You are here
Home > சிந்தனைப் பட்டறை > ஐயன் காண்! குமரன் காண்! ஆதியான் காண்!

ஐயன் காண்! குமரன் காண்! ஆதியான் காண்!

முருகா

சிந்தனைப் பட்டறை

– செந்தமிழ் வேள்விச்சதுரர்

மு.பெ.சத்தியவேல் முருகனார்

     காற்றில் மிதந்து ககனத்தில் உலா வந்து ஈற்றில் நம் கையில் வந்து விழுந்தது ஓர் ஓலை. பிரித்துப் பார்த்தால் அது மலேசியாவில் இருந்து வந்த ஓர் இதழின் ஒரு பக்கம். இதழின் பெயர் ‘ஓசையின் ஆன்மிகம்’. ‘ஐயம் தெளிக’ 167 / 12-8-2014 என்ற தலைப்பில் சிவத்தமிழ்ச் செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள், க.சிவபாலன் / கிள்ளான் என்ற அன்பரின் ஐயத்திற்கு விடையளித்திருந்தார். முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள் நாம் போற்றும் மலேசிய அன்பர். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சைவ சித்தாந்தமும், தமிழ் வழிபாடும் தழைக்க தளராமல் பாடுபட்டு வருபவர். இந்தப் பின்னணியில் எழுப்பப்பட்ட ஐயம் வருமாறு:

‘ஐயம்: கடந்த 26, 27 –ல் நடந்த இரண்டாம் உலக சைவ சமய மாநாட்டில் ஒரு கடவுள் வழிபாட்டை வற்புறுத்திச் சிவபெருமானே பரம்பொருள், அவனை மட்டுமே வழிபட வேண்டும் என்று கூறினீர்கள். எல்லோரும் அப்படிச் செய்து விட்டால் இருக்கிற விநாயகர், முருகன் கோவில்களை என்ன செய்வது?’

இதற்கு நமது அன்பர் அளித்திருக்கும் விடைகள், அவற்றின் பெயரில் எழுப்பி இருக்கும் சில கேள்விகள் நம்மை ஆழ்ந்த ஆய்வுகளுக்கு அழைத்துச் செல்வதாக உள்ளன. இதுவே தெய்வமுரசு இதழின் ‘சிந்தனைப் பட்டறைக்கு’ இப்போது எடுத்துக்கொள்ளப்படுகிறது.

1) அன்பர் நாகப்பன் ‘தெளிவு’ என்ற தலைப்பிட்டு எடுத்த எடுப்பிலேயே ஒரு கேள்வியை முன் வைக்கிறார்:

அது வருமாறு: ‘ஒரு கடவுள் வழிபாடாகச் சிவபெருமானையே வழிபட வேண்டும் என்று நானோ, மலேசிய சைவ சமயப் பேரவையோ சொல்லவில்லை. அப்படிச் சொன்னது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்கள். இவர்கள் சொன்ன கருத்தையே 1300 ஆண்டுகளுக்குப் பின் நாங்கள் சொல்லுகிறோம். ஆகவே விநாயகர், முருகன் கோவில்களை என்ன செய்வது என்று நால்வரிடம் தான் கேட்க வேண்டும். எங்களிடம் கேட்டால் நாங்கள் என்ன சொல்ல முடியும்?

நம் கருத்து: ஒரு கடவுள் வழிபாடே உயர்ந்தது என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இந்தக் கருத்து தொன்று தொட்டே தமிழர்களின் உறைப்பான கொள்கையாக இருந்து வந்தது. அதனை நம் நால்வர் பெருமக்களும் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றனர். சைவம் நால்வர் பெருமக்கள் உருவாக்கி நிறுவியது அல்ல; இன்ன காலம் என்று வரையறை செய்ய முடியாத மிகத் தொன்மையான காலந் தொட்டே சைவம் தமிழர்களின் தெய்வச் சிந்தனையாக வந்து கொண்டிருக்கிறது. காலக் கோளாறினால் அது தொய்வுபட்ட போது தூக்கி நிறுத்திய குரவர்கள் தான் நால்வர் பெருமக்கள். ஒன்றே பரம்பொருள் என்பதைச் சங்க இலக்கியங்களில் இருந்தே சான்று காட்டி நிறுவலாம் என்றாலும் விரிவஞ்சி இரண்டை மட்டும் காட்டலாம்.

புறநானூறு பாரதம் பாடிய பெருந்தேவனார் அவர்களால் சற்றொப்ப கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் தொகுக்கப் பெற்றது என்று தமிழறிஞர் உலகம் ஒப்புவது. அதன் கடவுள் வாழ்த்திலேயே சிவபெருமானின் வாழ்த்துடன் தொடங்குகிறது.

கண்ணி கார்நறுங் கொன்றை காமர்

வண்ண மார்பின் தாருங் கொன்றை

ஊர்தி வால்வெள் ஏறே சிறந்த

சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப

கறைமிட றணியலும் அணிந்தன்று அக்கறை

மறைநவில் அந்தணர் நுவலப் படுமே

பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று அவ்வுருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்

பிறைநுதல் வண்ணம் ஆகின்று அப்பிறை

பதினெண் கணனும் ஏத்தவும் படுமே

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய

நீரறவு அறியாக் கரகத்துத்

தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

இக்கடவுள் வாழ்த்து முழுதும் சிவபெருமானின் அடையாளங்களோடு கடவுளை வாழ்த்துவது. இதில் ஓரிடத்திலும் சிவன் என்ற பெயர் கூட கிடையாது. காரணம் கடவுள் பலராய் இருந்தால் அதில் ஒருவரைச் சுட்ட பெயர் வைக்கலாம். ஆனால் கடவுள் ஒருவரே என்பதால் அதற்குப் பெயரிடுவது அபத்தமாகி விடும் என்பதால் தமிழர்கள் கடவுளுக்குப் பெயரிடுவதைக் கூட தவிர்த்தார்கள். இந்தக் கொள்கை சங்க இலக்கியங்கள் முழுதும் காணலாம். ‘பிறவா யாக்கைப் பெரியோன்’, ‘நீலமணி மிடற்றோன்’ என்ற அடையாளங்கள் கூறப்படுமே ஒழிய அந்த அடையாளங்களை உடைய கடவுளைச் சங்க இலக்கியங்கள் பெயர் சுட்டிக் கூடக் குறிப்பிடுவதில்லை. சிவன் என்றவாறு அழைப்பது கூட அக்கடவுள் மாதொரு கூறன் என்பதைச் சங்கேதக் குறியீடுகளால் குறிப்பிட்டது தான். சி – சிறப்பாகிய செம்பொருள்; வ – வனப்பாகிய சத்தி. இதையும் இந்தப் புறநானூற்றிலேயே காணலாம்.

பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று – ‘சிவ’ என நின்றது என்றது.

அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் – ‘சி’ (‘வ’ ‘சி’ யில் ஒடுங்கி நின்றது)

சிவ – மீநுண் ஐந்தெழுத்து (அதிசூக்கும பஞ்சாட்சரம்)

சி – மாகாரண ஐந்தெழுத்து (மகா காரண பஞ்சாட்சரம்)

ஆக கடவுள் ஒருவரே என்ற கருத்து புறநானூற்றிலிருந்தே தொடர்ந்து வருகிறது என்பதைக் காணலாம். அதாவது உலகைப் படைக்கும் போது கடவுள் ஆற்றல் மாதொரு கூறனாய் – ‘சிவ’ என விரிகிறது. உலகை ஒடுக்கும் போது சத்தியும் கடவுள் என ‘ஒன்றில்’ ஒடுங்கி ‘சி’ யாக நிற்கிறது என்பது தமிழர் சிந்தனை.

இந்தத் தமிழரது சிந்தனை தான் காலம் காலமாய் தொடர்ந்து வந்து நால்வர் பெருமக்களுக்கு முன் வந்த திருமூலராலும், ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்று எடுத்து மொழியப்பட்டது.

எனவே ஒரு கடவுள் கொள்கை என்பது தொன்மைத் தமிழர் தம் தெய்வக் கொள்கையாய் தொன்றுதொட்டு நிலவி புறநானூற்றுக் காலத்திலும், பின்னர் திருமூலராலும் பின்மொழியப்பட்டு அது நால்வர் பெருமக்களாலும் தொடரப்பட்டது என்பதே உண்மை.

எனவே சைவத்தின் ஒரு கடவுட்கொள்கை ஏதோ 1300 ஆண்டுகட்கு முன் தான் தொடங்கியது என்பதோ, அதன் மூலமான சைவக் கொள்கையும் அதற்குப் பெயராக இடப்பட்ட சைவ சமயமும் ஏதோ 1300 ஆண்டுகட்கு முன் தான் நிறுவப்பட்டது என்பதோ சைவத்தின் தொன்மைக்குச் சைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களாலேயே ஊறு செய்வதாக அமைந்துவிடும்.

அடுத்து நால்வர் பெருமக்கள் பாடல்தோறும் இறைவனை அம்மையப்பராகவே பாடியுள்ளனர்; மேலும் முருகனுக்கும், விநாயகனுக்கும் சிவன் தந்தை என்று ஆங்காங்கே பாடி இருப்பதைத் திருமுறை அன்பர்களும் அறிவர்; அன்பர் நாகப்பன் அவர்களும் அறிவார். அவரே, ‘நால்வர் பெருமக்கள் தம் பாடல்களில் தமிழர் வாழ்வியல் போக்குகளைக் குறிப்பிடும் போது விநாயகர், முருகன் பற்றிய புராணக் கதைகளைக் குறிப்பிடுகின்றனர்’ என்று கூறியதால் அவரும் இக்கருத்தை மறுக்கவில்லை என்பது புலனாகிறது.

எனவே, நால்வர் பெருமக்கள் சிவனைப் பாடும் போதே உமை, முருகன், விநாயகன் ஆகியோரைத் தம் பாடல்களில் பாடி இருக்கின்றனர் என்பதை அன்பர் மறுக்கவில்லை. அதே நேரத்தில் அன்பர் நாகப்பனே நால்வர் பெருமக்களும் ஒரு கடவுட் கொள்கையையே வற்புறுத்தினார்கள் என்றும் கூறியுள்ளார். எனவே இரண்டையும் ஒக்க வைத்துச் சீர் தூக்கினால் நால்வர் பெருமக்கள் – சிவன் வேறு, முருக, விநாயக, உமையாள் வேறு என்று எண்ணவில்லை என்றும், இந்நால்வகை உருவங்களும் ஒரே கடவுளின் உருவ வேறுபாடுகளே என்றும் எண்ணி இருக்கின்றனர் என்பதற்கு அன்பர் நாகப்பனே சான்று கூறிவிட்டார் எனலாம். ஆக, இதில் வாதமே எழவில்லை என்பது மட்டுமல்ல, சாரமான உண்மையும் அது தான்.

இனி, இருக்கின்ற முருக, விநாயகர், அம்மன் கோயில்களை என்ன செய்வது என்று கிள்ளான் அன்பர் அன்பர் சிவபாலன் கேட்ட கேள்விக்கு அன்பர் நாகப்பன் அதை நல்வரிடமே கேட்க வேண்டுமே ஒழிய எங்களிடம் கேட்டால் என்ன சொல்வது என்று கூறிய பதில் அவரிடம் அதற்குப் பதில் இல்லை என்பதை வெளிப்படை ஆக்கி இருக்கிறது என்றே கூற வேண்டும்.

இப்படித் தான், திருமுறைகளைப் பூட்டி வைத்த அறையைத் திறக்கக் கேட்ட போது இராசராசனுக்குத் தில்லைப் பூசகர்கள், மூவர் வந்தால் கதவு திறக்கப்படும் என்று ஓர் அழிச்சாட்டியமான பதிலைக் கூறினார்கள் என்று ‘திருமுறை கண்ட புராணம்’ என்னும் நூல் கூறுகிறது. அன்பர் நாகப்பன் அவர்கள் கூறியுள்ள மேற்கண்ட பதிலும் அதைத் தான் நினைவூட்டுவதாக உள்ளது. ஒரு வேளை, அன்பர் நாகப்பன் முன்னால் இராசராசன் செய்தது போல நால்வர் பெருமக்களின் சிலைகளை ஆராதித்து எடுத்து வந்து நிறுத்தினால் விடை கிடைக்குமோ என்னவோ!

2)  நாகப்பனார் கருத்து: ‘சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்’ என்று திருநாவுக்கரசர் சொன்னது ஏழாம் நூற்றாண்டில்.

  நம் கருத்து:  ‘வெள்ளிமிளிர் பிறைமுடிமேல் சூடி கண்டாய்

வெண்ணீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய

                  வள்ளிமணாளர்க்குத் தாதை கண்டாய்

                      மறைக்காட்டுறையும் மணாளன் தானே’

இப்பாடல் வரிகளும் திருநாவுக்கரசர் பாடியவை தாம். இதில் முருகப்பெருமானை ‘நம் செந்தில் மேய வள்ளி மணாளன்’ என்று முருகனை உரிமையோடு ‘நம் வள்ளி மணாளன்’ என்று திருநாவுக்கரசர் தாம் கூறுகிறார். எனில் அவர் முருகப் பெருமானை சிறுதெய்வம் என்று கொள்ளவில்லை என்பதும், சிறுதெய்வம் என்ற வரையறையில் முருகனைக் கொள்ள முடியாது என்பது அவர் கருத்து என்பதும் தேற்றமாகப் புலனாகிறது அல்லவா?

