் எந்த ஊர் என்று தெரியவில்லையானாலும், சோழநாடு; அதில் காவிரி ஆறு பாயும் ஊர் என்று மட்டும் தேனூரார் வரலாற்றைத் தொடங்குகிறார்.

       இதற்கு மாறாக குகஸ்ரீ ரசபதி அவர்கள் எழுதிய வரலாற்றில் முருகம்மையார் பிறந்த ஊர் திருப்பரங்குன்றம் என்றும், அப்பாவின் பெயர் சோமசுந்தரம் செட்டியார் என்றும் அம்மா பெயர் சாலி (அருந்ததி) என்றும் வருகிறது. இதன் உண்மை ஆய்வுக்குரியது.

       ஆயின் முருகம்மையார் பிறந்தது செட்டி குலத்தில் என்று ஒருவாறு ஒப்புக் கொள்வது போல தேனூரார் பின்வரும் வரலாற்றில் முருகம்மையை மணந்தவர் பெயர் தனஞ்செயர் என்று குறிப்பிட்டுள்ளார். இப்பெயர் பொதுவாக செட்டியார்களிடையே தான் அதிகம். இவர் சோழநாட்டினர் என்று குகஸ்ரீ ரசபதி குறிப்பிடுகிறார்.

       இவை ஒரு புறம் இருக்க; தேனூராரும், குகஸ்ரீ ரசபதி அவர்களும் முருகம்மையாரின் தந்தையார் மிகப் பெரும் செல்வந்தர் என்பதிலும், அவர் சிறந்த முருகபத்தர் என்பதிலும் கருத்தொருமிக்கக் கூறுகிறார்கள்.

       செல்வவளம் பல இருந்தும் குழந்தைப் பேறு இல்லை. மிக வருந்தி இந்தச் செல்வச் செட்டியார் பல விரதங்கள் இருந்து பல கோயில்களுக்குச் சென்று இறைவனிடம் குறையிரந்தார்.

       ஒரு நாள் இந்தச் செட்டியார் வீட்டில் திடீரென ஒரு பெரியவர் வந்து நின்றார். பழங்காலங்களில் எல்லாம் வீட்டிற்கு வரும் விருந்தினர் யார் என்று தெரியாமல் இருப்பினும் களைப்பாற்றி விருந்துபசாரம் செய்த பின் தான் வந்தவர் யார் என விசாரிப்பார்கள். அப்படி இரு பாலும் நல்ல நிலைமை அக்காலத்தில் இருந்தது.

       பெரியார் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தாம் ஒரு சோதிடர் என்றார். அப்புறம் என்ன கேட்கவா வேண்டும்? வீட்டம்மா பரபரப்படைந்து செட்டியாரைத் தூண்ட செட்டியார் தமக்குக் குழந்தைப் பேறு வாய்க்குமா என ஆரூடம் பார்த்துச் சொல்லும்படி பணிவுடன் பெரியவரை வேண்டினார்.

       அவர் ஆரூடப்படி உங்களுக்கு ஞானமே வடிவமான ஓர் அழகிய பெண் குழந்தை பிறக்கும் என்று சொன்னார். அதற்கு நீங்கள் செய்ய வேண்டுவது ஒன்றுண்டு என்றார்.

       சொல்லுங்கள், சொல்லுங்கள் என்று இணையர்கள் பரபரத்தார்கள். அவர் சொன்னார்: ஒரு கிருத்திகை (நட்சத்திரம்) நாண்மீன், அறுமை பிறை (சஷ்டி), செவ்வாய்க்கிழமை கூடிய நன்னாளில் முருகன் திருக்கோயில் சென்று முருகனை மனமுருக வணங்கி அன்று கோயிலில் உள்ள அடியவர்கட்கெல்லாம் பேதம் பாராமல் உணவு அளித்து அவர் தம் பசியாற்றுங்கள். அந்நாள் தொடங்கி 15 மாதங்களுக்குள் உங்களுக்கு நான் கூறியபடி ஒரு தெய்வ மகவு பிறக்கும்.

