You are here
Home > கட்டுரைகள் > தாலியும் தமிழரும்

தாலியும் தமிழரும்

முருகா

ஆசிரியர் மேசையிலிருந்து. . .

தாலியும் தமிழரும்

   என் கைபேசி பாடி அழைத்தது; அன்று 12-3-2015. எடுத்துப் பேசியதில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியிலிருந்து பழகிய குரல் என்னை அழைத்தது. அன்று மாலை ‘மக்கள் மேடை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூற வேண்டும் என்றார் அவர். எது பற்றி என்று கேட்ட போது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி வளாகத்தில் அன்று காலை 3.00 மணிக்கு யாரோ சில விஷமிகள் குண்டு எறிந்து அது வெடித்தது என்றும், நல்ல வேளையாக எந்த நபரும் அதனால் பாதிக்கப்படவில்லை என்றும், அந்த வளாகத்தின் சில பகுதிகள் சேதாரமடைந்தன என்றும் சொன்னார்.

   எதனால் இந்தக் குண்டு வெடிப்பு என்று கேட்ட போது இரு நாட்களுக்கு முன் ‘உரக்கப் பேசுவோம்’ என்ற நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தது என்றும், அந் நிகழ்ச்சியின் தலைப்பு ‘தாலி மகளிர்க்கு அவசியமா’ என்றும், மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும், அவசியம் என்று 32 மகளிரும், தேவையே இல்லை என்று 32 மகளிரும் கலந்து கொண்டு விவாதித்தனர் என்றும் சொன்னார். உண்மையிலேயே ‘சிறப்பு’ நிகழ்ச்சி தான் இது என்று சிரித்துக் கொண்டே நான் சொல்லி, குண்டெறிதல் வரை கூட்டிச் சென்றது சிறப்பு தானே என்றேன்.

   உண்மையிலேயே நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவே இல்லை என்றார். பிறகு ஏன் இந்தக் குண்டெறிதல் என்று கேட்டேன். நிகழ்ச்சி ஒளி பரப்பப்படப் போகிறது என்று அதிலிருந்து சில காட்சிகளை மட்டும் முன்னாளிலிருந்து முன்னோட்டம் தொலைக்காட்சியில் தொடர்ந்து காட்டப்பட்டு வந்தது என்றும், அதில் தாலி தேவை இல்லை என்ற கருத்துடைய ஒரு பெண் நிகழ்ச்சி அரங்கிலேயே தாலியைக் கழற்றி எறிகிற காட்சி காட்டப்பட்டது என்றும் இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சிலர் நிகழ்ச்சி ஒளி பரப்பப்படும் நாள் காலை கூட்டமாக வந்து தொலைக்காட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அங்கு பல லட்சக் கணக்கான மதிப்புடைய ஒளிப்பதிவுக் கருவிகளைப் போட்டு உடைத்து எறிந்துவிட்டு, அலுவலகத்தில் பணி புரியும் பெண் நிருபர்கள், பணியாளர்களை வாய்க்கு வந்தபடி வசைமாரி பெய்து கலகத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஏதோ ஒரு இந்து அமைப்பினர் என்று கூறிக் கொண்டனர். அவர்களின் உணர்விற்கு மதிப்பளித்து அந்நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டது தொலைக்காட்சி நிர்வாகம். எனவே அந்நிகழ்ச்சி ஒளி பரப்பப்படவே இல்லை.

    ‘இருந்தும் ஏன் குண்டெறிதல்?’ என்று கேட்டேன். குண்டெறிதல் அன்று நடக்கவில்லை என்று இரு நாட்கள் கழித்து 12-3-2015 ஆகிய இன்று காலையில் தான் நடந்தது. இது பற்றி தான் இன்று ‘மக்கள் மேடை’ நிகழ்ச்சியில் அலச இருக்கிறோம், தாங்கள் வர இயலுமா என்று வேண்டுகோள் விடுத்தனர். சரி, என்று ஒப்புக்கொண்டு என் இல்லத்தில் தொலைக்காட்சியைத் திருப்பினால் இது பற்றிய செய்தியே எல்லா சேனல்களிலும் ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தன. ஏன், நாடாளுமன்றத்திலேயே கண்டனக் குரல்கள் ஒலித்தன. ‘ஜெயம்’ என்ற பெயருடைய ஒரு இளைஞர் காவி உடையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் இது தொடர்பாக சரணடைந்து, தான் ‘இந்து இளைஞர் சேனை’யின் தலைவர் என்றும், தான் தான் குண்டெறியச் செய்தவன் என்றும் ‘மிக்க மகிழ்ச்சி’யுடன் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.

   அன்று ‘மக்கள் மேடை’ நிகழ்ச்சிக்கு ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்குச் சென்றிருந்தேன். எனக்கு இடம், வலமாக திரு.சித்தண்ணன் என்கிற ஓய்வு பெற்ற காவல் அதிகாரியும், மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்களில் ஒருவரான திரு.மகேந்திரன் அவர்களும் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சியில் கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து சில அன்பர்களும் தொலையமர் காட்சியில் கலந்து கருத்துக்களைப் பரிமாறினர். நெறியாளராக திரு. G.S.வெங்கடபிரகாஷ் கேள்விகளை முன்வைத்துக் கொண்டிருந்தார்.

     நிகழ்ச்சியில் என்னிடம் வைத்த கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு வந்தேன். ஆனால் அதன்பின் எந்தத் தொலைக்காட்சியைத் திருப்பினாலும் இது பற்றியே காரசாரமான விவாதங்களே நடந்து கொண்டிருந்தன. செய்தித்தாள்களிலும் இதே பரபரப்பு – விளைவு, தாறுமாறான கருத்துக்கள் தாலியைப் பற்றி வெளிவந்தன. தமிழ்க் கலாச்சாரத்தின் அடிநாதமான இது பற்றி இனியும் மௌனம் காத்தல் அறநெறியாகாது என்று உணர்ந்ததாலும், இது பற்றி தாங்கள் தெளிவாக்குங்கள் என்று ‘தெய்வ முரசு’ நேயர்கள் வற்புறுத்தியதாலும் இதை எழுத நேர்ந்தது.

  மேலே கூறிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குண்டெறிந்த வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்துவிட்டு, எந்த மதமும் வன்முறையைப் போதிக்கவில்லை என்று அவை பற்றி மட்டும் கருத்துக்களைத் தெரிவித்தேனே ஒழிய சர்ச்சைக்குரிய ‘தாலி’ விவகாரம் பற்றி அதிகம் பேசவில்லை. ஆனால் தொடர்ந்து ‘தாலி’ பற்றி உண்மைக்கு மாறான கருத்துக்களே இரு சார்பாளர்களாலும் எடுத்து வைக்கப்பட்டு வருவதால் ‘தெய்வ முரசு’ அன்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க வேண்டியவனானேன்.

   சொல்லப்பட்ட நிகழ்ச்சியிலேயே திரு.மகேந்திரன் அவர்கள் சங்க இலக்கியங்களிலேயே தாலி பற்றி பேச்சே இல்லை என்றும், சங்க இலக்கியங்களில் துறை போன ஐயா அவர்கள் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார்.

   அதே போன்று திரு.சித்தண்ணன் அவர்கள் இந்து திருமணச் சட்டத்தில் தாலியே கிடையாது; சப்தபதி என்கிற சடங்கு தான் முக்கியமானது என்று கூறப்பட்டிருக்கிறது என்றார்.

   இவ்விருவர்க்கும் மேற்படி நிகழ்ச்சியிலேயே விளக்கமளித்தேன். அது பற்றி விரிவாக வரும் பகுதியில் விவரிக்கப்படும்.

   16-3-2015 – ஆம் நாளிட்ட ‘தி இந்து’ என்கிற தமிழ் நாளேட்டில் தாலி பற்றிய சர்ச்சை இப்போது புதிதாக எழவில்லை என்றும், 1954-லிலேயே சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களும், ஆய்வறிஞர் மா.ராசமாணிக்கனார் அவர்களும் கருத்துப்போர் நடத்தி இருக்கிறார்கள் என்றும், ம.பொ.சி. சிலப்பதிகாரத்திலேயே தாலி பற்றிக் கூறப்பட்டுள்ளது எனவும் மா.ராசமாணிக்கனார் அதை மறுத்து எழுதி வந்ததாகவும் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

     இந்த விவாதங்களின் மொத்த சாரம் தான்: தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா?

    உரியது தான் என்று கூறுபவர்கள் தெளிவான ஆதாதரங்களோடு தான் கூறுகிறார்களா? உரியது இல்லை என்று கூறுபவர்கள் மறுப்பிற்கான சரியான ஆதாரங்களை முன் வைக்கிறார்களா? என்றால், இருவருமே தாங்கள் தாங்கள் சார்ந்த சார்புகளால் உந்தப்பட்டு காய்தல் உவத்தல் இன்றி நடுநிலையோடு கூறவில்லை என்பது தான் உண்மை.

    முதலில் தாலி வேண்டும், அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று கூறும் குண்டெறிபவர்களையும், அவர்களுக்கு சார்பில் நின்று கொதிக்கக் கொதிக்க கூச்சலிடுபவர்களைப் பார்ப்போம்.

    இவர்கள் யார் என்றால் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி நடுவண் அரசில் கொற்றமாள வந்த பின் நேரடியாக முழு வீச்சோடு களங்களில் காணப்படுகிறார்கள். இவர்களில் பலர் புதிது புதிதாகப் புறப்பட்டிருப்பவர்கள். குறிப்பாக இக் குண்டெறிதலில் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘இந்து இளைஞர் சேனை’ எப்போது தோன்றியது? அங்கீகாரம் பெற்ற அமைப்பா என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்று சொல்லப்பட்ட மக்கள் மேடை நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட இன்னொரு அமைப்பான இந்து மக்கள் கட்சியின் பிரதிநிதி கூறினார். அத்துடன் குண்டெறிந்ததற்கு தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்தார். ஆனால் முதல் நாள் புதிய கருவிகளை உடைத்துக் கலகம் செய்தவர்கள் இந்து மக்கள் கட்சியும் அல்ல; இந்து இளைஞர் சேனையும் அல்ல; இன்னொரு விஷயம்: இந்து முன்னணித் தலைவரும் இத்தகைய குண்டெறிதல் கண்டனத்திற்கு உரியது என்று ஊடகங்களில் செய்தியைக் கசிய விட்டார்.

   எனவே இந்த இந்து அமைப்புகள் தனித்தனியாகச் செயல்படுபவை என்று தெரிகிறது. ஆனால் தாலியைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்பதில் மட்டும் ஒத்த கருத்துடையவர்கள். பா.ஜ.க. அன்பர்கள் கூட இக்கருத்தை தொலைக்காட்சி விவாதங்களில் ஆக்ரோஷமாக வெளியிட்டதைக் காண முடிந்தது.

    ஆனால் பா.ஜ.க. உள்ளிட்ட இந்த இந்து அமைப்புகள் தாலிக்கு ஆதரவாகப் பேசும் போதே கூட தாலி தமிழர்களின் பண்பாடு என்று சொல்வதில்லை. அது இந்துக்களின் பண்பாடு என்று தான் குரலெழுப்புகிறார்கள்.

    ஆனால் நண்பர் திரு.சித்தண்ணன் (ஓய்வு பெற்ற காவல் அதிகாரி) கூறியது போல இந்துத் திருமணச் சட்டத்தில் தாலியைப் பற்றிய பேச்சே இல்லை என்பது தான் பட்டவர்த்தனமான உண்மை. அது இந்துக்களின் பண்பாடு என்றால் இந்து திருமணச் சட்டத்தில் ஏன் இல்லை?

    அதே மாதிரி தமிழர்கள் இந்துக்கள் தானே என்றால் தமிழர்களின் திருமணத்தில், குறிப்பாக பிராம்மணப் புரோகிதர்களே நடத்தும் தமிழர் இல்லத் திருமணங்களில் கூட இந்து திருமணச் சட்டத்தில் இன்றியமையாதது என்று விதிக்கப்பட்டுள்ள ‘சப்தபதி’ சடங்கு ஏன் இல்லை? அப்படி என்றால் அவ்வாறு நடத்தப்பட்டு வரும் திருமணங்கள் எல்லாம் சட்டப்படி செல்லாதவை தானா? ஏன் இப்படி பிராம்மணப் புரோகிதர்கள் சட்டத்திற்கு மாறாக தமிழர்களுக்கும், சட்டத்திற்குட்பட்டு தமக்கும், தம் இனத்தார்க்கும் ‘சப்தபதியோடு’ சடங்கு செய்து திருமணங்களை செய்து வைக்கிறார்கள்?

     இந்தக் கேள்வியின் நோக்கம் சப்தபதி சடங்கை எல்லா திருமணங்களிலும் பரப்பிவிட வேண்டும் என்பதல்ல; பிராம்மணப் புரோகிதர்கள் சட்டப்படி தமக்கும், சட்டத்திற்கு மாறாக பிறர்க்கும் திருமணங்களைச் செய்வதன் உள்பொருள் அல்லது நோக்கம் என்ன என்பது தான் கேள்வி!