இன்னொரு பாடலில் சிவபெருமானே முருகன் தான் என்றும் பாடியள்ளார். அப்பாடல் வரி, ‘ஐயன் காண், குமரன் காண், ஆதியான் காண்’ என வரும். (திருவாரூர் பதிகம்)

அடுத்து சிறுதெய்வம் என்பதன் வரையறை என்ன என்று அறிதல் நம் கடமையாகிறது. உயிர்களில் சில பக்குவத்தில் ஏறியோ அல்லது அதனால் இறைவனால் சில பதங்கள் வழங்கப்பட்டு தேவர் எனப்படுவதோ உண்டு. திருமால், பிரமன், சண்டீசர், ருத்திரன், போன்றவர்கள் எல்லாம் இறைவன் அளித்த பதங்களில் அமர்ந்த உயிர்கள். அவர்கள் பதங்களில் அமர்ந்தாலும் உயிர்கள் தாம்; அவை தெய்வங்கள் அல்ல. ஆனால் சிலர் அவர்களையே தெய்வங்கள் என்றெண்ணி வணங்கத் தொடங்கி விடுகிறார்கள். இவர்கள் எல்லாம் வணங்குவதால் மால், பிரமன், ருத்திரன், போன்றவர்கள் தாமே தெய்வம் என்று இறுமாப்பு கொள்வதுண்டு; எனவே இவர்களை எல்லாம் மணிவாசகர் பொய்த்தேவு என்றும் சிவபெருமான் ஒருவரே மெய்த்தேவர் என்றும் அறுதியிட்டுக் கூறி இருக்கிறார். அவர் மட்டுமல்ல ஏனைய மூவரும் இதையே பல பட உறுதி செய்துள்ளனர். சான்றுகள் ஏராளமானவை இருப்பதால் விரிவஞ்சி விடுக்கிறோம். திருமுறைகளில் காண்க.

இது ஒரு புறம் இருக்க, சமூகத்தில் அரும்பெரும் சாதனைகளை செய்து வீரர்களாய் சான்றோர்களாய் வாழ்ந்த, மால், பிரமன் போன்ற பதங்களில் அமரும் பக்குவத்திற்கும் கீழாக சில உயிர்களையும் மக்கள் தெய்வமாக எண்ணி வழிபடுவதுண்டு. சுடலை மாடன், பெரியண்ணன், கறுப்பு என்றெல்லாம் சிற்றூர்களில் மக்கள் வழிபடு தெய்வங்களைக் கொண்டிருப்பதும் உண்டு.

இப்படித் தெய்வமல்லாத தேவர்களாயினும், குலதெய்வங்களாயினும் தெய்வங்களாகக் கொண்டாடப் படுவதும் உண்டு. இதைத் தான் ‘யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்’ என்று சிவஞான சித்தியார் கூறியது. இங்கே கூறப்படும் மாதொருபாகனார் ‘ஒன்றாகிய பரம்பொருள்’; ஏனையவை உயிர்களாகிய சிறு தெய்வங்கள்.

அப்பர் ‘சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்’, என்றது உயிர்களாகிய சிறுதெய்வங்களை. உயிரல்லாத சிவபரம் பொருளின் கூறுகளாகவே கருதப்படும், கருதி நால்வர்களாலும் பாடப்படும் முருக, விநாயக, உமையம்மையை எப்படி சிறு தெய்வம் என்று கூற முடியும்? சிவபெருமானின் செம்பாதியான அம்மன் எப்படி சிறு தெய்வம் ஆக முடியும்? சிவபெருமானின் நெற்றிச் சுடரான முருகன் எப்படி சிறு தெய்வம் ஆக முடியும்? சிவபெருமானின் மகனான விநாயகர் எப்படி சிறு தெய்வம் ஆக முடியும்? இவர்களைச் சிறு தெய்வங்கள் என்றால் இவர்களின் தொடர்புடைய சிவபெருமானும் ஓர் உயிர் என்றாகி சிறு தெய்வமாக ஆகி விட மாட்டாரா? இதை உணராதவர்களா நால்வர்கள்?

இதனால் தான் ‘ஐயன் காண், குமரன் காண்’ என்றார் அப்பர்.

இதனால் தான் நால்வர்க்கும் மூலவரான திருமூலர்,

‘ஆறு முகத்தில் அதிபதி நானென்றும்

கூறு சமயக் குருபரன் நான்னென்றும்

தேறினர் தெற்குத் திருவம் பலத்துள்ளே

வேறின்றி அண்ணல் விளங்கி நின்றானே’

என்று பாடினார். அதாவது சிவனும், முருகனும் வேறின்றி விளங்கினர் எனத் தெளிவாக எடுத்துக் கூறினார்.

எனவே சிறு தெய்வம் வேறு; பரம்பொருட் கூறுகள் வேறு என்பதை உணர்தல் வேண்டும். ஒரு கடவுட் கொள்கையைக் கூறிய நால்வர் பெருமக்கள் இதனைத் தெளிவாக உணர்ந்தவர்கள் ஆதலால் இதிலிருந்து சற்றும் பிறழாமல் பாடினர் என்க.

நாகப்பனார் கருத்து:  ‘முருக, விநாயக, உமையம்மை பற்றிய புராணக் கதைகள் தமிழரிடையே புழங்கின என்பது உண்மை. இதனாலேயே நால்வர் பெருமக்கள் தம் பாடல்களில் தமிழர் வாழ்வியல் போக்குகளைக் குறிப்பிடும் போது விநாயகர், முருகன் பற்றிய புராணக் கதைகளைக் குறிப்பிடுகின்றனர்.

நம் கருத்து: அன்பர் நாகப்பனார் இங்கே குறிப்பிட்டதனை முற்றிலும் உண்மையன்று என்று ஒதுக்கி விட முடியாது. நால்வர் பெருமக்கள் தாம் பாடிய பாடல்களில் புராணக் கதைகளையும் செல்கின்ற ஊர்களில் அவ்வூர் பற்றிய செவி வழிச் செய்திகள், சிற்சில வரலாற்றுச் செய்திகள் ஆகியவற்றைப் பதிவு செய்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் அவர்கள் ஏற்றுக் கொண்டு தான் தம் பாடல்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை.