       இப்படிச் சொன்னவுடன் மிகப் பணிவுடன் செட்டியாரும் அவரது மனைவியும் பெரியவரின் காலில் விழுந்து பணிந்தனர்; பணிந்து எழுந்த போது – என்ன அதிசயம்! அந்தப் பெரியவர் மறைந்து விட்டார்! முருகப்பெருமானே வந்து அருள் புரிந்தான் என்று ஆனந்தக் கண்ணீர் பொழிந்தனர்.

       எல்லாம் பெரியவர் சொன்னபடியே நடந்து செட்டியாரின் மனைவி கருவிருந்து கவினார் பெண்மகவு ஒன்றைக் களிதுளும்பப் பெற்றார்.

       குழந்தையின் காப்புப் பருவத்தில் குழந்தையைக் காக்க அதாவது காற்று, கருப்பு போன்ற தீய சத்திகளிடமிருந்து காக்க காப்புக் கடவுளான திருமாலின் படைகளான கதாயுதம், சக்கரம், சங்கு, வில், வாள் ஆகியவற்றின் சிறிய உருக்களைச் செய்து அரைஞாணில் கட்டுவர்.

       இதற்கு அக்காலத்தில் ஐம்படைத்தாலி என்று பெயர். ஆனால் செட்டியார் தான் பெற்ற பெண்குழந்தை முருகனருளால் பெற்றது என்பதால் திருமாலின் படைகளை விட்டு, முருகனது சேவல், மயில், வேல் ஆகிய உருக்கள் செய்து அரைஞாணில் சேர்த்துக் காப்புச் செய்தார்.

       குழந்தையை முருகன் சந்நிதியில் கிடத்தி செட்டியார் பெயர் வைத்தாராம்; பெயர் முருகம்மை! அன்று அடியார்கள் ஆர்க்க பெரிய அளவில் அன்னதானம் செய்தாராம்!

       குழந்தை வளர்ந்த சூழல் எல்லாம் முருகனருள் சூழல். எனவே முருகம்மை வாய்க்கு வாய் முருகா, முருகா என்று பத்தியுணர்வுடன் கூறிக் கொண்டே இருந்தாள்! அதிலே முருகம்மையின் நாக்கு ஒரு சுவை கண்டு விட்டது.

        பொதுவாக நாக்கின் சுவை உணவுப் பண்டங்களில் தான் இருக்கும். ஆனால் வள்ளலாரின் நாக்கு அடியார்களின் பெருமையைப் பேசுவதிலே சுவை கண்டு அதைப் பேச ஊற்றுணர்வோடு ஊர்ந்ததாம்.

    எவ்வுயிரும் பொதுவெனக்கண் டிரங்கியுப கரிக்கின்றார் யாவர் அந்தச்

    செவ்வியர்தம் செயலனைத்தும் திருவருளின் செயலெனவே தெரிந்தேன் இங்கே

    கவ்வையிலாத் திருநெறியத் திருவாளர் தமக்கேவல் களிப்பாற் செய்ய

    ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடவென் வாய் மிகவும் ஊர்வதாலோ.

       மிக உயர்ந்த நிலையில் இப்படித் தான் நாக்கு உணவுப் பண்டங்களை விட்டு அறிவுப்பண்டங்களைச் சுவைக்க ஆரம்பித்து விடும் போலிருக்கிறது! அதனால் தான் திருமூலர் சொன்னார், நமச்சிவாயப் பழத்தைத் – “தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.”

       இத்தனை உயர்ந்த நிலை பெற்ற ஓர் அடியார் தான் முருகம்மையாக வந்து அவதரித்தது போலும்! எனவே அக்குழந்தையின் நாக்கிற்கு முருக நாமம் இனித்தது.