    இந்தக் கேள்வி எழுப்பப் படுவதன் காரணம், மேற்கூறிய இந்து அமைப்புகள் எதுவானாலும் அதில் உள்ளவர்கள் அனைவரும் பிராம்மணர்கள் அல்ல; அவர்களுக்கு தமக்குச் செய்து வைக்கப்படும் திருமணங்கள் இந்து சட்டப்படி செய்து வைக்கப்படுவதல்ல என்பதும், இந்து சட்டத்தில் தாலி இல்லை என்பதால் தாலியை இந்துப் பண்பாட்டின் கூறாக கொள்ள வேண்டியது இல்லை என்பதும் தெரியவே தெரியாது என்பது தான் உண்மை. இந்த உண்மையை அறிந்தால் அவன் தேவையின்றி குண்டெறியும் குதர்க்கமான வீரப் போராட்டங்களிலிருந்து விலகி நிற்பான் அல்லவா?

    உண்மை தான்; சட்டத்தில் தாலி இல்லாவிட்டாலும் பிராம்மணர்கள் நடத்தும் தம் இல்லத் திருமணங்களில் சப்தபதியுடன் தாலி கட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறதே என்று கேள்வி எழுப்பலாம்.

    முதலில் பிராம்மணர் இல்லத் திருமணங்களில் கட்டப்படும் தாலியும் தமிழர் இல்லத் திருமணங்களில் கட்டப்படும் தாலியும் ஒரே கருத்துடையவை என்று கருத முடியாது. காரணம், தமிழர் இல்லத் திருமணங்களில் கட்டப்படும் தாலி ஒன்று தான்; ஆனால் பிராம்மணர்களோ வேட்டகத்து தாலி என்றும் புகக்காத்துத் தாலி என்றும் இரண்டைக் கட்டுவார்கள். எனவே அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு.

    அடுத்து இந்தத் தாலி கட்டலும் பிராம்மணர்களிடையே மிகப் பிற்காலத்தில் தான் ஏற்பட்டது என்பதை காமகோடி மடம் வெளியிட்ட ‘விவாஹ மந்த்ரார்த்ங்கள்’ என்ற நூல் குறிப்பிடுகிறது. அதில் உள்ள பகுதியை இங்கே காண்போம்:

    “இந்தப் பாணிக்கிரகணத்துக்கு முன்னால் வெகு நாளைய சம்ப்ரதாயப்படி மாங்கல்ய தாரணம் என்ற சுபகர்மம் அனுஷ்டிக்கப்படுகிறது. மாங்கல்ய தாரணத்துக்கான வேத மந்த்ரம் ஒன்றும் இல்லாதபடியால் சூத்ரகாரர் அதைப்பற்றி இங்கே சொல்லவில்லை என்றே நாம் நினைக்க வேண்டி இருக்கிறது. இதைப்பற்றி நவீன ஆராய்ச்சியாளர்கள் பலவாறாகப் பேசுகிறார்கள்.

     திராவிட மக்களிடையே இந்த மாங்கல்ய தாரணம் என்ற பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருவதாகவும் அதையே ஆரியர்களும் கைக்கொண்டு விட்டதாகவும், ஆரியர், திராவிடர் என்றெல்லாம் நாட்டைப் பிரித்துப் பேசும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.” (பக்கம் 86; ‘விவாஹ மந்த்ரார்த்தங்கள்’)

     மேற்காணும் ‘விவாஹ மந்த்ரார்த்தங்கள்’ என்னும் நூல் எதன் அடிப்படையில் எழுந்தது என்றால், ‘ஆபஸ்தம்பர்’ என்ற மகாபுருஷர்’ எழுதிய சனாதன தர்ம நூல்கள் முப்பதில் இருபத்தைந்து இருபத்தாறாக இரண்டு ப்ரச்னங்கள் ‘கிருஹ்ய சூத்திரம்’ என்ற தலைப்பில் எழுதிய நூலின் அடிப்படையில் எழுந்தது. இவை வேதத்திலுள்ள ‘ஏகாக்கினி காண்டமாகிற மந்த்ர பாகம்’ என்று மேற்படி நூல் குறிப்பிடுகிறது.

     அது மேலும் குறிப்பிடுவதாவது: “ரிக் வேதத்தில் 10-ஆம் மண்டலத்தில் 85-ஆம் சூக்தத்தில் சோமன் என்கிற தேவன் விவாஹம் செய்து கொள்ள விரும்பி, சூர்யை என்பவளை மணந்து கொள்வதற்காக அச்வனி தேவதைகளை அனுப்பி வைத்தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த விவாஹ முறையைப் பின்பற்றித்தான் மந்த்ர ப்ரச்னத்தில் உள்ள மந்த்ரங்களும், கிருஹ்ய சூத்ர கிரமமும் ஏற்பட்டிருக்கின்றன”.

     இதற்கு மேலும் இந்நூலின் பக்கம் 45-ல் குறிப்பிடுவதாவது: “ஆபஸ்தம்ப சூத்திரத்தில் மாங்கல்ய தாரணம் வெளிப்படையாகச் சொல்லப்படாததனால் சிலர் பலவித ஊகங்களைச் செய்கிறார்கள். தொன்றுதொட்டு திருமாங்கல்ய தாரணம் வழக்கமாக இருந்திருக்காது என்றும், மற்றும் சிலர் தென்தேசத்திலிருந்து இந்த வழக்கத்தை நாம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.”

    எனவே, ரிக் வேதத்தில் காணப்படும் ஒரு திருமணத்தின் மந்த்ர பாகத்தை எடுத்து ஆபஸ்தம்பர் திருமண மந்த்ரங்களையும் சடங்குகளையும் வரிசைப்படுத்தி எழுதியது தான் ஏகாக்னி காண்டத்தின் கிருஹ்ய சூத்ரம். அந்த விவாஹ மந்த்ரங்களை எடுத்து வரிசைப்பட ஆரிய திருமணச் சடங்குகள் காட்டி உரை செய்த நூல் தான் மேற்படி ‘விவாஹ மந்த்ரார்த்தங்கள்’ என்ற நூல்; காமகோடி மடத்தால் வெளியிடப்பட்டது.

    காமகோடி மட வெளியீடு மட்டுமல்ல; ‘மந்த்ர ப்ரச்னம்’ என்ற கடலங்குடி பப்ளிகேஷன் வெளியிட்ட நூலும் இதை இப்படியே உறுதி செய்கிறது.

    “இதுவே பாணிக்கிரஹணம் என்றதாலும் குறிக்கப்படுகின்றது. இந்தப் பாணிக்கிரஹணத்திற்கு முன்னால் ‘மாங்கல்ய தாரணம்’ என்றதொரு காரியம் நமது சம்பிரதாயத்தில் நடைபெறுகிறது. சாஸ்திரப் பயிற்சி அற்றவர்கள் அதையே பிரதான கார்யமாகக் கருதி லக்னம் முதலியன தவறா வண்ணம் மிக்க ஜாக்கிரதையுடன் நடத்தி வருகின்றனர் என்பது ப்ரத்யக்ஷமே. ஆயினும் கிருஹ்ய சூத்திரங்களிலோ, மந்திரங்களிலோ இவ்விஷயத்தைப் பற்றிக் கொஞ்சமேனும் கூறவில்லை. பாணிக்கிரஹணம், சப்தபதீ முதலியனவே பிரதானமாய் உபதேசிக்கப்பட்டிருக்கின்றன. இக்கார்யங்களுள் ஒன்றான பாணிக்கிரஹத்தைத் தான் நல்ல லக்னத்தில் தவறா வண்ணம் நடத்த வேண்டும் என்று சாஸ்திர மூலம் வெளியாகின்றது. ஆயினும் மாங்கலிய தாரணத்திற்கு மூலம் யாது என்பது முதலியவற்றை முகவுரையில் விசாரிப்பாம்.” ( – மந்த்ரப் ப்ரச்னம் – தமிழுரையுடன் – பக்கம் 34-35)

     ஆகவே, முன் காட்டியபடி வடவேத முறைப்படி செய்யும் திருமணச் சடங்கில் தாலி கட்டும் சடங்கே இல்லை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மேலும், தாலி கட்டும் வழக்கம் திராவிட மக்களிடையே தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம் என்றும் இதையே ஆரிய மக்கள் கைக்கொண்டு விட்டதாகவும் ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     இந்தக் கருத்தை முறைப்படி நூலாசிரியர் ஏற்றுக்கொள்ளவில்லை; இது ஆரியர்-திராவிடர் என்று நாட்டைப் பிரித்துப் பேசுபவர்களின் கருத்து என்பது ஒன்றே அவர் மறுப்பிற்குக் காட்டும் காரணம்.

     ஆனால் த்ராவிட என்ற சொல்லே சமஸ்கிருதத்தில் இருந்து தான் வந்தது என்பதால் அப்படி ஓர் இனம் ஆரியர்களுக்கு மாறானதாக இருந்தால் தானே அந்தத் ‘த்ராவிட’ என்ற சொல் சமஸ்கிருதத்தில் வந்திருக்கும்; எனவே அந்தச் சொல்லே காட்டிக் கொடுத்து விடுகிறது. அத்துடன் சில ஆராய்ச்சியாளர்கள் வேண்டுமென்றே மக்களை ஆரியர்-திராவிடர் என்று பிளவு படுத்துகிறார்கள் என்றால் இன்று தென்னாட்டில் உள்ள பெரும்பான்மையான கறுப்பு நிற திராவிட மக்களை இந்த நூலாசிரியரோ அல்லது ஆரியர்களோ தங்கள் இனம் என்று ஏன் ஏற்று கலந்து வாழாமல் தீண்டாமையைப் பின்பற்றி தவிர்க்கிறார்கள் என்பதற்குப் பதிலில்லை. நடைமுறையில் இவர்களே திராவிடர்களிடமிருந்து தம்மை தனிப்பிரிவாக பிளவுபடுத்திக் கொண்டு வாழ்ந்து கொண்டு வேறு யாரோ சிலர் பிளவுபடுத்துகிறார்கள் என்பது போலிக் கூச்சல்.

   மாறாக ஆரியர்-திராவிடர் என்கிற இரு வேறு இனங்கள் உண்டு என்பதற்கு உலகெங்கிலுமுள்ள வரலாற்றாசிரியர்கள் சான்று காட்டி நிறுவியுள்ளதால் அந்த உண்மையை மறுக்க முடியாது. வரலாற்றாசிரியர்கள் ஒரு புறம் இருக்க, ஆன்மிக அருளாளர்களான அப்பர், ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்றும், ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என்றும் பாடி இருப்பது ஆரியர்-திராவிடர் என்று இரு வேறு இனம் உண்டென்பது வரலாற்றாசிரியர்கள் கூற்றை ஆன்மிக உலகமும் ஏற்றுக் கொண்ட உண்மை என்பதைக் காட்டுகிறது.

   எனவே, மேற்படி நூலின் ஆசிரியர் கூறும் கூற்று, அதாவது ஆரியர்-திராவிடர் என்ற இரு வேறு இனங்களே இல்லை என்பது உண்மையை முற்றிலுமாக மறைக்கும் முயற்சி என்று புறக்கணிக்கப்பட வேண்டியது.

   இதனால் திராவிடர்களிடம் தொன்றுதொட்டு தாலி கட்டும் வழக்கம் இருந்து வந்தது என்றும் பின்னால் ஒரு காலத்தில் ஆரியர்கள் அதாவது பிராம்மணர்களும் ஏற்றுக் கொண்டனர் என்ற கருத்திற்குப் பலமான சான்று வடவேத மந்த்ரங்களிலோ, திருமண சடங்குகளை அவ்வேத மந்த்ரங்களின் அடிப்படையில் தொகுத்த கிருஹ்ய சூத்ரத்திலோ தாலி கட்டும் பேச்சோ, அதற்குரிய மந்த்ரமோ இல்லை என்பது தான்.

   இதனால் தான் பிராம்மண புரோகிதர்களிடையே மாங்கல்யம் கட்டும் போது ஒரே வகையான சுலோகம் பின்பற்றப்படாமல் ஒருவர் ‘மாங்கல்யம் தந்து நானே’ என்றும், ஒருவர் ‘சர்வ மங்கள மாங்கல்யே’ என்றும் மாறி மாறி ஓதுகிறார்கள். வேத மந்த்ரம் இருக்குமானால் அதையே எல்லோரும் ஒரே மாதிரி ஓதும் வழக்கம் வந்திருக்கும். ஆக, தாலிக்கு வடவேதத்தில் மந்த்ரம் இல்லை என்பது நன்கு நிரூபணம் ஆகிறது.