உதாரணத்திற்கு அதிகை வீரட்டானத்தில் திரிபுரத்தை எரி செய்ததாகப் பாடினார்கள் என்றால் அந்த ஊர் தான் வரலாற்று ரீதியாக திரிபுரங்கள் இருந்ததாகவும், அதை அங்கே தான் சிவபெருமான் எரித்துச் சாம்பலாக்கினான் என்று எடுத்துக் கொள்ள முடியாது; அதே போன்று வழுவூரில் தான் சிவபெருமான் யானையை உரித்தான் என்று எடுத்துக் கொள்ள முடியாது. புள்ளிருக்கு வேளூரில் தான் சடாயுவும் சம்பாதியும் இருந்து இராமனைச் சந்தித்து சிவனைச் சிந்தித்து வழிபட்டார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இந்த ஊர்களில் உள்ள மக்கள் இந்தக் கதைகளை நம்பி இங்கே அவற்றை அடையாளப்படுத்தி சிவனை வழிபட்டார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்காமல் அவற்றை மதித்து தமது பாடல்களில் பதிவு செய்தார்கள். அவ்வளவு தான்! அதனால் அவ்வூர்களில் அவையவை நடந்தன என்று நால்வர்களும் முழுதுமாக ஏற்றுக் கொண்டனர் என்று கூறிவிட முடியாது. சில நேரங்களில் அவர்களே மறைந்த சில வரலாறுகளை அவர்களது பதிகங்களில் பதிவு செய்வார்கள்.

உதாரணத்திற்குச் சம்பந்தர் 12 முறை ஊழிப் பெருவெள்ளம் ஏற்பட்டது என்றும், ஒவ்வொரு ஊழிப் பெருவெள்ளத்திலும் கடலில் மூழ்காமல் சீகாழி தோணியாக மிதந்தது என்றும், ஒவ்வொரு முறையும் சீகாழி ஒவ்வொரு பேர் பெற்றது என்றும், அப்படித் தான் அதற்குப் பன்னிரண்டு பேர்கள் அமைந்தன என்றும் பாடி இருக்கிறார். இது அந்த ஊர்க்காரர்களே அறியாதது. அரசல் புரசலாக ஊழிப் பெருவெள்ளத்தில் சீகாழி மூழ்காமல் மிதந்தது என்று அரைகுறையாக மட்டும் அவ்வூரார் அறிவர் எனலாம். ஆனால், மேற்கண்ட வரலாற்றுத் தகவல்களை எல்லாம் சம்பந்தர் தாம் அருள் கொடுத்த பேரறிவால் கண்டு அதைப் பதிவு செய்தார்.

எனவே திருமுறைப் பாடல்களில் நால்வர் பெருமக்கள் பாடியவை அனைத்தையும் இடம் நோக்கி, உள்ளுறை நோக்கிப் பொருள் கொள்ள வேண்டுமே அல்லாது வெறும் புராணக் கதைகளை மட்டும் நம்பி அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது என்பதே உண்மை.

ஆனால் முருக, விநாயக, உமையம்மை பற்றிக் கூறியவற்றில் பாடல் போக்கில் சிவனும், அவர்களும் ஒருவரே என்பதை நால்வர் பெருமக்கள் நன்கு உறுதி செய்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

நாகப்பனார் கருத்து: ‘நால்வர் பெருமக்களின் காலத்தில் விநாயகர் வழிபாடும், இப்போது இருக்கின்ற அளவுக்கு உயர்நிலை பெற்றிருக்கவில்லை.

நம் கருத்து: இதற்கு நாகப்பனார் எந்த ஆதாரமும் கூறவில்லை; உண்மையில் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஆறு பெரிய முருகன் கோயில்களை அடையாளம் காட்டியுள்ளார். அவரது காலம் முதல் நூற்றாண்டு. இரண்டாம் நூற்றாண்டில் பாடப்பட்ட சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் முருகனது கோயில்களும் முருகனது வழிபாட்டுக் கூத்தாகிய குன்றக் குரவையும் கூறப்பட்டிருக்கின்றன. முருக வழிபாட்டில் முருகனாகவே வேல் வழிபாடு நடந்ததாக வேற்கோட்டங்கள் பல இருந்தன என்று சான்றுகள் காட்டப்பட்டுள்ளன.

சம்பந்தர், அப்பர் காலமாகிய ஏழாம் நூற்றாண்டு வரை திருமுருகாற்றுப்படையில் காட்டப்பட்ட ஆறு முருகன் கோயில்களைச் சமணர்கள் கூட இடித்ததாகவோ பாழ்படுத்தியதாகவோ வரலாறில்லை. சம்பந்தர் காலத்திலேயே முருகனது பெருமை சிறப்பாக உணரப்பட்டது என்பதைச் சம்பந்தர் திருமுதுகுன்றத்தில் பாடிய பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

‘கருகு குழல் மடவார் கடி குறிஞ்சியது பாடி

முருகன்னது பெருமை பகர் முதுகுன்றடைவோமே!’

இன்னும் இது போல ஏராளமான சான்றுகளைக் காட்டலாம். விரிவஞ்சி விடுக்கின்றோம்.

நாகப்பனார் கருத்து: 13 – ஆம் நூற்றாண்டில் சோழ பாண்டியர் ஆட்சிகள் வீழ்ச்சியடைந்த போது அவர்களால் கட்டப்பட்டுப் பராமரிக்கப் பெற்ற சிவத்தலங்கள் பேணுவார் இல்லாத நிலையை அடைந்தன. சிவத்தலங்களுக்காக அரச குடியினர் வழங்கிய நிலம் முதலியன உழுவோரால் கைக்கொள்ளப் பெற்றதால் சிவத்தலங்களுக்கு நிதிவரவு இல்லாமல் போனது. இக்காரணங்களால் சிவத்தலங்களில் இருள் சூழ்ந்தது. சிறுசிறு கோயில்களாக இருந்த சிறு தெய்வங்களுக்கான கோவில்களை மக்களே பேணி வழிபட்டனர். இக்காலத்தில் விநாயகர், முருகன் கோயில்கள் முன்னிலை பெற்றுச் சிவ வழிபாடு பின்னிலை அடைந்தது. விநாயகர், முருகன் கோவில்கள் தனித்த நிலையிலும், சிவத்தலங்களில் பரிவாரங்களாகவும் சில சிவத்தலங்களைத் தன்வயப்படுத்தியும் வளர்ச்சி அடைந்தன.   