      செட்டியார் இதைப் பெரிதாக எண்ணி அலட்டிக் கொள்ளவில்லை. அருளால் வந்த குழந்தை! முருகா என்று முழங்கிக் கொண்டிருப்பது தவறில்லை என்று நினைத்தார். குழந்தையைத் தடுக்கவில்லை!

      ஆனால் குழந்தையோ பேச்சுக்குப் பேச்சு முருகா என்றே கூறியது. வளர வளர இன்னும் அதிகமாயிற்று.

      அந்தப் பாத்திரத்தை எடு முருகா! அந்தப் பாலைக் காய்ச்சிக் கொடு முருகா! வெளியில் யார் கதவைத் தட்டுகிறார்கள் என்று பார் முருகா! அம்மா பசிக்குது! சாப்பாடு போடு முருகா! இந்தச் சேலை நல்லா இருக்குது முருகா! அப்படி ஒன்றும் நான் சொல்லவில்லை முருகா! இப்படி எந்த ஒரு வாக்கியத்தையும் முருகா என்ற சொல் இல்லாமல் முடிப்பதில்லை முருகம்மை!

       உற்றார் உறவினர் இது என்ன இந்தப் பெயர் இப்படி பேச்சுக்குப் பேச்சு முருகா என்கிறதே! பத்தி இருக்கலாம் தான், அதற்காக இப்படியா? இது எதில் போய் முடியுமோ என்று அரசல் புரசலாகப் பேசிக் கொண்டனர். முருகம்மையோ ஏன், முருக நாமத்தைச் சொன்னால் என்ன தவறு? என்று திருப்பிக் கேட்பார்.

      சொன்னால் பிறப்பொழியும் சூராய கூற்றகலும்

      எந்நாளும் பேரின்பம் எய்துநெஞ்சே – முன்னாளில்

      பொருசூரன் வல்லுடம்பு போழ்ந்த அயிலேந்தும்

      முருகவேள் என்னும் மொழி.

என்று ஒரு பழம்பாடலைப் பதிலாகக் கூறுவார். அப்போதெல்லாம் செட்டியார் பூரித்துப் போனார். ஆனால் இதுவே சில சங்கடங்களையும் கொடுத்துவிடும் அவ்வப்போது. அதாவது செட்டியாரைப் பார்க்க சில வணிகர்கள் வருவர்; அவர்களில் சிலர் பெயர் முருகையன், முருகப்பன், முருகேசன், முருகானந்தம் என்றெல்லாம் இருந்துவிட்டால் சங்கடம் தான்!

      வீட்டுக்கு ஒரே பெண்ணான முருகம்மை அவர்களை, உட்காருங்க, முருகா! பானகம் குடிங்க முருகா! என்றெல்லாம் உபசரிக்கும் போது அவர்களெல்லாம் நெளிவார்கள்; அல்லது முறைப்பார்கள். ‘என்ன, உங்க பொண்ணு பேர் சொல்லிக் கூப்பிடுது’ என்று அவர்கள் கேட்கும் போது செட்டியார், பாவம், சங்கடப்பட்டுப் போவார்!

      சிலர், “இது மோசமில்லை, டேய் என்று கூப்பிடாமல் இருந்ததே பெரிது! ஒரு சோதிடர் சொன்னார், 2000 ஆண்டுகட்குப் பின்னர் மனைவி கணவனை ‘அன்பாக’ டேய் என்று அழைப்பாள் என்றார். அந்தப் புண்ணியம் நமக்கு இன்னும் வாய்க்காததே பெரிது” என்பர். என்ன சொன்னாலும் சரி! முருகம்மையின் நாக்கு என்னவோ முருகா, முருகா என்றே மொழிந்து கொண்டிருந்தது.