   அடுத்து இந்து திருமண சட்டம் என்பது சுதந்திர இந்தியாவில் இந்திய அரசாங்கத்தால் உருவாகி நடைமுறைப்படுத்தப்பட்டதல்ல. வெள்ளையர்கள் ஆட்சியில் இருக்கும் போது கொல்கத்தாவில் இருந்த வெள்ளைக்கார கவர்னரால் அங்கு அரசுடன் நெருக்கமாக இருந்த வட வேத பிராம்மணப் புரோகிதர்களை ஆலோசித்து உருவாக்கப்பட்டது தான் இந்து திருமணச் சட்டம். வட வேத பிராம்மணர்கள் தங்கள் வேதத்தில் தாலி இல்லாததால் அதை நீக்கி தாங்கள் முக்கியமாகக் கருதும் சப்தபதி சடங்கு என்பதை மட்டும் சட்டத்தில் சேர்க்கக் காரணமானார்கள். அப்போது வடவேத வழக்கமே தென்னாட்டு மக்களின் வழக்கம் என்று தவறாக வெள்ளையர்கள் வழி நடத்தப்பட்டதால் வந்த விளைவால் இந்து திருமணச் சட்டத்தில் தாலி இடம் பெறவில்லை. தவறான வழிகாட்டுதலால் வெள்ளையர்கள் உருவாக்கிய சட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் சுதந்திர இந்தியாவில் இந்திய அரசாங்கங்கள் இன்று வரை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருப்பது தான் கொடுமையிலும் கொடுமை.

    நல்ல வேளையாக, பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் தமிழக அரசு இயற்றிய சீர்திருத்த திருமண சட்டம் 1967 வடக்கிலிருந்து வந்த இந்து திருமணச் சட்டத்திற்கு மாற்றாக அமைந்தது. இந்தச் சட்டத்தின் பெயர் “இந்துத் திருமணங்கள் (சென்னைத் திருத்தம்) சட்டம் 1967”.

    இந்தச் சட்டம் இந்து திருமணச் சட்டத்தின் 7-வது பிரிவிற்கு பின் 7-ஏ என்ற புதிய பிரிவைப் புகுத்தியது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரியது.

    இதன்படி சுயமரியாதை அல்லது சீர்த்திருத்த திருமணத்தில் புரோகிதர் மந்திரம் ஓதுதல், மணமக்கள் ஹோமத்தை ஏழு அடி எடுத்து வைத்து வலம் வரல் ஆகியவை நடைபெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மற்றவர்களுக்குப் புரியும் மொழியில் கணவனாக அல்லது மனைவியாக மற்றவரை ஏற்றுக் கொள்வதாகச் சொல்ல வேண்டும். மணமக்கள் மாலை அல்லது மோதிரம் மாற்றிக் கொள்வதோ அல்லது தாலி கட்டும் சடங்கைச் செய்து கொள்வதோ மேற்கொள்ளலாம்.

    இதில் முக்கியமான பகுதி என்னவென்றால் ‘சப்தபதி’ என்ற சடங்கு தேவை இல்லை என்பதும் தாலிகட்டுவதை ஒப்புக்கொள்வதும் ஆகும்.

    இதில் ஆச்சரியம் என்னவென்றால் பேரறிஞர் அண்ணாவோ, அல்லது அவர் இச்சட்டத் திருத்தத்திற்கு முன் ஆலோசனை பெற அணுகிய அவரது அரசியல் குருவான தந்தை பெரியாரோ தாலி கட்டுவது பற்றி ஆதரவான கருத்துடையவர்கள் இல்லை என்றாலும் தொன்று தொட்டு வரும் தமிழர் பழக்க வழக்கமான தாலி கட்டுதலை நீக்க இயலாமல் அதை ஏற்று சட்டத் திருத்தத்தில் சேர்த்தது தான்.

    இந்தப் பின்னணியில் நாம் இரண்டு நிகழ்வுகளை ஆச்சரியமாகப் பார்க்க முடிகிறது:

1)   ஆரியப் பிராம்மணர்களின் ஆதிக்கத்தில் இயங்கி வரும், இந்து அமைப்புகள் என்று கூறிக் கொள்பவைகளைச் சேர்ந்த பிராம்மணர்கள் தங்கள் ரிக் வேதத்தின் திருமண முறையில் இல்லாத தாலிக்கு வக்காலத்து வாங்குவதும், அவ்வமைப்புகளின் பெயரில் சிலர் தாலிக்கு ஆதரவு செய்வதாக எண்ணி குண்டெறிவதும் ஆச்சரியம்!

2)   சென்னை சட்டத் திருத்தத்தில் தாலியைச் சேர்த்துவிட்ட திராவிட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அந்த திராவிட எண்ணப் போக்கில் உள்ளவர்களும் தாலி தேவை இல்லை என மோதல் கருத்துக்களை எழுப்புவதும் ஆச்சரியம்!

   ஆக, இரு சாராரும் தங்கள் தங்கள் மூலக் கொள்கையில் இருந்து இந்த தாலி விஷயத்தில் விலகி எதிர் எதிராக நிற்பது காலத்தின் கோளாறு என்றே சொல்ல வேண்டும்.

    வேத காலத்தில் இருந்து இந்து திருமணச் சட்டம் உருவாகும் வரை தாலி கட்டுவது தம் வழக்கம் இல்லை என்றவர்கள் இன்று அதற்காகக் குண்டெறியும் வரை சென்றிருக்கிறார்கள்; உண்மையில் தாலி அவர்களுக்குரிய கலாச்சாரம் இல்லை. அடுத்து தொன்று தொட்டு தாலி கட்டும் வழக்கத்தைத் தமது கலாச்சாரமாகக் கொண்ட தமிழ்த் திராவிட அமைப்புகளையும், அதன் எண்ணப்போக்குகளையும் உடையவர்கள் தாலி தேவை இல்லை என்று மூர்க்கத்தனமாகப் பேசும் நிலைக்குச் சென்றிருக்கிறார்கள்; உண்மையில் அது அவர்களுக்குரிய கலாச்சாரம் இல்லை.

    தாலி பற்றிய கருத்து நிலையில் இரு சாராரும் எது தமது கலாச்சாரம் என்பதே அறியாமல் பேசுகிறார்கள் என்பது வியப்புக்குரிய விஷயம். ஆய்வறிஞர் மா.ராசமாணிக்கனார் போன்றவர்களுக்கும் இந்தத் தடுமாற்றம் இருக்கும் போது பாமர சமூகத்தில் தடுமாற்றங்கள் இருப்பது இயற்கை தான். ஆனால் 1954-ல் மா.ராசமாணிக்கனார் தாலியை எதிர்த்த போதும் அது வெறும் கருத்து மோதலாகத் தான் இருந்தது. அதற்கு மாறாக இப்போது இது குண்டெறியும் கட்டத்திற்கு வந்திருப்பது தான் கவலைக்குரியது.

    இந்த மோசமான நிலைக்கு குண்டெறிந்தவர்களை மட்டுமே முழுப் பொறுப்பிற்கு ஆளாக்க முடியாது. தொலைக்காட்சி விவாதத் தளத்தில் அற்ப விளம்பரத்திற்காக ஒரு பெண் தாலியைக் கழற்றி எறிந்தது தான் நெருப்புப் பொறியைத் தூக்கிப் போட்டது என்பதில் எள்ளவும் ஐயம் இல்லை.

    ஒரு பெண் தாலி தேவை இல்லை என்று வாதிடலாம். ஆனால் ஒரு பொது இடத்தில் அதைக் கழற்றி எறிந்து அந்தக் களத்தைக் கொச்சைப்படுத்துவது மிகவும் கண்டிக்கத் தக்கது. அப்படியே ஒரு பெண் அத்துமீறி நடந்தாலும் அதை அந்தத் தொலைக்காட்சி நிர்வாகம் வெட்டி எறியாமல் அதை முன்னோட்டமாகக் காட்டியது துரதிருஷ்டவசமானது. விவாதம் நடத்துவதற்கு எவருக்கும் உரிமை உண்டு; விவகாரத்தைச் செய்ய யாருக்கும் உரிமை இல்லை.

   பல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் விவாதங்களில் சிலர் அத்துமீறி அநாகரிகமாக நடந்து கொள்வதுண்டு. அதை சில நெறியாளர்கள் சுட்டிக் காட்டி நெறிப்படுத்துவதுண்டு; சிலர் தம் ஊடக நிர்வாகத்தின் எண்ணப் போக்கை நாடிபிடித்து வைத்துக் கொண்டு அநாகரிக அத்துமீறல்களை அனுமதித்து விவாதத்தை ஆரோக்யமான நிலையில் இருந்து சரிய வைத்து அத்துமீறல் ரசாபாசங்களுக்கு இடமளிப்பதும் உண்டு.

    இது போல ஒன்று தான் அந்தப் பெண் படப்பிடிப்பு தளத்தில் தாலியைக் கழற்றி எறிந்தது. தாலி தேவை இல்லை என்பது அவர் கருத்தானால் படப்பிடிப்பிற்கு வருமுன்னே தாலியைக் கழற்றிவிட்டு வந்திருக்க வேண்டும். மாறாக படப்பிடிப்பில் வந்து கழற்றுவது தன்னை பொது மக்கள் குறிப்பாக உலகெங்கிலும் உள்ள லட்சோப லட்சம் தொலைக்காட்சி நேயர்கள் முன் ஒரு வீராங்கனையாகக் காட்டிக் கொள்ளும் அற்ப மனோபாவம் தான் அதற்கு அடிப்படை. பொதுமக்கள் முன் இந்த ‘வீரசாகசம்’ செய்தால் பொதுமக்களிடமிருந்து எதிர்வினையைச் சந்திக்கத் தான் நேரும். அதில் அந்த அம்மையாரின் அற்ப குணம் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஆபத்தாய் முடிந்துவிட்டது.

    அந்தப் பெண்ணிற்கு இதனால் என்ன பாதிப்பு நேர்ந்தது? யாருக்கும் தெரியாது. ஒரு வேளை அவரது கணவர், உறவினர், சமூகத்தினர் ஆகியோரிடம் பாதிப்பு நேர்ந்திருக்கலாம். ஆனால் அது எதுவானாலும் அவரோடு போயிற்று; ஆனால் பாதிக்கப்பட்டது பொதுமக்களும் அந்தத் தொலைக்காட்சியும் தான்.

    பொதுவாக தாலி தேவை இல்லை என்று வாதிடும் எண்ணப் போக்குடையவர்கள் கூட தத்தம் மனைவியர் தாலியைக் கழற்றி எறிவதை ஏற்பார்களா என்பது சந்தேகமே! உதாரணத்திற்கு திருமதி மா.ராசமாணிக்கனார் தாலியைக் கழற்றி எறிந்தார்களா என்பது தெரியாது. காரணம், மா.ராசமாணிக்கனார் தாலிக்கு எதிராகக் கருத்துக்களை வைத்த போது தன் இல்லத்தில் நிலவரம் என்ன என்று ஒரு முறையும் மூச்சு விட்டதாகத் தெரியவில்லை. இது தான் பலரின் நிலையும்.

    ஆனால் மா.ராசமாணிக்கனார் தாலி தேவை இல்லை என்று விவாதங்களை எடுத்து வைத்த போது இத்தனை பெரிய தமிழறிஞரே சொல்கிறாரே என்று திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் தாலிக்கு எதிரான போக்குகளை மேற்கொண்டனர். தாலி ஓர் அடிமைச்சின்னம் என்றார்கள்; தாலியை ஏன் ஆணுக்கு ஒரு பெண் கட்டக் கூடாது என்றார்கள். எல்லாம் பேசினாலும் அவரவர் வீட்டுத் திருமணத்தில் ஆண் ஒரு பெண்ணிற்குத் தாலி கட்டுவது தவறாமல் நடந்தது; நடந்து வருகிறது.

    பொதுவாக தமிழர் திருமணங்களைக் கூட பிராம்மணப் புரோகிதர்களே நடத்தி வந்தமையால், இன்றும் நடத்தி வருவதால் தாலி என்பது பிராம்மணக் கலாச்சாரம் என்றும், அது தமிழர்களுடையது அல்ல என்றும் தவறான மனப்போக்கு கொண்டு அதை எதிர்ப்பதில் பிராம்மணரை எதிர்ப்பது போல மனநிறைவு கொண்டார்கள். இதற்கு மா.ராசமாணிக்கனார் போன்ற அறிஞர்களின் கருத்துக்களும் தூபம் போட்டன.

     இவர்கள் எல்லாம் தாலியை எதிர்ப்பதால், பிராம்மணர்கள் தமதல்லாத தாலி கலாச்சாரத்தை தமதாகவே காட்டிக் கொள்வதில் முனைப்பு காட்டினர்.

    இந்நிலையில் தாலி கலாச்சாரம் யாருடையது? பிராம்மணர்களுடையது அல்ல என்பதை வடவேதங்களும், இந்து திருமணச் சட்டமும் தெளிவாக சான்று தருகின்றன என்பதை ஏற்கெனவே பார்த்துவிட்டோம். அடுத்து எஞ்சி இருப்பது தாலி தமிழரின் கலாச்சாரம் என்பதைப் பற்றி சங்க கால இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்பதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

    முதலில் மா.ராசமாணிக்கனார் – மா.பொ.சி. ஆகியோர் கூறிய கருத்துக்களாக ‘தி இந்து’ தமிழ் நாளேட்டில் வந்தவற்றை எடுத்துக் கொள்வோம்.