நம் கருத்து: மேற்கூறிய யாவும் வரலாற்று ஆதாரம் சிறிதும் இல்லாதவை. எல்லாம் வெறும் தம் கருத்திற்கேற்ப செய்யப்பட்ட ஊகங்களே. சோழ பாண்டியர் 13 – ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்த போது சிவன் கோயில்கள் மட்டுமல்ல; எல்லாக் கோயில்களிலுமே வழிபாடு வீழ்ச்சி அடைந்தது. காரணம், அப்போது அயல் மதத்தவரான இசுலாமியர்கள் மதுரை வரை தமிழகத்தைக் கைப்பற்றினர். இதனால் கோயில்கள் சூறையாடப்பட்டன. எனவே உழுவோரால் கோயில் நிலங்கள் கைக்கொள்ளப்படவில்லை. அயலரசர்களால் கைக்கொள்ளப்பட்டன. அடுத்து எல்லாக் கோயில்களிலுமே வழிபாடு தடை பெற்ற போது விநாயகர், முருகன் கோயில்கள் மட்டும் முன்னிலை பெற்று சிவ வழிபாடு பின்னிலை அடைந்தது என்பது வரலாற்றுக்கும், அறிவுக்கும் பொருந்தாத கற்பனை.

அடுத்து விநாயகர், முருகன் வழிபாடுகள் சிவத்தலங்களைத் தன்வயப்படுத்தி வளர்ச்சி அடைந்தன என்பது புரிந்து கொள்ள முடியாத புதிரான கற்பனை. சிவபெருமான் வழிபாட்டை விநாயகரும், முருகரும் தன்வயப்படுத்திக் கொண்டனரா? ஏன் அவர்களுக்குள் சண்டையா? அப்பா மீது மகன்கள் இருவரும் சொத்துக்காக வழக்கிட்டு சொத்துக்களைக் கபளீகரம் செய்துவிட்டனரா? இதற்கு என்ன அடிப்படை? அன்பர் நாகப்பனார் தாம் இதை விளக்க வேண்டும்.   

நாகப்பனார் கருத்து: இக்காலத்தில் . . . சைவ சித்தாந்த சாத்திரங்கள் உணர்த்திய சைவ சமயக் கோட்பாடுகள் விநாயகர், முருகனோடு தொடர்பு படுத்தப்பட்டன. 

நம் கருத்து: யாரோ இப்படிச் சதி செய்து சேர்த்து விட்டார்கள் என்பது போல கூறுவது வேடிக்கை. சைவ சித்தாந்த சாத்திரங்களைத் தந்தருளிய சந்தான குரவர்கள் நால்வருமே விநாயகரையும், முருகரையும் வணங்கி உள்ளனர்.

மெய்கண்ட தேவர் தான் சைவ சித்தாந்தக் கோட்பாட்டின் ஆணிவேர். இவர் மேற்கண்ட 13 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் பரஞ்சோதியாரிடம் ஞான தீக்கையைப் பெற்றவுடன் சிவஞான போத நூலைத் தம் இரண்டாம் வயதில் அருளினார் என்பர். அவ்வாறு அருளுவதற்கு முன் அவர் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள திருக்கோயிலில் பொள்ளாப் பிள்ளையாரின் முன் நிட்டை கூடி அருள் பெற்றுத் தான் ‘சிவஞான போதம்’ என்ற நூலைப் பாடியும், உரையிட்டும் அருளினார் என்று கூறுவர். இதை அக்கு தொக்காக யாரோ சிலர் கூறவில்லை. எதையும் ஆய்ந்து முடிவிற்கு வந்த பின்னரே ஏற்றுக் கொள்ளும் இயல்பினரும், ‘புரட்சித் துறவி’ என்று எல்லோராலும் போற்றப் பெறுபவருமான வள்ளலாரே எடுத்துரைத்திருக்கிறார்.

‘விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன்

வித்தகக் கபிலர் ஆதியர்க்கே

கண்ணருள் செயும்நின் பெருமையை அடியேன்

கனவிலும் நனவிலும் மறவேன்’

என்று வள்ளலார் தாம் பாடிய ‘வல்லபை கணேசர் மாலையில்’ பாடி உறுதி செய்துள்ளார்.

மெய்கண்டார் மட்டுமன்று; அருணந்தி சிவம், உமாபதி சிவம் ஆகிய சித்தாந்த குரவர்களும் விநாயகரையும், முருகரையும் பாடியே முறையே சிவஞான சித்தியாரையும், சிவப்பிரகாசத்தையும் தொடங்கியுள்ளனர்.

மெய்கண்ட சிவம்:

கல்லால் நிழல் மலை

வில்லார் அருளிய

பொல்லார் இணைமலர்

நல்லார் புனைவரே      – விநாயக வணக்கம்.

அருணந்தி சிவம்:

ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன்

நால்வாய் ஐங்கரத்தன் ஆறு

தருகோட்டம் பிறை இதழித் தாழ்சடையான்

தருமொரு வாரணத்தின் தாள்கள்

உருகோட்டன் பொடும் வணங்கி ஓவாதே

இரவுபகல் உணர்வோர் சித்தைத்

திருகோட்டும் அயன்திருமால் செல்வமும் ஒன்றோ

என்னச் செய்யும் தேவே.

– விநாயக வணக்கம்.

உமாபதி சிவம்:

ஒளியான திருமேனி உமிழ்தானம் மிகமேவு

களியார வரும் ஆனை கழல்நாளும் மறவாமல்

அளியாளும் மலர்தூவும் அடியார்கள் உளமான

 வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே.

– விநாயக வணக்கம்.

வளநிலவு குலஅமரர் பதியாய் நீல

மயிலேறி வருமீசன் அருள்ஞான மதலை

அளவில்பல கலைஅங்கம் ஆரணங்கள் உணர்ந்த

அகத்தியனுக் கோத்துரைக்கும் அண்ணல்விற லெண்ணா

உளமருவு சூரனுரம் எனதிடும்பை ஓங்கல்

ஒன்றிரண்டு கூறுபட ஒளிதிகழ்வேல் உந்த

களபமலி குறமகள்தன் மணிமுலைகள் கலந்த

கந்தன்மலர் அடியிணைகள் சிந்தை செய்வாம்.

– முருக வணக்கம்.

சைவ சித்தாந்த குரவர்களான இவர்கள் எல்லாம் சதி செய்து 13, 14-ஆம் நூற்றாண்டுகளில் சிவனைப் பின்னுக்குத் தள்ளி விநாயகர், முருக வழிபாட்டினை முன்னிலைப் படுத்தினரா என்பதை அன்பர் நாகப்பனார் விளக்க வேண்டும்.

அவ்வளவு ஏன்? நம்பியாண்டார் நம்பி திருமுறைகளைக் கண்டெடுக்க உதவியதே விநாயகர் தான் என்பது வரலாறு. தில்லையில் திருமுறை காட்டிய விநாயகர் என்றே ஒரு சந்நிதி உள்ளது.