      முருகம்மைக்கு மணப்பருவம் வந்தது. செட்டியாருக்குக் கவலையும் வந்தது. பெண் பார்க்க வருகிற பிள்ளை வீட்டாரில் யாராவது ஒருவர் முருகப்பன், முருகேசன் என்பன போன்ற பெயர்களோடு வந்துவிடக் கூடாது என்பதே அவர் கவலை. பெரிய பெரிய இடங்களிலிருந்து வரன் வந்த போதெல்லாம் உறவினர்கள் மணம் கூடாதபடி தங்கள் பங்களிப்பைச் செய்து பார்த்துக் கொண்டார்கள்.

       செட்டியாரின் கவலை நாளுக்கு நாள் விலைவாசி போல ஏறிக் கொண்டே இருந்தது. இறுதியில் அவரது உறவினர் வழியில் ஒரு வரனைத் தேர்ந்தெடுத்தார். வரனின் பெயர் தனஞ்செயன். வரனை வீட்டுக்கு அழைத்து வந்து உறவினர்கள் கண்ணில் காட்டாமல் ஒரு மாதத்திற்கு மேல் விருந்தூட்டியும் விவரமூட்டியும் திருமணத்தை ஏற்பாடு செய்தார்.

       நானும் முருக பத்தன் தான், எனவே முருகம்மை முருகா என்று அழைப்பதில் எனக்கு ஒரு மனவேறுபாடும் கிடையாது என்று தனஞ்செயன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான். உறவினர்கள் எல்லாம் வியந்து திகைக்க திருமணம் தடபுடலாக நடந்தேறியது.

       உறவினர்களின் காதுகள் எல்லாம் சுவர்களைத் தாண்டி செட்டியார் வீட்டையே மொய்த்துக் கொண்டிருந்தன. அட! என்ன ஒரு பிரச்சினை இல்லாமல் முருகம்மை இல்லறம் நடத்திக் கொண்டிருக்கிறாள் என்று கவலை தோய்ந்த முகத்தினராய் செட்டியாரை அடிக்கடி விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கறைமனத்தராய் மருமகன் வீட்டிலிருந்து ஏதேனும் சேதி உண்டா என்று நச்சரித்தனர். செட்டியாரோ அவர்கள் அக்கறை மனத்தராய் விசாரிக்கிறார்கள் என்று அப்பாவியாய்ப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

        செட்டியார் பொறுப்புகளை எல்லாம் மருமகனிடம் ஒப்படைத்து விட்டு மனைவியோடு வடநாட்டு யாத்திரைக்குச் சென்றுவிட்டார். சிறிது நாளில் தனஞ்செயன் திரைகடலோடித் திரவியம் தேடப் புறப்பட்டான். அக்கம் பக்கத்தவர்களிடம் முருகம்மையைப் பார்த்துக் கொள்ளும் படிக் கூறிவிட்டு கடலோடினான்.

        இப்போது முருகம்மை வீட்டில் முழுக்க முழுக்க உறவினர்களின் கொட்டம் தான். உறவினர்களில் பலருக்கு முருக பக்தி ‘கொழுந்து விட்டு’ எரிய ஆரம்பித்துவிட்டது. முருகன் பெயர் சொல்லி முருகம்மையிடம் பொருட்களை உறவினர்கள் வேட்டையாடி ஆட்டம் போட்டனர்.

        திடீரென தனஞ்செயன் அயல் நாட்டிலிருந்து திரும்பினான். முருகம்மைக்கு ஒரே மகிழ்ச்சி. ஆனால் உறவினர்களுக்கோ அதிர்ச்சி. தனஞ்செயன் கணக்குகளைப் பார்க்கத் தொடங்கி தாங்கள் முருகம்மையின் முருக பக்தியின் பெயரால் சுரண்டியது வெளி வந்து விடுமோ என்று அச்சம் தோன்றவே இதற்கு ஒரு வழி கண்டு பிடித்தார்கள்.