    மா.பொ.சி. அவர்கள் சிலப்பதிகாரத்தில் மூழ்கி முத்தெடுத்தவர். எனவே அவர் சிலம்பிலேயே தாலி வருகிறது என்று வாதிட்டார். சிலப்பதிகார காலம் சங்கம் மருவிய காலம்; அதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. அக்காலத்திலேயே தாலி தமிழரிடையே இருந்து வந்தது என்றார் ம.பொ.சி. அவர் அதற்கு முந்தைய சங்க காலத்திற்குப் போகவில்லை. எனவே சிலப்பதிகார காலத்தில் தமிழரிடையே தாலி இருந்ததா என்பதை ஆராய்வோம்.

     இதற்கு ம.பொ.சி. காட்டிய சிலப்பதிகார மேற்கோள்கள்:

1)   “மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்”

2)   “அரசெழுந்ததோர் படியெழுந்தன அகலுள் மங்கல அணி எழுந்தது”

3)   “மறுவின் மங்கல அணியே அன்றியும்

பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்”

  மங்கலம் என்ற சொல்லுக்கு அழகு, கலியாணம் (திருமணம்) என்ற இரு பொருள்கள் உண்டு என உ.வே.சா. பதிப்பில் அரும்பத முதலியவற்றின் அகராதியில் குறிப்பிடுகிறார். அத்துடன் மங்கல அணி என்ற சொற்றொடர்க்கு இயற்கை அழகு, மாங்கலிய சூத்திரம் என்கிற இரு பொருள்களையும் கொடுத்துள்ளார்.

   சிலப்பதிகாரத்தில் வருகிற பதிகம் என்கிற பகுதியில் மங்கல வாழ்த்துக் காதை என வருவதில் மங்கலம், திருமணத்தைக் குறிக்கிறது என்று அடியார்க்கு நல்லார் உரை எழுதி உள்ளார்.

   மங்கல வாழ்த்துப் பாடலில், அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை மங்கல நல்லமளி ஏற்றினர் என்று வருகிறது.

   இதில் முதலில் காட்டப்பட்ட மேற்கோள்; ‘மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்’ என்பது அந்திமாலைச் சிறப்பு செய் காதை என்ற பகுதியில் வருகிறது. அதாவது கோவலன் பிரிவில் கண்ணகி வருந்தி அலங்காரங்கள் எல்லாம் எதற்கு என்று எல்லா அணிகலன்களையும் விலக்கினாலும் மங்கல அணியாகிய தாலியை மட்டும் அகற்றாது இருந்தாள் என்ற செய்தியைச் சொல்லும் இடம் இது.

   இதற்குப் பொருள் சொன்ன மா.ராசமாணிக்கனார் மங்கல அணி என்பது இயற்கை அழகைக் குறிக்குமே ஒழிய தாலியைக் குறிக்காது என்று ம.பொ.சி.யை மறுத்தார். அடியார்க்கு நல்லார் மங்கல அணி என்பதற்கு இயற்கை அழகு என்று தான் குறிப்பிட்டுள்ளார் என்றார். ஆனால் அரும்பத உரை என்று சிலப்பதிகாரத்திற்கு வேறொரு உரை உண்டு. அதில் தான் மங்கல அணி என்பதற்கு இயற்கை அழகு என்று பொருள் கூறப்பட்டுள்ளது. அடியார்க்கு நல்லார் உரையில் மங்கல அணிக்கு மங்கல அணி என்றே உரை கூறப்பட்டுள்ளது.

    இனி, கண்ணகி கோவலனின் பிரிவில் எல்லா அணிகளையும் கழற்றினாள் இயற்கை அழகைத் தவிர என்று மா.ராசமாணிக்கனார் கூறிய பொருள் பொருந்தாத பொருளாக இருக்கிறது. காரணம் அணிகளை எல்லாம் வேண்டாத போது கழற்றிவிடலாம்; ஆனால் இயற்கை அழகு என்பது கழற்றி வைக்க முடியாது. ஆகவே அது கழற்றி வைக்கக் கூடிய அணி அல்ல; இன்னும் இயற்கை அழகு என்பது அணிகலன்களில் ஒன்றும் கிடையாது. எனவே இங்கே மங்கல அணி என்பது நகைகளும் அல்லாமல் அணி அல்லாத இயற்கை அழகும் அல்லாமல் வேறோர் அணி என்பது தெளிவாகிறது. மங்கல அணி என்பதற்கு ஏற்கெனவே மாங்கலிய நூல் என்று ஒரு பொருள் இருப்பதாலும், அரும்பத உரையிலும் வேறோரிடத்தில் மங்கல அணிக்கு தாலி என்றே பொருள் கொள்ளப்பட்டதாலும் இங்கே கண்ணகி தாலியைத் தவிர பிற எல்லா அணிகலன்களையும் கழற்றினாள் என்பதே பொருந்திய பொருளாக இருக்க முடியும். எனவே மா.ராசமாணிக்கனார் சிலப்பதிகாரத்தில் தாலி இல்லை என்று கூறுவது அழிச்சாட்டிய வாதம் என்பது புலனாகிறது.

    இரண்டாவது மேற்கோளில் தாலி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது கூறப்படுகிறது. இது மங்கல வாழ்த்துப் பாடற் பகுதியில் வருவது. ‘மங்கல அணி எழுந்தது’ என்று வரும் வரிக்கு அரும்பத உரைகாரர் கூட மாங்கலிய சூத்திரம் வலம் செய்தது என்று தான் உரை கூறுகிறார். இதையே அடியார்க்கு நல்லாரும் தனது உரையில் வழிமொழிகிறார். காரணம், இயற்கை அழகு என்பதை எடுத்துச் சென்று ஊர்வலம் வர முடியாது.

   எனவே மா.ராசமாணிக்கனார் சிலப்பதிகாரத்தில் தாலி கூறப்படவில்லை என்று கூறியது உண்மைக்கு முற்றிலும் மாறானது என்பது தேற்றம்.

   உண்மையில் சிலப்பதிகாரக் காலத்தில் திருமணத்தின் முன்னாள் திருத்தாலியை முரசு முழங்க ஊர்வலம் செய்து எடுத்து வந்தனர் என்பதால் அக்காலத்தில் தாலிக்கு எத்துணை மதிப்பு கொடுக்கப்பட்டது என்பதை அறியலாம்.

    அடுத்து மூன்றாவது மேற்கோள் மனையறம் படுத்த காதையில் வருவது. இதில் மங்கல அணி என்ற சொல் வருகிறது. ஆனால் இது தாலியைக் குறிப்பதல்ல; இயற்கை அழகு என்ற பொருளில் வருவது. மங்கல அணி என்றால் இயற்கை அழகு என்றும் பொருள் உண்டு என்று முன்னர் கண்டோம். ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்குமானால் அதற்கு இடம் நோக்கித் தான் பொருள் கொள்ள வேண்டும்.

    இங்கு கோவலன் கண்ணகியைப் பார்த்து உனது இயற்கை அழகு இருக்க அதன் மேல் அணிகலன்களை உன் தோழியர் உனக்குப் புனைவதால் ஆவது என்ன என்று கேட்கிறான்.

   ஆக, இந்த இடத்தில் மங்கல அணி என்பதற்கு இயற்கை அழகு என்ற பொருள் கொள்வதையே பொருந்தி வராத வேறிடங்களில் மா.ராசமாணிக்கனார் நீட்டி சிலப்பதிகாரத்தில் தாலியே வரவில்லை என்று சாதிக்க முற்பட்டது வீண்வாதமே அன்றி வேறல்ல.

   இனி, சங்க காலத்தில் தாலியின் நிலைமை என்ன என்பதைச் சங்க இலக்கியங்களைக் கொண்டு ஆராயலாம்.

   எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள் எனப்படுவன. அவற்றுள் புறநானூறு என்பது தொகை நூல் எட்டில் ஒன்று. இருப்பனவற்றுளே ஆய பழமையானது. கி.மு.18000-த்திலிருந்து கி.பி.முதல் நூற்றாண்டு வரை பல்வேறு காலத்தில் பாடிய பாடல்களின் தொகுப்பு. தொல்காப்பியம் என்பது தொன்மையான தமிழ் இலக்கணம்; இடைச்சங்க காலத்தது. அகநானூறும் தொகைநூலே; அகத்துறையில் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு; இன்னும் குறுந்தொகை, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவற்றில் எல்லாம் தாலி எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்.

   முதலில் மிகப் பழமையான புறநானூற்றைப் பார்ப்போம். புறநானூற்றில் 127-ம் பாட்டில்,

    “ஈகை அரிய இழையணி மகளிரொடு

    சாயின் றென்ப ஆய் கோயில்”

என வருகிறது. ஈகை அரிய இழையணி என்பதற்கு பழைய உரைகாரர் ‘பிறிதோர் அணிகலமும் இன்றிக் கொடுத்தற்கரிய மாங்கலிய சூத்திரத்தை அணிந்த மகளிருடனே’ என்று உரை கூறியிருக்கிறார்.

    இந்தப் பாடலைப் பாடியவர் ஏணிச்சேரி முடமோசியார்; பாடப்பட்ட தலைவன் ஆய் என்ற வள்ளல்.

    ஆய் வள்ளலின் வள்ளல் தன்மையைக் கூற வந்த புலவர், அவன் மட்டுமல்ல; அவனுடைய இல்லத்து மகளிரும் அவனுடைய வள்ளல் தன்மைக்கு உறுதுணை செய்தனர் என்று கூறுகிறார். அதாவது ஆய் வள்ளலின் விருப்பத்திற்கேற்ப அம்மகளிர் தாம் அணிந்துள்ள அணிகளுள் பிறர்க்குக் கொடுக்க முடியாத ஓர் இழையாகிய தாலியை மட்டும் அணிந்து கொண்டு பிற நகைகளை எல்லாம் கழற்றி இரவலர்களாக வந்த பாணர்க்குப் பரிசாகக் கொடுத்துவிட்டனர். இவ்வாறு அணிகளைக் கழற்றிக் கொடுத்து விட்ட பின் கோலத்தில் அவர்கள் முன்னைய ஒளி குன்றி இருந்தனர் என்பது பாட்டின் பொருள்.

    இங்கே உரையின் படி பார்க்கும் போது ‘ஈகை அரிய இழை’ என்பது கொடுத்தற்கரிய தாலியாகிய இழை எனப் பொருள்படுகிறது. எனவே இழை என்பது இங்கே தாலிக்கயிறு என்று குறிக்கப்படுவது காண்க.

    புறநானூற்றின் 224-ம் பாட்டு கரிகாற் பெருவளத்தானைப் பற்றியது. அவன் இறந்த போது அவனது மனைவி என்னும் உரிமை பெற்ற மகளிர் தமது திருமணச் சின்னமான தாலியைக் களைந்தனர் என பாடல் குறிப்பிடுகிறது.

     “அறிவுடையாளன் இறந்தோன்

     . . . . . . . . . . . . . . . . . . .
மெல்லியல் மகளிரும் இழை களைந்தனரே”

என்பது அப்பாடலில் வரும் வரிகள். இங்கேயும் இழை என்ற சொல் தாலிக் கயிற்றைக் குறிப்பிடுவது காண்க.

     அடுத்து அகநானூற்றிலும் இந்த இழை என்ற சொல்லால் தாலி குறிக்கப்படுவது அறிதற்குரியது.

     அகநானூற்றுப் பாடல் 86 ஒரு திருமண நிகழ்ச்சியைக் கூறுவது. இன்னொரு பாடலான 136-ஆம் பாடலும் தமிழ்த் திருமண நிகழ்ச்சியை விவரிக்கும் பாடலே.

    இதில் முதலில் கூறிய 86-ஆம் பாட்டில் நான்கு மகளிர் மணப்பெண்ணை மங்கல நீராட்டு செய்வது கூறப்படுகிறது. அப்போது நீராட்டுச் செய்யும் அந்த நான்கு மகளிரும் சுமங்கலிகளாக இருக்க வேண்டும் என்பதைத் தமிழர்கள் கடைப்பிடித்த வழக்கம் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

      “வாலிழை மகளிர் நால்வர் கூடி”

என்பது அப்பாடல் வரி. அதில் வரும் இழை மகளிர் என்பது தாலிக் கயிறணிந்த பெண்கள் நால்வர் என்று பொருள்படுவது காண்க.

    அகநானூற்றின் 136-ம் பாட்டும் தாலியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் திருமணத்தையே ‘இழையணிச் சிறப்பு’ என்று குறிப்பிடுகிறது.

