Home » சைவக் கேள்வி » சைவக்கேள்விச் சிற்றம்பலம் – பகுதி14

சைவக்கேள்விச் சிற்றம்பலம் – பகுதி14

செந்தமிழ்வேள்விச் சதுரர்

அறிவாகரர்: என்ன சிற்றம்பல அன்பரே! என்ன கொஞ்ச நாட்களாக ஆளையே காணோம். எல்லா சந்தேகங்களும் தீர்ந்து விட்டனவா?

சிற்றம்பல அன்பர்: சந்தேகமாவது தீர்வதாவது. எந்தேகம் இருக்கிற வரைக்கும் சந்தேகம் தீராது என்று நினைக்கின்றேன். இடையில் கார்த்திகை தீபம் வந்துவிட்டது. எனவே திருவண்ணாமலை சென்றிருந்தேன். அப்பப்பா! என்ன கூட்டம், என்ன கூட்டம்! ஏறத்தாழ 20 லட்சம் பேர் இருக்கும் என்கிறார்கள்.

அறிவாகரர்: நீங்கள் குறைவாகச் சொல்கிறீர்கள். எனக்குத் தெரிந்த கணக்குப்படி மொத்தம் 33 கோடியே 20 லட்சம் பேர் கூடினார்கள் என்று தகவல்!

சிற்றம்பல அன்பர்: ஐயயோ! இதென்ன புதுக்கணக்கு! இந்தக் கணக்கை எங்கிருந்து பெற்றீர்கள்! 20 லட்சம் பேர்கள் இடையே மாட்டிக்கிட்டு அவதிப்பட்டதே இன்னும் ஆறவில்லை. செக்கை ஆட்டி எண்ணெய் எடுப்பது போல் பிழிந்து விட்டார்கள். இதில் முப்பத்து மூன்று கோடி எப்படி வந்தது? எப்ப வந்தது?

அறிவாகரர்: 20 லட்சம் பேர் தரையிலிருந்து பார்த்த மனிதர்கள் சிவனடியார்கள்; 33 கோடி பேர் ஆகாயத்தில் மேலே குழுமி அருட்பெருஞ்சோதியைத் தரிசித்த தேவர்கள்!

சிற்றம்பல அன்பர்: ஓ! அப்படிச் சொல்கிறீர்களா!

அறிவாகரர்: இவர்கள் வருஷா வருஷம் வருபவர்கள் தாம்! கி.பி.16-ஆம் நூற்றாண்டில் ஒருமுறை கற்பனைக் களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் கார்த்திகை தீபத்திற்குத் திருவண்ணாமலைக்குச் சென்ற போது சேகரித்த செய்தி இது. அப்போது நடந்த ஒரு சுவையான செய்தியையும் அவர் கூறியிருக்கிறார்.

சிற்றம்பல அன்பர்: அடடே! கேட்கவே ஆவலாக இருக்கிறதே! அப்படி என்ன நடந்தது?

அறிவாகரர்: மேலே இருந்து தரிசனம் செய்து கொண்டிருந்த தேவர்கள் கூட்டத்தில் இரண்டு தேவர்கள் பேசிக் கொண்டதை ஒட்டுக்கேட்டு சிவப்பிரகாச சுவாமிகள் பதிவு செய்திருக்கிறார். அதாவது ஒரு தேவன் சொன்னானாம்: ”அதோ, பார்! கோடிக் கோடியாய் மக்கள் இங்கே தரையில் கூடி இருக்கிறார்கள். அவர்களுக்கு இல்லாத வாய்ப்பு தேவர்களாகிய நமக்குத் தான்! மனிதர்களின் கண்கள் நொடிக்கு நொடி இமைத்துக் கொண்டே இருக்கின்றன. எனவே அவர்களால் இங்கே கார்த்திகை தீபத்தை விட்டு விட்டுத் தான் பார்க்க முடியும். ஆனால் தேவர்களாகிய நமக்கோ இமைக்காத கண்கள். எனவே மலைமேல் இறையொளியை விடாமல் தொடர்ந்து காண முடியும். எனவே நாம் எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள்!” என்றானாம்.

     அதற்குப் பதில் சொன்ன மற்றத் தேவன் முதலில் கருத்து சொன்ன தேவனைக் குட்டி விட்டுச் சொன்னானாம்: ”மடையா! திருவண்ணாமலைக்கு வந்தால் கிரிவலம் செய்வது தான் முக்கியம். வலம் வருவதற்கு மனிதர்களுக்குக் கால்கள் இருக்கின்றன. தேவர்களாகிய நமக்குக் கால்கள் கிடையா. எனவே நம்மை விட புண்ணியம் செய்தவர்கள் மனிதர்கள் தான்.”

சிற்றம்பல அன்பர்: அடடா! எவ்வளவு சுவையான விளக்கம்! கூட்டத்தில் நான் பட்ட அவதியெல்லாம் இதைக் கேட்ட கணத்திலே பறந்தோடி விட்டது. ஆமாம்! இதிலே எனக்கு ஒரு சந்தேகம்!

அறிவாகரர்: இதிலுமா? என்ன?