        தனஞ்செயனின் காதைக் கடித்தார்கள். ‘ஐயோ! அதை ஏன் கேட்கறீங்க! நீங்கள் இல்லாத போது உங்க ஆச்சி அடிக்கொரு தரம் முருகா என்பதும் மூன்றாவது வீட்டில் இருக்கிறானே முருகன், அவன் உங்க வீட்டிலேயே வளைய வளைய வருவதும் ஒரே கும்மாளம் தான் போங்க! நாங்க சாடை மாடையா சொல்லியும் கண்டித்தும் கூட கட்டுப்படுத்த முடியல.’

       கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் இல்லையா? தனஞ்செயன் மனம் திரிந்தது. முருகம்மையோடு இல்லறம் நடத்தியவன் தான்! மனைவி அடிக்கொரு தரம் முருகா என்று அழைப்பது அவனுக்குப் புதிதல்ல தான்! இருந்தாலும் சில காலம் இடைவேளை அமைந்த பிறகு வந்து பார்த்த பார்வையிலும், பக்கத்து வீட்டு முருகன் என்ற இளைஞனைப் பார்த்த பார்வையிலும் தனஞ்செயனுக்கு ஏதோ புதிய பொல்லாங்காகத் தோன்றியது.

       முருகம்மையை அழைத்தான். ‘இதோ பார்! இனி வாய்க்கு வாய் முருகா என்று பிதற்றுவதை நிறுத்து!’ என்று மிரட்டினான்.

        ‘ஏன், முருகா!’

        ‘ஏய், சொல்லாதே என்றால் சொல்லாதே!’

        ‘சரி முருகா! நீங்கள் சொல்ல வேண்டாமென்றால் சொல்லவில்லை முருகா!’

        ‘திருப்பித் திருப்பி அதையே சொல்கிறாயே? உன்னை வெட்டிப் புதைக்கிறேன், பார்!‘

        ஆத்திரப்பேய் உச்சந்தலையில் ஏறி ஆட்ட தனஞ்செயன் அருகிலிருந்த வாளை எடுத்து முருகம்மையின் தளிர் போன்ற கையை வெட்டிவிட்டான். அவன் முன்னம் விருப்புண்டு அணைத்த கை அறுப்புண்டு அடியில் வீழ்ந்தது. அம்மையார் அழவில்லை! அவருடைய நாக்கிற்கு வேறென்ன தெரியும்? முருகா, முருகா, முருகா என்று மும்முறை அது கூக்குரலிட்டது.

        முருகப்பெருமான், நானென்று மார்தட்டி ஓடோடி வந்து மயிலின் மீது தேவியர் இருவர் மேவிடக் காட்சி தந்து அருள் புரிந்தான். ஆ! என்ன ஆச்சரியம்! வெட்டுண்ட கை மீண்டும் ஒட்டுண்டது. தனஞ்செயன் திகைத்து நின்றான். அம்மையாரோ முருகப்பெருமானையே கூர்ந்து கண்ணாரக் கண்டு கொண்டிருந்தார். முருகன் திருக்கரத்தில் ஒரு நூல் இருந்தது. அம்மையாரின் கண்கள் அந்நூலை மொய்த்தது கண்ட முருகன், ‘அது நமக்கு விருப்புற்ற நக்கீரன் பாடிய திருமுருகாற்றுப்படை நூல்’ என்று அருளினானாம்.

       ‘சரி! வருக! எம்மோடு இனிதிருந்து வள்ளி – தெய்வானைக்குப் பணிபுரிக!’ என்று அழைத்தானாம்.

       தமிழகத்துப் பெண்மணியின் தனிப்பெரும் பண்பு இங்கே தான் தலைதூக்கி நின்றது. அம்மையார் சொன்னாராம்: “முருகா! உன் அருட்பார்வையில் உன் அருகில் இருப்பதை விட வேறென்ன பேறு இருக்க முடியும்? ஆனால் நான் மட்டும் தனியே வர மனம் மறுக்கிறது. என்னுடைய கணவரோடு அருளைத் துய்க்க அனுமதிக்க வேண்டும்.” என்ன உயர்ந்த பண்பு!