     “மழைபட்டன்ன மணல்மலி பந்தர்

     இழையணி சிறப்பின் பெயர் வியர்ப்பாற்றி”

என்பது குறிப்பிட்ட வரிகள்.

     சங்க இலக்கியத்தில் ஒன்றான நெடுநல்வாடையில், நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன் போருக்குச் சென்றிருந்த போது அவனுடைய மனைவியான கோப்பெருந்தேவி அடைந்த துயரை நக்கீரர் படம் பிடித்துக் காட்டுகிறார். மன்னன் கூட இருந்த போது முத்துமாலை அப்பெருந்தேவியின் மார்பில் அணி செய்திருந்தது மாறி இப்போது அவள் மார்பில் தாலி நாண் ஒன்று மட்டும் தாழ்ந்து தொங்குகிறது என்ற பொருள்பட,

     “ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்

      பின்னமை நெடுவீழ் தாழத் துணை துறந்து”

என்று பாடல் கூறுகிறது. பின் என்பது பிடரி; பிடரியைச் சுற்றி மார்பில் தாலி தொங்குதல் தாலி ‘பின்னமை நெடுவீழ்’ எனப்பட்டது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ‘குத்துதல் அமைந்த நெடிய தாலி நாண்’ என்று உரை எழுதினார்.

    இது போல பதினெண் கீழ்க் கணக்கில் ஒன்றான திணைமாலை நூற்றைம்பதில் 66 – ஆம் பாடலில் இப்படி ஒரு வரி வருகிறது:

    “பவளக் கொழுந்தின் மேல் பெண் தாலி பாஅய்த்

    திகழக் கான்றிட்டன”

   இவ்வாறாக சங்க இலக்கியங்களில் தாலி பற்றி பல இடங்களில் பேசப்படுகிறது.

    ஆனால் அகநானூற்றில் திருமண நிகழ்ச்சி பற்றி விவரிக்கும் 86 – ஆம் பாட்டிலும், 136 – ஆம் பாட்டிலும் மற்றெல்லாம் கூறப்பட்டாலும் பெண்ணுக்குத் தாலி கட்டப்பட்டது என்ற தகவல் மட்டும் ஏன் இல்லை என்பது மா.ராசமாணிக்கனார் போன்றோர் எழுப்பும் கேள்வி.

   ஆம்; மேற்கூறிய பாடல் இரண்டிலும் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார் என்பது கூறப்படவில்லை. இதே பாடலில் திருமணம் ‘இழையணிச் சிறப்பு’ என்று கூறப்படுகிறது. ஆனால் மணமகன் மணமகளுக்கு இழையை அணிவித்தான் என்று பாடலில் வரவில்லை. திருமணம் இழையணிச் சிறப்பு எனக் கூறப்படுகிறது; என்ன துயர் வந்தாலும் பெண் தாலியாகிய இழையைத் துறக்க மாட்டாள் என்று கூறப்படுகிறது: மங்கலச் சடங்குகளில் இழையாகிய தாலி அணிந்த மகளிரே கலந்து கொண்டு சடங்கில் பங்கு பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது; கணவன் இறந்த பின் இழையாகிய தாலியைக் களைந்தனர் பெண்கள் என்பதும் கூறப்படுகிறது. இதனால் எல்லாம் திருமணத்தில் தாலி அணிவிக்கப் பெற்றது என்பது உய்த்துணர்வாக உணரக் கூறப்பட்டது; ஆனால் தாலி திருமணத்தில் அணிவிக்கப்பட்டது என்பது மட்டும் கூறப்படவில்லை. ஏன் என்பதே இப்போது ஆய்வு செய்யத் தக்கது.

   எதை எதை தெய்வம் என்றும் தெய்வீகம் என்றும் நினைக்கிறார்களோ அதையெல்லாம் பெயரிட்டுக் கூறக்கூடாது என்பதைத் தமிழர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். உதாரணத்திற்கு சிவபெருமானை இலிங்க வடிவில் வைத்துக் கோயில் எழுப்பி வணங்கியவர்கள் தமிழர்கள்.

   ஆனால் சிவபெருமானை சங்க இலக்கியங்களில் அவரது அடையாளங்களைக் கூறி வழிபட்டனரே ஒழிய அவரைப் பெயரிட்டுக் கூறுவது இல்லை. சங்க இலக்கியங்களில் சிவபெருமானைப் பற்றி கூறும்போது இறைவன் என்று தான் கூறப்படுமே ஒழிய சிவன் என்ற சொல்லே கூறப்படுவதில்லை.

    சிலப்பதிகாரத்தில் முருகனின் குரவைக் கூத்து, ஆய்ச்சியரின் ஆய்ச்சியர் கூத்தில் திருமால், அம்பிகை எல்லாம் பேசப்படுகிறது. ஆனால் சிவபெருமானை ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ என்று பொதுப்படத் தான் கூறப்படுகிறதே ஒழிய சிவன் என்று சொல்லப்படவில்லை.

    கி.மு.18000 என்ற கால வரையறையோடு தொடர்பு கொள்ளப்படும் பஃறுளி ஆறு பக்கத்தில் தலைச்சங்கம் இயங்கிய காலத்தில் இருந்த பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி பற்றிய மிகப் பழமையான பாடலில் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்திப் பாடும் போது, உன்னுடைய குடை சிவன் கோயிலின் முன் செல்லும் போது பணிந்து தாழட்டும் எனச் சொல்ல வருகிறார். ஆனால் அங்கே சிவன் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் சிவனின் அடையாளங்களை மட்டும் கூறிச் செல்கிறார்.

     “பணியியர் அத்தைநின் குடையே முனிவர்

     முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே”

    மேலே சிவன் என்று சொல்லாமல் ‘முக்கட்செல்வர்’ என்று சிவனது அடையாளத்தால் மட்டும் சுட்டப்படுவது காண்க.

     ‘கலிகெழு கந்தம் கைவிட’ . . . (புறம் 50.)

     ‘நீலமணி மிடற்றொருவன் போல

      மன்னுக பெரும”               (புறம் 91.)

   இப்படித் தான் கி.மு.18000 முதல் சிவன் அடையாளத்தால் கூறப்பட்டானே ஒழிய சிவன் எனப் பெயரிட்டுக் கூறப்படவில்லை.

   இது இப்படியே கி.மு.18000 முதல் தொடர்ந்து வந்து புறநானூறு கி.பி.முதல் நூற்றாண்டில் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் தொகுக்கப்பட்ட போது அவரால் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடி சேர்க்கப்பட்டது. அதுவும் சிவபெருமான் வணக்கத்தையே கூறுவது.

   கண்ணி கார்நறுங் கொன்றை காமர்

   வண்ண மார்பின் தாருங் கொன்றை

   ஊர்தி வால்வெள் ஏறே சிறந்த

   சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப

   கறைமிட றணியலும் அணிந்தன் றக்கறை

   மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே

   பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று அவ்வுருத்

   தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்

   பிறைநுதல் வண்ணம் ஆகின்று அப்பிறை

   பதினெண் கணனும் ஏத்தவும் படுமே

   எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய

   நீரறவு அறியாக் கரகத்துத்

   தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோர்க்கே   (புறம் 1)

      இப் புறநானூற்றுப் பாடலில் சிவனது அடையாளங்கள் எல்லாம் கூறப்பட்டாலும் சிவன் என்ற பெயர் மட்டும் கூறப்படாதது காண்க.

   இதன் அடிப்படை பரம்பொருளுக்கு ஏது பெயர் என்ற கொள்கை. எனவே அடையாளங்களால் சுட்டிக் காட்டலாமே ஒழிய பெயர் என ஒன்றை வைப்பது கடவுள் இலக்கணத்திற்கு மாறானது என்று கருதினார்கள். கடவுளுக்குப் பெயர் வைக்க நாம் யார் என்பது கருத்து.

   ஆக, தெய்வத்திற்குப் பெயர் சொல்லக் கூடாது என்பது தமிழர் தம் கொள்கை; அதே போல் தெய்வீகமாகக் கருதுவனவற்றிற்கும் பெயர் சொல்லக்கூடாது என்று ஒரு மரபைக் கடைப்பிடித்தார்கள்.

   ஓர் ஆணும் பெண்ணும் இணைவதையும் தமிழர் தெய்வீகமாகக் கருதினார்கள். பால்வரைத் தெய்வத்தின் முயற்சியன்றி ஓர் ஆணும் – பெண்ணும் கூடுதல் நிகழாது என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஆண்டவனை அன்பு வடிவன் என்றனர்; ஆண் – பெண் இணையும் அகத்துறையை அன்பின் ஐந்திணை என்றனர். இது பற்றிய துறையையே வெளிப்படப் பேசாத அகத்துறை என்றனர். மதுரை சொக்கலிங்கமாம் இறைவனே தெய்வீகமான அகத்துறைக்கு இலக்கணம் வகுக்கும் ‘இறையனார் களவியல்’ என்ற நூல் அளித்தான் என்றனர்.

   மிகவும் தெய்வீகமாகக் கருதப்பட்ட ஆண் பெண் இணைப்பை ‘ஓருயிர்க்கிழமை’ என்றனர். தெய்வீகமான இந்த அகத்துறையில் பாடப்படும் பாடல்களில், எப்படி தெய்வத்தின் பெயர் கூறப்படாது என்ற மரபைக் கடைப்பிடித்தார்களோ அப்படி தலைவன் – தலைவியர் பெயர்களைக் கூறக் கூடாது என்று தொல்காப்பியம் வரையறுத்தது.

    மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்

    சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்   (தொல்; 1003)

   திருமணத்தில் ஓர் ஆணையும் பெண்ணையும் இணைக்கும் சடங்கு தாலி கட்டுவதால் அமைவது, அது ஓருயிர்க்கிழமையை நிகழ்த்தும் தெய்வீகச் சடங்காதலால் அதைச் சுட்டிக் கூறுதல் கூடாது என்ற வழிவழி கடைப்பிடித்த தமிழர் மரபின் காரணமாக அதை நேரடியாகக் கூறாமல் உய்த்துணர வைத்தார்கள். அடையாளத்தால் அதை இழையணிச் சிறப்பு என்றார்கள். சேர்த்து வைத்த இணையரில் கணவன் இறக்கப் பிரிவு நேரும் போது இழை களைந்தனர் பெண்டிர் என்று கூறினார்கள். இழையைக் கட்டி இருந்தால் தானே கணவன் இறப்பில் அதைக் களைய முடியும் என்று திருமணத்தில் தாலி கட்டியதை உய்த்துணர வைத்தார்கள்.

    தெய்வீகமான ஒன்று ஒருவர் உடலிலும் உயிரிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதை எல்லாம் இரகசியமாகவே செய்தார்கள். உதாரணத்திற்கு குரு ஒரு சீடனுக்கு உபதேசிக்கும் போது அது காது வழியாக உயிரில் புகுந்து மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதை மறைத்து தொடர்புடைய இருவரும் துணியால் போர்த்தப்பட்டு உபதேசத்தைக் கூறிட வேண்டும் என்று மரபை அமைத்தார்கள். உபதேசங்கள் எல்லாம் மதில் மேல் நின்று கூறப்படுவதல்ல.

   எனவே ஓருயிர்க்கிழமையை தொடர்புடைய ஈருயிர் அடைய வழிவகுக்கும் நிகழ்ச்சியைப் பற்றி நேரடியாகக் கூறாமல் சங்க இலக்கியங்கள் மரபைக் கடைப்பிடித்தன. ஆனால் அதனைப் பிற இடங்களில் கூறி தாலி கட்டுவது அப்போது நடந்தது என்று உய்த்துணர வைத்தார்கள். ஆக, தாலி கட்டுவது அத்தனை புனிதமாக தெய்வீகமாகத் தமிழர்கள் கருதினார்கள் என்பது தெரிய வருகிறது.

    இந்தத் தாலியைத் தான் அந்தப் பெண் தொலைக்காட்சி தளத்தில் பகிரங்கமாகக் கழற்றி எறிந்திருக்கிறாள் என்பதால் அவள் தெய்வத்தைத் தூக்கி எறிந்தவள் ஆவாள். அது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம். எத்தனையோ நாத்திகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் கடவுளைத் தூக்கி எறிந்தவர்கள் தாம். இதனால் தெய்வத்திற்கு நஷ்டமில்லை; இதனால் தெய்வம் அவர்களைத் தண்டிக்காது; தண்டித்தால் அது தெய்வமில்லை.

   ஆனால் தெய்வ நம்பிக்கை உடையவர்கள் முன்னிலையில் தெய்வ நம்பிக்கையை இகழ்தல் அநாகரிகமான செயல். பிற நம்பிக்கையை அந்நம்பிக்கையாளர் முன்னின்று இகழ்ந்தால் அவர் தம் மனம் புண்படுவது திண்ணம். இப்படி பிறர் மனம் நோகப் பேசுவது அறிவுடைமை ஆகாது என்று வள்ளுவரும் கூறுகிறார்; தெய்வமும் குறிப்பிட்ட நபரின் தீவினையில் சேர்த்து வைக்கும். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது பழந்தமிழர் கொள்கை என்பதைப் புறநானூறு தெளிவாகக் கூறி வினைப் பயனை அறிவுறுத்துகிறது.