சிற்றம்பல அன்பர்: இது 16-ஆம் நூற்றாண்டில் நடந்தது என்கிறீர்கள். இது எப்படி தங்களுக்குத் தெரிந்தது?

அறிவாகரர்: நல்ல சந்தேகம்! பதிவு செய்தவர் சிவப்பிரகாச சுவாமிகள் என்றேன். அவர் மிகப் பெரிய புலவரல்லவா? எனவே இச்செய்திகளை எல்லாம் தொகுத்து ‘சோணசைல மாலை’ என்று ஒரு நூல் பாடி இருக்கிறார். அந்நூலில் இந்தப் பாடல் வருகிறது:

     பவமிலேம் இனியாம் என்றிறு மாந்து

        பயமற இருந்திடப் பத்தி

     நவமிலேம் அடியேம் என்செய்வான் இருந்து

        நாளினை வறிதொழிக் கின்றேம்

     அவமிலேம் இமையா விழியினால் காண்கை

       யால்வலம் கொளஅடி நிலம்தோய்

     தவமிலேம் எனவான் சுரர்தொழும் சோண

       சைலனே கைலைநா யகனே!

சிற்றம்பல அன்பர்: ஐயா! இம்மாதிரி களஞ்சியக் கவிதையை எல்லாம் உங்களிடம் கேட்ட நான் தான் உண்மையில் புண்ணியம் செய்தவன்! உங்களோடு இருந்தால் பொழுதெல்லாம் புண்ணியமாகப் போகும். உண்மையிலேயே நான் திருவண்ணாமலை தீபக் கூட்டத்தில் உங்களை மிகவும் நினைத்துக் கொண்டேன். சும்மா முகமனுக்காகக் கூறவில்லை. அங்கே கூட்டத்தில் இருந்த போது இரண்டு பிராம்மணர்கள் ‘வைசேஷிகம்’ என்று பேசிக் கொண்டார்கள். ‘வைசேஷிகம்’ என்பது என்ன? பலகாரமா? பண்டமா? கடையில் கிடைக்குமா? கிலோ எவ்வளவு விலை இருக்கும்? இதெல்லாம் தெரியாம இருக்கோமே என்று எனக்கே என்மீது வெறுப்பு வெறுப்பாய் வந்தது.

அறிவாகரர்: (சிரித்துக் கொண்டே) வைசேடிகத்தைப் பற்றி இன்னும் கூட சிலர் பேசிக் கொள்வதே அதிசயம் தான். அது ஒரு வடவேத மதத்தின் ஒரு கிளை. இதற்கு முன் பேசிக் கொண்டிருக்கும் போது நியாயம் என்று ஒரு மதத்தைப் பற்றிப் பேசினோம் அல்லவா? அதன் சகோதர மதம் தான் வைசேடிகம். நியாயமும் வைசேடிகமும் இரட்டைப் பிறவிகள். அதனால் நியாய வைசேடிகம் என்றே முற்காலத்தில் சேர்த்தே சொல்வார்கள். நியாயத்தைப் பற்றி ஏற்கெனவே பார்த்து அதன் பொருந்தாமையான முரண்பாடுகளை எடுத்துரைத்தோம். நீங்கள் இப்போது வைசேடிகத்தைத் திருவண்ணாமலையில் கூட்டத்தில் இருந்து அழைத்து வந்திருக்கிறீர்கள். அதையும் அலசிப் பார்த்து விடுவோம்.

சிற்றம்பல அன்பர்: வைசேடிகம் என்பது ஒரு மதமா? நான் கேள்விப்பட்டதே இல்லையே! இந்த மதத்தை யார் உருவாக்கினார்?

அறிவாகரர்: இம்மதத்தை உருவாக்கியவர் கணாத முனிவர்.

சிற்றம்பல அன்பர்: இந்த மதத்தின் கடவுள் யார்?

அறிவாகரர்: இவர்களும் கடவுளை ஒப்புக் கொள்வதில்லை. இது கணாத முனிவர் இம்மதத்தை உருவாக்கிய போது இருந்த நிலை. ஆனால் மெல்ல மெல்ல இம்மதத்தைப் பின்பற்றியவர்கள் ஒரு கடவுளை ஒப்புக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

சிற்றம்பல அன்பர்: அப்பா, ஒரு வழியா பின்னால் கடவுளை ஒப்புக் கொண்டார்களா?

அறிவாகரர்: ‘பரபரக்க வேண்டாம், பலகாலும் சொன்னேன் வரவரக் கண்டு ஆராய் மனனே’ என்று சிவபோகசாரம் கூறுவது தான் இப்போது எனக்கு நினைவிற்கு வருகிறது. ஒப்புக் கொண்ட கடவுள் என்ன செய்கிறார் என்று கேட்டால் சும்மா தான் இருக்கிறார் என்கிறார்கள். இதற்கு முதன்முதலில் இம்மதத்தை உருவாக்கிய கணாத முனிவரே மேல் என்று நினைக்கத் தோன்றும்.