நாகப்பனார் கருத்து: விநாயகனும், முருகனும் சிவனின் பிள்ளைகள் என்றும், சிவனின் அம்சம் என்றும், காணாபத்திய, கௌமார மதங்களும் சைவமே என்றும் பரப்பப்பட்ட கருத்துக்கள் சைவம் நலிந்த காலத்தில் எழுந்த கருத்துக்கள் ஆகும்.

நம் கருத்து: ‘ஆல் கெழு கடவுட் புதல்வ’ என்று திருமுருகாற்றுப்படை முருகனைச் சிவனின் மகனாகக் கூறுகிறது. இது முதல் நூற்றாண்டில். அப்போது என்ன சைவம் நலிந்தா கிடந்தது?

‘ஞாயிற்றேர் நிறத்த கை நளினத்துப் பிறவியைக்

காஅய் கடவுட் சேஎய் செவ்வேள்’

என்பது திருமுருகாற்றுப்படைக்கும் முன்னதான பரிபாடலின் வரிகள். இதுவும் முருகன் சிவனின் மகன் என்று கூறுகிறது. பரிபாடல் கி.மு.2-ஆம் நூற்றாண்டினது என்பர். அப்போதென்ன சைவம் நலிந்தா கிடந்தது? இவையெல்லாம் தொன்று தொட்டு வரும் தமிழர்களின் கருத்து. ஏதோ முருகன் சிவனின் அம்சம் என்று பிற்காலத்தில் பரப்பப்பட்டது என்பது தான் வேடிக்கையாக உள்ளது.

நாகப்பனார் கருத்து:  முருகன் – சிவனின் மகன் என்ற கருத்து நால்வர் பெருமக்கள் காலத்தில் புராணக் குறிப்புகளாக இருந்தனவே அன்றி அறிவார்ந்த தத்துவ நிலையில் இல்லை.

நம் கருத்து: இதற்கு மாறாக ஏராளமான குறிப்புகள் திருமுறைகளில் உள்ளன என்பதே உண்மை. இதை விரித்துக் கூறினால் அதுவே தனியொரு நூலாகி விடும் என்பதால் அஞ்சி விடுக்கின்றனம். இருப்பினும் தத்துவப் பொருளையே கூறும் திருமந்திரத்தில் முருக தத்துவத்தின் உள்ளுறையாக வரும் இரண்டு பாடல்களே சிறந்த சான்றாக அமையும் என அவற்றைச் சுட்டி அமைகிறோம்.

உந்திக் கமலத்து உதிக்தெழும் சோதியை

அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலர்

அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின்

தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே.

 

எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்

தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால்

கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால்

மைந்தன் இவன் என்று மாட்டிக் கொள்வீரே.  

நாகப்பனார் கருத்து: சிவன் ஒருவனே பரம்பொருள்; சிவன் ஒருவனே எண்குணத்தான்; எண்குணத்தில் ஒன்றாகிய தன்வயத்தன் என்னும் பண்பு சிவனுக்கு மட்டுமே உரியது. பிற தெய்வங்கள் அனைத்தும் சிவத்தினின்றும் தோன்றின அல்லது ஒரு தாய் வயிற்றில் தோன்றின என்பதால் தன்வயத்தன் என்னும் பண்புக்கு உரியன அல்ல என்பது தெளிவு. இக்காரணத்தால் சிவனையன்றி பிற தெய்வங்கள் பரம்பொருள் ஆவதில்லை என்பது சித்தாந்த முடிவு. 

நம் கருத்து: பரம்பொருள் என்றால் அது எண்குணங்கள் உடைய குணியாகத் தான் இருக்க வேண்டுமென்பது சித்தாந்தம் ஆய்ந்து கண்ட செம்பொருள் துணிவு.

பரம்பொருளின் குணங்களையும், அடையாளங்களையும் இலக்கணங்களையும் எல்லாம் முற்றிலுமாக காட்டி வழிபடு உருவங்களை அமைக்க முடிவதில்லை.

சாதாரண ஒரு வீட்டின் வரைபடத்தையே நம்மால் முழுமையாகக் காட்ட முடிவதில்லை; பிளான் என்றும், பக்கவாட்டு பார்வைப் படம் என்றும், முப்பக்கப் படம் என்றும், அவ்வீடு இருக்கும் நகரமைப்புப் படம் என்றும் இப்படிப் பலவேறு வகையாகக் காட்டியும் வீட்டை முழுமையாகக் காட்டியதாகாது என்று அறிகிறோம். இப்படி இருக்க ஒரு பரம்பொருளை முழுமையாக ஒரு உருவத்தில் காட்டி விட முடியுமா?

‘உரையின் வரையும் பொருளின் அளவும்

இருவகைப் பட்ட எல்லையும் கடந்தது’

என்று பட்டினத்தார் கோயில் நான்மணிமாலையில் கூறியது போல உருவ வழிபாட்டில் ஒரே உருவத்தில் பரம்பொருளின் எல்லா இலக்கணங்களையும் காட்டி விட முடியாது. எனவே தான் பரம்பொருள் ஒன்றே ஆனாலும் அதன் இலக்கணங்களைக் காட்டும் உருவங்கள் பல ஆயின. இலிங்கம், நடராசர், முருகர், விநாயகர், உமை என ஒவ்வொன்றும் ஒரு சில இலக்கணங்களை மட்டும் குறிப்பனவாயின – வீட்டிற்குப் பல வரைபடங்கள் வரைந்து காட்டப்பட்டது போல.

இப்போது இப்பின்னணியில் இறைவனது எண்குணங்களை எடுத்துக் கொள்வோம். அவையாவன: 1) தன்வயத்தனாதல் 2) இயற்கையே பாசங்களினின்றும் நீங்கி இருத்தல் 3) தூய உடம்பினன் ஆதல் 4) இயற்கை உணர்வினன் ஆதல் 5) பேரறிவுடைமை 6) வரம்பில்லாத ஆற்றல் உடைமை 7) வரம்பில்லாத அருள் உடைமை 8) வரம்பில்லாத இன்பம் உடைமை. இவை சித்தாந்தம் ஆய்ந்து கூறியவை.

      இவற்றில் இயற்கையாக பாசங்களிலிருந்தும் நீங்கி நின்றால் தான் தூய உடம்பினன் ஆக முடியும். ஆகவே தூய உடம்பினன் ஆதல் இயற்கையாக பாசங்களிலிருந்து நீங்கி நிற்கும் குணத்தில் அடங்கி விடும். அடுத்து இயற்கை உணர்வினனாக இருந்தால் தான் பேரறிவுடைமை வாய்க்கும். எனவே பேரறிவுடைமையில் இயற்கை உணர்வினன் என்பது அடங்கி விடும். எனவே இந்த வகையில் எண்குணங்கள் ஆறு அடிப்படை குணங்களாகி விடுகின்றன.