    இங்கே ஒரு கேள்வி எழலாம். அப்படியானால் ஒவ்வொருவரும் தத்தம் நம்பிக்கையைப் பற்றிப் பேசவே கூடாதா? வினைப்பயன் – அது இது என்று பயமுறுத்துவது எப்படி சரியாகும்?

    இல்லை, அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயங்களைப் பரப்புவதற்கு அவரவர்க்கு உரிமை உண்டு. இது தான் கருத்துச் சுதந்திரம் என்று பரவலாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்துச் சுதந்திரம் என்பது வரையறைக்கு உட்பட்டதா, உட்படாததா என்றால் உட்பட்டதாகத்தான் இருக்க முடியும் என்று நம் நாட்டு அடிப்படை உரிமைகள் சட்டமே கூறுகிறது.

1)   ஒரு நம்பிக்கையைச் சார்ந்தவர்கள் கூடி தமது நம்பிக்கையை விவரித்து வளர்த்துக் கொள்ளலாம்.

2)   ஒரு நம்பிக்கையின் வட்டத்திற்கு வெளியில் இருப்பவர்களிடம் அந் நம்பிக்கை சார்ந்த கருத்துக்களைப் பரப்புரை செய்து கருத்தால் ஈர்க்கலாம்.

3)   ஒரு நம்பிக்கையின் எதிராக எதிர்க்கருத்துடையவர்களிடம் அவர்களின் நம்பிக்கையை இழித்துப் பேசாமல் தம் கருத்துக்களை முன் வைத்துச் சிந்திக்கச் சொல்லாம்.

மேற்கூறிய மூன்று தான் கருத்துச் சுதந்திரத்தின் வரையறை. இதற்கு மாறாக கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதிர்க்கருத்தாளர்களை இழித்துப் பேசுதல் மற்றும் அவர்கள் மீது வன்முறை தொடுத்தல் என்பது எவ்விதத்திலும் கருத்துச் சுதந்திரத்தின் வரையறைக்குள் வராது.

    இது சட்டத்தின் வரையறை மட்டுமல்ல; சமயத்தில் கூறப்படும் வினைக்கொள்கையின் வரையறையும் இது தான். தான் நம்பும் ஒரு கொள்கையை மேற்கூறிய மூன்று வகைக்கு மாறாக கட்டாயப்படுத்துதல், திணித்தல், இகழ்ந்து பழித்தல் ஆகியவை எல்லாம் இதில் ஈடுபடுவோரின் வினை வட்டம் வளைத்துக் கொண்டு வள்ளுவர் கூறியது போல, ‘மற்றொன்று சூழினும் தான் முந்துறும்’ என்பது உறுதி! உறுதி!! உறுதி!!!

    தொலைக்காட்சி தளத்தில் தாலியைக் கழற்றி எறிந்த பெண் செய்த தவறு இது தான்: தாலியில் நம்பிக்கை இல்லை என்றால் அப்பெண் தாலி கட்டிக் கொள்ளவே சம்மதித்து இருக்கக் கூடாது. இல்லை, பெற்றோரின், உற்றாரின், சமூகத்தின் கட்டாயத்தால் தாலி கட்டிக் கொண்டேன், பிறகு புத்தி வந்தது என்று வாதிட்டால் தொலைக்காட்சி தளத்திற்கு வரும் வரை காத்திராமல் அப் புத்தி வந்தவுடன் தாலியைக் கழற்றி கணவனிடம் கொடுத்துவிட்டு வந்து தான் ஏற்கெனவே தாலி கழற்றியாயிற்று என தனது நிலையை எடுத்துரைத்து இருக்கலாம். அது வரை தாலியுடன் இருந்து விட்டு தொலைக்காட்சி தளத்திற்கு வந்த பின் தாலியைக் கழற்றி எறிந்தது யார் மெச்சிக் கொள்ள என்ற கேள்விக்கு நிச்சயம் உள்ளாகும். இது தான் மறுப்புக்கும் வெறுப்புக்கும் உரிய இடம்; இதுவன்றி அந்தப் பெண் தாலியோடு இருந்தால் என்ன? தாலியைத் தூக்கி எறிந்தால் என்ன? இதனால் பார்க்கும் பொது மக்களுக்கு என்ன பாதிப்பு நேர்ந்துவிடப் போகிறது?

    தமிழர்கள் தாலியை எவ்வளவு புனிதமாகக் கருதினார்கள் என்பதைச் சான்றுகளோடு மேலே கண்டோம். கணவன் மறைந்தபின் மனைவியின் தாலியைக் களைவதைக் கூட தாலி களைதல் என்று கூறக் கூடாது என்றும் ‘தாலி பெருகிற்று’ என்று கூறுதல் வேண்டும் என்றும் தமிழ் இலக்கணம் வரையறை செய்து அதனை மங்கல வழக்கு என்று கூறுகிறது. உண்மையில் அந்தப் பெண் தாலியைக் கழற்றி எறிந்ததைக் கூட தமிழ் இலக்கணப்படி கூற வேண்டுமானால் அப்பெண்ணின் ‘தாலி பெருகிற்று’ என்று தான் கூற வேண்டும். இன்று கூட காரியப் பத்திரிகையில் ‘தாலி களைதல்’ என்று அச்சிடாமல், நாகரிகமாக ‘நடப்பு’ என்று தான் அச்சிடுவதைக் காணலாம்.

   இது ஒரு புறம் இருக்க, சிலர் தாலி என்பது பெண்ணிற்கு ஒரு அடிமைச் சின்னம் என்றும், பெண்ணுக்கு மட்டும் ஏன் தாலி, ஆணுக்கும் தாலி கட்டினால் என்ன என்றும் சீர்திருத்தவாதி என்ற பெயரில் ‘வீர வசனம்’ பேசுவதையும் அவ்வப்போது கேட்கிறோம். இவர்கள் எல்லாம் தாலி என்பதன் பொருள் என்ன, அது எப்படி தொல்காப்பியம் முதல் தமிழரிடையே ஒரு மரபாயிற்று என்பதை அறியாதவர்கள்.

   தாலியின் உள்ளுறைக்குப் போகுமுன் இவர்களது வாதமே இவர்களது அறியாமைக்குச் சான்று என்பதைக் காண்போம்.

    பெண்ணிற்குக் கட்டினால் தாலி அடிமைச் சின்னம் என்றால் ஓர் ஆணுக்குப் பெண் கட்டினால் அது என்ன ஆபரணமாகி விடுமா? தாலி ஓர் அடிமைச் சின்னம் என்றால் அது பெண்ணுக்குக் கட்டினாலும், மாறாக ஆணுக்குக் கட்டினாலும், அடிமைச் சின்னம் அடிமைச் சின்னம் தானே! இல்லை, ஆணுக்குக் கட்டிடினால் அது ஆபரணம் என்றால் பெண்ணுக்கு ஆண் கட்டினாலும் அது ஆபரணம் தானே!

    இல்லை, மணமக்கள் இருவரும் தமக்குள் தாலி கட்டிக் கொண்டால் ஒருவர்க்கு ஒருவர் அடிமை ஆகிவிடுவார்கள் என்றும் வாதிட முடியாது. ஏனெனில் அடிமை என்றிருந்தால் ஆண்டான் என்று ஒருவர் இருக்க வேண்டும். அப்படியானால் கணவன் – மனைவிக்குள் இருவருமே அடிமை என்றால் யார் ஆண்டான் என்ற கேள்விக்கு ஏது பதில்? இது அறிவுக்குப் பொருந்தாமல் நகைப்பிற்கு அல்லவா இடம் கொடுக்கும்! ஆணுக்குப் பெண் சமம் என்று பேசுகின்றதற்குப் பதிலாக இருவரும் தமக்குள் சமமான அடிமைகள் என்றால் சிரிப்பு வராதா?

   அடுத்து, தமிழர்கள் திருமணத்தில் இணையும் ஆணையும் பெண்ணையும் ஒருவர்க்கொருவர் அடிமையாகக் கருதுவதில்லை. ஈருயிரும் திருமணத்தால் ஓருயிர் ஆவதால் அங்கே ஒருவர் மற்றொருவர்க்கு அடிமை என்ற பேச்சே நிகழ வாய்ப்பில்லை. அதனால் தான் திருமணத்திற்கு ‘ஓருயிர்க்கிழமை’ என்று பெயர் வைத்தான் தமிழன். ஆனால் ஆரியர் வழக்கில் தான் ஆணுக்குப் பெண் அடிமை என்பதற்கே ஒரு சடங்கு உண்டு. இது ஆபஸ்தம்ப மந்த்ரப் ப்ரச்னத்தின் முதலாவது பிரச்னத்தில் இரண்டாவது கண்டத்தில் 10-ஆவது மந்த்ரம் கூறும் சடங்கு.

    இதன் படி மணமகளின் கழுத்திற்கு மேலே ஒரு நுகத்தடி (மாட்டைப் பூட்டும் கட்டை) வைக்கப்பட வேண்டும். அந்த நுகத்தடியின் துளையில் பொன் துண்டம் ஒன்று வைக்கப்பட வேண்டும். அந்தத் துளை வழியாக புரோகிதர் நீரை ஊற்றி மேற் சொல்லிய 10 – வது மந்த்ரத்தைச் சொல்வார். இதனால் மணமகள் பரிசுத்தமாகட்டும் என்று அந்த மந்த்ரம் வேண்டுகிறது.

    “இவ்வாறு நுகத்தடியின் துவாரம் வாயிலாக மந்த்ர பூதமாக விடப்பட்ட ஜலத்தினால் இந்த விவாஹப் பெண்ணின் உடல் யாதொரு தோஷமும் இன்றித் திருமணத்துக்குத் தகுதியாக அமைந்துவிடும்” (பக்கம் 48; விவாஹ மந்த்ரார்த்தங்கள் – காமகோடி மடம் வெளியீடு.)

   இவ்வாறு மாட்டைப் பூட்டும் நுகத்தடியைக் கழுத்தில் வைத்து மணமகளுக்கு நீர் சொரியப்பட்டு தகுதிப்பாடு செய்து அதன்பின் திருமணம் செய்விக்கப்படுவதால் பிராம்மணர்களிடையே மருமகளை ‘மாட்டுப்பெண்’ என்றே கூறுவது பரவலான வழக்கு.

   ஆக, பிராம்மண புரோகிதத் திருமணத்தில் வேண்டுமானால் பெண்ணை அடிமை ஆக்குவதற்கென்றே ஒரு சடங்கு இருக்கலாம். ஆனால் தமிழர்கள் திருமணத்தில் எவ்வித அடிமைத் தனமும் தலைகாட்டுவதில்லை. மாறாக அது ‘ஓருயிர்க்கிழமை’ எனப் போற்றப்பட்டது காண்க. அப்படி இருக்க தாலியை எப்படி அடிமைச் சின்னம் என்று சீர்திருத்தவாதிகள் என்ற பெயரில் சில தமிழர்கள் கூறுகிறார்கள் என்பது அறியாமையிலும் அறியாமை; வேடிக்கையிலும் வேடிக்கை.

    அப்படியானால் தாலி என்பது தான் என்ன? அந்தச் சொல்லுக்கு அடிப்படை என்ன? அதன் உள்பொருள் என்ன? அது எப்போது தமிழரிடம் மரபாயிற்று? இந்தக் கேள்விகளுக்குத் தொல்காப்பியம் சரியான விடை அளிக்கிறது.

    உலக முழுதும் உள்ள மானிடவியல் விஞ்ஞானிகளும், தொல்லியல் ஆய்வாளர்களும், படிவ ஆய்வாளர்களும், வரலாற்றாசிரியர்களும் உலகத்தின் முதல் மனிதன் தமிழனே என்பதை நிறுவி இருக்கிறார்கள்; நிறுவியும் வருகிறார்கள். இதைத் தான் ‘கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி’ என்று புறப்பொருள் வெண்பா மாலைப் பாட்டொன்று கூறுகிறது.

