You are here
Home > செய்திகள் > செம்மலீர் ! கேளீர்! செந்தமிழ் நயத்தை! பெரியபுராணம் – திருக்குறிப்புத் தொண்டர்

செம்மலீர் ! கேளீர்! செந்தமிழ் நயத்தை! பெரியபுராணம் – திருக்குறிப்புத் தொண்டர்

     இயற்கை எவ்வளவு நாள் பொறுமையோடு இருக்கும்? குப்பையைக் கொட்டிக் கொண்டே இருந்தால் குவலயம் பொறுக்குமா? போதும் நிறுத்து என்று மனித இனத்தை நெட்டித் தள்ளி முட்டி தட்டி வீட்டில் முடக்கக் கோரேனா என்று இயற்கை அனுப்பி வைத்தது தான் கொரோனா!

     இன்று இயற்கை நிம்மதியாக சுவாசிக்கிறது. கங்கை, யமுனை போன்ற பெருநதிகள் நிர்மலமாக ஓடுகின்றன. காற்றில் மாசு குறைந்து மூச்சுத் திணறல் நின்றிருக்கிறது இதெல்லாம் செய்திகள்!

     இப்படி இயற்கை தன்னைத் தானே சரி செய்து கொள்ளுமா? அதை சடம் என்கிறார்களே! ஆனால் மேற்கண்ட செய்திகள் மூலம் இயற்கைக்கும் இயக்கத்தைச் சரி செய்து கொள்ளும் அறிவு இருக்கிறது என்று கூறலாம். ஆமாம்! அப்படித் தான் என்று தமிழ் இலக்கியம் கூறுகிறது. இதை சேக்கிழார் திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றில் உறுதிப்படுத்துகிறார்.

     நிலவுலகின் உயரம் மலைகள் காட்டுகின்றன; அங்கிருந்து பயணமானால் கீழே இறங்க காடு; அதையும் தாண்டினால் வயலும் ஊரும்; அதையும் தாண்டி மலையிலிருந்து புறப்படும் ஆற்றோடு வழி நடந்தால் இறுதியில் கடல். நிலவுலகை எந்த நாட்டிலும் கண்டத்திலும் இந்த நான்கினுள் அடக்கி விடலாம். குறிஞ்சி – மலை; முல்லை – காடு; மருதம் – வயல், ஊர்; நெய்தல் – கடல். இயற்கையின் மொத்த வடிவங்கள் இந்த நான்குதான்.

     பழங்காலத்தில் தமிழர் இயற்கையோடு இயைந்து இயற்கைக்கு ஒரு தொந்தரவும் கொடுக்காமல் வாழ்ந்தனர். அதனால் இயற்கை நிம்மதியில் ஓங்கி உவந்தது. நிம்மதியில் இருக்கும் போது இசை தானாக வரும். அப்படி அக்கால இயற்கை தானே இசைத்து மகிழ்ந்தது என்கிறார் சேக்கிழார். பாடலை கேளுங்கள்!

குழல்செய் வண்டினங் குறிஞ்சியாழ் முரல்வன குறிஞ்சி
முழவு கார்கொள முல்லைகள் முகைப்பன முல்லை
மழலை மென்கிளி மருதமர் சேக்கைய மருதம்
நிழல்செய் கைதைசூழ் நெய்தலங் கழியன நெய்தல்.

     இப்பாட்டின் பதவுரை எல்லாம் வேண்டாம்! பொழிப்பாக இதில் கூறப்படுவது என்ன?

     ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைச் சிகரங்களில் சூழ்ந்த மரச் சூழலில் எப்போதும் “ரீம்” என்ற ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும். அது அங்கே மலர்களைச் சுற்றும் வண்டுகள் எழுப்பும் ஒலி. இந்த வண்டுகள் குறிஞ்சிப் பண்ணிற்குச் சுருதி கூட்டுகின்றனவாம். அடுத்து அமைந்துள்ள காட்டுப் பகுதியில் மேகங்கள் இடித்து வண்டுகள் குறிஞ்சியில் எழுப்பும் பண்ணிற்கான சுருதிக்கேற்ப மத்தளம் கொட்டுகின்றனவாம்.

     ஆ! நல்ல இசை கேட்கிறது என்று அதற்கேற்ப காட்டைத் தொட்டு அமையும் வயல்வெளிச் சோலைகளாகிய மருதப்பகுதிக் கிளிகள் தமது மழலைப் பாட்டால் பாடி பண்ணிசை பொழிகிறதாம். இசைக் கச்சேரி என்றால் சபை வேண்டுமே! அதற்கு நானாச்சு என்று நெய்தல் – தென்னை, பனை ஆகிய மரங்களால் பந்தல் போட்டு உள்ளே நெய்தல் பூக்கள் அமர்ந்து கிளி பாடிய இசையை தலையசைத்து கேட்டனவாம். அவ்வப்போது கடலின் அலைகள் கரையில் வந்து கேட்ட இசைக்குக் கரகோஷம் செய்துவிட்டுப் போகிறதாம்!

     ஆக, குறிஞ்சி சுருதி கூட்டுகிறது, முல்லை மத்தளம் கொட்டுகிறது, மருதக்கிளி பாடுகிறது, நெய்தல் பூ ரசித்துத் தலையாட்ட, கடல் அலை வந்து அவ்வப்போது சபாஷ்! என்று கைதட்டிவிட்டுப் போகிறது!

     அடடா! அமைதியான அந்தப் பழந்தமிழ் இயற்கை எப்படி தனக்குத் தானே இசைத்து மகிழ்ந்து கொள்கிறது!

     இப்படி சேக்கிழாரைத் தவிர வேறு எந்தப் புலவனும் இயற்கையோடு இயைந்து இனிய காட்சியைக் காட்டியதாகத் தெரியவில்லை.

இவண்
மு.பெ.சத்தியவேல் முருகன்.

Top