பரம்பொருளின் இந்த அடிப்படை ஆறு குணங்களை ஆறு முகங்கள் ஆக்கிய உருவம் தான் ஆறுமுகம்; அவ்வுருவம் தான் முருகனது உருவம். இதைக் கந்தபுராணம் மிக அழகாகக் கூறுகிறது.

‘ஏவர்தம் பாலும் இன்றி எல்லைதீர் அமலற் குள்ள

மூவிரு குணனும் சேய்க்கு முகங்களா வந்த தென்ன’

என்பது கந்தபுராண வாக்கு.

ஆக, இறைவனது எண்குணங்களின் உருவமே முருகனின் உருவம் என்பது தெளிவாகிறது. அதனால் தான், முருகனைக் கனவிலும் நனவிலும் கண்ட அருளாளர் என்று கருதப்படும் அருணகிரிநாதர்,

‘முருகன் குமரன் குகனென்று மொழிந்து

உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்

பொருபுங்கவரும் புவியும் பரவும்

குரு புங்கவ எண்குண பஞ்சரனே.’

என்று முருகனை எண்குணனாகப் பாடிப் பரவினார்.

இதை உள்ளடக்கித் தான், அப்பர் சுவாமிகள், ‘ஐயன் காண், குமரன் காண், ஆதியான் காண்’ என்று பாடினார். இதை உள்ளடக்கித் தான் திருமூலர், ‘தேறினர் தெற்குத் திருவம்பலத்துள், வேறின்றி அண்ணல் விளங்கி நின்றானே’ என்று பாடினார். இதை உள்ளடக்கித் தான் சித்தாந்த குரவர்களும் முருகனைப் பாடிப் பரவி நூலைத் தொடங்கினர். இதைச் சிலர் அறியாமல் ஐயுற்று பிணங்குவர் என்பதை உணர்ந்தே திருமூலர், உந்திக் கமலத்து உதித்தெழும் சோதி என்று முருகனைப் பாடி இதை ஆரும் அறிகிலர், ஆரும் அறிந்தபின் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே என்று பாடினார். உணர்வார் உணர்க. 

நாகப்பனார் கருத்து: சிவனே பரம்பொருள் என்னும் கருத்தை நிறுவும் பொருட்டே திருமுறைகளில் பிற தெய்வங்கள் குறிப்பிடப் பெற்று அவை சிவனை அடைய முயன்று தோற்றன என்னும் கருத்தும் கூறப் பெற்றன. 

நம் கருத்து: இது போன்று முருகனும், விநாயகனும் சிவனை அடைய முயன்று தோற்றுப் போனார்கள் என்று திருமுறையில் எந்த இடத்தில் வருகிறது என்று இவரால் காட்ட இயலுமா?  

நாகப்பனார் கருத்து: ஒன்றைப் பெரியது என்று காட்டச் சிறியதையும் உடன் காட்ட வேண்டுமல்லவா? 

நம் கருத்து: பரம்பொருளை விடப் பெரியதும் இல்லை; பரம்பொருளை விடச் சிறியதும் இல்லை. ஏனென்றால் பரம்பொருளை விடப் பெரியது என்று ஒன்று இருந்தாலும் சரி, பரம்பொருளை விடச் சிறியது ஒன்று இருந்தாலும் சரி பரம்பொருளுக்கு வேறான ஒரு பொருள் இருந்ததாக ஆகி அதனால் ஒப்பிடப்படும் பரம்பொருளே பரம்பொருள் இல்லை என்று ஆகிவிடும். அதனால் தான்

‘பெரியதிற் பெரியை என்றும் அன்றே

சிறியதிற் சிறியை என்றும் அன்றே’

என்று பதினோராந் திருமுறையில் வரும் கோயில் நான்மணிமாலை சரியாக எடுத்துக் காட்டியது.

‘அண்டம் ஓர் அணுவாம், அணு ஓர் அண்டமாகும் நின் பெருமை’ என்று இதையே 9 – ஆம் திருமுறையும் வேறு சொற்களால் கூறியது.  

நாகப்பனார் கருத்து: சுந்தரர் பாடிய ஏழாம் திருமுறையில் 71 – ஆம் பதிகத்தில் வரும் ஒன்பதாம் பாடல் ஓர் எடுத்துக்காட்டு:

‘மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி

மலையரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன்

எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்றறியான்’

என்னும் பாடல் சுந்தரர் முருகன், பிள்ளையாரை அன்றி சிவனையே போற்றுவாராய் இருந்தமையைக் காட்டுகிறது. இக்கருத்தையே நால்வரில் மற்றவரும் கொண்டுள்ளனர் என்பதைப் பல பாடல்கள் நிறுவுகின்றன.

நம் கருத்து: மேலே மேற்கோள் காட்டப்பட்ட பாடல் திருநாகைக் காரோணப் பதிகத்தில் வருகிறது. இப்பதிகம் முழுதும் சுந்தரர் சிவனையே நிந்தையாகவே பாடி இருக்கிறார். மேற்படி பாடலுக்கு முன் பாடலில் கூட சிவபெருமானே! திருவாரூரில் உன்னுடைய நிதியம் எல்லாம் வைத்திருக்கிறீர் என்று எனக்குத் தெரியும். நீர் ஒன்றும் ஏதும் இல்லா ஏழை அல்ல. எனவே உம் நிதியம் அத்தனையும் எனக்குக் கொடுக்க வேண்டாம். உமது சொத்தில் மூன்றில் ஒரு பங்கு எனக்குக் கட்டாயம் தந்தாக வேண்டும். இல்லாவிட்டால் திருவாரூர் வீதி வலத்தில் நீர் வரும் போது ஓர் அடி கூட எடுத்து வைக்க விட மாட்டேன் என்று பாடி இருக்கிறார். இது என்ன சிவனைப் போற்றிப் பாடியதா?

    சுந்தரர் ஓணகாந்தன்தளியில் சிவபெருமானிடம் பணம் தாரும் என்று கேட்கிறார். பதிகம் முழுதும் ஒரே அதிகார தோரணை தான். அதில் ஒரு பாடலைப் பாருங்கள்:

திங்கள் தங்கு சடையின் மேலோர்

திரைகள் வந்து புரள வீசும்

கங்கையாளேல் வாய்திறவாள்

கணபதியேல் வயிறு தாரி

அங்கை வேலோன் குமரன் பிள்ளை

தேவியார் கோற்றட்டி யாளார்

உங்களுக்கு ஆட்செய்ய மாட்டோம்

ஓணகாந்தன் தளியுளீரே.