    முதலில் தோன்றிய தமிழ்க் குடிகளிடையே சமூக அமைப்பு என்பது மெல்ல மெல்லத் தான் மலர்ந்திருக்கும். அது தான் இயற்கையும் கூட. இதே போன்று இன்னொரு இயற்கை உண்மை என்பது ஆண் – பெண்ணிடையே அமைந்த இனக் கவர்ச்சி. இந்த இனக் கவர்ச்சியால் ஒன்று கூடிய தமிழ ஆணும் – தமிழப் பெண்ணும் சேர்ந்து முறையான இல்லறம் நடத்தும் குடும்ப அமைப்புகள் எல்லாம் சமூகத்தில் மலராத நேரத்தில் ஆண் – பெண் கூட்டுறவு ஒரு திருமணச் சடங்கால் நேர்ந்திருக்க இயலாது. இந்தத் தளர்வான கூட்டமைப்பில் இயற்கையாகவே சபல புத்திக்கு ஆளாகக் கூடிய ஆண்கள் முதலில் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வேறு ஒரு அழகிய பெண்ணைக் கண்டவுடன் அவளுடன் வாழத் தொடங்கினான். அதனால் வெகுண்டெழுந்த முதற்பெண் சமூகத்தில் உள்ள பிறரிடம் நியாயம் கேட்கும் போது ஆண் முதற்பெண்ணுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று புளுகினான். அந்தப் பெண் தனக்கும் அவனுக்கும் இருந்த தொடர்பை எப்படி நிறுவுவாள்? உன்னையும் அந்தப் பெண்ணையும் இணைந்து செல்வதைக் கண்டிருக்கிறோம் என்று சமூகத்தவர் சொன்னால், நான் அவளோடு சகோதரி போல பழகினேன் என்று புளுகி விடுகிறான். அப்பெண் தனக்கும் அவனுக்கும் இடையே நிகழ்ந்த அந்தரங்க உறவை எப்படி நிரூபிப்பாள்? இது பெண்ணுக்கே இன்றளவும் உள்ள சங்கடம்!

    வடமாநிலத்தில் பதவி வகித்த ஓர் ஆளுநரின் மகன், தான் அவருடை மகன் தான் என்பதை நிரூபிக்க நீதிமன்றம் முன் எத்தனை ஆண்டுகளாக பாடுபட வேண்டி இருந்தது என்றும் அதற்காக (DNA) விஞ்ஞான சோதனை எல்லாம் நடைபெற்ற பின்னர் தான் வழக்கு முடிவிற்கு வந்தது என்பதையும் நாம் அறிவோம். இன்றைக்கே இந்த நிலை என்றால் மிகப் பழைய கற்காலத்து நிலைமையை எப்படிச் சொல்வது? அக்காலத்திய பெண்ணின் சங்கடத்தை எப்படி வர்ணிப்பது?

     அக்காலத்திய சமூகச் சான்றோர்கள் சிந்தித்தார்கள்; இதை இப்படியே விட்டுவிட முடியாது. இதனால் சமூகத்தில் முறை பிறழ்ந்த குழந்தைகள் பல்கிப் பெருகி சமூக அடித்தளமே ஆட்டம் கண்டுவிடும். எனவே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சிந்தித்தார்கள். இறுதியில் ஆண் – பெண் இருவரும் பலரறிய மணந்து கொள்ளும் ஏதாவது ஒரு சடங்கை உண்டு பண்ணி அந்தக் கட்டுக்குள் இருவரும் கூடுவதானால், பொய்யான, முறையற்ற ஆண் – பெண் உறவுகளைத் தடுத்துவிடலாம் என்று எண்ணினார்கள். அப்படி அவர்கள் கூடிக் கண்டு பிடித்த சடங்கு தான் திருமணம் என்பது என்று தொல்காப்பியம் கூறுகிறது. உரிய தொல்காப்பிய வரிகள் வருமாறு:

    “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

     ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

    இங்கு கரணம் என்பது திருமணமாகிய சடங்கைக் குறிக்கும். ஐயர் என்பது கற்காலச் சான்றோர்களைக் குறிக்கும். காரணம், தொல்காப்பியம் இடைச்சங்க காலத்தில் கதவபுரம் என்னும் கபாடபுரத்தில் தெற்கே குமரி முனைக்கும் கீழே ஒரு கடல்கோளுக்கு முன்னே அரங்கேறிய நூல். அப்போது தொல்காப்பிய நூல் பிறந்த இடத்திற்கு 5000 மைல்களுக்கு வடக்கே கூட சமஸ்கிருதமும் இல்லை; சமஸ்கிருத வேத பிராம்மணர்களும் இல்லை. எனவே இப்போது நாம் ஐயர் என்று தவறாகப் பிராம்மணர்களுக்கு ஏற்றிக் கூறுவது அப்போதைக்குப் பொருந்த வாய்ப்பே இல்லை. எனவே இந்த ஐயர் தமிழ்ச் சான்றோர் தலைவர் என்பதே முற்றான உண்மை.

      ஆகவே தமிழ்ச் சான்றோர்கள் சமூகத்தில் நடந்த தவறுகளை திருத்தி ஒரு நாகரிகக் குடும்ப அமைப்புள்ள சமூகத்தை உருவாக்க செய்த உத்தியே இந்தத் திருமணச் சடங்கு. இது இரண்டு பேருக்கு அளித்த பாதுகாப்பு. ஒன்று சமகத்திற்குப் பாதுகாப்பு; இன்னொன்று பாதிக்கப்படக் கூடிய பெண்ணுக்கும் பாதுகாப்பு. இப்படித் தான் இந்த அரிய திருமணச் சடங்கு தமிழ் மக்களிடையே உதயமாயிற்று என்று தொல்காப்பியம் கூறுகிறது.

    இங்கே கரணம் என்பது இரு பொருள் உடையது. கரணம் என்பது அரணம் என்பதன் திரிபு. அரணம் என்றால் பாதுகாப்பு என்று பொருள்; அரண் செய்வது என்று பொருள். அரணம் கரணம் எனத் திரிந்தது – அனல் என்பதே கனல் என்று திரிந்தது போல என்க.

    கரணம் என்ற சொல்லிற்கு எழுதுவது என்றும் பொருள். ஓலை எழுதுபவனுக்குக் கரணத்தான் என்று பெயர்.

    எனவே மேற்கண்ட தொல்காப்பிய நூற்பா வரியில் ‘ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்பது தமிழ்ச் சான்றோர் தலைவர்கள் கரணம் என்னும் பாதுகாப்புடைய திருமணச் சடங்கை யாத்தனர் என்று ஒரு பொருள். இன்னொரு பொருள் என்ன எனில் தமிழ்ச் சான்றோர் தலைவர்கள் திருமணச் சடங்கை ஓலையில் எழுதி பாதுகாப்பு செய்தனர் என்பதாகும். இது உடம்பொடு புணர்த்தல் என்னும் இலக்கண விதியால் அமைந்தது.

    இதில் இரண்டு பொருளும் சிறப்பு என்றாலும், ஓலையில் எழுதிப் பாதுகாப்பு செய்தனர் என்பது சிறப்பில் சிறப்பு. இதன் அடிப்படையில் தான் தாலி என்ற பெயர் வந்தது. தாலம் என்ற தமிழ்ச் சொல்லிற்குப் பனையோலை என்று பொருள்.

   எனவே பனையோலையில் என்ன எழுதப்பட்டது என்றால் மணமகன், மணமகளை எவ்வித துரோகமும் இன்றி தன் இறுதி மூச்சு உள்ள வரை பாதுகாப்பேன் என்று எழுதிக் கைச் சாத்திட்டு, சாட்சிகளும் அதில் கைச் சாத்திட அதைச் சுருட்டி ஓர் உலோகக் குழையில் இட்டு அதனை ஒரு கயிற்றில் கட்டி மணமகள் கழுத்தில் கட்டுவது தான் தாலி. தாலமாகிய பனை ஓலையில் எழுதிக் கோத்த கயிறானதால் அதற்குத் தாலி எனப் பெயர் வந்தது. அது பாதுகாப்பாக எழுதியது என்பதால் தொல்காப்பியர் கரணம் என்றார். காரணம், கரணம் என்பது அரணம் என்பதன் திரிபாய் பாதுகாப்பையும் குறிக்கும், அதில் எழுதுவதே பாதுகாப்பு என்பதால் எழுதுவதைக் குறிக்கும் சொல்லான கரணமும் ஆகும் என்று ஒன்றிலேயே இரண்டையும் புணர்த்தி, உணர்த்தினார் என்க.

   இதில் மணமகன் தான் உறுதிமொழி எழுதி மணமகள் கழுத்தில் கட்டினான் என்பது எதனால் பெறப்படும் என்று கேள்வி எழும். பொய்யும், வழுவும் செய்யக் கூடியவன் மணமகன் தான் என்பதால் பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் எழுதிக் கொடுக்க வேண்டியவன் அவனே ஆதலால் என்க.

    இல்லை, மணவோலை என்று சொல்வது உண்டே, அது திருமணம் இன்ன நாளில், இன்னார் மகனுக்கும், இன்னார் மகளுக்கும் நடைபெறும் என்று அறிவிப்பது தானே என்றும் சிலர் குழப்பிக் கொள்ளலாம்.

    மணவோலை என்பது மணமக்களின் பெற்றோர் திருமணத்திற்கு தம் சம்மதம் உண்டு என்று உலகோர்க்கு அறிவித்து அவரை அழைப்பது. இதை யாரும் எவர் கழுத்திலும் கட்டுவதில்லை. ஆனால் தாலி என்பது தாலமாகிய பனையோலையில் மணமகன் மணமகளுக்கு செய்யும் உறுதிமொழி அளித்து அவள் கழுத்தில் கட்டுவது. எனவே மணவோலை வேறு; தாலியில் உள்ள தாலவோலை வேறு.

    தால ஓலை ஒரு குழையில் அடைக்கப்பட்டுக் கயிற்றில் கோக்கப்படுவது என்பதற்கு அடையாளமாக இன்று கூட தாலி உருக்களில் ஒன்றாகச் சிறு குழை கோக்கப்படுவதைக் காணலாம்.

    தொல்காப்பியர் கூறும் கரணம் என்பது எதைக் குறிக்கும் என்று மேலே கண்டோம். இது பற்றி பல சான்றோர்களின் கருத்துக்களை சான்று காட்டலாம். ஓரிரண்டு சான்றுகளை இங்குக் காண்போம்.

    “தொல்காப்பியர் கூறும் கரணம் என்ற சொல் திருமணச் சடங்கைக் குறிப்பதாகும். கரணத்தின் நோக்கத்தையும், கரணத்தின் போது மேற்கொள்ளப்படும் உறுதிமொழியையும், மணமக்கள் தம் வாழ்நாள் முழுவதும் போற்றிக் காத்தல் வேண்டும்”

           “தமிழர் திருமணம்” பக்கம் 191 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

     “கரணம் என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளும் கொள்ளலாம். இக்காலத்தும் கரணம் என்று சொல்லப்படுபவர்கள் ஊர்க்கணக்கு எழுதும் கணக்கப்பிள்ளைகள் ஆவார். கரணம் கணக்கு எழுதுவோரைக் குறிப்பதால் எழுதுதலையும் குறிப்பதாகும். ஆதலின் இன்ன ஆடவனுக்கு இன்ன பெண் மனைவி என்று எழுதிக்கொள்ளும் பழக்கமும் இருந்திருக்கலாமன்றோ?”

           தொல்காப்பிய ஆராய்ச்சி; பக்கம் 179; டாக்டர் சி.இலக்குவனார்.

   “தாலி: பழங்காலத்தில் அணிகலன்கள் செய்யும் நாகரிகம் இல்லாதிருந்த போது ஒழுக்கம் மட்டும் உயர்ந்திருந்தது. தாலம் என்பது பனையோலையை ஒழுங்கு செய்து மஞ்சள் தடவி அதில் ‘இன்னாருடைய மகளை, இன்னாருடைய மகன் மணந்து கொண்டார், வாழ்க!’ என்றெழுதி அதைச் சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோத்து மணமகள் கழுத்திலே தரிப்பர். தால ஓலையில் எழுதிக் கட்டியதனால் அதற்குத் தாலி என்று பெயர் வந்தது. நாகரிகம் வளர்ந்த பிறகு பனையோலை தண்ணீர் பட்டு நைந்து போவதால் தாலியைத் தங்கத்தினால் செய்து தரித்துக் கொண்டனர்.”

    ‘திருமண வாழ்த்து’ – பக்கம் 18 – தெய்வத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

     தாலி என்பதன் உள்ளுறை என்ன என்பதை மேலே மூன்று தமிழ்ச் சான்றோர்கள் கூறியதும், இதற்கு முன் நாம் கூறிய விளக்கமும் ஒத்திருப்பது காண்க.

     இதில் என்ன வேறுபாடு என்றால் எழுதிக் கொடுக்கும் பனையோலை சுருட்டப்பட்டு தாலிக் கயிற்றில் கோக்கப்பட்டு மணமகள் கழுத்தில் கட்டப்பட்டது என்பதை மேலே மூவரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அந்தப் பனையோலையில் எழுதிக் கொடுக்கப்பட்ட உறுதிமொழி பற்றி ஒருமித்த கருத்து காணப்படவில்லை.

     ஆனால் முன்னாலேயே காட்டியபடி பொய்யும், வழுவும் கூறக்கூடிய வாய்ப்புடைய மணமகன் தான் மணமகளுக்கு உறுதி மொழி எழுதிக் கொடுக்க வேண்டும் என்பது தொல்காப்பிய நூற்பாவின் படியும், இன்றும் மணமகன் தான் மணமகள் கழுத்தில் தாலி கட்டுகிறான் என்ற நடைமுறை உண்மையாலும் அது மணமகன் பனையோலையில் மணமகளுக்கு எழுதிக் கொடுக்கும் உறுதி மொழி என்பது மறுக்க இயலா உண்மை எனலாம்.