      இந்தப் பண்புகளை எல்லாம் இனி எங்கே காணப் போகிறோம்! பிடித்த நடிகனை, கணவன் எதிரிலேயே பொது இடத்தில் கட்டிப் பிடித்து தொலைக்காட்சியில் உலகம் முழுதும் அது காட்டப் பெற, அதை வீட்டில் பெரியவர்கள் கண்டித்தால் ஆணாதிக்கம் ஒழிக என்று விவாகரத்து வாங்கிக் கொள்கிற ‘புதுமைப்’ பெண்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? முன்பெல்லாம் விவாகம் செய்வதற்கு மட்டும் புரோகிதப் பிராம்மணர்கள் இருந்தனர்; இப்போது விவாகரத்து செய்து வைப்பதற்கும் புரோகிதப் பிராம்மணர்கள் ‘வேத மந்திரத்தோடு’ நீதிமன்றங்களில் திரிவதாகக் கேள்விப்படுகிறோம். இதைக் காலத்தின் கோலம் என்பதா? ஞாலத்தின் சாலம் என்பதா?

         கையை வெட்டிய கணவனின் உறவை அங்கேயே பைய வெட்டிவிட்டு ஆகாயத்தில் ஏறி ஆண்டவனின் அருளை அடையாமல் அருளொடு புணர்ந்த அன்பின் அகற்சியோடு அவனையும் இணைத்தே அருளைத் துய்ப்பேன் என்று கூறும் மனம் எவ்வளவு உயர்ந்தது!

         முருகப் பெருமான் மனம் நெகிழ்ந்து முருகம்மையும், தனஞ்செயனும் ஏறிவர விமானம் ஒன்றினை அனுப்பினானாம். அதோ! அவ்விமானத்தில் ஏறி இருவரும் வான வெளியில் பறந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்!

         இதை மனக்கண்ணால் கண்டு பாம்பன் சுவாமிகள், ’முருகா! முருகம்மைக்கு அருளியது போல் எனக்கும் அருள் புரிவாய்! நானும் இடைவிடாது முருகா, முருகா என்று ஓதிக் கொண்டே இருக்கிறேன். என்னை மறந்து விடாதே!’ என்று உருகி உருகி விண்ணப்பம் வைக்கிறார். பாடல் இதோ!

        முருகா அயில் முருகா என மொழியும் ஒரு மாதின்

        ஒருகாதலன் அவள் கையினை உதிரம் பெருக அரிகால்

        அருளால் அது வளரும்படி அயர்தண் அளி ஆளா

        மருமாலைகொள் மார்பா எனை மறவேல் எனை மறவேல்!

          பாம்பன் சுவாமிகளைப் போலவே இன்னொரு முருகன் அடியாரும் அருட்கண்ணால் முருகம்மைக்கு அறுமுகவன் அருளிய காட்சியைப் பார்த்திருக்கிறார். அவர்தான் முருகப்பெருமான் முருகம்மைக்கு அருளிய போது கையில் ‘திருமுருகாற்றுப்படை’ என்ற நூலோடு காட்சி அளித்தான் என்ற செய்தியைக் கூறுகிறார். அந்தப் பாடல் வருமாறு:

        ஒருமுருகா என்றென் உள்ளங்குளிர உவந்துடனே

        வருமுருகா என்று வாய்வெருவா நிற்பக் கையிங்ஙனே

        தருமுருகா என்று தான்புலம்பா நிற்பத் தையல் முன்னே

        திருமுரு காற்றுப் படையுடனே வரும் சேவகனே!

          முருகம்மையின் வரலாறு முடிந்தது முருகா! ஆனால் அவரது புகழுக்கு முடிவேது முருகா!

                                                      தொடரும் . . .

Top