சிவபெருமானே! காசு கேட்டால் நீர் பேசாமல் இருக்கிறீர்! சரி, கங்கையாளைப் பார்த்தால் அவள் வாய் மூடி மெளனமாக இருக்கிறாள்! சரி, கணபதியிடம் கேட்கலாம் என்றால் கணபதி ஏற்கெனவே மகோதரம் என்ற நோயால் பீடிக்கப்பட்டு பெருவயிறனாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். சரி, அடுத்த பிள்ளையான முருகனைக் கேட்கலாம் என்றால் அவர் சிறு பிள்ளை! கணக்கு வழக்கு தெரியாது! சரி, அம்மாவிடம் கேட்கலாம் என்றால் அவரோ கஞ்சப் பிசினாரி! ஓர் ஆழாக்கு நெல்லில் 32 அறம் செய்யச் சொல்பவர்! உங்க குடும்பத்துக்குத் தொண்டு செய்ததற்கு இனி காசும் கிடைக்கப் போவதில்லை! நியாயமும் கிடைக்கப் போவதில்லை. எல்லாம் பேசி வைத்துக் கொண்டாற் போல மௌனம் காக்கிறீர்கள்! போங்கள் ஐயா! இனி உங்களுக்கு ஆட் செய்ய மாட்டேன்! தொண்டு செய்ய மாட்டேன்!

இது தான் இப்பாடலின் கருத்து. இது என்ன சுந்தரர் சிவனைப் போற்றியதா?

இன்னொரு பாடலில் சிவபெருமானை, ‘மகத்தில் புக்கதோர் சனி எனக்கானாய்’ என்று பாடுகிறார். அதாவது சுந்தரர் சிவபெருமானை எனக்கு வாய்த்த சனியனே என்று மிக அன்பாக அழைக்கிறார்.

இதெல்லாம் கொண்டு சுந்தரர் சிவபெருமானை நிந்தை செய்தார் என்றா சொல்வது? இதற்குப் பெயர் தமிழில் வஞ்சப் புகழ்ச்சி என்று பெயர். வடமொழியில் நிந்தாத்துதி என்பர். அது போலத்தான் வேடிக்கையான நிந்தையாக நாகப்பனார் காட்டிய பாடல் அமைந்துள்ளது. அதை அப்படியே சொல்லுக்குச் சொல் பொருள் கொண்டு முருகனையும், விநாயகனையும் தூற்றினார் என்றும் அதனால் சிவன் ஒருவனையே போற்றினார் என்றும் கூறுவது செய்யுள் இலக்கணம் அறியா அறியாமையாய் முடியும்.

இனி நால்வர் பெருமக்கள் – சுந்தரர் உள்பட – முருகனையும் விநாயகரையும் ஏற்றிப் பாடிய பாடல்களை ஏராளமாகக் காட்டலாம். மாதிரிக்கு ஒவ்வொன்று காண்க.

சம்பந்தர்:

           காய்ந்து வருகாலனை அன்றுதைத்தவன் ஊர்

கழுமலமாந் தோணிபுரம் சீர்

ஏய்ந்தவெங் குருப்புகலி இந்திரன் ஊர்

இருங்கமலத்து அயன் ஊர் இன்பம்

வாய்ந்த புறவந் திகழும் சிரபுரம் பூந்

தராய் கொச்சை காழி சண்பை

சேந்தனை முன் பயந்துலகில் தேவர்கள் தம்

               பகைகெடுத்தோன் திகழும் ஊரே.

      அப்பர்:

              முக்கணா போற்றி முதல்வா போற்றி

முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி

              தக்கணா போற்றி தருமா போற்றி

தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி

தொக்கணா என்றிருவர் தோள் கை கூப்பத்

துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி

எக்கண்ணும் கண்ணிலேன் எந்தாய் போற்றி

எறிகெடில வீரட்டத் தீசா போற்றி

சுந்தரர்:

               பொன்னான மயில் ஊர்தி முருகவேள் தாதை

                   பொடியாடு திருமேனி நெடுமால் தன் முடிமேல்

தென்னான குடபாலின் வடபாலின் குணபால்

சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி

அன்னானை அமரர்கள் தம் பெருமானைக் கருமான்

உரியானை அதிகைமா நகருள் வாழ்பவனை

என்னானை எறிகெடில வடவீரட் டானத்து

உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே!

      மணிவாசகர்:

              பாலகனார்க் கன்று பாற்கடல் ஈந்திட்ட

கோலச் சடையற்கே உந்தீ பற

               குமரன்தன் தாதைக்கே உந்தீ பற.

இப்பாடல்களால் நால்வர் பெருமக்களும் திருமுருகனைப் போற்றியே பாடி உள்ளார் என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. இது போன்ற நால்வர் பாடல்கள் ஏராளமாக உள்ளன. ஒரு புள்ளி விவரம் இதை உறுதி செய்யும்.

முருகன் விநாயகரை ஏத்திப் பாடியது

சம்பந்தர் – 13 பாடல்கள்

அப்பர்   – 23 பாடல்கள்

சுந்தரர்   – 8 பாடல்கள்

மணிவாசகர் – 4 பாடல்கள்.

முருகப் பெருமானையும், விநாயகப் பெருமானையும் கூறி இப்பாடல்களில் இவர்களின் தந்தை சிவன் என்பதால், இவர்களின் பெருமையை நால்வர் பெருமக்கள் போற்றினர் என்பது புலனாகிறது. இன்னாரின் தந்தை இவர் என்று ஒருவர் சுட்டிக் கூறப்பட்டால் அந்தப் பிள்ளையின் பெருமை தானே முதலில் கூறப்பட்டதாகும்!

எனவே நால்வர் பெருமக்கள் முருக, விநாயகரைக் குறைத்துக் கூறினர் என்ற நாகப்பனார் கருத்து உண்மைக்கு மாறானது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

நாகப்பனார் கருத்து:  நால்வருக்குக் குருபூசை செய்கிறோம். திருமுறைகளை ஓதுகின்றோம். ஆனால் அவர்கள் காட்டிய வழியில் வழிபாடு செய்ய மறுக்கிறோம். இது என்ன குருபக்தி?

நம் கருத்து: நால்வர் காட்டிய வழி எது என்பதை மேலே பற்பல ஆதாரங்கள் காட்டி நிறுவி இருக்கிறோம். அன்பர் நாகப்பன் கூறுவது தான் நால்வர் காட்டிய வழிக்கு முற்றிலும் மாறாக உள்ளது என்பதைத் தனியே எடுத்துக் கூற வேண்டியதில்லை என்பது வெள்ளிடை மலை.

 

 

 

 

 

Top