    இந்தத் தாலி பெண்ணுக்குரிய பாதுகாப்பிற்கு ஆண் உறுதி அளிப்பது. அது பெண்ணுக்கு மட்டுமல்ல முறையான சமூகத்திற்குப் பாதுகாப்பு அளிப்பது. இது பாதுகாக்கப்பட வேண்டியது. எனவே பாதுகாப்பான பெண்ணின் மார்பகத்தில் தொங்கும் படியாக பெண்ணின் கழுத்தில் கட்டும்படி செய்தனர் தமிழர்.

    இது எந்த வகையில் பெண்ணை அடிமையாக்குவது? இது எப்படி பெண்ணின் அடிமைச் சின்னமாக ஆகும்? தாலியால் உண்மையில் ஆண் தான் பெண்ணுக்குக் கடப்பாடுடையவன் ஆகிறான். அதாவது தாலி பெண்ணைக் கட்டுப்படுத்துவது அல்ல, ஆணைக் கட்டுப்படுத்துவது – பழந்தமிழ் வழக்கப்படி. அதனால் தான் இன்றும் கூட கட்டுக்கு அடங்காமல் திரிகின்ற ஆணுக்குக் கல்யாணம் செய்து விடுங்கள்; எல்லாம் சரியாகி விடும் என்ற பேச்சு வழக்கும் எழுந்தது.

    ஒரு நாடு எப்போது நல்ல நாடாகும் என்று ஔவையார் புறநானூற்றில் கூறுகிறார். அந்த நாட்டில் ஆக்ரோஷமும், ஆத்திரமும் இயற்கையாக மிகுந்த ஆடவர்கள் தணிந்த சிந்தையோடு நல்லவர்களாக இருப்பார்களேயானால் அதுவே சிறந்த நாடு என்கிறார்.

      நாடா கொன்றோ காடா கொன்றோ

      அவலா கொன்றோ மிசையா கொன்றோ

      எவ்வழி நல்லவர் ஆடவர்

      அவ்வழி நல்லை வாழிய நிலனே    (புறம்; 187)

     பெண்ணைப் பற்றிக் கவலையில்லை. இயற்கையாகவே பெரும்பான்மையான பெண்கள் நல்லவர்களாகவே இருப்பர் என்று தமிழ்ச் சமூகம் கருதியதால் பெண்ணுக்கு ‘நல்லார்’ என்று பெயர் வைத்தது. எனவே நல்லார்க்கு ஆண்களிடமிருந்து பாதுகாப்பு தருவதற்கே தாலியை உருவாக்கினர் தமிழர்.

    திருமணமும், தாலி கட்டும் சடங்கும் அற்புதமான நாகரிக சமூகத்தின் சிறந்த பாதுகாப்பு என்று தமிழரிடமிருந்து உலகெங்கிலும் உள்ளவர்கள் பாடம் கற்றனர் என்பதற்கு ஆங்கிலத்தில் காணப்படும் ‘தாலிஸ்மேன்’ என்ற சொல்லே சான்று. இது பாதுகாப்பை ஏதோ ஒரு வகையில் தருவதாகக் கருதப்படும் ‘தாயத்திற்கு’ ஆங்கிலேயர் சூட்டிய பெயர். பாதுகாப்பு என்றது நினைவிற்கு வரும்போது சிறந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்த தமிழர்களின் தாலி அவர்களின் நினைவில் வருகிறது. எனவே தாயத்தை ‘தாலிஸ்மேன்’ என்று அழைத்தார்கள். அதில் கூட ஒரு நயம் உண்டு. அது ஆண் பெண்ணுக்குக் கொடுத்த பாதுகாப்பு என்பதால் தாலி என்பதோடு ‘மேன்’ என்ற ஆணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்தார்கள்.

    இவை எல்லாம் தாலிக்கும் தமிழருக்கும் உள்ள உண்மையான பெருமைகள். இவை இப்படி இருக்க, உள்ளதையே உணராமல் தாலி தமிழர்க்கு உரியதல்ல என்று 1954-ல் மா.ராசமாணிக்கனார் என்ற ஆய்வறிஞர் எப்படிச் சொல்ல முடிந்தது! இது தான் வியப்புக்குரிய விஷயம். ‘தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்’ என்று திருமந்திரத்தில் திருமூலர் ஆன்மிக நோக்கில் ஒன்றைக் கூறினார். அது பிற்காலத் தமிழர்களுக்கும், தற்காலத் தமிழர்களுக்கும் முற்றிலும் பொருந்தும்!

    இந்த விளக்கங்களின் அடிப்படையில் ஆணுக்கும் பெண் தாலி கட்ட வேண்டும் என்று சிலர் கூறுவதை நோக்கினால் அதன் உள்ளீடற்ற உண்மை தானே விளங்கும். ‘இறுதி வரை உன்னை நான் பாதுகாப்பேன்’ என்று மணமகன் மணமகளுக்கு உறுதிமொழி எழுதிக் கட்டுவது தான் தாலி என்று பார்த்தோம். இப்போது ஆணுக்குப் பெண் தாலி கட்டினால் என்ன எழுதிக் கொடுப்பதாகப் பொருளாகும்? ‘மணமகனாக வரும் உன்னை மணமகளான நான் இறுதி வரை பாதுகாப்பேன்’ என்று எழுதிக் கொடுத்ததாக ஆகாதா? நல்லது, ஒரு பெண்ணால் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள ஆண்கள் எல்லாம் தாராளமாக பெண் கையால் தாலிக் கட்டிக் கொள்ளலாம்.!

    அதே போன்று, தாலி புனிதமானது என்றும், தெய்வீகம் அதன் உள்ளடக்கம் என்றும், பெண்ணுக்கும், முறையான, சீரான சமூகத்திற்கும் பாதுகாப்பு என்றும், ஆணைக் கட்டுப்படுத்துவது என்றும் இது முற்றிலும் பழந்தமிழர் கண்ட ஏற்பாடு என்றும் உணராத அறியாமை நிறைந்த பெண்கள் தாலியை ஆணாதிக்கத்தின் அடையாளம் என்று தாராளமாகத் தூக்கி எறியலாம். அவர்கள் கழுத்தில் தாலி இருக்கும் ஒவ்வொரு கணமும் தாலியும், சமூகமும் மேலும் மேலும் மாசடைந்து கொண்டே வரும் என்பது வெள்ளிடைமலை.

    முடிக்கும் முன் பழந்தமிழரது திருமணம் எந்த அளவில் தெய்வீகமாக நடந்தது அதன் சடங்கு முறைகள் எப்படி இருந்தன என்பதை 86 மற்றும் 136 – ஆவது அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, சிலப்பதிகாரம், கலித்தொகை முதலான இலக்கியங்களை ஆராய்ந்து எழுதிய ‘தமிழர் திருமணம்’ என்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீட்டு நூலில் தொகுத்துக் கூறப்பட்டவைகளை படிப்பவர் பார்வைக்கு வைத்து முடிக்கலாம். இதனால் எது எது தமிழரின் வழக்கம் என அறிய தமிழர்களுக்கு வாய்ப்பு நேரும்.

    “இத்தகைய தொகை நூல்கள் வாயிலாகப் பழந்தமிழரின் திருமண நிகழ்ச்சிகளால் அறியவல்ல செய்திகள்:

  1. மணமக்கள் இல்லம் செம்மண் பூசி, புதுமணல் பரப்பி மாலைகள் தொங்க விடப்பட்டு அலங்கரிக்கப்படுதல்.
  2. மணம் நடக்கும் வீட்டில் சங்கொலி பறையொலி முழங்கும்.
  3. மணத்திற்கு முன் தலைவிக்குச் சிலம்பு கழி நோன்பு நடைபெறும் (குறிப்பு: இதுவே இப்போது சீக்கழித்தல் என வழங்கப் பெற்று நடைபெறுகிறது.)
  4. மணத்தில் முதல் நிகழ்ச்சியாக சிறந்த விருந்து அளித்தல்.
  5. மணப்பந்தலில் புதுமணல் பரப்பப்பட்டு விளக்கு வைக்கப்படுகிறது.
  6. இறைவழிபாடு செய்தல்.
  7. புள் நிமித்தம் பார்த்தல்.
  8. இளங்காலை நேரத்தில் திங்கள் உரோகிணியுடன் சேரும் நல்லோரையில் திருமண விழா நடைபெறும்.
  9. திருமண முழவும் பெரிய முரசும் முழங்கும்.

10. மங்கலப் பெண்டிர் குடங்களில் நீரேந்தி வருவர்.

11. அந்நீர்க் குடங்களில் நெல்லும் மலரும் தூவி மக்கள் ஈன்ற மகளிர் நால்வர் மணமகளை வாழ்த்தி மணநீராட்டல்.

12. காப்பு நூலைக் கட்டுதல்.

13. புத்தாடை அணிவித்தல்.

14. இழை அணிவித்தல்.

15. பெற்றோர் மணமகளைத் தலைவனுக்கு வாழ்த்தி அளித்தல்.

   அகநானூறு பாடலொன்றில் ‘தொன்றியல் மரபில் மன்றல் அயர’ என்று புகழ்ந்து போற்றிய மரபின் வழி நடந்த தமிழர் திருமணச் சடங்குகள் இவை என்பதைத் தமிழர் உணர வேண்டும்.

    இன்று காலக் கோளாறின் காரணமாக தமிழை ஏற்றிப் போற்றும் அன்பர்களில் பலர் பிராம்மண எதிர்ப்பு என்ற ஒன்றின் அடிப்படையிலேயே நாத்திகர்களாகத் தம்மைப் பறை சாற்றிக் கொள்வதில் கடைப்பிடியாக இருக்கிறார்கள். ஆனால் பழந்தமிழர்கள் முற்றிலும் தெய்வ வழிபாட்டினர். மேலே திருமணச் சடங்குகளில் ஒன்றாக இறை வழிபாடு செய்தல் என்பது உள்ளதை இலக்கியங்கள் சான்று பகர்வதைக் காண்க.

    ஒரு புறம், இவர்கள் பிராம்மண எதிர்ப்புக் கொள்கை காரணமாக தெய்வ வழிபாட்டையே திருமணத்தில் தூக்கி எறிந்து விட்டு அதன் காரணமாக தாலியையே மறுக்கும் கொள்கையினராகி விடுகிறார்கள்.

     மறுபுறம், வேறு வகை தமிழர்கள் முற்றிலும் பிராம்மணர்களையே தங்கள் இல்லத் திருமணங்களில் அழைத்து வந்து சடங்காற்றச் செய்வது தான் மணமக்களின் சிறப்பான வாழ்வுக்கு வழி வகுக்கும் என்று மூடநம்பிக்கையால் முத்தமிழ் மரபுகளை முழுதழிக்கிறார்கள். தமிழர் மரபுக்கு மாறான பிராம்மணப் புரோகிதர்களைத் தம் இல்லத் திருமணத்திற்கு அழைத்து வந்துவிட்டு அவர் தம் பிராம்மண மரபுகளை நம் வீட்டில் திணித்து விடுகிறார் என்று தமிழர் புலம்புவதில் நியாயமே இல்லை. அழைத்து வந்துவிட்டு அலட்டிக் கொள்ளலாமா?

     எனவே நாத்திகத் தமிழராயினும் சரி, ஆத்திகத் தமிழராயினும் சரி, இருவருமே தமிழர் மரபு இன்னதென்று அறியாமல் தடுமாறுவதைக் கண்டு தமிழ்ச் சொக்கன் அமிழ் வெட்கன் ஆகித் தலை குனிவான் என்பதில் தினையளவும் ஐயம் இல்லை.

    குங்குலியக் கலய நாயனார் திருப்பனந்தாளில் தலை சாய்ந்த சிவலிங்கத்தை கயிற்றைத் தம் கழுத்திலிட்டு இழுத்து நிமிர்த்தி நேராக்கினார் என்று பெரிய புராணம் கூறுகிறது. அதற்குக் கல்வெட்டுகளும் சான்று கூறுகின்றன.

    ஆனால் இந்தத் தலைகுனிவை நிமிர்த்த எவரை இறைவன் நியமித்துள்ளான் என்பது அவனுக்கே வெளிச்சம்!

    இப்போதைக்கு, எம் உள்ளம் உவந்த தமிழ்ச் சமுதாயமே! தமிழர் மரபிற்கு மாறாத தமிழ்த் திருமணங்களையே தமிழர்களைக் கொண்டு செய்க! தமிழர் மரபின் தலையாய சின்னமான தாலியைப் போற்றுக!

     செங்கம லத்திறை சிந்தையின் ஆற்றி

     அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்டே

     மங்கல நாணை மணிக்களம் ஆர்த்து

     நங்கை முடிக்கொர் நறுந்தொடை சூழ்ந்தான்.

 

Top