சிற்றம்பல அன்பர்: இந்த உலகம் எப்படி உருவாயிற்றாம்? அதைக் கடவுள் படைக்கவில்லையா? என்ன சொல்கிறார்கள் இவர்கள்!

அறிவாகரர்: உலகப் படைப்புக்கு மூல காரணம் அணுக்கள் தான் என்று கூறுகிறார்கள். இந்த அணுக்கள் ஒன்று கூடி தான் இந்த உலகமே உண்டாயிற்று என்று கூறுகிறார்கள்.

சிற்றம்பல அன்பர்: இந்த அணுக்கள் எப்படி ஒன்று சேர்ந்தன? ஒவ்வொரு அணுவிற்கும் தான் எந்தெந்த அணுவுடன் கூட வேண்டும் என்று அதற்கே தெரியுமா? எப்படி அவை தாமாகக் கூடும்?

அறிவாகரர்: இல்லை, அவை தாமாகக் கூடவில்லையாம். ‘அதிர்ஷ்டம்’ என்று ஒன்றிருக்கிறதாம்; அது தான் இந்த அணுக்களைக் கூட்டுகிறதாம்!

சிற்றம்பல அன்பர்: நல்ல வேடிக்கை இது! அந்த அதிர்ஷ்டம் தான் கடவுள் என்று பின்னால் சொல்லிவிட்டார்களா?

அறிவாகரர்: அப்படியும் இல்லை; அதிர்ஷ்டம் தனி; கடவுள் தனி. ஆனால் கடவுள் அணுக்களை இயக்கவில்லை. ‘அதிர்ஷ்டம்’ தான் அணுக்களை இயக்குகின்றது.

சிற்றம்பல அன்பர்: இப்படிக் கூடவா ஒரு மதம் இருக்கும்! விசேஷம் தான்!

அறிவாகரர்: சரியாகச் சொன்னீர்! ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு விசேஷம் என்பது இவர்கள் கொள்கை. அதனால் தான் இவர்களுக்கு வைசேஷிகர் என்றும் இவர்கள் மதத்திற்கு வைசேஷிகம் என்றும் பெயர் வந்தது. நாம் தமிழ் எழுத்துக்கு ஏற்ப மாற்றி வைசேடிகம் என்றும் வைசேடிகர் என்றும் கூறுகிறோம்.

சிற்றம்பல அன்பர்: இந்த மாதிரி உள்ள மூல அணு ஒன்றா அல்லது பலவா? என்ன சொல்கிறார்கள் இவர்கள்.

அறிவாகரர்: கணாதர் உருவாக்கிய போது இம்மதத்தில் கூறப்பட்ட மூல அணுக்கள் ஒன்பது. அவை 1) ஆகாய அணு 2) காற்றணு 3) தீயணு 4) நீரணு 5) நிலவணு 6) காலவணு 7) இடவணு 8) ஆன்மவணு 9) மனவணு.

சிற்றம்பல அன்பர்: ஆகாயமே எல்லாவற்றிற்கும் இடம் கொடுப்பது. அப்படி இருக்க ஆகாய அணுக்குள் இடம் அடங்கி விடாதா? அப்புறம் ஏன் தனியாக இட அணு?

அறிவாகரர்: சரியான கேள்வி. அதற்கு இம் மதத்தில் பதில் இல்லை. அதே போல் ஆன்ம அணுவுக்குள் மன அணு அடக்கம். அப்புறம் மனத்திற்கு ஏன் தனியே ஒரு அணு? இதற்கும் சரியான பதில் இல்லை. ஏதோ அவர்கள் மனத்திற்குத் தோன்றியது அதனால் மன அணு என்று ஒன்றை வகைப்படுத்திக் கொண்டார்கள். மனம் உடலின் ஒரு கூறு. உடல் ஐம்பூதங்களால் ஆனது. எனவே ஐம்பூதங்களில் உள்ள ஆகாயத்திற்குள்ளேயே மனம் அடங்கி விடும். மனவெளி என்கிறோம் அல்லவா? இந்த மனம் அடங்கிய உடலுக்குள் இயங்கும் உயிருக்குத் தான் ஆன்மா என்று பெயர். எனவே தான் ஆன்ம அணுவிற்குள் மன அணுவும் அடக்கம் என்று வேறு சொல்லில் வைத்தும் முதலில் கூறினேன்.

     மற்றொன்றைக் கவனியுங்கள்! இவர்களின் கொள்கைப்படி மொத்தமே மூல அணுக்கள் ஒன்பது தான். அதில் கடவுளைப் பற்றி பேச்சே இல்லை பாருங்கள்!

     ஏதோ இவர்கள் உலகத்தை இயக்குவதாய்க் கூறிய அதிர்ஷ்டம் தான் இவர்கள் மதத்தையும் ஒரு காலத்தில் மதமாக உலாவ விட்டது எனலாம். கவனிக்க, இது வடவேத மதத்தின் கிளை!

சிற்றம்பல அன்பர்: அப்பா! இவற்றையெல்லாம் பார்க்க தமிழ்நெறியான சைவ சித்தாந்தம் எவ்வளவு உயர்ந்து நிற்கிறது!

                                                    தொடரும். . .